பாயிரவியல்

1. கடவுள் வாழ்த்து

(இறைவனை வணங்குதல்)

  1. அகர முதல வெழுத்தெல்லா மாதி
      பகவன் முதற்றே யுலகு.

  2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
      னற்றா டொழாஅ ரெனின்.

  3. மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
      நிலமிசை நீடுவாழ் வார்.

  4. வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்
      கியாண்டு மிடும்பை யில.

  5. இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
      பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

  6. பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
      நெறிநின்றார் நீடுவாழ் வார்.

  7. தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால்
      மனக்கவலை மாற்ற லரிது.

  8. அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்
      பிறவாழி நீந்த லரிது.

  9. கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
      றாளை வணங்காத் தலை.

10. பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
      ரிறைவ னடிசேரா தார்.



குறள் 1

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


சொல்லுரை:

அகர - அகரத்தை ( அ என்ற எழுத்தினை )

முதல - முதல் எழுத்தாகக் கொண்டு

எழுத்தெல்லாம் - மற்ற எழுத்துக்களெல்லாம் தொடங்குவதுபோல்

ஆதி - எல்லாவற்றிற்கும் மூலமாகிய

பகவன் - கடவுளை

முதற்றே - முதன்மையாகக் கொண்டது

உலகு - இந்த உலக உயிர்கள் அனைத்தும்.


பொருளுரை:

அகரத்தை ( அ என்ற எழுத்தினை ) முதல் எழுத்தாகக் கொண்டு மற்ற எழுத்துக்களெல்லாம் தொடங்குவதுபோல் இந்த உலக உயிர்கள் அனைத்தும், எல்லாவற்றிற்கும் மூலமாகிய கடவுளை முதன்மையாகக் கொண்டது.


விளக்கவுரை:

எல்லா எழுத்துக்களுக்கும் மூலமாக, முதன்மை எழுத்தாக இருப்பது “அ” (அகரம்) என்ற எழுத்தாகும். எழுத்து வடிவிற்கு மூலமாக ஒலியும், அந்த ஒலி வடிவிற்கு மூலமாக அகரமும் உள்ளது.

ஆதி என்ற சொல்லும் பகவன் என்ற சொல்லும் சமக்கிருத மொழியினின்று வந்த சொல் என்று கூறுவர் சிலர். அது உண்மையன்று.

ஆதி என்ற சொல் ‘ஆதல்’ என்ற தொழிற்பெயரிலிருந்து பிறந்ததாகும். எடுத்துக்காட்டாக, செய்தல் – செய்தி ஆகவும் உய்தல் – உய்தி ஆகவும் ஊர்தல் – ஊர்தி ஆகவும் வழங்குவதைப்போல. ஆதல் என்பது தானே உருவாகுதல் என்பதாகும். தோற்றுவிப்பாரின்றி தானே தோன்றிய இறைவனை “தான்தோன்றி” (சுயம்பு) என்று அழைப்பார்கள். ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை என்பதை குறிப்பதாயிற்று.

பகவன் என்ற சொல் பகு - பகுத்தல் என்னும் சொல்லில் இருந்து தோன்றுவது. பகு-பகவு-பகவன். இந்த பிரபஞ்ச உலகின் பதியாக, மூலமாக இருப்பவன் இறைவன் ஆவான். இறைவன் எல்லா உயிர்களிடத்தும் இரண்டறக் கலந்திருக்கிறான். அவ்வாறு தான் பகுபட்டு எல்லா உயிர்களிடத்தும் இரண்டறக் கலந்திருப்பதாலேயே இறைவனை பகவன் என்கிறார்.

மேற்கண்ட விளக்கத்தின்மூலம் ஆதி என்ற சொல்லும் பகவன் என்ற சொல்லும் தமிழ் மொழியில் தோன்றிய சொற்கள் என்றும் இவ்விரு சொற்களின் வேர் தமிழ் மொழியே என்பதும் உறுதியாகிறது.

ஆக, ஆதி என்ற சொல்லையும் பகவன் (பகவான் என்று ஆகி) என்ற சொல்லையும் தமிழ் மொழியிலிருந்து எடுத்து சமக்கிருத மொழி பயன்படுத்திக்கொண்டுள்ளதை நாம் தெள்ளத்தெளிவாக உணரலாம்.

மேலும் , ஒரு சொல் தமிழிலும் சமக்கிருதத்திலும் இருக்குமானால் அச்சொல் சமக்கிருத மொழியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்ற தவறான கண்ணோட்டத்தினால் வந்த விளைவு. இது சொற்களின் வேர் எம்மொழியில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்காதவர்களாலும், தமிழ் மொழி சமக்கிருத மொழியிலிருந்து தோன்றியது என்று தவறான கருத்தை நிலைநிறுத்த முனைவோராலும் இவ்வாறு தமிழ் மொழிச் சொற்கள் சமக்கிருத மொழியிலிருந்து வந்தவை என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது.



குறள் 2:

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


சொல்லுரை:

கற்றதனால் - நல்ல நூல்களைக் கற்பதினால்

ஆய - உண்டாகும்

பயனென்கொல் - பயன் என்ன ? ஏதுமில்லை.

வாலறிவன் - தூய அறிவினையுடைய இறைவனின்

நற்றாள் - திருவடிகளை

தொழாஅர் - தொழவில்லை

எனின் - என்றால்


பொருளுரை:

தூய அறிவினையுடைய இறைவனின் திருவடிகளை தொழவில்லை என்றால் நல்ல நூல்களைக் கற்பதினால் உண்டாகும் பயன் என்ன ? ஏதுமில்லை.


விளக்கவுரை:

கல்வி கற்பது அறிவு வளர்ச்சி பெறுவதன் பொருட்டே. ஆனால் அறிவு என்பது நாம் எவ்வளவு கல்வி கற்றாலும் எல்லையில்லாத ஒன்றாக உள்ளது. அந்த எல்லையற்ற அறிவின் பூரணத்தைத்தான் வாலறிவன் என்றும் பகவன் என்றும் கூறுகின்றோம். பிறவிப் பிணிக்கு மருந்தாக இருப்பதால் இறைவனின் திருவடியை நற்றாள் என்றார். கல்வியின் சிறந்த பயன் கடவுளை வழிபட்டு மெய்ப்பொருள் அறிந்து பிறவி அறுத்தலே என்பது வள்ளுவர் கூறும் மறையாகும்.



குறள் 3:

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.


சொல்லுரை:

மலர்மிசை - அன்பால் இறைவனை நினைப்பவரின் உள்ளத்தாமரையில்

ஏகினான் - விருப்பமுடன் குடிகொண்டு அமரும்

மாணடி - மாட்சிமைப்பட்ட திருவடிகளை

சேர்ந்தார் - சேர்ந்தவர்

நிலமிசை - எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகின்கண்

நீடு - நிலையாக

வாழ்வார் - வாழ்வர்.


பொருளுரை:

அன்பால் இறைவனை நினைப்பவரின் உள்ளத்தாமரையில் விருப்பமுடன் குடிகொண்டு அமரும் மாட்சிமைப்பட்ட திருவடிகளை சேர்ந்தவர் எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வர்.


விளக்கவுரை:

ஒருவனுக்கு இறையுணர்வு என்பது அவனது மனத்தில் இறையன்பை எந்த அளவிற்கு நிறுத்துகிறானோ அந்த அளவிற்கு இறைவன் அவன் மனத்தில் தோன்றி காட்சி தருகிறார் . இறையுணர்வு உள்ளத்தோடு தொடர்புடையது . அறிவினால் எட்டாத் தூரத்தில் உள்ள இறைவன் இறையன்பினால் உள்ளத்தாமரையில் தன்னுள்ளே குடியேறுகிறான் . அத்தன்மையுடைய இறைவனின் திருவடிகளே ஒருவனுக்கு பிறவியறுத்தலை வழங்கி ஒரே தன்மையுடைய பிறவியற்ற வாழ்வினை அளிக்கிறது .



குறள் 4:

வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


சொல்லுரை:

வேண்டுதல் - எந்தப் பொருளையும் விரும்புதலும்

வேண்டாமை - வெறுத்தலும்

இலானடி - இல்லாத இறைவனின் திருவடிகளை

சேர்ந்தார்க்கு - சேர்ந்தவர்க்கு

யாண்டும் - எந்தக் காலத்திலும்

இடும்பை - துன்பம்

இல - இல்லை


பொருளுரை:

எந்தப் பொருளையும் விரும்புதலும் வெறுத்தலும் இல்லாத இறைவனின் திருவடிகளை சேர்ந்தவர்க்கு எந்தக் காலத்திலும் துன்பம் இல்லை.


விளக்கவுரை:

இறைவன் விருப்பு வெறுப்பற்ற தன்மையுடைவன் ஆவான். ஒரு பொருள் மற்றொரு பொருளோடு சேரவேண்டுமானால் முதலில் சேரப்படவேண்டிய பொருளின் தன்மையை சேரவேண்டிய பொருளும் பெறவெண்டும். அதேபோல், விருப்பு வெறுப்பற்ற இறைவனின் திருவடிகளைச் சேர்வதற்கும் மனிதனானவன் விருப்பு வெறுப்பற்ற தன்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பது மறைப்பொருள்.


குறள் 5:

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


சொல்லுரை:

இருள்சேர் - மயக்கத்தினால் தோன்றும்

இருவினையும் - நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளும்

சேரா - சேரமாட்டா

இறைவன் - இறைவனின்

பொருள்சேர் - மெய்ப்பொருள்

புகழ்புரிந்தார் - புகழை எப்பொழுதும் விரும்பி போற்றுபவர்கள்

மாட்டு - இடத்தில்


பொருளுரை:

இறைவனின் மெய்ப்பொருள் புகழை எப்பொழுதும் விரும்பி போற்றுபவர்கள் இடத்தில் மயக்கத்தினால் தோன்றும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளும் சேரமாட்டா.


விளக்கவுரை:

விருப்பு வெறுப்பு என்பதிலிருந்தே நல்வினை, தீவினை என்னும் மயக்கத்தினால் தோன்றும் இரண்டு வினைகளும் தோன்றுகிறது. அதுவே பிறவியறுத்தலுக்கு தடையாகவும் உள்ளது. இறைவன் மெய்ப்பொருள் நிறைந்த தன்மை உடையவன். அந்த மெய்ப்பொருள் தன்மையை உணர்ந்து நடத்தலே வினையறுத்தலுக்கு வழியாகும்.



குறள் 6:

பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்.


சொல்லுரை:

பொறிவாயில் - மெய், வாய், கண், மூக்கு செவியென்னும் ஐம்பொறிகளின் வாயிலகத்

ஐந்தவித்தான் - தோன்றும் ஐந்து அவாவிவையும் அற்றவனாக இருக்கும் இறைவனின்

பொய்தீர் - மெய்யான

ஒழுக்க - ஒழுக்க

நெறிநின்றார் - நெறியில் நிற்பவர்

நீடு - நீண்ட காலம் புகழுடன்

வாழ்வார் - வாழ்வர்


பொருளுரை:

மெய், வாய், கண், மூக்கு செவியென்னும் ஐம்பொறிகளின் வாயிலகத் தோன்றும் ஐந்து அவாவிவையும் அற்றவனாக இருக்கும் இறைவனின் மெய்யான ஒழுக்க நெறியில் நிற்பவர் நீண்ட காலம் புகழுடன் வாழ்வர்.


விளக்கவுரை:

பொறிகளின் வாயிலாகத் தோன்றும் ஐந்து அவாவினையும் அற்றவனாக இருக்கும் தன்மை உடையவன் இறைவன். நல்லொழுக்க நெறியில் நின்று ஐந்து அவாவினையும் நீக்கி இறைவனை சேர முயற்சிக்கவேண்டும். அதுவே பிறவியறுத்தலுக்கு வழியாக அமையும்.




குறள் 7:

தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


சொல்லுரை:

தனக்குவமை - ஒருவகையாலும் தனக்கு நிகர்

இல்லாதான் - இல்லாத தன்மையுடைய இறைவனின்

தாள்சேர்ந்தார்க்கு - திருவடிகளை அடைந்தவர்க்கு

அல்லால் - அல்லாமல்

மனக்கவலை - மனக்கவலையை

மாற்றல் - நீக்குதல்

அரிது - அரிதாகும்


பொருளுரை:

ஒருவகையாலும் தனக்கு நிகர் இல்லாத தன்மையுடைய இறைவனின் திருவடிகளை அடைந்தவர்க்கு அல்லாமல் மனக்கவலையை நீக்குதல் அரிதாகும்.


விளக்கவுரை:

தனக்கு நிகராக ஒப்புமை கூறுவதற்கும் உவமை சொல்வதற்கும் இணையாக ஏதுமில்லாத தன்மையுடையவன் இறைவன். இவ்வுலக உயிர்களின் ஆக்கம் மனநலமே ஆகும். அவ்வுயிர்கள் மனக்கவலை அடையுங்கால் தனக்கு நிகர் இல்லாத தன்மையுடைய இறைவனின் திருவடிகளை ஒன்றி சேர்ந்து தங்களின் மனக்கவலையை போக்கிக்கொள்ளவேண்டும்.




குறள் 8:

அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


சொல்லுரை:

அறவாழி - அறநெறி பெருங்கடலாக

அந்தணன் - அம் + தண்(மை) + அன் - இரக்கமுடைய இறைவனின்

தாள்சேர்ந்தார்க்கு - திருவடிகளை அடைந்தவர்க்கு

அல்லால் - அல்லாமல் மற்றவர்க்கு

பிறவாழி - அதனோடு சேர்ந்த பிற கடலாகிய பொருள், இன்பம் என்பவற்றை

நீந்தல் - கடந்து கரை சேருதல்

அரிது - அரிதாகும்


பொருளுரை:

அறநெறிப் பெருங்கடலாக இரக்கமுடைய இறைவனின் திருவடிகளை அடைந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு அதனோடு சேர்ந்த பிற கடலாகிய பொருள், இன்பம் என்பவற்றைக் கடந்து கரை சேருதல் அரிதாகும்.


விளக்கவுரை:

அறநெறிப் பெருங்கடலாக ஆதியும் அந்தமும் அற்ற தன்மையுடையவன் இறைவன். அறமல்லாத பிறவாகிய பொருளின்ப நெறிகளில் வாழ்பவர் அவற்றைக் கடந்து அறநெறித் தன்மையுடைய இறைவனை சேர்வதற்கு அவன்தாள் சேர்வதே வழியாகும்.



குறள் 9:

கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
றாளை வணங்காத் தலை.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.


சொல்லுரை:

கோளில் - தனக்குரிய புலன் தன்மைகளை கொண்டிராத

பொறியின் - ஐம்பொறிகளின்

குணமிலவே - பயனற்ற தன்மைபோல

எண்குணத்தான் - எண்வகைக் குணங்களையுடைய இறைவனின்

தாளை - திருவடிகளை

வணங்காத் - வணங்காத

தலை - தலைகளும் பயன் அற்றவை.


பொருளுரை:

தனக்குரிய புலன் தன்மைகளை கொண்டிராத ஐம்பொறிகளின் பயனற்ற தன்மைபோல எண்வகைக் குணங்களையுடைய இறைவனின் திருவடிகளை வணங்காத தலைகளும் பயன் அற்றவை.


விளக்கவுரை:

எண்வகைக் குணங்கள் எனப்படுவது –
தன் வயத்தனாதல்,
தூய உடம்பினனாதல்,
இயற்கை உணர்வினன் ஆதல்,
முற்றும் உணர்தல்,
தானாகவே பாசங்களை விடுதல்,
பேரருள் உடைமை,
அளவற்ற ஆற்றல் உடைமை,
வரம்பில்லாத இன்பமுடைமை
என்பதாகும். இவ்வகை உயர்தன்மையுடைய இறைவனின் திருவடிகளை வணங்காத தலை, காணாத கண் , பேசாத வாய் என்ற புலன்களைக் கொள்ளாத பொறிகளைப் போன்ற தன்மையுடையதாகும்.



குறள் 10:

பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.


சொல்லுரை:

பிறவிப் - (இறைவனின் திருவடிகளை வணங்குபவர்கள்) பிறவியாகிய

பெருங்கடல் - பெருங்கடலை

நீந்துவர் - நீந்திக் கடப்பர்

நீந்தார் - அவ்வாறு நீந்திக் கடக்க முடியாதவர்கள்

இறைவன் - இறைவனின்

அடி - திருவடிகளை

சேராதார் - வணங்காதவர்கள் ஆவர்.


பொருளுரை:

இறைவனின் திருவடிகளை வணங்குபவர்கள் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு நீந்திக் கடக்க முடியாதவர்கள் இறைவனின் திருவடிகளை வணங்காதவர்கள் ஆவர்.


விளக்கவுரை:

மனிதப் பிறவியின் பயன் பிறவியறுத்தல் ஆகும் . இறைவனின் திருவடிகளை எந்நாளும் நினைந்து வணங்குபவர்க்கு பிறவியறுத்தல் கைகூடும். பிறவியின் அளவையும் அதன் காலநீட்டத்தையும் கருத்தில் கொண்டே அதைப் பெருங்கடல் என்று உருவகப்படுத்துகிறார்.

uline