பாயிரவியல்

2. வான்சிறப்பு

(மழையின் பெருமை )

11. வானின் றுலகம் வழங்கி வருதலாற்
      றானமிழ்த மென்றுணரற் பாற்று.

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
      துப்பாய தூஉ மழை.

13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
      துண்ணின் றுடற்றும் பசி.

14. ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
      வாரி வளங்குன்றிக் கால்.

15. கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
      எடுப்பதூஉ மெல்லா மழை.

16. விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
      பசும்புற் றலைகாண் பரிது.

17. நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
      தானல்கா தாகி விடின்.

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
      வறக்குமேல் வானோர்க்கு மீண்டு.

19. தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
      வானம் வழங்கா தெனின்.

20. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
      வானின் றமையா தொழுக்கு.




குறள் 11

வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரல் பாற்று.


சொல்லுரை:

வான்நின்று - வானத்தில் மேகங்கள் நின்று

உலகம் - இந்த உலக உயிர்களுக்கு

வழங்கி - (மழையை) வழங்கி

வருதலால் - வருவதால்

தான்அமிழ்தம் - அம்மழைதான் இவ்வுலக உயிர்களுக்கு அமிழ்தம் (உணவு)

என்றுணரல் - என்று அறியப்படும் (உணரப்படும்)

பாற்று - தன்மையுடையது.


பொருளுரை:

வானத்தில் மேகங்கள் நின்று இந்த உலக உயிர்களுக்கு மழையை வழங்கி வருவதால் அம்மழைதான் இவ்வுலக உயிர்களுக்கு அமிழ்தம் (உணவு) என்று அறியப்படும் தன்மையுடையது.


விளக்கவுரை:

உலகம் என்பது அதிலுள்ள உயிர்களைக் குறிக்கும் இடவாகு பெயர். அமிழ்தம் என்பது சாவா மருந்தாகிய இருவகை உணவு. அவை சோறும், நீரும் ஆகும். அவிழ் – அவிழ்து – அவிழ்தம் – அமிழ்தம் அவிழ் – வெந்து மலர்ந்த சோற்றுப்பருக்கை அமுது படைத்தல் – சோறு, உணவு படைத்தல்.



குறள் 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.


சொல்லுரை:

துப்பார்க்குத் - உண்பவர்க்கு

துப்பாய - நன்மையாகிய

துப்பாக்கித் - உணவுகளை உண்டாக்கி

துப்பார்க்குத் - அவ்வுணவுகளை உண்பவர்க்கு

துப்பாய - நல்ல உணவாக

தூஉ - தானும் இருப்பதும்

மழை - மழைதான்.


பொருளுரை:

உண்பவர்க்கு நன்மையாகிய உணவுகளை உண்டாக்கி அவ்வுணவுகளை உண்பவர்க்கு நல்ல உணவாக தானும் இருப்பதும் மழைதான்.


விளக்கவுரை:

முந்தைய குறளில் அமிழ்தம் என்று ஒன்றாகக் கூறியதை இக்குறளில் உணவு, நீர் என்று இரண்டாகக் கூறியுள்ளார். மழை உணவுப்பொருளை விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் தானும் தாகவேட்கையைத் தணிக்கும் நீராக பருகப்படுவது என்று அதன் சிறப்பு கூறப்பட்டது.



குறள் 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.


சொல்லுரை:

விண்இன்று - வானம் மழை இல்லாமல்

பொய்ப்பின் - பொய்த்துவிடுமானால்

விரிநீர் - விரிந்த கடல் நீரால் சூழப்பட்ட

வியனுலகத்து - பெருமையுடைய இவ்வுலகத்தில்

உள்நின்று - நிலைத்து நின்று

உடற்றும் - உயிர்களை துன்புறுத்துவது

பசி - பசிநோயாகும்.


பொருளுரை:

வானம் மழை இல்லாமல் பொய்த்துவிடுமானால் விரிந்த கடல் நீரால் சூழப்பட்ட பெருமையுடைய இவ்வுலகத்தில் நிலைத்து நின்று உயிர்களை துன்புறுத்துவது பசிநோயாகும்.


விளக்கவுரை:

இவ்வுலகம் மிகப்பெரிய கடலால் சூழ்ப்பட்டிருந்தாலும் அக்கடல் நீரால் உள்நாட்டில் உள்ள உயிர்களுக்கு பயனில்லை. மழையில்லாவிட்டால் இவ்வுலகில் வாழும் மனிதர்களும் மற்ற உயிர்களும் பசிப்பிணியால் துன்புறுத்தப்படுவார்கள்.



குறள் 14

ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.


சொல்லுரை:

ஏரின் - ஏரினால்

உழாஅர் - உழுது பயிர் செய்யமாட்டார்கள்

உழவர் - உழவர்கள்

புயல்என்னும் - புயல் காற்றால் உண்டாகும்

வாரி - நீர்

வளங்குன்றிக் - வளம் குறையும்

கால் - காலத்தில்


பொருளுரை:

புயல் காற்றால் உண்டாகும் நீர் வளம் குறையும் காலத்தில் உழவர்கள் ஏரினால் உழுது பயிர் செய்யமாட்டார்கள்.


விளக்கவுரை:

புயல் என்பது சுழல் காற்று மழையைக் குறிக்கும். வாரி என்பது புயல் காற்றினால் மேகம் கடல் நீரை வாரி முகர்தல் நிகழ்ச்சியைக் குறிக்கும்.



குறள் 15

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉ மெல்லா மழை.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.


சொல்லுரை:

கெடுப்பதூஉம் - பெய்யாதிருந்து உலக மக்களுக்கு கெடுதி செய்வதும்

கெட்டார்க்குச் - அப்படி கெட்டுப்போனவர்க்கு

சார்வாய் - சார்பாக இருந்து

மற்றாங்கே - முன்பு கெடுத்ததுபோல

எடுப்பதூஉம் - அவர்களை உயர்த்துவதும்

எல்லாம் - எல்லாம் செய்யவல்லது

மழை - மழையாகும்


பொருளுரை:

பெய்யாதிருந்து உலக மக்களுக்கு கெடுதி செய்வதும், அப்படி கெட்டுப்போனவர்க்கு சார்பாக இருந்து முன்பு கெடுத்ததுபோல அவர்களை உயர்த்துவதும் எல்லாம் செய்யவல்லது மழையாகும்.


விளக்கவுரை:

இந்த உலக உயிர்களின் இயக்க நிலைக்கு காரணமாக மழை இருப்பதை இக்குறள் உணர்த்துகிறது. மழை இல்லாத பஞ்ச காலத்தில் மக்கள் பண்பாடும் தொழிலும் கெடும். மழை பெய்யும் காலத்தில் அவை மீண்டும் நிலைப்பெறும். மழை இவ்விரு முரண்பட்ட செயலையும் செய்கிறது. மழை பெய்யாது இடையிடையே நின்றாலும், அறுதியாக நின்றுவிடாமல் மீண்டும் பெய்வதற்கும், மழை பெய்யாமல் இடையிடையே நிற்பதற்கும் ஏதேனும் ஒரு காரணம் இருத்தல் வேண்டும் என்பது குறிப்பாக உணர்த்தப்படும் உண்மைகள்.



குறள் 16

விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது.

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.


சொல்லுரை:

விசும்பின் - வானத்தின்

துளிவீழின் - மழைத்துளி விழுந்தால்

அல்லால் - அல்லாமல்

மற்றாங்கே - இவ்வுலகில்

பசும்புல் - பசும்புல்லின்

தலைகாண்பு - தலையைக் காண்பது

அரிது - அரிதாகும்.


பொருளுரை:

வானத்தின் மழைத்துளி விழுந்தால் அல்லாமல் இவ்வுலகில் பசும்புல்லின் தலையைக் காண்பதுகூட அரிதாகும்.


விளக்கவுரை:

மழை பெய்யாவிட்டால் ஓரறிவுடைய புல்கூட இவ்வுலகில் தோன்றல் அரிதாகும். புல்பூண்டுகூட முளையாவிட்டால் மற்றவகை உயிரினங்கள் வாழ்தல் கடுமையானதாகிவிடும்.



குறள் 17

நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்காது ஆகி விடின்.


சொல்லுரை:

நெடுங்கடலும் - பெரிய கடலும்

தன்நீர்மை - தனது தன்மையிலே

குன்றும் - குறையும்

தடிந்தெழிலி - கடல் நீரைக் குறைத்து மேலே எழுந்து மேகமாய் மாறும் வானமும்

தான்நல்காது - தானாக மழையைத் தராமல்

ஆகி - ஆகி

விடின் - விட்டால்


பொருளுரை:

கடல் நீரைக் குறைத்து மேலே எழுந்து மேகமாய் மாறும் வானமும் தானாக மழையைத் தராமல் ஆகிவிட்டால் பெரிய கடலும் தனது தன்மையிலே குறையும்.


விளக்கவுரை:

பெரிய கடல் தன் இயல்பு குன்றுவது என்பது கடல்வாழ் உயிரினங்களுக்கும் மழை இன்றியமையாதது என்று கூறப்பட்டது. கடல்நீரை குறைத்தல் என்பது அதில் நீரை முகத்தல். முகப்பது முகில். முகந்தபின் மேலெழுவது எழிலி. வானம் கடல் நீரை முகப்பது ஒரு இயற்கை நிகழ்வு. மழைக்கு மூலமாகிய மாபெரும் நீர்நிலைக்கும் மழை வேண்டும் என்பது சிறப்பு.



குறள் 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு மீண்டு.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


சொல்லுரை:

சிறப்பொடு - திருவிழா போன்ற சிறப்பும்

பூசனை - தினசரி நடக்கும் பூசைகளும்

செல்லாது - நடக்காது

வானம் - வானம்

வறக்குமேல் - மழை பெய்யாமல் வறண்டுபோகுமானால்

வானோர்க்கும் - தேவர்களுக்கும் (தெய்வங்களுக்கும்)

ஈண்டு - இவ்வுலகில்


பொருளுரை:

வானம் மழை பெய்யாமல் வறண்டுபோகுமானால் தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் இவ்வுலகில் திருவிழா போன்ற சிறப்பும் தினசரி நடக்கும் பூசைகளும் நடக்காது.


விளக்கவுரை:

பூசுதல் – தெய்வச்சிலையை நீராட்டுவதும் , வெண்ணெய், சந்தனம், விபூதி கொண்டு பூசுவதும்.
பூசித்தல் – பூமாலை சாத்தியும் தேங்காய் பழம் முதலியன படைத்தும் வழிபடுதல்.
பூசி-பூசனை-பூசாரி (அனை, ஐ, அனம், ஆரி ஆகியன தமிழ் ஈறுகள். )



குறள் 19

தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.


சொல்லுரை:

தானம் - தானம் கொடுப்பதும்

தவம்இரண்டும் - தவம் செய்வதும் ஆகிய இரண்டும்

தங்கா - இவ்வுலகில் நடைபெறாது

வியன்உலகம் - பரந்த இவ்வுலகில் ( விந்தைகள் நிறைந்த இவ்வுலகில் )

வானம் - வானம்

வழங்காது - மழையை வழங்காது

எனின் - என்றால்


பொருளுரை:

விந்தைகள் நிறைந்த பரந்த இவ்வுலகில் வானம் மழையை வழங்காது என்றால் தானம் கொடுப்பதும் தவம் செய்வதும் ஆகிய இரண்டும் இவ்வுலகில் நடைபெறாது.


விளக்கவுரை:

தானம் என்பது நல்வழியில் ஈட்டிய பொருளை தெய்வப்பற்று காரணமாக கோவில்களுக்கும், அடியார்க்கும் அருளுடைமை காரணமாக இரப்போர்க்கும் உவகையோடு வழங்குதல். தவமென்பது மனம் ஐம்பொறிகள் வழி செல்லாமல் நிற்கும்பொருட்டு விரதங்கள் போன்றவற்றின்மூலம் உண்டிசுருக்குதல் ஆகும். தானம் இல்லறத்தின்மீதும் தவம் துறவறத்தின்மீதும் கூறப்பட்டது.



குறள் 20

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு


சொல்லுரை:

நீர்இன்று - நீர் இல்லாமல்

அமையாது - நிலைப்பெறாது

உலகெனின் - இவ்வுலக வாழ்வு. அதுபோல்

யார்யார்க்கும் - எப்படிப்பட்டவர்க்கும்

வான்இன்று - மழையின்றி

அமையாது - நிலைத்திராது

ஒழுக்கு - ஒழுக்கம்


பொருளுரை:

நீர் இல்லாமல் நிலைப்பெறாது இவ்வுலக வாழ்வு. அதுபோல் எப்படிப்பட்டவர்க்கும் மழையின்றி நிலைத்திராது ஒழுக்கம்.


விளக்கவுரை:

இவ்வுலக மக்கள் எந்நிலையில் இருந்தாலும் அவர்களின் வாழ்விற்கும் ஒழுக்க நெறிக்கும் மழை இன்றியமையாதது ஆகும்.



uline