21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
     
வேண்டும் பனுவற் றுணிவு.
22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
     
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
23. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
     
பெருமை பிறங்கிற் றுலகு.
24. உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
     
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
25. ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா
     
னிந்திரனே சாலுங் கரி.
26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
     
செயற்கரிய செய்கலா தார்.
27. சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
     
வகைதெரிவான் கட்டே யுலகு.
28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
     
மறைமொழி காட்டி விடும்.
29. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
     
கணமேயுங் காத்த லரிது.
30. அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
     
செந்தண்மை பூண்டொழுக லான்.
குறள் 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
சொல்லுரை:
ஒழுக்கத்து - தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறுதியாக இருந்து
நீத்தார் - உலகப்பற்றைத் துறந்த முனிவரது
பெருமை - பெருமையை
விழுப்பத்து - சிறந்த பொருள் எல்லாவற்றும் சிறந்ததாக
வேண்டும் - போற்ற வேண்டுவதே
பனுவல் - சிறந்த நூல்களின்
துணிவு - முடிவு
பொருளுரை:
தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறுதியாக இருந்து உலகப்பற்றைத் துறந்த முனிவரது பெருமையை சிறந்த பொருள் எல்லாவற்றும் சிறந்ததாக போற்ற வேண்டுவதே சிறந்த நூல்களின் முடிவு.
விளக்கவுரை:
துறவியர் தமது ஒழுக்கத்தின்கண் உறுதியாக இருந்து ‘யான்’ என்னும் அகப்பற்றையும் ‘எனது’ என்னும் புறப்பற்றையும் துறந்து வாழ்வர். உலகப்பற்றைத் துறந்தவரது வாழ்க்கையே பிறவிப் பயனை தந்து பிறவா நிலைக்கு உயர்த்துமாதலால் அவ்வாறு கூறப்பட்டது.
குறள் 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று.
சொல்லுரை:
துறந்தார் - பற்றுக்களை துறந்தவர்களின்
பெருமை - பெருமைகளை
துணைக்கூறின் - (துணை – இத்துணை – இவ்வளவு) இத்துணை அளவு என்று அளவிட்டுக் கூற முனைவது
வையத்து - அது இவ்வுலகத்தில்
இறந்தாரை - இதுவரை பிறந்து இறந்தவர்களையெல்லாம்
எண்ணிக்கொண்டு - எண்ணிக் கணக்கிட முயல்வது
அற்று - போன்றதாகும்
பொருளுரை:
பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமைகளை இத்துணை அளவு என்று அளவிட்டுக் கூற முனைவது அது இவ்வுலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களையெல்லாம் எண்ணிக் கணக்கிட முயல்வது போன்றதாகும்.
விளக்கவுரை:
பற்றினை துறந்தவர்களின் பெருமை அளவிட முடியாதது என்பதனை உவமையால் விளக்கப்பட்டுள்ளது. துணை என்ற சொல் அளவினைக் குறிக்கிறது.
குறள் 23
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
சொல்லுரை:
இருமை - பிறப்பு, பிறவாமை என்னும்
வகைதெரிந்து - எதிரெதிர் வகைமையினை தெரிந்து
ஈண்டுஅறம் - (இவ்வுலகில்) இப்பிறப்பில் துறவறம்
பூண்டார் - பூண்டாரது
பெருமை - பெருமையே
பிறங்கிற்று - உயர்ந்தது என்று போற்றப்படும்
உலகு - இவ்வுலகில்
பொருளுரை:
பிறப்பு, பிறவாமை என்னும் எதிரெதிர் வகைமையினை தெரிந்து இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே உயர்ந்தது என்று இவ்வுலகில் போற்றப்படும்.
விளக்கவுரை:
துறவறம் மேற்கொள்வது தெள்ளத் தெளிந்தாரின் வழிமுறையாக எடுத்துரைக்கிறார் வள்ளுவர். துறவறம் மேற்கொள்வோர் இவ்வுலக பொருள்பற்றை அறுத்து வாழ்வதால் இல்லறத்தானுக்கு அப்பொருள் கிட்டும் வாய்ப்பு அமைகிறது. அதனாலேயே துறவறம் உயர்வான வாழ்க்கை நெறியாக போற்றப்படுகிறது.
குறள் 24
உரனென்னுந் தோட்டியா னோரைந் துங்காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
சொல்லுரை:
உரனென்னும் - (அறிவு) திண்மை என்னும்
தோட்டியான் - துறட்டியினால் (அங்குசத்தால்)
ஓரைந்தும் - பொறிகளாகிய யானைகள் ஐந்தையும்
காப்பான் - அடக்கிக் காப்பவன்
வரனென்னும் - மேலானது என்று சொல்லப்படுகின்ற
வைப்பிற்கோர் - மேலுலகிற்கு (வீட்டுலகிற்கு) ஓர்
வித்து - விதையாவான்.
பொருளுரை:
அறிவு என்னும் துறட்டியினால் (அங்குசத்தால்) பொறிகளாகிய யானைகள் ஐந்தையும் அடக்கிக் காப்பவன் மேலானது என்று சொல்லப்படுகின்ற மேலுலகிற்கு (வீட்டுலகிற்கு) ஓர் விதையாவான்.
விளக்கவுரை:
ஐம்புலன்களை அடக்கி ஆள்வதற்கு மனத்திண்மை இன்றியமையாதது. ஐம்புலன்களை அடக்கி ஆளும் தகுதி படைத்தவர்க்கு தவ வலிமையும், ஆன்ம பலமும் உண்டாகும். அங்குசத்தால் யானைக்கு சிறிய வலியை உண்டாக்குவதுபோல் மனத்திண்மையினால் தன்னை வருத்தி ஐம்புலன்களை அடக்கி ஆள்வதால் இவ்வுவமை கூறப்பட்டது.
    “முழங்கி எழுவன மும்மத வேழம்
      அடக்க அறிவென்னும் தோட்டிய வைத்தேன்
      பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
      கொழுத்த வேழம் குலைக்கின்ற வாறே “
என்றார் திருமூலர்.
குறள் 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
சொல்லுரை:
ஐந்து - ஐவகைப்பட்ட அவாவினையும்
அவித்தான் - அடக்கியவனது
ஆற்றல் - வல்லமைக்கு
அகல்விசும்பு - அகன்ற வானுலகில்
உளார் - உள்ளவர்களின்
கோமான் - தலைவனாகிய
இந்திரனே - இந்திரனே
சாலும் - போதுமான
கரி - சான்றாகும்
பொருளுரை:
ஐவகைப்பட்ட அவாவினையும் அடக்கியவனது வல்லமைக்கு அகன்ற வானுலகில் உள்ளவர்களின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்றாகும்.
விளக்கவுரை:
இந்திரனை மும்மூர்த்தி கடவுள்களுக்கு அடுத்த நிலையில் புராணங்கள் வைத்தாலுங்கூட தமிழ்மரபில் மருத நிலத்தெய்வமாக இந்திரன் போற்றி மதிக்கப்படுகிறான். புராணங்களில் பல கட்டுக்கதைகள் இருப்பினும் தமிழ் உலகம் இந்திரனை உயர்ந்த தெய்வமாகவே போற்றியிருக்கிறது.
இந்திர பதவி என்பது ஒருவன் ஐம்புலன்களை அடக்கி தவமியற்றி அதன்மூலம் பெரும் பதவியாகும். ஐம்புலன்களை அடக்குவதால் வரும் ஆற்றலை உணர்த்தவே வள்ளுவர் இவ்வுவமையை கையாளுகிறார். மாறாக, அகலிகை கதையை உதாரணமாகக் கூறுவாரும் உளர்.
குறள் 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
சொல்லுரை:
செயற்கரிய - பிறரால் செய்வதற்கு அரிய செயல்களை
செய்வார் - செய்ய வல்லவர்களே
பெரியர் - பெரியோர்கள்
சிறியர் - சிறியோர்கள்
செயற்கரிய - அவ்வரிய செயல்களை
செய்கலா தார் - செய்ய இயலாதவர்கள் ஆவர்
பொருளுரை:
பிறரால் செய்வதற்கு அரிய செயல்களை செய்ய வல்லவர்களே பெரியோர்கள். சிறியோர்கள் அவ்வரிய செயல்களை செய்ய இயலாதவர்கள் ஆவர்.
விளக்கவுரை:
துறவறத்தார் செயற்கரிய செயல்களை ஆற்றி தவ வலிமையும் ஆன்ம வலிமையும் பெறுகின்றர். துறவறம் மேற்கொண்டும் செயற்கரிய செயல்களை ஆற்றாது இருப்பவர்களை சிறியர் என்றார். துறவியர்களின் செயற்கரிய செயல்களாக 1. இயமம் 2. நியமம் 3. ஆசனம் 4. பிரணாயாமம் 5. பிரத்தியாகாரம் 6. தாரணை 7. தியானம் 8. சமாதி ஆகும்.
    1. இயமம் – கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிரம்மச்சரியம்
    2. நியமம் – தூய்மை, ஆன்மீகம், தவம், இறைவழிபாடு
    3. ஆசனம் – இருக்கை நிலை
    4. பிரணாயாமம் - மூச்சுப்பயிற்சி
    5. பிரத்தியாகாரம் – மன ஒடுக்கம்
    6. தாரணை - கண்டம், இதயம், நெற்றி, நாடி இவற்றில் சிந்தை வைத்தல்
    7. தியானம் – இறைவனை தியானித்தல்
    8. சமாதி – இறைவனோடு ஒன்றிவிடுதல்
குறள் 27
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
சொல்லுரை:
சுவை - நாவின்வழி தோன்றும் சுவை உணர்வு
ஒளி - கண்ணின் வழி தோன்றும் (காணொளி) பார்வை உணர்வு
ஊறு - மெய்வழி தோன்றும் ஊறும் உணர்வு
ஓசை - செவி வழி தோன்றும் ஓசை(ஒலி) உணர்வு
நாற்றமென்று - மூக்கின் வழி தோன்றும் நாற்றம் (வாசனை) உணர்வு ஆகிய
ஐந்தின் - ஐந்து புலங்களின்
வகைதெரிவான் - வகைப்பாட்டினை ஆராய்ந்து தெளிந்தவனின்
கட்டே - கண்ணே
உலகு - இவ்வுலகம் உடைத்தாகும்.
பொருளுரை:
நாவின்வழி தோன்றும் சுவை உணர்வு கண்ணின் வழி தோன்றும் (காணொளி) பார்வை உணர்வு மெய்வழி தோன்றும் ஊறும் உணர்வு செவி வழி தோன்றும் ஓசை(ஒலி) உணர்வு மூக்கின் வழி தோன்றும் நாற்றம் (வாசனை) உணர்வு ஆகிய ஐந்து புலங்களின் வகைப்பாட்டினை ஆராய்ந்து தெளிந்தவனின் கண்ணே இவ்வுலகம் உடைத்தாகும்.
விளக்கவுரை:
நம்முடைய ஐம்புல உணர்வுகள் சுவைத்தல், பார்த்தல், உணர்தல், கேட்டல், முகர்தல் ஆகியன ஆகும். ஐம்புலன்களும் முறையே வாய், கண், மெய்(உடல்), காது, மூக்கு ஆகிய பொறிகளின்வழி வெளிப்படுவன. நம்முடைய உடல் ஐந்து பூதங்களாகிய நிலம் (நாற்றம்), நீர்(சுவை), காற்று(ஊறு), நெருப்பு(ஒளி) மற்றும் ஆகாயம்(ஓசை) ஆகியவற்றினால் ஆனது. நம்முடைய ஐம்புல உணர்வுகளுக்கும் ஐம்பூதங்களுக்கும் உள்ள தொடர்பும் அதன் தன்மையும் ஆராய்ந்து தெளிந்து தன் ஆன்ம பலத்தை, தவ வலிமையை அடையவேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து.
குறள் 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
சொல்லுரை:
நிறைமொழி - தான் சொல்லும் சொல்லின் பயனை முழுமையாக அளிக்கவல்ல
மாந்தர் - வல்லமையுடைய துறவியரின்
பெருமை - பெருமைகளை
நிலத்து - இவ்வுலகில்
மறைமொழி - அவர்கள் அளித்துவிட்டுச் சென்ற மந்திர மொழிகளே
காட்டி - தெளிவாகக் காட்டி
விடும் - விடும்.
பொருளுரை:
தான் சொல்லும் சொல்லின் பயனை முழுமையாக அளிக்கவல்ல வல்லமையுடைய துறவியரின் பெருமைகளை இவ்வுலகில் அவர்கள் அளித்துவிட்டுச் சென்ற மந்திர மொழிகளே தெளிவாகக் காட்டி விடும்.
விளக்கவுரை:
தவ வலிமை உடையவர்கள் சொன்னது சொன்னபடி நடக்கும் தன்மையுடையவர்கள். அவர்கள் மறைமொழியாக – கட்டளை மொழியாக – மந்திரமாக சொல்லிச்சென்ற வாக்குப்படியே இவ்வுலகம் இன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. இதன்மூலமே அவர்களின் பெருமையை நாம் உணரலாம்.
குறள் 29
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
சொல்லுரை:
குணமென்னும் - நற்குணங்களெனும்
குன்றேறி - குன்றின்மீது ஏறி
நின்றார் - நின்ற துறவிகளின்
வெகுளி - கடுஞ்சினத்திற்கு ஒருவர் ஆளாக நேரிட்டால்
கணமேயும் - ஒரு கணம் (கண்ணிமைக்கும் நேரம்) கூட
காத்தல் - சினம் கொள்ளப்பட்டவரைக் காத்தல்
அரிது - அரிதாகும்.
பொருளுரை:
நற்குணங்களெனும் குன்றின்மீது ஏறி நின்ற துறவிகளின் கடுஞ்சினத்திற்கு ஒருவர் ஆளாக நேரிட்டால் ஒரு கணம் (கண்ணிமைக்கும் நேரம்) கூட சினம் கொள்ளப்பட்டவரைக் காத்தல் அரிதாகும்.
விளக்கவுரை:
துறவிகள் சினங்கொள்ளுதல் மிக அரிது. அப்படிப்பட்ட துறவியரும் சினம் கொள்ளும் வகையில் ஒருவர் நடப்பாரானால் அச்சினம் ஒரு கணம்தான் தோன்றுமேயாயினும் அதனால் ஏற்படும் விளைவுகள் பெரிதாம்.
கணம் – கண் + அம் – கண் மூடும் கால அளவு – கண்ணிமைக்கும் நேரம்.
கணம் என்பது ‘ஷணம்’ என்று சமக்கிருதத்தில் மருவிற்று. கணம் என்பது தமிழ்ச்சொல்லே. தமிழின் தொன்மை அறியாதவர் ‘கணம்’ என்பது தமிழ்ச்சொல் அல்ல என்று மறுப்பர்.
குறள் 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்.
சொல்லுரை:
அந்தணர் - அந்தணர்
என்போர் - என்று சொல்லப்படுவோர்
அறவோர் - துறவியர் ஆவர்
மற் றெவ்வுயிர்க்கும் - அவர்கள் மனிதர்கள் மட்டுமின்றி மற்ற எவ்வுயிர்களிடத்தும்
செந்தண்மை - செம்மையான குளிர்ந்த அருளைப்
பூண்டு - பூண்டு
ஒழுகலான் - ஒழுகுவதால்
பொருளுரை:
அந்தணர் என்று சொல்லப்படுவோர் துறவியர் ஆவர். ஏனெனில், அவர்கள் மனிதர்களிடம் மட்டுமின்றி மற்ற எவ்வுயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் பூண்டு ஒழுகுவதால்.
விளக்கவுரை:
அந்தணர் = அம் + தண்மை + அர். அம் – அழகு, தண்மை – குளிர்ச்சி, அர் – தன்மையர். எவ்வித சூழ்நிலையிலும் எல்லா காலத்திலும் மென்மையாகவும் அன்புடனும் பரிவுடனும் நடந்துகொள்ளும் குளிர்தன்மை உடையவர்கள். செந்தண்மை – செம் + தண் + மை – செவ்விய கருணைத்தன்மை உடையவர். அறநெறியில் நிற்போரும் எல்லா உயிர்களிடத்தும் அருளுடனும் கருணையுடனும் நடந்து கொள்பவர்களே அந்தணர் என்று போற்றப்படுவார்கள்.