பாயிரவியல்

4. அறன் வலியுறுத்தல்

(அறச்செயல்களை ஆற்ற வலியுறுத்தல்)

31. சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூங்
      காக்க மெவனோ உயிர்க்கு.

32. அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
      மறத்தலி னூங்கில்லை கேடு.

33. ஒல்லும் வகையா னறவினை யோவாதே
      செல்லும்வா யெல்லாஞ் செயல்.

34. மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
      னாகுல நீர பிற.

35. அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
      மிழுக்கா வியன்ற தறம்.

36. அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
      பொன்றுங்காற் பொன்றாத் துணை.

37. அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
      பொறுத்தானோ டூர்ந்தா னிடை.

38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
      வாழ்நாள் வழியடைக்குங் கல்.

39. அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
      புறத்த புகழு மில.

40. செயற்பால தோரு மறனே யொருவற்
      குயற்பால தோரும் பழி.



குறள் 31

சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூங்
காக்க மெவனோ உயிர்க்கு.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.


சொல்லுரை:

சிறப்புஈனும் - பெருமையைத் தரும்

செல்வமும் - செல்வமும்

ஈனும் - தரும்

அறத்தின்ஊங்கு - அறத்தைவிட மேலான

ஆக்கம் - செய்யத்தகுந்த ஆக்கமான செயல்

எவனோ - எதுதான்

உயிர்க்கு - மனிதருக்கு


பொருளுரை:

அறம் செய்வோர்க்கு பெருமை, செல்வம் ஆகிய இரண்டையும் கொடுக்கும். அறத்தைவிட மேலான செய்யத்தகுந்த ஆக்கமான செயல் எதுதான் மனிதருக்கு?


விளக்கவுரை:

ஒருவன் பெறும் சிறப்பினுள் மிகச்சிறந்த சிறப்பு வீடுபேறு ஆகும். அறம் செய்வோர் பெறும் மிகப்பெரிய சிறப்பாக வீடுபேற்றை கூறுகின்றார் வள்ளுவர். மேலும், அறவழி நிற்போர்க்கு அவர்களின் இவ்வுலக வாழ்வு வாழ்வதற்கு பொருட்செல்வம், மக்கட்செல்வம் போன்ற செல்வத்தையும் தரும்.



குறள் 32

அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லை கேடு.

அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.


சொல்லுரை:

அறத்தின்ஊங்கு - அறத்தைச் செய்வதைக்காட்டிலும்

ஆக்கமும் - ஒருவருக்கு ஆக்கம் தரும்

இல்லை - வழி ஏதுமில்லை

அதனை - அதனை

மறத்தலின் - செய்ய மறத்தலைவிட

ஊங்குஇல்லை - வேறானது

இல்லை - ஏதுமில்லை

கேடு - கேடு


பொருளுரை:

அறத்தைச் செய்வதைக்காட்டிலும் ஒருவருக்கு ஆக்கம் தரும் வழி ஏதுமில்லை. அதனை செய்ய மறத்தலைவிட வேறான கேடு ஏதுமில்லை.


விளக்கவுரை:

அறச்சிந்தனையோடு ஒருவன் வாழும்பொழுது அவன் மனம் முழுவதும் அறச்செயல்கள் புரிவதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும். அதனால் ஆக்கச்செயல்கள் பலவற்றை அவனால் புரியமுடியும். அதற்கு மாறாக, அறசிந்தனை அற்று இருப்பின் அந்த வெற்றிடத்தில் தீய எண்ணங்கள் குடியேறும். அதுவே பல கேடுகளுக்கும் வழிவகுக்கும்.



குறள் 33

ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.


சொல்லுரை:

ஒல்லும் - முடிந்த

வகையான் - வகையில் எல்லாம்

அறவினை - அறமாகிய நற்செயலை

ஓவாதே - இடையறாமல்

செல்லும்வாய் - செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தபோது

எல்லாம் - எல்லாம்

செயல் - செய்யவேண்டும்


பொருளுரை:

அறமாகிய நற்செயலை முடிந்த வகையில் எல்லாம் இடையறாமல் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தபோது எல்லாம் செய்யவேண்டும்.


விளக்கவுரை:

முடிந்த வகையாவது இல்லற வினையை தம்மிடமுள்ள பொருளளவிற்கு ஏற்பவும் துறவற வினையை உடல் நிலைக்கும் உள்ள நிலைக்கும் ஏற்பவும் செய்தலாகும். செல்லும் வாய் என்பது அறத்தை செய்வதற்கு வாய்க்கும் இடங்கள். செல்லும் வாய் என்பதற்கு மனம், மொழி, மெய் என்பனவற்றால் ஆற்றப்படும் முறையே நற்சிந்தை, நற்சொல் மற்றும் நற்செயல் என்பார் பரிமேலழகர்.



குறள் 34

மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.


சொல்லுரை:

மனத்துக்கண் - ஒருவன் தன் மனத்தினால்

மாசிலன் - குற்றமற்றவனாக

ஆதல் - இருப்பது

அனைத்தறன் - அவ்வளவே அறமாகும்

ஆகுல - பகட்டு ( ஆகு + உலம் = ஆகின்ற ஒலி)

நீர - தன்மை

பிற - பிற தன்மையுடையதாகும்


பொருளுரை:

ஒருவன் தன் மனத்தினால் குற்றமற்றவனாக இருப்பது அவ்வளவே அறமாகும். பிறவெல்லாம் பகட்டுத் தன்மை உடையதாகும்.


விளக்கவுரை:

மனம் தூய்மையுடையதாய் இருப்பின் அதன்மூலம் தோன்றும் மொழி, மெய் ஆகியனவும் தூய்மை உடையதாய் இருக்கும் என்பதாம். அதனால் மாசிலா மனமே அறத்தின் அடிப்படையாகும். மனத்தூய்மை இருப்பின் வெளிக்கோலம் தேவையற்றதாகிறது. தீயதாயின் வெளிக்கோலம் பிறரை ஏமாற்றுவன்பொருட்டு ஏற்படுகிறது.
ஆகுலம் = ஆகு + உலம் = ஆகின்ற ஒலி. உலம்புதல் – பகட்டுதல் – அலப்புதல் – அலப்பறை.



குறள் 35

அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.


சொல்லுரை:

அழுக்காறு - பொறாமை

அவா - ஆசை

வெகுளி - சினம்

இன்னாச்சொல் - கடுஞ்சொல், துன்பம் தரக்கூடிய சொல்

நான்கும் - ஆகிய நான்கு குற்றங்களையும்

இழுக்கா - விலக்கி (நீக்கி)

இயன்றது - நடத்தலே

அறம் - அறம் ஆகும்


பொருளுரை:

பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல், துன்பம் தரக்கூடிய சொல் ஆகிய நான்கு குற்றங்களையும் விலக்கி (நீக்கி) நடத்தலே அறம் ஆகும்.


விளக்கவுரை:

பிறர் ஆக்கத்தின்மீது பொறாமையும், அவ்வாக்கத்தின்மீது கொள்ளும் பேராசையும், அவற்றை அடையாதபோது பிறர்மேல் வரும் சினமும், அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய நான்கினையும் விலக்கி நடத்தலே அறமாகும்.



குறள் 36

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.


சொல்லுரை:

அன்று - அன்றைக்கு

அறிவாம் - பார்த்துக்கொள்ளலாம்

என்னாது - என்று எண்ணாமல்

அறம்செய்க – அறச்செயல்களை இன்றிலிருந்தே செய்க

மற்றுஅது - அப்படிச் செய்யப்படும் அறமே

பொன்றுங்கால் - நாம் இறக்கும்போது

பொன்றாத் - நம்மை நீங்காமல்

துணை - துணையாக வருவது ஆகும்


பொருளுரை:

அன்றைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணாமல் அறச்செயல்களை இன்றிலிருந்தே செய்க. அப்படிச் செய்யப்படும் அறமே நாம் இறக்கும்போது நம்மை நீங்காமல் துணையாக வருவது ஆகும்.


விளக்கவுரை:

இளமைக்காலத்தே அறச்செயல் செய்யாமல் முதுமைக்காலத்தில் செய்யவேண்டியதே அறச்செயல் என்று எண்ணி இருந்துவிடாமல் இன்றிலிருந்தே அறவினையைச் செய்யவேண்டும். அந்த அறமே நாம் உடல் இறக்குங்காலத்து இறவாமல் ஆன்மாவுடன் (உயிருடன்) துணையாக வருவது ஆகும். இப்பிறவியில் உடலை விட்டு உயிர் நீங்கும்போது துணையாக வருவது நாம் செய்யும் அறச்செயலின் பலனே. நிலையில்லாத உடம்பு நல்நிலையில் இருக்கும்போதே அறச்செயல்கள் ஆற்றவேண்டும் என்பது வள்ளுவர் அறிவுரை.



குறள் 37

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.

அறத்துஆறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.


சொல்லுரை:

அறத்துஆறு - அறத்தின் வழி

இதுஎன - இத்தன்மையது என

வேண்டா - யாரும் சொல்லவேண்டியதில்லை

சிவிகை - பல்லக்கை

பொறுத்தானோடு - சுமப்பவனோடு

ஊர்ந்தான் - அதில் அமர்ந்து செல்பவன்

இடை - இடையே ( உணர்ந்துகொள்ளலாம் ).


பொருளுரை:

அறத்தின் வழி இத்தன்மையது என யாரும் சொல்லவேண்டியதில்லை. பல்லக்கை சுமப்பவனோடு அதில் அமர்ந்து செல்பவன் இடையே உணர்ந்துகொள்ளலாம்.


விளக்கவுரை:

அறத்தின் வழி இன்னதுதான் என்று அறுதியிட்டுக் கூறவேண்டியதில்லை. மிக எளிதாக காணக்கூடிய, பல்லக்கினை சுமப்பவனும் அதில் அமர்ந்திருப்பவனும் ஆகியோரிடையே நாம் கண்டு தெளியலாம்.
அறம் செய்தால் பயன் உண்டு. அந்தப் பயனை ‘ஆறு’ என்றார். ஆறு – வழி.
அறம் செய்பவன் பல்லக்கில் அமர்ந்து செல்பவன் பெறும் சுகத்தைப்போன்று நலம் பெறுவான். அறம் செய்யாதவன் பல்லக்கைச் சுமந்து துன்புறுதலைப்போன்று நலமின்றி வாழ நேரிடும்.



குறள் 38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.


சொல்லுரை:

வீழ்நாள் - வீணாகக் கழியும் நாள்

படாஅமை - இல்லாதவாறு

நன்றுஆற்றின் – நற்செயல்களைச் செய்தால்

அஃதுஒருவன் - அது ஒருவன்

வாழ்நாள் - மீண்டும் பிறந்து வாழும் நாள்

வழிஅடைக்கும் - வருகின்ற வழியை அடைக்கும்

கல் - கல்லாகும்.


பொருளுரை:

வீணாகக் கழியும் நாள் இல்லாதவாறு நற்செயல்களைச் செய்தால் அது ஒருவன் மீண்டும் பிறந்து வாழும் நாள் வருகின்ற வழியை அடைக்கும் கல்லாகும்.


விளக்கவுரை:

நற்செயல்கள் செய்யாத நாட்கள் எல்லாம் வீணாகக் கழிக்கப்படும் நாட்களாக கொள்ளப்படவேண்டும். அவ்வாறு வீணாகக் கழியாமல் அறச்செயல்கள் ஆற்றுவானாகில் அதுவே மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் வழியை அடக்கும் கல்லாக இருந்து வீடுபேறு பெறுவதற்கு வழி வகுக்கும்.



குறள் 39

அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில.

அறத்தான் வருவதே இன்பம் மற்றுஎல்லாம்
புறத்த புகழும் இல.


சொல்லுரை:

அறத்தான் - அறநெறியில் வாழ்வதால்

வருவதே - வரும் பயனே

இன்பம் - இன்பமாகும்

மற்றுஎல்லாம் - அறநெறிக்கு மாறுபட்ட வழியில் வருவனவெல்லாம்

புறத்த - இன்பமுடையன அல்ல

புகழும் - புகழ் தரத் தக்கனவும்

இல - அல்ல


பொருளுரை:

அறநெறியில் வாழ்வதால் வரும் பயனே இன்பமாகும். அறநெறிக்கு மாறுபட்ட வழியில் வருவனவெல்லாம் இன்பமுடையன அல்ல; புகழ் தரத் தக்கனவும் அல்ல


விளக்கவுரை:

இல்லற வாழ்வில் ஈடுபட்டு வாழ்வோர்க்கு அறநெறியில் வாழ்வதால் வரும் பயனே இன்பத்தைத் தருவன. அறநெறி அல்லாது பிறவழியில் வருவனவெல்லாம் இன்பத்திற்குப் புறவாகிய துன்பத்தைத் தருவனவையே. அதனால் புகழும் உண்டாகாது.
புறத்த – இன்பத்திற்கு புறம்பாகிய துன்பத்தைக் குறித்தது.



குறள் 40

செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி.

செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி.


சொல்லுரை:

செயற்பாலது - செய்யத்தக்கது என்று

ஓரும் - ஆராய்ந்து அறியப்படுவது

அறனே - அறச்செயல்களே

ஒருவற்கு - ஒருவனுக்கு

உயற்பாலது - செய்யாமல் தள்ளத்தக்கது

ஓரும் - ஆராய்ந்து பார்த்தால்

பழி - பழிச்செயலாகும்


பொருளுரை:

செய்யத்தக்கது என்று ஆராய்ந்து அறியப்படுவது அறச்செயல்களே. ஒருவனுக்கு செய்யாமல் தள்ளத்தக்கது ஆராய்ந்து பார்த்தால் பழிச்செயலாகும்.


விளக்கவுரை:

ஒருவன் வாழ்நாளில் எப்பொழுதும் செய்யத்தக்கது என ஆராய்ந்து பார்த்தால் அது அறநெறிச் செயல்களே. செய்யாமல் தள்ளத்தக்கவை பழி ஏற்படுத்தும் இழி செயல்கள் ஆகும்.



uline