41. இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு
     
நல்லாற்றி னின்ற துணை.
42. துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
     
மில்வாழ்வா னென்பான் றுணை.
43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
     
கைம்புலத்தா றோம்ப றலை.
44. பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
     
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்.
45. அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
     
பண்பும் பயனு மது.
46. அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
     
போஒய்ப் பெறுவ தெவன்.
47. இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
     
முயல்வாரு ளெல்லாந் தலை.
48. ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
     
நோற்பாரி னோன்மை யுடைத்து.
49. அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
     
பிறன்பழிப்ப தில்லாயி னன்று.
50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
     
தெய்வத்துள் வைக்கப் படும்.
குறள் 41
இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்ற துணை.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
சொல்லுரை:
இல்வாழ்வான் - இல்லற வாழ்க்கை வாழ்பவன்
என்பான் - என்று சொல்லப்படுபவன்
இயல்புடைய - அற இயல்புடைய
மூவர்க்கும் - மூவகையானவர்க்கும்
நல்லாற்றின் - அவர் செல்கின்ற நல்ல ஒழுக்க நெறியில்
நின்ற - நிலைபெற்றிருக்க
துணை - துணையாக நிற்பதாகும்
பொருளுரை:
இல்லற வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் அற இயல்புடைய மூவகையானவர்க்கும் அவர் செல்கின்ற நல்ல ஒழுக்க நெறியில் நிலைபெற்றிருக்க துணையாக நிற்பதாகும்.
விளக்கவுரை:
இயல்புடைய மூவரென்று பரிமேலழகர் குறிப்பிடுவது ஆசிரியனிடத்து ஓதுதலும் விரதம் காத்தலுமாகிய பிரம்மச்சாரியும், இல்லைவிட்டு வனத்தின்கண் தன் துணையோடு சென்று தவவாழ்க்கையில் ஈடுபடுவனும், துறவியரும் ஆவர். மணக்குடவர், பரிதியார், காளிங்கர் ஆகியோரும் இதே கருத்துடையவராகின்றனர். மாறாக அம்மூவரை பெற்றோர், மனைவி, மக்கள் என்று கூறுவாரும் உளர். இவை உரையாசிரியர்களின் காலத்திற்கேற்ற கருத்தாகும்.
குறள் 42
துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை.
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
சொல்லுரை:
துறந்தார்க்கும் - உலகப்பற்றை துறந்த துறவிகளுக்கும்
துவ்வாதவர்க்கும் - உண்ண உணவின்றி வாடும் வறியவர்க்கும்
இறந்தார்க்கும் - வரம்பின்றி வாழ்ந்து பொருளிழந்து வாடுவோர்க்கும்
இல்வாழ்வான் - இல்வாழ்க்கை வாழ்பவன்
என்பான் -என்பவன்
துணை -துணையாவான்.
பொருளுரை:
உலகப்பற்றை துறந்த துறவிகளுக்கும், உண்ண உணவின்றி வாடும் வறியவர்க்கும், வரம்பின்றி வாழ்ந்து பொருளிழந்து வாடுவோர்க்கும் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பவன் துணையாவான்.
விளக்கவுரை:
‘இறந்தார்க்கும்’ என்ற சொல்லிற்கு வெவ்வேறு பொருள் கொள்ளப்படுகிறது. திக்கற்று தன்னிடம் வந்து இறந்தவர்க்கு ஈமக்கடன் முதலியன செய்தலை பரிமேலழகர் குறிபிடுகிறார். இறத்தல் என்பது வரம்பினை கடப்பது. அதனால் வரம்பின்றி வாழ்ந்து பொருளிழந்தோர் என்றும் பொருள் கொள்ளலாம்.
குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை.
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை .
சொல்லுரை:
தென்புலத்தார் - மூதாதையர்
தெய்வம் - தெய்வம்
விருந்து - விருந்தினர்
ஒக்கல் - சுற்றத்தார்
தான் - தன்னுடைய நலம்
என்றாங்கு - என்று
ஐம்புலத்தாறு - ஐந்து இடங்களிலும் நல்லாற்றில் நின்று
ஓம்பல் - பேணிக்காத்தல்
தலை - இல்லறத்தானின் தலையாய கடமையாகும்.
பொருளுரை:
மூதாதையர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன்னுடைய நலம் என்று ஆங்கே ஐந்து இடங்களிலும் நல்லாற்றில் நின்று பேணிக்காத்தல் இல்லறத்தானின் தலையாய கடமையாகும்.
விளக்கவுரை:
தன் குடும்பத்து மூதாதையர்க்கு படையல் பூசனை செய்வதும், நீர்க்கடன் ஆற்றுவதும், தெய்வத்தை வழிபட்டு செய்யவேண்டிய தான தர்மமும், விருந்தினரை ஒம்பலும், சுற்றத்தாரை பேணுதலும், தான் மற்றும் தன் குடும்பத்தினரை பேணுதலும் ஆகிய ஐந்து வகைப்பட்டனவும் இல்லறத்தானின் தலையாய கடமையாகும்.
குமரிக்கண்டம் கடல்கோளில் மூழ்கியதால் அது இருந்த தென்திசை கூற்றுவன் திசை எனப்பட்டது. மற்றும், அது இறந்தோரின் இருப்பிடமாகவும் கொள்ளப்பட்டது. தென்புலத்தார்க்கு படையல் இடுவதென்பது தன் குடும்பத்தில் இறந்த முன்னோர்க்கு அவர் இறந்த நாள் மற்றும் திதி நாட்களில் உணவு படைத்து துறவியர்க்கும் இரந்தோர்க்கும் சிறந்த உணவும் புத்தாடை அளித்தலும் ஆகும்.
குறள் 44
பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
சொல்லுரை:
பழியஞ்சிப் - (பொருளைத் தேடுங்கால்) பழிக்கு அஞ்சிப் பொருளைத் தேடி
பாத்தூண் - பகுத்து உண்ணும்
உடைத்தாயின் - தன்மை உடையவனாக
வாழ்க்கை - ஒருவனது இல்வாழ்க்கை அமையுமாயின்
வழியெஞ்சல் - அவனது தலைமுறை மறைவது என்பது
எஞ்ஞான்றும் - எக்காலத்திலும்
இல் - இல்லை
பொருளுரை:
பொருளைத் தேடுங்கால் பழிக்கு அஞ்சிப் பொருளைத் தேடி பகுத்து உண்ணும் தன்மை உடையவனாக ஒருவனது இல்வாழ்க்கை அமையுமாயின் அவனது தலைமுறை மறைவது என்பது எக்காலத்திலும் இல்லை.
விளக்கவுரை:
பொருளைத் தேடும்போது பழிக்கு அஞ்சிப் பொருளைத் தேட வேண்டும். அவ்வாறு தேடிய பொருளை இதுவரை குறட்பாவில் கூறப்பட்ட இயல்புடைய மூவர்க்கும், தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் பகுத்து அளித்து உண்டலை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு வாழ்பவனின் தலைமுறையானது எக்காலத்திலும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
சமூகத்தில் வாழும் மனிதன் பழிக்கு அஞ்சி வாழ்வதன்மூலம் குற்றம் இழைத்தல் ஒழிக்கப்படுகிறது. தன்னிடம் உள்ளவற்றை பிறர்க்கு பகிர்ந்து அளித்து வாழ முற்படுவதன்மூலம் ஒரு சிறந்த சமுதாயம் உருவாக்கப்படுகிறது.
குறள் 45
அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனு மது.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
சொல்லுரை:
அன்பும் - அன்புடனும்
அறனும் - அறநெறியுடனும்
உடைத்தாயின் - வாழும் தன்மை உடையவனாயின்
இல்வாழ்க்கை - ஒருவனின் இல்வாழ்க்கையின்
பண்பும் - சிறந்த பண்பும்
பயனும் - பயனும்
அது - அதுவேயாகும்.
பொருளுரை:
அன்புடனும் அறநெறியுடனும் வாழும் தன்மை உடையவனாயின் ஒருவனின் இல்வாழ்க்கையின் சிறந்த பண்பும் பயனும் அதுவேயாகும்.
விளக்கவுரை:
இல்லற வாழ்வின் ஆணிவேராக இருக்கவேண்டியது கணவன் மனைவியிடையேயான அன்பும் மற்றும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டும் அன்பும் ஆகும். அந்த அன்பு நிறைந்த வாழ்க்கையே இல்வாழ்க்கையின் பண்பு என்று போற்றப்படுவது. கருத்தொருமித்து அவர்கள் செய்யும் அறவினைகளே இல்லறத்தின் பயனாக போற்றப்படுவது. அன்பு-பண்பு , அறன்-பயன் என்பது நிரல்நிறை.
இல்வாழ்க்கையின் அடிப்படைப் பண்பான அன்பை வலியுறுத்தவும், இல்லறத்தின் பயன் அறம் சார்ந்த செயல்களை செய்து வாழ்வதே என்பதை உணர்த்தவும் இந்தக் குறட்பா முனைகிறது.
குறள் 46
அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்.
சொல்லுரை:
அறத்தாற்றின் - அறத்தின் வழியே
இல்வாழ்க்கை - ஒருவன் இல்வாழ்க்கையை
ஆற்றின் - நடத்துவானாயின்
புறத்தாற்றில் - அதற்குப் புறம்பாகிய துறவுநெறியில்
போஒய்ப் - போய்
பெறுவது - பெறப்போவது
எவன் - யாது உளது (ஒன்றுமில்லை)
பொருளுரை:
அறத்தின் வழியே ஒருவன் இல்வாழ்க்கையை நடத்துவானாயின் அதற்குப் புறம்பாகிய துறவுநெறியில் போய்பெறப்போவது யாது உளது (ஒன்றுமில்லை).
விளக்கவுரை:
துறவற நெறி மேற்கொண்டு பெறும் பயனாகிய வீடுபேற்றை இல்லறத்தை அறநெறியின் வழியே நடத்துவதன்மூலமும் பெறமுடியும் என்பது வள்ளுவரின் கூற்று. சிவனடியார்கள் பலர் இல்லறத்தின் வழி வாழ்ந்து அடைந்தார்கள் என்று பெரியபுராணம் கூறும். இல்லற வாழ்க்கை மேற்கொண்டவன் , அதன்பின் துறவறமே சிறந்ததென்று குடும்ப பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு செல்பவர்க்கு வள்ளுவர் சொல்லும் அறிவுரையாகும்.
குறள் 47
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
சொல்லுரை:
இயல்பினான் - நெறிமுறை தவறாத இயல்போடு
இல்வாழ்க்கை - இல்லற வாழ்க்கை
வாழ்பவன் - வாழ்பவன்
என்பான் - என்று சொல்லப்படுபவன்
முயல்வாருள் - வீடுபேறு அடைய முயல்வாருள்
எல்லாம் - எல்லாருள்ளும்
தலை - தலை சிறந்தவனாவான்
பொருளுரை:
நெறிமுறை தவறாத இயல்போடு இல்லற வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் வீடுபேறு அடைய முயல்வாருள் எல்லாருள்ளும் தலை சிறந்தவனாவான்.
விளக்கவுரை:
நெறிமுறை தவறாது இல்லறத்தின் இயல்பு சார்ந்து வாழ்வதை வள்ளுவர் சிறப்பித்துக் கூறுகிறார். இல்லறத்தில் வாழ்பவனும் துறவறம் மேற்கொண்டு வாழ்பவனும் வீடுபேறு அடைவதே பிறவிப்பயனாகும். இல்லறத்தில் நெறிமுறை தவறாமல் சிறப்புற வாழ்பவனுக்கும் அது கிட்டும் என்பதை உணர்த்திடவும், இல்லறத்தில் ஈடுபடுபவன் உலக நடைமுறை வாழ்க்கைக்கு இடையிலும் அறநெறியில் வாழ்ந்து வீடுபேறு அடைய முயற்சி செய்தலை தலையாய முயற்சி என்றும் கூறுகிறார். துறவறத்தானுக்கு அது எளிதில் கிட்டும் எனினும், இல்லறத்தான் அறநெறி இல்வாழ்க்கைமூலம் அடைவதை வள்ளுவர் போற்றுகிறார்.
குறள் 48
ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
சொல்லுரை:
ஆற்றின் - பிறரையும் நல்வழியில்
ஒழுக்கி - நடக்கச் செய்து
அறனிழுக்கா - தானும் அறனெறி தவறாமல் வாழ்பவனின்
இல்வாழ்க்கை - இல்லற வாழ்வானது
நோற்பாரின் - துறவு மேற்கொண்டு வாழ்பவனின்
நோன்மை - சிறப்பை
உடைத்து - உடையதாகும்.
பொருளுரை:
பிறரையும் நல்வழியில் நடக்கச் செய்து தானும் அறனெறி தவறாமல் வாழ்பவனின் இல்லற வாழ்வானது துறவு மேற்கொண்டு வாழ்பவனின் சிறப்பை உடையதாகும்.
விளக்கவுரை:
‘ஆற்றின் ஒழுக்கி’ என்பது பிறரை நல்லாற்றில் ( நல்வழியில் ) நடக்கச் செய்வதும், துறவியர் பசியாற்றி அவர்கள் தங்கள் தவநெறியில் நிற்பதற்கு துணையாய் இருப்பதும் ஆகும். மேலும் தான் அறநெறியில் இருந்து பிறழாது இல்லறம் நடத்துவது, துறவறம் பூண்டாரின் சிறப்பை உடைத்தாகும். ‘நோற்பரின் நோன்மை உடைத்து’ என்பதற்கு இல்லறமானது துறவறம் பூண்டாரின் உயர்வைவிட சிறப்புடைத்து என்பாரும் உளர். இத்தொடர் ‘முள்ளும் மலரும்’ என்பதுபோல இருபொருள் வழங்கும் தொடராகும்.
குறள் 49
அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று.
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
சொல்லுரை:
அறன் - அறம்
எனப்பட்டதே - என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதே
இல்வாழ்க்கை - இல்லற வாழ்வு ஆகும்.
அஃதும் - அந்த குடும்ப வாழ்வும்
பிறன்பழிப்பது - பிறரால் பழிக்கப்படும் தன்மை
இல்லாயின் - இல்லாதிருக்குமானால்
நன்று - மிகவும் நன்றாகும்.
பொருளுரை:
அறம் என்று என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதே இல்லற வாழ்வு ஆகும். அந்த குடும்ப வாழ்வும் பிறரால் பழிக்கப்படும் தன்மை இல்லாதிருக்குமானால் மிகவும் நன்றாகும்.
விளக்கவுரை:
இல்வாழ்க்கை என்பது அறநெறிகளின்படி நின்று நல்லாற்றில் வாழ்வதாகும். நாம் வாழும் வாழ்வு சுற்றத்தார், உறவினர், ஊர்மக்கள், தவசியர், மேலோர் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அமையவேண்டும் என்பதனை ‘பிறன்பழிப்பது இல்லாயின் நன்று’ என்று கூறுகிறார்.
குறள் 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
சொல்லுரை:
வையத்துள் - நிலவுலகில்
வாழ்வாங்கு - மிகச்சிறந்த வாழ்வு
வாழ்பவன் - வாழ்பவன்
வானுறையும் - விண்ணுலகில் உள்ள
தெய்வத்துள் - தெய்வங்களுள் ஒன்றாக
வைக்கப் படும் - வைத்து எண்ணப்படுவான்.
பொருளுரை:
நிலவுலகில் மிகச்சிறந்த வாழ்வு வாழ்பவன் விண்ணுலகில் உள்ள தெய்வங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுவான்.
விளக்கவுரை:
இல்லற நெறிமுறைகளை கடைப்பிடித்து அறவழியில் வாழ்வதையே வாழ்வாங்கு வாழ்தல் என்கிறார் வள்ளுவர். அவ்வாறு வாழ்பவர் வானுலகில் வாழும் தெய்வத்தைச் சேர்வர் என்பதாகும். துறவியரின் நோக்கும் வீடுபேறு அடைவதேயாதலால் இல்வாழ்வானும் வீடுபேறு அடையமுடியும் என்பது வள்ளுவர் வாக்கு.