51. மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
     
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
52. மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
     
யெனைமாட்சித் தாயினு மில்.
53. இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ
     
னில்லவண் மாணாக் கடை
54. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
     
திண்மையுண் டாகப் பெறின்.
55. தெய்வந் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்
     
பெய்யெனப் பெய்யு மழை.
56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
     
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
57. சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
     
நிறைகாக்குங் காப்பே தலை.
58. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
     
புத்தேளிர் வாழு முலகு.
59. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
     
னேறுபோற் பீடு நடை.
60. மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
     
னன்கல நன்மக்கட் பேறு.
குறள் 51
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
சொல்லுரை:
மனைத்தக்க - இல்லறத்திற்கு ஏற்ற
மாண்புடையள் - மாண்புமிக்க குணங்களையும் செயல்களையும் உடையவளாய்
ஆகித் - திகழ்ந்து
தற்கொண்டான் - தன்னை மணந்துகொண்ட கணவனின்
வளத்தக்காள் - செல்வ வளத்திற்கும் வருவாய்க்கும் ஏற்ப வாழ்க்கை நடத்துபவள்
வாழ்க்கைத் துணை - அவனுக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாவாள்.
பொருளுரை:
இல்லறத்திற்கு ஏற்ற மாண்புமிக்க குணங்களையும் செயல்களையும் உடையவளாய்த் திகழ்ந்து தன்னை மணந்துகொண்ட கணவனின் செல்வ வளத்திற்கும் வருவாய்க்கும் ஏற்ப வாழ்க்கை நடத்துபவள் அவனுக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாவாள்.
விளக்கவுரை:
‘மனைத்தக்க மாண்பு’ எனப்படுவது நல்ல குணங்களும் நல்ல செயல்களும் உடையவளாய் இருத்தல். நல்ல குணங்கள் எனப்படுவது துறவியரை போற்றுதலும், விருந்தோம்பலும், இரப்போர்க்கு ஈதலும் ஆகும். நல்ல செயல்கள் எனப்படுவது அறுசுவை உணவை சுவையாக சமைத்தலும், வாழ்க்கைக்கு தேவையான பொருள்கள் அறிந்து அதனை பாதுகாத்துக் கொள்ளுதலும், அக்கம்பக்கத்தாரோடு நட்பாயிருத்தலும் ஆகும். வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது வரவிற்கு ஏற்ப செலவு செய்தல்.
குறள் 52
மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
சொல்லுரை:
மனைமாட்சி - இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள்
இல்லாள்கண் - (ஒருவனின்) மனைவியிடம்
இல்லாயின் - இல்லையென்றால்
வாழ்க்கை - அந்த இல்வாழ்க்கையானது
எனைமாட்சித்து - மற்ற எந்த வகையில் பெருமை உடையது
ஆயினும் - என்றாலும்
இல் - பெருமை உடையதாகாது.
பொருளுரை:
இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனின் மனைவியிடம் இல்லையென்றால் அந்த இல்வாழ்க்கையானது மற்ற எந்த வகையில் பெருமை உடையது என்றாலும் பெருமை உடையது ஆகாது.
விளக்கவுரை:
இல்லாள் என்பதற்கு இல்லத்தை ஆள்பவள் என்று பொருள். இது காரணப்பெயர். ஒருவனுக்கு நற்குண மனைவி அமைவதே பெருமையைத் தரும் என்பதும், அவ்வாறு அமையாவிடின் அவன் வாழ்க்கை மற்ற எந்த வகையிலும் சிறப்பாக அமைந்தாலும் அவையெல்லாம் சிறப்பைத் தராது என்பதாம்.
குறள் 53
இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ
னில்லவண் மாணாக் கடை.
இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை.
சொல்லுரை:
இல்லதுஎன் - இல்லாத செல்வம் என்ன (ஒன்றுமில்லை)
இல்லவள் - மனைவியானவள்
மாண்பானால் - மாண்புமிக்க குணங்களையும் செயல்களையும் உடையவளானால்
உள்ளதுஎன் - இருக்கும் செல்வந்தான் என்ன (ஒன்றுமில்லை)
இல்லவள் - மனைவியானவள்
மாணாக் - மாண்புமிக்க குணங்களும் செயல்களும் அற்றவளாக இருக்கும்
கடை - இடத்து
பொருளுரை:
ஒருவனுடைய மனைவி மாண்புமிக்க குணங்களையும் செயல்களையும் உடையவளானால் அவனுக்கு இல்லாத செல்வம் என்ன (ஒன்றுமில்லை). மனைவியானவள் மாண்புமிக்க குணங்களும் செயல்களும் அற்றவளானால் இருக்கும் செல்வந்தான் என்ன (ஒன்றுமில்லை).
விளக்கவுரை:
சான்றோர்களால் வகுக்கப்பட்ட இல்லறத்திற்கான சிறந்த பண்புகளை உடையவளாக மனைவி அமைவாளானால் அந்த இல்லத்தில் இல்லாத சிறந்த பொருளே கிடையாது. மாறாக, நற்குணங்களற்ற மனைவி அமைந்துவிட்டால் அந்த வீட்டில் எத்துணை உயர்வான செல்வச்சிறப்புகள் அமையப்பெற்றாலும் அதனால் பயனேதும் இல்லை. இல்லறத்திற்கு முதன்மையாக வேண்டுவது மனைவியின் நற்குணச் சிறப்பே என்பது வள்ளுவர் கூற்று.
குறள் 54
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்.
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
சொல்லுரை:
பெண்ணின் - பெண்மையைக் காட்டிலும்
பெருந்தக்க - பெருமை பெறத்தக்கத்து
யாவுள - என்ன உள்ளது
கற்பென்னும் - கற்பு என்னும்
திண்மை - மன உறுதி
உண்டாகப் - உடையவளாக
பெறின் - பெற்றால்
பொருளுரை:
கற்பு என்னும் மனத்திண்மையை உடையவாளாக இருக்கும் பெண்ணைக்காட்டிலும் பெருமை கொள்ளத்தக்கது என்ன உள்ளது. யாதுமில்லை.
விளக்கவுரை:
ஒருவனுக்கு கற்புடைய பெண்ணை மனைவியாகக் கொள்வதைக் காட்டிலும் பெருமை கொள்ளத்தக்கது வேறெதுவும் இல்லை என்பதும், அவ்வகைப்பட்ட இல்வாழ்க்கையே சிறந்ததென்பதும் இதனால் விளங்கும்.
கற்பு எனப்படுவது ஒரு பெண் தன் கணவனின் எண்ண ஓட்டத்துடன் கலந்து, தன் கணவனின் வாழ்க்கையே தன் வாழ்க்கை எனவும், எண்ணம், செயல், சொல் ஆகிய எல்லாவற்றிலும் கணவனுடன் இரண்டறக் கலந்து வாழும் மனத்திண்மையை பெறுவது.
குறள் 55
தெய்வந் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
சொல்லுரை:
தெய்வம் - தெய்வத்தை
தொழாஅள் - வணங்கமாட்டாள்
கொழுநன் - கணவனை
தொழுதெழுவாள் - வணங்கி எழுந்திருப்பாள்
பெய்யெனப் - அவள் பெய் என்று சொன்னால்
பெய்யும் - பெய்யுமாம்
மழை - மழை
பொருளுரை:
கற்புடைய பெண் தெய்வத்தைக்கூட வணங்கமாட்டாள்; ஆனால், கணவனையே தெய்வமாக அனுதினமும் தொழுது எழுந்திருப்பாள். அவள் பெய் என்று சொன்னால் உடனே பெய்யுமாம் மழை.
விளக்கவுரை:
கற்பு என்ற மனத்திண்மையுடன் தன் கணவனையே தெய்வமாக தொழுது வாழும் பெண்ணானவள் துறவிகள் தவநெறியின்மூலம் பெறும் வலிமையைவிட பெரும்வலிமையும் தெய்வீக ஆற்றலும் பெறுகிறாள் என்பது இக்குறள்மூலம் உணர்த்தப்படுகிறது; கற்புடைப் பெண்ணின் பேராற்றல் எடுத்துரைக்கப்படுகிறது.
குறள் 56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
சொல்லுரை:
தற்காத்துத் - தன் கற்பையும்(மனநலத்தையும்) உடல்நலத்தையும் காத்து
தற்கொண்டான் - தன்னைக் கொண்டவனையும்
பேணித் - பேணிப் பார்த்துக்கொண்டு
தகைசான்ற - தன் இருவர்பற்றியும் பெருமைப்பட்டு
சொற்காத்துச் - சொல்லப்படும் தன்மையையும் காத்து
சோர்விலாள் - முன்கூறிய நற்செயல்களை சோர்வில்லாமல் ஆற்றுபவளே
பெண் - இல்லறத்திற்கு சிறந்த பெண்ணாவாள்
பொருளுரை:
தன் கற்பையும்(மனநலத்தையும்) உடல்நலத்தையும் காத்து தன்னைக் கொண்டவனையும் பேணிப் பார்த்துக்கொண்டு தன் இருவர்பற்றியும் பெருமைப்பட்டு சொல்லப்படும் தன்மையையும் காத்து முன்கூறிய நற்செயல்களை சோர்வில்லாமல் ஆற்றுபவளே இல்லறத்திற்கு சிறந்த பெண்ணாவாள்.
விளக்கவுரை:
தன்னை நல்நிலையில் பாதுகாத்துக்கொள்ளும் பெண்ணாலேயே தன் குடும்பத்தையும் பேணிக்காக்க முடியும் என்பதால் ‘தற்காத்து’ என்றார். தன்னையும், தன்னைக் கொண்டவனையும், தன் குடும்பப் பெருமையையும் பேணிக்காப்பதில் தொய்வு உண்டாகலாகாது என்பதினால் ‘சோர்விலாள்’ என்றார்.
குறள் 57
சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
சொல்லுரை:
சிறைகாக்கும் - பெண்களை வீட்டுச் சிறையிலிட்டுக்
காப்பு - காப்பது
எவன் - என்ன பயனைத்
செய்யும் - தரும்
மகளிர் - பெண்டிர்
நிறைகாக்கும் - கற்புநெறியினால் தன்னை
காப்பே - பாதுகாத்துக் கொள்வதே
தலை - தலைசிறந்தாகும்.
பொருளுரை:
பெண்களை வீட்டுச் சிறையிலிட்டுக் காப்பது என்ன பயனைத் தரும்? பெண்டிர் தன் கற்புநெறியினால் பாதுகாத்துக் கொள்வதே தலைசிறந்தாகும்.
விளக்கவுரை:
பெண்களை வெளியில் எங்கும் செல்லவிடாமல் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து காப்பதினால் எந்தப் பயனும் இல்லை. பெண்கள் கற்பு என்னும் நிறைநிலையினால் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே தலைசிறந்த காப்பாகும்.
குறள் 58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு.
பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
சொல்லுரை:
பெற்றான் - தன்னைக் கொண்ட கணவனை
பெறின் - பேணிக் காக்கும் பேறு பெறுவாராயின்
பெறுவர் - அடைவர்
பெண்டிர் - மகளிர்
பெருஞ்சிறப்புப் - பெருமை தரக்கூடிய சிறப்பை
புத்தேளிர் - தேவர்
வாழும் - வாழும்
உலகு - உலகத்தில்
பொருளுரை:
தன்னைக் கொண்ட கணவனைப் பேணிக் காக்கும் பேறு பெறுவாராயின், அத்தகைய பெண்டிர் வானுலகில் உள்ள தேவர்களால் பெரிதும் போற்றப்படும் சிறப்பைப் பெறுவார்கள்.
விளக்கவுரை:
தன்னைக் கொண்ட கணவனை பேணிக் காப்பதன்மூலம் அவள் நல்வழியில் குடும்பம் நடத்தும் பெண்ணாக போற்றப்படுகிறாள். அவ்வாறு போற்றப்படும் நிலையில் குடும்பம் நடத்தும் பெண்ணானவள் வானுலகில் வாழும் தேவர்களாலும் போற்றப்படுவாள் என்பதனால் பெண்டிரின் உயர்தன்மை எடுத்துரைக்கப்படுகிறது.
குறள் 59
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
னேறுபோற் பீடு நடை.
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
சொல்லுரை:
புகழ்புரிந்த - புகழை சேர்க்கும் நற்செயல்களை செய்யும்
இல்இலோர்க்கு - இல்லாள் இல்லாதவற்கு
இல்லை - இல்லை
இகழ்வார்முன் - தன்னை இகழ்ந்து பேசுவோர்முன்
ஏறுபோல் - சிறந்த காளையைப் போன்ற
பீடு - பெருமைமிக்க
நடை - நடை
பொருளுரை:
புகழை சேர்க்கும் நற்செயல்களை செய்யும் இல்லாள் இல்லாதவற்கு தன்னை இகழ்ந்து பேசுவோர்முன் சிறந்த காளையைப் போன்ற பெருமைமிக்க நடை இல்லை.
விளக்கவுரை:
எவ்வகை இகழ்ச்சியினின்றும் ஒருவன் மீண்டு வரமுடியும். ஆனால் நற்குணங்களற்ற மனைவியினால் தோன்றும் இகழ்ச்சியால் ஒருவன் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழமுடியாது என்பது இக்குறளின்மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
குறள் 60
மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
னன்கல நன்மக்கட் பேறு.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.
சொல்லுரை:
மங்கலம் - அழகு (நன்மை)
என்ப - என்பதாகும்
மனைமாட்சி - மனையானது நற்குண நற்செய்கைகள் நிறைந்திருக்குமாயின்
மற்று - மற்றபடி
அதன் - அதற்கு
நன்கலம் - அழகு சேர்ப்பது
நன்மக்கள் - நல்ல மக்களைப்
பேறு - பெறுதலாகும்.
பொருளுரை:
இல்லறத்திற்கு அழகு அல்லது நன்மை தரவல்லது என்று சொல்லப்படுவது மாட்சிமை பொருந்திய மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே ஆகும். அவ்வகைப்பட்ட சிறந்த இல்லத்திற்கு அணிகலனாக அமைவது நல்ல அறிவுடை மக்களைப் பெறுதலாகும்.
விளக்கவுரை:
இல்லறத்திற்கு அழகு மனைவியின் சிறந்த குணங்களும் அறநெறிச் செயல்களும் என்று கூறும் வள்ளுவர் அந்த அழகுக்கு அணிகலனும் தேவை என்பதனால் நன்மக்களைப் பெறுதலை அணிகலனாக கூறுகிறார்.