61. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
     
மக்கட்பே றல்ல பிற.
62. எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
     
பண்புடை மக்கட் பெறின்.
63. தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
     
டம்தம் வினையான் வரும்.
64. அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
     
சிறுகை யளாவிய கூழ்.
65. மக்கண்மெய் தீண்ட லுற்கின்ப மற்றவர்
     
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு.
66. குழலினி தியாழினி தென்பதம் மக்கண்
     
மழலைச்சொற் கேளா தவர்.
67. தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
     
முந்தி யிருப்பச் செயல்.
68. தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
     
மன்னுயிர்க் கெல்லா மினிது.
69. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
     
சான்றோ னெனக்கேட்ட தாய்.
70. மகன்றந்தைக் காற்று முதவி யிவன்தந்தை
     
யென்நோற்றான் கொல்லெனுஞ் சொல்.
குறள் 61
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.
பெறும்அவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
சொல்லுரை:
பெறும்அவற்றுள் - பெறுகின்ற பேறுகளுள்
யாம் அறிவது - எனக்குத் தெரிந்தவரையில்
இல்லை - இல்லை
அறிவு அறிந்த - அறியவேண்டியவற்றை அறியத்தகுந்த
மக்கட்பேறு - மக்களைப் பெறும் பேற்றை விட
அல்ல - தவிர
பிற - பிற பேறுகள் எவையும்
பொருளுரை:
பெறுகின்ற பேறுகளுள் எனக்குத் தெரிந்தவரையில் இல்லை அறிய வேண்டியவற்றை அறியத்தகுந்த மக்களைப் பெறும் பேற்றை விட தவிர பிற பேறுகள் எவையும்.
விளக்கவுரை:
இல்லறத்தான் பெறவேண்டிய பேறுகளுள் தலையாய பேறாக வள்ளுவர் குறிப்பிடுவது மக்கட்பேறு ஆகும். அந்த மக்கள் அறிவறிந்த மக்களாக இருக்கவேண்டும். அறிவறிந்த மக்களாவது கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கி அறியவேண்டியவற்றை நன்கு அறிந்து சிறந்த பிள்ளைகளாக விளங்குதலேயாகும். அறிவறிந்த மக்களே இல்லறத்தான் பெறும் சிறந்த பேறாக வள்ளுவர் அவருடைய பட்டறிவின்மூலம் சொல்கிறார் என்பது “யாம் அறிவது இல்லை “ என்பதின்மூலம் அறியலாம்.
குறள் 62
எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.
சொல்லுரை:
எழுபிறப்பும் - ஏழு பிறப்பிலும்
தீயவை - துன்பங்கள்
தீண்டா - அண்டாது
பழிபிறங்காப் - பழி தோன்றாத
பண்புடை - நற்குணங்களையுடைய
மக்கள் - மக்களைப்
பெறின் - பெற்றால்
பொருளுரை:
பழி தோன்றாத நற்குணங்களையுடைய மக்களைப் பெற்றால் ஏழு பிறப்பிலும் துன்பங்கள் அண்டாது.
விளக்கவுரை:
நற்குணங்களையுடைய மக்களை உருவாக்குதல் பெற்றவரின் பொறுப்பு. பழிதோன்றாத நற்பண்புகளை மக்கள் பெற்றிருக்கவேண்டும். அவ்வகை மக்களை பெறும்போது வழிவழியாக நல்வினைகள் பல தொடருமாதலின் “எழுபிறப்பும் தீயவை தீண்டா” என்றார் வள்ளுவர்.
குறள் 63
தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டம்தம் வினையான் வரும்.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
சொல்லுரை:
தம்பொருள் - தம்முடைய பொருள்
என்ப - என்று பெற்றோர் கூறுவர்
தம் மக்கள் - தம்முடைய மக்களை
அவர்பொருள் - அந்த மக்களின் நற்குணப் பண்புகள்
தம்தம் - அவரவர்களின்
வினையான் - வினையின் பயனால்
வரும் - உண்டாகும்
பொருளுரை:
தம்முடைய பொருள் என்று பெற்றோர் கூறுவர் தம்முடைய மக்களை. அந்த மக்களின் நற்குணப் பண்புகள் அவரவர்களின் வினையின் பயனால் உண்டாகும்.
விளக்கவுரை:
தம்முடைய மக்களை தம்முடைய செல்வமென்று பெற்றோர் பாராட்டுவர்; சீராட்டுவர். அந்த மக்களின் நற்குண நலன்கள் பெற்றவர்களின் நல்வினை, தீவினைகளுக்கு ஏற்ப அமையும். பெற்றவர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளுக்கு ஏற்பவே பிள்ளைகளின் குணநலன்களும், வாழ்க்கையும் அமையும். பெற்றவர்கள் செய்யும் பாவ புண்ணியங்கள் பிள்ளைகளைச் சேரும் என்பது வள்ளுவர் வாக்கு.
குறள் 64
அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்.
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
சொல்லுரை:
அமிழ்தினும் - அமிழ்தத்தைவிட
ஆற்ற - மிகவும்
இனிதே - இனிதானது
தம்மக்கள் - தம்முடைய பிள்ளைகளின்
சிறுகை - இளம் பிஞ்சு கைகளால்
அளாவிய - அளையப்பட்ட
கூழ் - கூழ் உணவானது
பொருளுரை:
தம்முடைய பிள்ளைகளின் இளம் பிஞ்சு கைகளால் அளையப்பட்ட கூழ் உணவானது அமிழ்தத்தைவிட மிகவும் இனிதானது.
விளக்கவுரை:
பிள்ளை இன்பமானது இல்லறத்தானுக்கு மிகவும் இனிதானது. அந்த இனிமை, தம்முடைய மக்களுக்கும் பெற்றவர்களுக்கும் உள்ள இரத்த பந்தத்தினால் விளைவது. அதனாலேயே தமது பிள்ளைகளின் இளம்பிஞ்சுக் கைகளால் அளையப்பட்ட அமிழ்தத்தைவிட இனிமையானது என்கிறார் வள்ளுவர்.
குறள் 65
மக்கண்மெய் தீண்ட லுற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு.
மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
சொல்லுரை:
மக்கள் - தம்முடைய பிள்ளைகளின் உடம்பை
மெய்தீண்டல் - தொடுதல்
உடற்குஇன்பம் - தன்னுடைய உடலிற்கு இன்பம்
மற்றுஅவர் - மேலும், அவர்களின்
சொற்கேட்டல் - மழலைச் சொற்களை கேட்டல்
இன்பம் - இன்பமாகும்
செவிக்கு - செவிக்கு
பொருளுரை:
தம்முடைய பிள்ளைகளின் உடம்பை தொடுதல் தன்னுடைய உடலிற்கு இன்பம். மேலும், அவர்களின் மழலைச் சொற்களை கேட்டல் செவிக்கு இன்பமாகும்.
விளக்கவுரை:
பிள்ளை தாம் பெற்ற பிள்ளைகளை தொட்டுத்தூக்கி கொஞ்சி மகிழ்தல் பெற்றவர்களுக்கு இன்பம் தருவது மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மகிழ்வு தருவதாகும். தம்முடைய குழந்தைகள் பேசத்தொடங்கும்போது உதிர்க்கும் மழலைச்சொற்கள் பெற்றவர்களின் செவிக்கு மிகவும் இன்பம் தருவதாகும்.
குறள் 66
குழலினி தியாழினி தென்பதம் மக்கண்
மழலைச்சொற் கேளா தவர்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
சொல்லுரை:
குழல்இனிது - புல்லாங்குழலின் இசை இனிது
யாழ்இனிது - யாழினது இசை இனிது
என்ப - என்று கூறுவர்
தம்மக்கள் - தம்முடைய பிள்ளைகளின்
மழலைச்சொல் - மழலைச் சொற்களை
கேளாதவர் - கேட்டு மகிழ்ந்திடும் நிலையில் இல்லாதவர்
பொருளுரை:
தம்முடைய பிள்ளைகளின் மழலைச் சொற்களை கேட்டு மகிழ்ந்திடும் நிலையில் இல்லாதவர் புல்லாங்குழலின் இசை இனிது, யாழினது இசை இனிது என்று கூறுவர் .
விளக்கவுரை:
புல்லாங்குழலும், யாழும் மிகச்சிறந்த இசையை உண்டாக்குவது. செவிக்கு இனிய இசையாக அமைவது. தாம் பெற்ற மக்களின் மழலைச்சொற்களின் இனிமையானது மேற்கூறிய இசைகருவிகளின் இசையைவிட மிக இனிமையானது என்று கூறுவதன்மூலம் பிள்ளைச்செல்வங்களின் மூலம் வரும் இனிமையே மிகச்சிறந்த இனிமை என்று வலியுறுத்தப்படுகிறது.
குறள் 67
தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
சொல்லுரை:
தந்தை - தந்தை
மகற்கு - தன் மகனுக்கு
ஆற்றும் - ஆற்றும், செய்யக்கூடிய
நன்றி - நன்மை
அவையத்து - கற்றோர் கூடியிருக்கும் அவையில்
முந்தி - அவர்களைவிட தன் மகனை கல்வி, கேள்விகளில் முதன்மையானவனாக
இருப்பச் - இருக்கச்
செயல் - செய்வதாகும்
பொருளுரை:
தந்தை தன் மகனுக்கு செய்யக்கூடிய நன்மையானது கற்றோர் கூடியிருக்கும் அவையில் அவர்களைவிட தன் மகனை கல்வி, கேள்விகளில் முதன்மையானவனாக இருக்கச் செய்வதாகும்.
விளக்கவுரை:
பெற்றவர்கள் தம்முடைய மக்களுக்கு பொருட்செல்வத்தை சேர்த்து வைப்பது முக்கியமன்று. தம் பிள்ளைகளுக்கு கல்விச்செல்வத்தை அளித்து அவர்களை கல்வி, கேள்விகளில் சிறந்த சான்றோனாக ஆக்குவதே தலையாய கடமையாகும். அவ்வாறு வளர்க்கப்படும்போதே நல்ல சமுதாயம் உருவாக வழி பிறக்கும். பொருட்செல்வம் மட்டுமே ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கிவிடாது. கற்கவேண்டியவற்றை கற்று அறிவில் சிறந்த ஆன்றோனாக இருப்பர்களாலேயே சிறந்த சமுதாயம் உருவாக்கப்ப்டுகிறது.
குறள் 68
தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
சொல்லுரை:
தம்மின் - தம்மைவிட
தம்மக்கள் - தம்முடைய பிள்ளைகள்
அறிவுடைமை - அறிவுடையவராய் இருத்தல்
மாநிலத்து - பெரிய நிலவுலகில்
மன்னுயிர்க்கு - நிலைபெற்ற உயிர்களுக்கு
எல்லாம் - எல்லாம்
இனிது - இனிதாகும்
பொருளுரை:
தம்மைவிட தம்முடைய பிள்ளைகள் அறிவுடையவராய் இருத்தல் பெரிய நிலவுலகில் நிலைபெற்ற உயிர்களுக்கு எல்லாம் இனிதாகும்.
விளக்கவுரை:
தம்மைவிட தம்முடைய பிள்ளைகளை கல்வி, கேள்விகளிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக வளர்ப்பதினால் தம்முடைய குடும்பத்திற்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கும் நன்மை பயக்குமாதலால் ‘மன்னுயிர்க்கெல்லாம் இனிது’ என்றார்.
குறள் 69
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்.
ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
சொல்லுரை:
ஈன்ற - தான் அவனைப் பெற்றெடுத்த
பொழுதின் - பொழுதில் அடைந்த இன்பத்தைவிட
பெரிதுஉவக்கும் - பெரிதும் மகிழ்ச்சி அடைவாள்
தன்மகனைச் - தான் பெற்ற மகனை
சான்றோன் - கல்வி, கேள்விகளில் சிறந்த சான்றோன்
எனக்கேட்ட - என்று பிறர் சொல்லக் கேட்கும்
தாய் - தாயானவள்
பொருளுரை:
தான் பெற்ற மகனை கல்வி, கேள்விகளில் சிறந்த சான்றோன் என்று பிறர் சொல்லக் கேட்கும் தாயானவள் தான் அவனைப் பெற்றெடுத்த பொழுதில் அடைந்த இன்பத்தைவிடபெரிதும் மகிழ்ச்சி அடைவாள்.
விளக்கவுரை:
தன் பிள்ளை எந்த நிலையில் இருந்தாலும் அவன்மீது அன்புகொண்டு வாழ்பவள் தாய். தான் பெற்ற மகன் கல்வி, கேள்விகளில் சிறந்து தேர்ச்சி பெற்று, உலகத்தவரால் அவன் சான்றோன் எனப் பிறர் கூறக் கேட்கும்பொழுது, தான் அவனை ஈன்றெடுத்தபோது தனக்கு எவ்வளவு உடல் துன்பம் இருப்பினும் தாம் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்துவிட்டோம் என்பதினால் உண்டான இன்பத்தைவிட பெரிதும் இன்பமடைந்து இரும்பூது எய்துவாள்.
குறள் 70
மகனறந்தைக் காற்று முதவி யிவன்தந்தை
யென்நோற்றான் கொல்லெனுஞ் சொல்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
சொல்லுரை:
மகன்தந்தைக்கு - மகனானவன் தந்தைக்கு
ஆற்றும் - செய்யும்
உதவி - உதவியானது
இவன்தந்தை - இவனின் தந்தையானவன்
என்நோற்றான் கொல் - என்ன தவத்தைச் செய்தானோ
எனும் - என்னும்
சொல் - சொல்லை பிறர் கூறும்படி நடந்துகொள்வதாகும்
பொருளுரை:
மகனானவன் தந்தைக்கு செய்யும் உதவியானது இவனின் தந்தையானவன் என்ன தவத்தைச் செய்தானோ என்னும் சொல்லை பிறர் கூறும்படி நடந்துகொள்வதாகும்.
விளக்கவுரை:
தந்தையானவன் பிள்ளையை வளர்த்து, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கச் செய்து சமூகத்தில் தன் மகன் மிக உயர்ந்த நிலையை அடைய பாடுபடுகிறான். அப்படிப்பட்ட தந்தைக்கு, மகன் செய்யவேண்டிய கடமைகளுள் தலையாயது இவனின் தந்தையானவன் இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று உலகம் கூற நடந்துகொள்வதே. அது அவ்வளவு எளிதன்று ஆயினும், தன்னை ஆளாக்கிய தந்தைக்கு மகனால் செய்யத்தகுந்தது இது மட்டுமே.