71. அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
     
புன்கணீர் பூச றரும்.
72. அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
     
ரென்பு முரியர் பிறர்க்கு.
73. அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்
     
கென்போ டெயைந்த தொடர்பு.
74. அன்பீனு மார்வ முடைமை யதுவீனு
     
நண்பென்னு நாடாச் சிறப்பு.
75. அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
     
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு.
76. அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
     
மறத்திற்கு மஃதே துணை.
77. என்பி லதனை வெயில்போலக் காயுமே
     
யன்பி லதனை யறம்.
78. அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண்
     
வற்றன் மரந்தளிர்த் தற்று.
79. புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
     
யகத்துறுப் பன்பி லவர்க்கு.
80. அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
     
கென்புதோல் போர்த்த வுடம்பு.
குறள் 71
அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூச றரும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
சொல்லுரை:
அன்பிற்கும் - ஒருவர் மற்றவரிடம் கொண்டுள்ள அன்பிற்கும்
உண்டோ - இருக்கின்றதோ
அடைக்குந்தாழ் - பிறர் காணாமல் அடைத்துவைக்கும் தாழ்ப்பாள்
ஆர்வலர் - அன்புடையவர்
புன்கணீர் - புல்லிய கண் நீரே, சிறிதளவு கண்ணீரே
பூசல் - (உள்ளிருக்கும் அன்பை) வெளிப்படுத்தி
தரும் - விடும்.
பொருளுரை:
ஒருவர் மற்றவரிடம் கொண்டுள்ள அன்பிற்கும் இருக்கின்றதோ பிறர் காணாமல் அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் அன்புடையவர் புல்லிய கண் நீரே, சிறிதளவு கண்ணீரே உள்ளிருக்கும் அன்பை வெளிப்படுத்தி விடும்.
விளக்கவுரை:
அன்பு என்பது அடைத்து வைக்கப்படும் தன்மை உடையது அல்ல. தம்மால் அன்பு செய்யப்பட்டவர் சிறிது துன்பப்பட்டாலும் மனத்தின்கண் ஏற்பட்ட அன்பு தன் கண்ணில் நீரைச் சொரிந்து வெளிப்படுத்திவிடும்.
புன்மை – துன்பம்.
பூசல் – பூசுதல் – பிறர் காணும் அளவிற்கு உண்டாதல் - வெளிப்படுத்துதல்.
குறள் 72
அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
ரென்பு முரியர் பிறர்க்கு.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
சொல்லுரை:
அன்பிலார் - அன்பு இல்லாதவர்கள்
எல்லாம் - எல்லா பொருள்களையும்
தமக்குரியர் - தமக்கே உரிமையக்கிக் கொள்வர்
அன்புடையார் - அன்பு உள்ளவர்கள்
என்பும் - எலும்பினால் ஆன இந்த உடம்பையும்
உரியர் - உரியவராவர்
பிறர்க்கு - பிறர்க்காக
பொருளுரை:
அன்பு இல்லாதவர்கள் எல்லா பொருள்களையும் தமக்கே உரிமையக்கிக் கொள்வர். அன்பு உள்ளவர்கள் எலும்பினால் ஆன இந்த உடம்பையும் பிறர்க்காக உரித்தாக்குவர்.
விளக்கவுரை:
அன்பில்லதவர்கள் தம்பொருட்டு மட்டுமே வாழும் தன்மையுடையவர்கள். அன்புள்ளம் கொண்டவர்கள் தன்னலமின்றி பிறர்நலத்திற்காகவே வாழும் பெருந்தகையாளர்கள்.
குறள் 73
அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்
கென்போ டெயைந்த தொடர்பு.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
சொல்லுரை:
அன்போடு - அன்போடு
இயைந்த - பொருந்திய, இசைந்த
வழக்கென்ப - முறைமையின் பயன் என்ப
ஆருயிர்க்கு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு
என்போடு - உடம்போடு
இயைந்த - பொருந்திய
தொடர்பு - தொடர்பு
பொருளுரை:
பெறுதற்கு அரிய மக்களின் உயிர்க்கும் உடம்புக்கும் இடையே பொருந்திய தொடர்பானது அந்த உடம்பும் உயிரும் இணைந்து அன்போடு பொருத்திக்கொண்ட முறைமையின் பயன் என்ப.
விளக்கவுரை:
பெறுதற்கரியது மனிதப் பிறவி. அப்பிறவியில் அன்பொடு பொருந்திய வாழ்க்கையே வாழவேண்டும் என்பது முறைமை அல்லது நெறியாகும். உடலுக்கும் உயிருக்கும் பொருந்திய தொடர்பு அன்பினால் உண்டாவது. அன்பு இல்லையெனில் உயிரும் உடலும் தொடர்பற்றுப் போய்விடும்.
குறள் 74
அன்பீனு மார்வ முடைமை யதுவீனு
நண்பென்னு நாடாச் சிறப்பு.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
சொல்லுரை:
அன்புஈனும் - அன்பு உண்டாக்கும்
ஆர்வம் - விரும்புதல் என்ற
உடைமை - தன்மையை
அதுஈனும் - அந்த விரும்பும் தன்மையானது உண்டாக்கும்
நண்பு - நட்பு, தோழமை, உறவு
என்னும் - என்னும்
நாடாச் - நாடிச் சென்றாலும், தேடினாலும் கிடைக்காத
சிறப்பு - சிறப்பு, பெருமை.
பொருளுரை:
அன்பானது ஒருவருக்கு விரும்புதல் என்ற தன்மையை உண்டாக்கும். அந்த விரும்புதல் தன்மையானது நட்பு, தோழமை, உறவு என்னும் நாடிச் சென்றாலும், தேடினாலும் கிடைக்காத சிறப்பான தன்மையை உண்டாக்கும்..
விளக்கவுரை:
அன்பு என்பதுதான் உயிர்களிடத்தில் ஒருவரை ஒருவர் விரும்பும் தன்மையை உண்டாக்குகிறது. அதுவே மக்களுக்குள் பழகும் தன்மையையும் நட்புறவு கொள்ளும் தன்மையையும் உண்டாக்குகிறது. அதனாலேயே மனிதன் சமூகமாக வாழ்கிறான். அன்பு என்ற தன்னலமற்ற தன்மை உயரும்போது அந்த சமூகம் நல்ல சமூகமாகத் திகழ்கிறது.
குறள் 75
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
சொல்லுரை:
அன்புற்று - அன்புடையவராய் ஒழுகி
அமர்ந்த - இல்லறத்தில் பொருந்திய வாழ்க்கை
வழக்கென்ப - நெறியின் பயன் என்பர்
வையகத்து - உலகத்தில்
இன்புற்றார் - இன்பமடைந்து வாழ்கின்றவர்
எய்தும் - அடையும்
சிறப்பு - பெருமையை, மேன்மையை
பொருளுரை:
உலகத்தில் இன்பமடைந்து வாழ்கின்றவர் அடையும் பெருமையை அன்புடையவராய் ஒழுகி இல்லறத்தில் பொருந்திய வாழ்க்கை நெறியின் பயன் என்பர்.
விளக்கவுரை:
இவ்வுலக வாழ்க்கையில் இன்பத்தில் வாழும் பெருமை அல்லது சிறப்பு அன்புடையவராய் பொருந்தி வாழ்ந்ததினால் வந்த வழக்கமாகும். அன்பே இவ்வுலக வாழ்க்கையின் உண்மையான இன்பத்திற்கு அடிப்படை என்பது கருத்து.
குறள் 76
அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை.
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
சொல்லுரை:
அறத்திற்கே - அறம் செய்வதற்கே
அன்புசார்பு - அன்பு துணையாகும்
என்ப - என்பர்
அறியார் - அறியாதவர்கள்
மறத்திற்கும் - பாவத்தை நீக்குவதற்கும் (அறநெறி அல்லாத செயலுக்கும் )
அஃதே - அந்த அன்பே
துணை - துணையாகும்
பொருளுரை:
அறம் செய்வதற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர் அன்பின் தன்மையை முழுமையாக அறியாதவர்கள். அன்பு அறம் செய்வதற்கு மட்டும் துணையன்று. பாவத்தை நீக்குவதற்கும் அந்த அன்பே துணையாகும்.
விளக்கவுரை:
அன்பு உள்ளம் கொண்டவனால் மட்டுமே அறநெறியில் நடந்து நல்வினைகளை ஆற்றமுடியும். அதனால் அறத்திற்கு அன்பு சார்பு என்று கூறப்பட்டது. ஆனால், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாவது அல்ல. அறநெறிக்கு எதிர்வகையான பாவ நெறிக்கும் அன்பு துணையாகிறது. எவ்வாறு ? பாவ நெறியில் வாழ்பவனும் அவன் தன்னுடைய பாவத்தை போக்கிக்கொள்ள முதலில் அவன் அன்புடையவனாக மாறவேண்டும். அன்புடைய நெஞ்சமே நல்நெறியில் சென்று தன்னுடைய நல்வினைச் செயல்களை பெருக்கி பாவச் செயல்களை நீக்கிக் கொள்ளமுடியும்.
குறள் 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்.
என்புஇல் அதனை வெயில்போலக் காயுமே
அன்புஇல் அதனை அறம்.
சொல்லுரை:
என்புஇல் - எலும்பு இல்லாத
அதனை - புழுவினை
வெயில்போலக் - வெயில் சுடுவதுபோல
காயுமே - வருத்தும்
அன்புஇல் - அன்பு இல்லாத
அதனை - உயிர்களை
அறம் - அறக்கடவுள்
பொருளுரை:
எலும்பு இல்லாத புழுவினை வெயில் சுடுவதுபோல அன்பு இல்லாத உயிர்களை அறக்கடவுள் வருத்தும்.
விளக்கவுரை:
அன்புள்ளம் இல்லாமல் இவ்வுலகில் மனிதர்கள் வாழ்வது கடினம் என்பதை உவமைமூலம் இக்குறள் எடுத்துக்காட்டுகிறது. எலும்பற்ற உயிர்களாகிய புழுக்களின் உடல் மிகவும் மென்மைத்தன்மை உடையதாக இருக்கும். அதனால், புழுக்கள் வெயிலில் மாட்டிக்கொள்ள நேர்ந்தால் அவை வெயிலின் தாக்கத்தினால் சுடப்பட்டு துடிதுடிக்கும். எலும்பு இல்லாததினால் புழுக்களுக்கு உண்டாகும் துன்பம் இது. அதுபோல அன்பு இல்லாத மனிதர்கள் அறநெறியில் வாழ முடியாது போகுமாதலால் அறக்கடவுளின் தண்டனைக்கு ஆட்பட்டு துன்புறுவர்.
குறள் 78
அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று.
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று.
சொல்லுரை:
அன்பகத்து - அன்பு உள்ளத்தில்
இல்லா - இல்லாது
உயிர்வாழ்க்கை - உயிர் வாழும் வாழ்க்கையானது
வன்பாற்கண் - கடுமையான பாலை நிலத்தில்
வற்றல் - ஈரம் வற்றி உலர்ந்த
மரம் - மரமானது
தளிர்த்து - துளிர் விடுவது
அற்று - போன்றதாகும்.
பொருளுரை:
அன்பு உள்ளத்தில் இல்லாது உயிர் வாழும் வாழ்க்கையானது கடுமையான பாலை நிலத்தில் ஈரம் வற்றி உலர்ந்த மரமானது துளிர் விடுவது போன்றதாகும்.
விளக்கவுரை:
மனிதனின் வாழ்க்கை வளர்ந்து செழிப்படைவதற்கு அன்பு உள்ளத்தில் குடிகொண்டிருத்தலே காரணமாகும். அன்பற்ற வாழ்க்கை பாலை நிலத்தில் பட்ட மரம் துளிர் விடுவதற்கான சூழ்நிலை அற்று இருப்பதைப் போன்று அழிந்து விடும்.
குறள் 79
புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு.
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு.
சொல்லுரை:
புறத்துறுப்பு - வெளியில் உள்ள உறுப்புகள்
எல்லாம் - எல்லாம்
எவன்செய்யும் - என்ன பயனைச் செய்யமுடியும்
யாக்கை - உடம்பின்
அகத்துறுப்பு - உள் உறுப்பாக
அன்பில் அவர்க்கு - அன்பு இல்லாத அவர்க்கு
பொருளுரை:
வெளியில் உள்ள உறுப்புகள் எல்லாம் என்ன பயனைச் செய்யமுடியும் உடம்பின் உள் உறுப்பாக அன்பு இல்லாதவர்க்கு.
விளக்கவுரை:
அன்பு இங்கே அக உறுப்பாக கொள்ளப்படுகிறது. அக உறுப்பே புற உறுப்புகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை இயங்கச் செய்கிறது. அக உறுப்பாகிய அன்பு இல்லையெனில் புற உறுப்புகள் நன்னெறியில் நடத்தல் இல்லை. அதனால் வாழ்க்கையும் செம்மை அடைவது இல்லை.
குறள் 80
அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
சொல்லுரை:
அன்பின் - அன்பு
வழியது - நெறியில் வாழ்வதே
உயிர்நிலை - (உடம்பு) உயிர் வாழும் நிலையில் இருப்பதாகும்
அஃதிலார்க்கு - அன்பு இல்லாதவர்க்கு
என்புதோல் - வெறும் எலும்பை தோலால்
போர்த்த - போர்த்தப்பட்ட
உடம்பு - வெற்றுடம்புதான்
பொருளுரை:
அன்பு நெறியில் வாழ்வதே உடம்பு உயிர் வாழும் நிலையில் இருப்பதாகும். அன்பு இல்லாதவர்க்கு வெறும் எலும்பை தோலால் போர்த்தப்பட்ட வெற்றுடம்புதான்.
விளக்கவுரை:
அன்புடன் கூடிய வாழ்வே ஒருவன் உயிர்வாழ்வதற்கான தன்மையை உணர்த்தும் நிலையாகும். அன்பில்லாத ஒருவனால் இவ்வுலகில் இவ்வுலத்தன்மையுடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வாழ இயலாது. இவ்வுலக வாழ்க்கையின் தன்மையையும் உணர இயலாது. அதனால் அவனால் இவ்வுலகில் இன்பமுடன் வாழ்வதும் இயலாததாகிறது. அவன் ஒரு நடைப்பிணமாகவே வாழ்கிறான். அதனாலேயே ‘ என்பு தோல் போர்த்த உடம்பு’ என்றார்.