81. இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
     
வேளாண்மை செய்தற் பொருட்டு.
82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
     
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
83. வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
     
பருவந்து பாழ்படுத லின்று.
84. அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
     
நல்விருந் தோம்புவா னில்.
85. வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
     
மிச்சின் மிசைவான் புலம்.
86. செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
     
னல்விருந்து வானத் தவர்க்கு.
87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
     
றுணைத்துணை வேள்விப் பயன்.
88. பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி
     
வேள்வி தலைப்படா தார்.
89. உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
     
மடமை மடவார்க ணுண்டு.
90. மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
     
நோக்கக் குழையும் விருந்து.
குறள் 81
இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
சொல்லுரை:
இருந்துஓம்பி - இருந்து பொருளைக் காப்பற்றி
இல்வாழ்வது - இல்லற வாழ்வு வாழ்வது
எல்லாம் - எல்லாம்
விருந்துஓம்பி - விருந்தினரை பேணிப் போற்றி உபசரித்து
வேளாண்மை - உதவி
செய்தற் - செய்வதற்கு
பொருட்டு - ஆகவே
பொருளுரை:
இல்லறத்தில் இருந்து தான் சேர்த்த பொருளைக் காப்பற்றி இல்லற வாழ்வு வாழ்வதின் நோக்கம் எல்லாம் விருந்தினரை பேணிப் போற்றி உபசரித்து உதவி செய்வதற்கு ஆகும்.
விளக்கவுரை:
மனிதன் சமூகமாக வாழ்வதற்குத் தேவையானது அன்பிற்கு அடுத்து விருந்தோம்பல் ஆகும். இல்லறத்தான் விருந்தினரை உபசரிப்பதை தலையாய கடமையாகக் கொள்ளவேண்டும். அதுமட்டுமின்றி, விருந்தினருக்கு தன்னால் முடிந்த உதவியையும் செய்யவேண்டும். அதுவே, இல்லறத்தானுக்கு சிறப்பு தருவது.
குறள் 82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டல்பாற்று அன்று.
சொல்லுரை:
விருந்து - விருந்தினர்
புறத்ததாத் - வீட்டின் வெளியில் இருக்க
தான்உண்டல் - தான் மட்டும் தனித்து உண்பது
சாவா - சாவாமையைத் தரும்
மருந்துஎனினும் - மருந்தாகிய அமுதம் ஆயினும்
வேண்டல்பாற்று - அது விரும்பததக்கது
அன்று - அன்று
பொருளுரை:
விருந்தினர் வீட்டின் வெளியில் இருக்க தான் மட்டும் தனித்து உண்பது சாவாமையைத் தரும் மருந்தாகிய அமுதம் ஆயினும் அது விரும்பததக்கது அன்று.
விளக்கவுரை:
உணவை விருந்தினரோடு உண்பதே சிறப்பு. சாவாமையைத் தரும் மருந்து இவ்வுலகில் ஒன்றில்லை ஆயினும், அப்படி இருந்தாலும் அதை விருந்தினருடன் பகிர்ந்துண்பதே விரும்பத்தக்கது ஆகும்.
குறள் 83
வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
சொல்லுரை:
வருவிருந்து - தன்னிடம் வருகை தரும் விருந்தினரை
வைகலும் - நாள்தோரும்
ஓம்புவான் - உபசரிப்பவன், பேணிப் போற்றுபவன்
வாழ்க்கை - வாழ்வானது
பருவந்து - வறுமையில் வருந்தி
பாழ்படுதல் - கெடுதல்
இன்று - இல்லை
பொருளுரை:
தன்னிடம் வருகை தரும் விருந்தினரை நாள்தோரும் உபசரிப்பவன் வாழ்வானது வறுமையில் வருந்தி கெடுதல் இல்லை.
விளக்கவுரை:
தன்னுடைய இல்லறத்திற்கு வருகை தரும் விருந்தினரை உபசரிப்பதால் பொருளிழந்து கெட்டுப்போய்விடுவோம் என்பது தவறான எண்ணம். விருந்தினரை உபசரிப்பதென்பது தன்னுடைய பொருள் தகுதியையும் மீறி செய்வதென்று ஆகாது. தன்னிடம் இருக்கும் பொருள் அளவைக்கொண்டு தன்னால் இயன்ற அளவு உபசரிப்பதாகும். ஆடம்பர செலவு கூடாது. அவ்வாறாகின், வறுமையில் வருந்தி கெடுதல் இல்லை.
குறள் 84
அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்.
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
சொல்லுரை:
அகன்அமர்ந்து - மனம் மகிழ்ந்து
செய்யாள் - திருமகள்
உறையும் - வாழ்வாள்
முகன்அமர்ந்து - முகமலர்ச்சியுடன் மகிழ்வாக
நல்விருந்து - நல்ல விருந்தினர்களை
ஓம்புவான் - பேணுபவனின்
இல் - இல்லத்தில், வீட்டில்
பொருளுரை:
நல்ல விருந்தினர்களை பேணுபவனின் இல்லத்தில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்.
விளக்கவுரை:
முகத்தில் மகிழ்ச்சியுடன் நல்ல விருந்தினர்களை உபசரிப்பவனின் இல்லத்தில் நல்வினைகளே தொடர்ந்து நடப்பதால் அங்கே தீவினைகள் குறைந்து இன்பமே ஓங்கி நிற்கும். நல்வினைச் செயல்கள் மூலம் செல்வங்கள் சேர்ந்து விருந்து ஓம்புபவர் நல்ல செல்வ நிலையிலேயே இருப்பர். அப்படிப்பட்டோரின் இல்லத்தில் திருமகளும் உள்ளம் மகிழ்ந்து வாசம் செய்வாள்.
குறள் 85
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
சொல்லுரை:
வித்தும் - வித்தும், விதையும்
இடல் - இடுதல்
வேண்டும் கொல்லோ - வேண்டுமோ
விருந்து ஓம்பி - விருந்தினரை உபசரித்தபின்
மிச்சில் - மீதமுள்ளவற்றை
மிசைவான் - உண்பவனின்
புலம் - விளைநிலத்திற்கு
பொருளுரை:
விருந்தினரை உபசரித்தபின் மீதமுள்ளவற்றை உண்பவனின் விளைநிலத்திற்கு விதையும் இடுதல் வேண்டுமோ? தேவையில்லை. அது தானாகவே விளையும்.
விளக்கவுரை:
தம்மை தேடிவரும் விருந்தினரை உபசரித்தபின் மிச்சமுள்ளவற்றையே உண்ணும் நற்பண்பு உடையவனின் விளைநிலத்தில் விதை எதுவும் இடவேண்டியதில்லை. ஏன் இடவேண்டியதில்லை என்பதற்கு பலவாறு பொருள் கொள்வதாயினும், இவ்வகைப்பட்ட் நற்பண்புடைய விருந்து ஓம்புவோர்க்கு, அவர்களின் நல்ல எண்ணங்களின் விளைவால், முன்பு அறுவடை செய்தபோது சிந்திய விதைகளே மீண்டும் தகுந்த நேரத்தில் மழை பெய்து முளைத்துவிடும் என்பதாம். தகுந்த நேரத்தில் மழை பெய்வதே இங்கு மீண்டும் விதைவிதைப்பு தேவையற்று விளைநிலம் தானே முளைத்தலுக்கு இன்றியமையாதது. இப்பூவுலகில் நல்லோர்கள் வாழ்வதால்தான் மழை பெய்கிறது என்பர். நல்லோர்கள் எண்ணங்களுக்கு இயற்கையும் செவி சாய்க்கும் என்பதாம்.
குறள் 86
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
னல்விருந்து வானத் தவர்க்கு.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
சொல்லுரை:
செல்விருந்து - தன்னிடம் வந்த விருந்தினரை
ஓம்பி - நல்ல முறையில் உபசரித்து
வருவிருந்து - வருகின்ற விருந்தினரையும்
பார்த்திருப்பான் - எதிர்நோக்கி ஆவலாய் பார்த்திருப்பவன்
நல்விருந்து - நல்ல விருந்தினராய்
வானத்தவர்க்கு. - வானத்தவர்க்கு அமைவான்.
பொருளுரை:
தன்னிடம் வந்த விருந்தினரை நல்ல முறையில் உபசரித்து வருகின்ற விருந்தினரையும் எதிர்நோக்கி ஆவலாய் பார்த்திருப்பவன் நல்ல விருந்தினராய் வானத்தவர்க்கு அமைவான்.
விளக்கவுரை:
தன் வீடு தேடி வந்த விருந்தினரை நன்கு உபசரித்து அனுப்புவது மட்டுமன்று, அடுத்து வரும் விருந்தினரின் வருகைக்காக எதிர்பார்த்து இருக்கும் நல்லெண்ணம் உடையவன், மற்ற எந்தவித நல்வினைகளை ஆற்றாதபோதும் வானுலத்தினரால் அவர்களின் விருந்தினராக ஓம்பப்படுவான். விருந்தோம்பலின் மூலம் அவன் தெய்வப் பதவியை அடைவான்.
குறள் 87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்.
இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
சொல்லுரை:
இனைத்துணைத்து - இவ்வளவுதான் அளவு
என்பதுஒன்று - என்பது ஒன்றும்
இல்லை - இல்லை
விருந்தின் - விருந்தினரின்
துணைத்துணை - தகுதியாகிய அளவே அளவாகும்
வேள்விப் - விருந்தினரைப் பேணும் வேள்விப்
பயன் - பயன்
பொருளுரை:
இவ்வளவுதான் அளவு என்பது ஒன்றும் இல்லை விருந்தினரின் தகுதியாகிய அளவே அளவாகும் விருந்தினரைப் பேணும் வேள்விப் பயன்.
விளக்கவுரை:
நல்ல விருந்தினரை வரவேற்று உபசரிப்பதே விருந்தோம்பலின் சிறப்பு. சுயநலத்தின் பொருட்டு தீயவர்களை உபசரிப்பது நல்வினை ஆகாது. அதனாலேயே விருந்தோம்பலின் அளவு இவ்வளவுதான் என்பதில்லை. விருந்தினரின் தகுதியாகிய அளவே அளவாகும் என்றார்.
துணை – இத்துணை – இவ்வளவு – அளவு.
குறள் 88
பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார்.
சொல்லுரை:
பரிந்துஓம்பிப் - பொருளை வருந்திப் பாதுகாத்துப் பின்பு அதை இழந்தபின்
பற்றுஅற்றேம் - பற்று அற்றவர் ஆனோம்
என்பர் - என்று கூறி வருந்துவர்
விருந்துஓம்பி - விருந்தினரைப் பேணி
வேள்வி - விருந்து என்னும் வேள்வியில்
தலைப்படா தார் - ஈடுபடாதவர்கள்.
பொருளுரை:
பொருளை வருந்திப் பாதுகாத்துப் பின்பு அதை இழந்தபின் பற்று அற்றவர் ஆனோம் என்று கூறி வருந்துவர் விருந்தினரைப் பேணி விருந்து என்னும் வேள்வியில் ஈடுபடாதவர்கள்.
விளக்கவுரை:
இல்லறத்தானுக்கு விருந்தோம்பலே சிறந்த வேள்வி. பொருளை வருந்திப் பாதுகாத்து, நற்செயல்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பதால் எந்தவிதப் பயனும் இல்லை. அந்தப் பொருளை சிறிது காலத்தில் இழந்துவிட்டபின், பொருளின் மீது பற்று இல்லாமல் இருந்துவிட்டோம் என்று புலம்புவதில் பயன் இல்லை. பொருள் இருக்கும்போதே விருந்தோம்பலில் ஈடுபடுபவர்க்கு பொருளை இழக்கும் துன்பமில்லை.
குறள் 89
உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு.
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
சொல்லுரை:
உடைமையுள் - செல்வம் உள்ள காலத்தில்
இன்மை - வறுமையாவது
விருந்தோம்பல் - விருந்தோம்பலை
ஓம்பா - செய்யாதிருக்கும்
மடமை - அறிவற்ற செயலாகும்
மடவார்கண் - (அந்த செயல்) அறிவில்லாதவரிடம்
உண்டு - உண்டு
பொருளுரை:
செல்வம் உள்ள காலத்தில் வறுமையாவது விருந்தோம்பலை செய்யாதிருக்கும் அறிவற்ற செயலாகும். அந்த செயல் அறிவில்லாதவரிடம் உண்டு.
விளக்கவுரை:
பொருளிருந்தும் விருந்தோம்பலை மேற்கொள்ளாதிருப்பது பொருட்செல்வம் எல்லமிருந்தும் எதுவுமற்ற வறுமை நிலையாகும். விருந்தோம்பல் மேற்கொள்ளாத செயல் அறிவற்ற செயல் என்பதின்மூலம் மனிதன் விருந்தோம்பலின்றி அறிவுடையவனாக, நற்குணமுள்ளவனாக இருக்க முடியாது என்பது கருத்து.
குறள் 90
மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
சொல்லுரை:
மோப்பக் - முகர்ந்தவுடன்
குழையும் - வாடிப்போகும்
அனிச்சம் - அனிச்ச மலர்
முகந்திரிந்து - முகம் வேறுபட்டு
நோக்கக் - பார்த்த அளவிலே
குழையும் - வாடிப்போவர்
விருந்து - விருந்தினர்.
பொருளுரை:
முகர்ந்தவுடன் வாடிப்போகும் அனிச்ச மலர். அதுபோல முகம் வேறுபட்டு பார்த்த அளவிலே வாடிப்போவர் விருந்தினர்.
விளக்கவுரை:
அனிச்ச மலர் மிகவும் மெல்லிய இதழ்களைக் கொண்டது. முகர்ந்த அளவிலேயே வாடிவிடும் தன்மையுடையது. விருந்தினர் மலரின் மென்மையைவிட மிகவும் மென்மைத்தன்மை உடையவர்கள். முகம் வேறுபட்டுப் பார்த்தாலே வாடிப்போவர். அனிச்சமலர் இலக்கியங்களில் மிகவும் மென்மையான தன்மைக்கு குறிப்பிடப்படும் ஒரு மலர்.