இல்லறவியல்

10. இனியவை கூறல்

( இனிய சொற்களைப் பேசுதல் )

91. இன்சொலா லீர மளைஇப் படிறுஇலவாஞ்
      செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

92. அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
      தின்சொல னாகப் பெறின்.

93. முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
      மின்சொ லினதே யறம்.

94. துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
      மின்புறூஉ மின்சொ லவர்க்கு.

95. பணிவுடைய னின்சொல னாத லொருவற்
      கணியல்ல மற்றுப் பிற.

96. அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
      நாடி யினிய சொலின்.

97. நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
      பண்பிற் றலைப்பிரியாச் சொல்.

98. சிறுமையு ணீங்கிய வின்சொல் மறுமையு
      இம்மையு மின்பந் தரும்.

99. இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
      வன்சொல் வழங்கு வது.

100. இனிய வுளவாக வின்னாத கூறல்
        கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.



குறள் 91

இன்சொலா லீர மளைஇப் படிறுஇலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.


சொல்லுரை:

இன்சொலால் - இனிய சொற்களால்

ஈரம் - அன்பு

அளைஇப் - கலந்து

படிறுஇலவாம் - வஞ்சனை இல்லாமல் இருக்கும்

செம்பொருள் - செம்மையான அறநெறியை

கண்டார் - அறிந்தவர்களின்

வாய்ச் சொல் - வாய்ச்சொற்கள்


பொருளுரை:

செம்மையான அறநெறியை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள் இனிய சொற்களால் அன்பு கலந்து வஞ்சனை இல்லாமல் இருக்கும்.


விளக்கவுரை:

’செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்’ என்பது மெய்ப்பொருளை அறிந்த சான்றோர்களின் வாய்ச்சொல் என்பதாம். அவர்களின் வாய்ச்சொற்கள் இனிமையானதாகவும் இருக்கும்; வஞ்சனை அற்றும் இருக்கும்.

மனித குலத்திற்கு ஏற்படும் மிகப்பெரிய நன்மைகளும், சொல்லிலடங்காத துன்பங்களும் அவர்கள் பேசும் சொற்களினாலேயே அமைகின்றன. எனவே, இனிய சொற்களை பேசுவதற்கு வள்ளுவர் முக்கியத்துவம் அளிக்கிறார்.



குறள் 92

அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.


சொல்லுரை:

அகன்அமர்ந்து - மனத்தால் விரும்பி

ஈதலின் - பொருள் கொடுப்பதைவிடவும்

நன்றே - சிறந்ததாகும்

முகனமர்ந்து - முகமலர்ச்சியுடன் நோக்கி

இன்சொலன் - இனிய சொல் பேசுபவனாக

ஆகப் பெறின் - இருக்கப்பெற்றால்


பொருளுரை:

முகமலர்ச்சியுடன் நோக்கி இனிய சொல் பேசுபவனாக இருக்கப்பெற்றால் மனத்தால் விரும்பி பொருள் கொடுப்பதைவிடவும் சிறந்ததாகும்.


விளக்கவுரை:

பொருளை மனமுவந்து அளிப்பதால் பெறுபவனின் பொருள்தேவை நிறைவுறும். அதே நேரம், முக மலர்ச்சியுடன் இனிய சொற்கள் பேசுபவனுக்கு அதை கேட்பவனின் மனநிலையும் நன்மையுறும்; இன்பம் அடையும். மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம். பொருள் தேவையைவிட உயிர்த்தேவையை இன்சொல் பூர்த்தி செய்வதால் அதனை சிறந்தது என்றார். பொருள் ஈதல் சிறந்தது ஆயினும் அதனினும் சிறந்தது இன்சொல் பேசுவது.



குறள் 93

முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
மின்சொ லினதே யறம்.

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொலின் அதே அறம்.


சொல்லுரை:

முகத்தான் - முகமலர்ச்சியுடன்

அமர்ந்து - விரும்பி

இனிதுநோக்கி - இனிமையாக பார்த்து

அகத்தானாம் - உள்ளத்தில் இருந்து தோன்றிவரும்

இன்சொலின் - இனிய சொற்களால் பேசுவானாகில்

அதே - அதுவே

அறம் - அறமாகும்.


பொருளுரை:

முகமலர்ச்சியுடன் விரும்பி இனிமையாக பார்த்து உள்ளத்தில் இருந்து தோன்றிவரும் இனிய சொற்களால் பேசுவானாகில் அதுவே அறமாகும்.


விளக்கவுரை:

பொருள் ஈதலைவிட சிறந்தது என்று முன்குறளில் கூறிய வள்ளுவர், அந்த இனிய சொல் எவ்வகைப்பட்டதாக இருக்கவேண்டும் என்று கூறுகிறார். முகமலர்ச்சியுடன் இனிய பார்வையோடு நோக்குவதுடன் மட்டுமின்றி மனதார அகமலர்ச்சியுடன் இன்சொல் பேசுவதே அறமாகும். இனிய சொல் பேசுவதை அகம் மகிழ்ந்து பேசவேண்டும்.



குறள் 94

துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ லவர்க்கு.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு.


சொல்லுரை:

துன்புறூஉம் - துன்பத்தை உண்டாக்கும்

துவ்வாமை - வறுமை

இல்லாகும் - இல்லாததாகும்

யார்மாட்டும் - எவரிடத்தும்

இன்புறூஉம் - இன்பத்தை உண்டாக்கும்

இன்சொல் - இனிய சொற்களைப்

அவர்க்கு - பேசுவோர்க்கு.


பொருளுரை:

எவரிடத்தும் இன்பத்தை உண்டாக்கும் இனிய சொற்களைப் பேசுவோர்க்கு துன்பத்தை உண்டாக்கும் வறுமை இல்லாததாகும்.


விளக்கவுரை:

எவரிடத்தும் இனிய சொற்களை பேசுபவர்க்கு எல்லோரும் அன்பராகவும், நட்பு பாராட்டுபவராகவும் அமைவர். அதனால் அவர்கள் சுற்றமும் நட்பும் சூழ வாழ்வர். அவர்கள் வறுமையடைந்தாலும் அந்த வறுமையானது சுற்றியுள்ள உறவுகளால் போக்கப்படும்.



குறள் 95

பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.


சொல்லுரை:

பணிவுடையன் - வணக்கம் உடையவனாய்

இன்சொலன் - இனிய சொற்களை பேசுபவனாய்

ஆதல் - இருத்தலே

ஒருவற்கு - ஒருவருக்கு

அணி - அணிகலனாகும்

அல்ல - அணிகலன்களாகா

மற்றுப் - பணிவும் இன்சொல்லும் அல்லாத

பிற - பிறவெல்லாம்


பொருளுரை:

வணக்கம் உடையவனாய் இனிய சொற்களை பேசுபவனாய் இருத்தலே ஒருவருக்கு அணிகலனாகும்; பணிவும் இன்சொல்லும் அல்லாத பிறவெல்லாம் அணிகலன்களாகா.


விளக்கவுரை:

பணிவுடன் நடந்துகொள்வதும், இனிய சொற்கள் பேசுபவனாகவும் இருத்தல் ஒருவற்கு சிறந்த அணிகலனாக இங்கு கூறப்படுகிறது. அணிகலன்கள் அணிவது ஆண், பெண் இருபாலருக்கும் பண்டைக்காலம் முதல் வழக்கமாகும். அந்த அணிகலன்கள் ஒருவருக்கு புற அழகைத் தருகிறது. அந்த அணிகலனால் வரும் புற அழகைவிட பணிவினாலும் இன்சொல் பேசுவதாலும் வரும் புற அழகு சிறந்ததாகும்.



குறள் 96

அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.


சொல்லுரை:

அல்லவை - பாவங்கள்

தேய - குறைய

அறம்பெருகும் - அறமானது வளரும்

நல்லவை - நன்மை பயக்கும் சொற்களை

நாடி - மனத்தால் ஆராய்ந்து

இனிய - இனிமையாக

சொலின் - ஒருவன் கூறுவானாயின்


பொருளுரை:

நன்மை பயக்கும் சொற்களை மனத்தால் ஆராய்ந்து இனிமையாக ஒருவன் கூறுவானாயின் பாவங்கள் குறைந்து அறமானது வளரும்.


விளக்கவுரை:

அறம் செய்வதால் நல்வினை பெருகுகின்றது. நல்வினை பெருகும்போது தீவினை அகலும். நல்வினையும் தீவினையும் ஒளியும் இருளும்போல. ஒளி தோன்றும்போது இருள் கெடுதல் இயல்பானது. அதுபோல, நல்வினைப் பயன்முன் தீவினைப்பயன் கெடும். நல்லனவற்றை கூறுவதும் அறமாயினும், அதனை கடுஞ்சொற்களால் கூறும்பொழுது கேட்பார் மனம் வருத்தமடைவதால் அது அறமாகாது. நல்லனவற்றையும் இனிய சொற்களால் சொல்லும்பொழுதே அது அறமாகும். இதனால் இனிய சொல்லின் அறத்தன்மை வலியுறுத்தப்பட்டது.



குறள் 97

நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்.

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.


சொல்லுரை:

நயன்ஈன்று - நீதி உண்டாக்கி

நன்றி - நன்மையையும்

பயக்கும் - கொடுக்கும்

பயன்ஈன்று - நல்ல பயனை விளைவித்து

பண்பின் - இனிமையான குணத்தினின்றும்

தலைப்பிரியாச் - நீங்காத

சொல் - சொற்களானவை


பொருளுரை:

நீதி உண்டாக்கி நன்மையையும் கொடுக்கும் நல்ல பயனை விளைவித்து இனிமையான குணத்தினின்றும் நீங்காத சொற்களானவை.


விளக்கவுரை:

இனிய சொல்லின் பயன் மறுபிறவியிலும் தொடர்வதைக் குறிக்கிறது இக்குறள். நல்ல பயனை விளைவித்து இனிமைப் பண்பினின்று நீங்காத சொல் நேர்மைப் பண்பை உண்டாக்குகிறது. அந்த நேர்மைப்பண்பு நல்வினைப்பயனை உண்டாக்குகிறது. நல்வினை,தீவினைகளே ஒருவருக்கு மறுபிறப்பிலும் தொடருகிறது.



குறள் 98

சிறுமையு ணீங்கிய வின்சொல் மறுமையு
இம்மையு மின்பந் தரும்.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.


சொல்லுரை:

சிறுமையுள் - பிறருக்கு துன்பம்

நீங்கிய - தராத

இன்சொல் - இனிய சொற்கள்

மறுமையும் - மறுபிறப்ப்பிலும்

இம்மையும் - இப்பிறப்பிலும்

இன்பம் - இன்பத்தைத்

தரும் - தரும்


பொருளுரை:

பிறருக்கு துன்பம் தராத இனிய சொற்கள் மறுபிறப்ப்பிலும் இப்பிறப்பிலும் இன்பத்தைத் தரும்.


விளக்கவுரை:

பொருளாலும் விளைவாலும் பிறருக்கு தீங்கு விளைவிக்காத சொல் இப்பிறப்பிற்கும் மறுபிறப்பிற்கும் இன்பத்தைத் தரும். இனிய சொல்லின் பயன் மறுபிறப்பிலும் தொடரும் என்பது இதனால் விளக்கப்பட்டது.



குறள் 99

இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.


சொல்லுரை:

இன்சொல் - இனிய சொற்கள்

இனிதுஈன்றல் - இன்பம் தருதலை

காண்பான் - அனுபவித்து அறிந்தவன்

எவன்கொலோ - என்ன பயன் கருதியோ

வன்சொல் - கடுஞ்சொற்களை

வழங்குவது - பேசுவது


பொருளுரை:

இனிய சொற்கள் இன்பம் தருதலை அனுபவித்து அறிந்தவன் என்ன பயன் கருதியோ கடுஞ்சொற்களைப் பேசுவது.


விளக்கவுரை:

இக்குறள் கடுஞ்சொற்களைப் பேசுபவர்களின் தன்மையை வியக்கிறது. மனிதன் இனிய சொற்களை பேசுவதினால் உண்டாகும் நன்மையை அறிந்திருந்தும் கடுஞ்சொற்களை பேசுவது ஏனோ என்கிறது குறள். இது கடுச்சொற்களைப் பேசுவோரின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது.



குறள் 100

இனிய வுளவாக வின்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.


சொல்லுரை:

இனிய - இனிய சொற்கள்

உளவாக - தன்னகத்தே இருக்க

இன்னாத - கடுஞ்சொற்களை

கூறல் - பேசுவது

கனிஇருப்பக் - இனிய சுவையுடைய கனி தன்னுடைய கையில் இருக்க

காய் - சுவை குறைந்த காயை

கவர்ந் தற்று - பறித்துத் திண்பதற்கு முற்படுவது போன்றது


பொருளுரை:

இனிய சொற்கள் தன்னகத்தே இருக்க கடுஞ்சொற்களை பேசுவது இனிய சுவையுடைய கனி தன்னுடைய கையில் இருக்க சுவை குறைந்த காயை பறித்து திண்பதற்கு முற்படுவது போன்றது.


விளக்கவுரை:

இனிய சுவையுடைய கனி இருக்கும்போது சுவையற்ற அல்லது சுவை குறைந்த காயை ஒருவர் பறித்துத் திண்ண முற்பட்டால், அது அவரின் மனம் சரியான நிலையில் இல்லை என்பதையே குறிக்கும். அதுபோலத்தான் இனிய சொற்கள் உள்ளபொழுது கடுஞ்சொற்களைப் பேசுவது.



uline