இல்லறவியல்

17. அழுக்காறாமை

( பொறாமை அற்றவராய் இருத்தல் )

161. ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் நெஞ்சத்
        தழுக்கா றிலாத வியல்பு.

162. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு
        மழுக்காற்றி னன்மை பெறின்.

163. அறன்ஆக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
        பேணா தழுக்கறுப் பான்.

164. அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
        னேதம் படுபாக் கறிந்து.

165. அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
        வழுக்காயுங் கேடீன் பது.

166. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉம்
        உண்பதூஉ மின்றிக் கெடும்.

167. அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ
        டவ்வையைக் காட்டி விடும்.

168. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
        தீயுழி யுய்த்து விடும்.

169. அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான்
        கேடு நினைக்கப் படும்.

170. அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
        பெருக்கத்திற் றீர்ந்தாரு மில்.



குறள் 161

ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் நெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்பு.

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.


சொல்லுரை:

ஒழுக்கு - ஒழுக்கத்தின்

ஆறாக் - சிறந்த வழியாக

கொள்க - கொள்ளவேண்டும்

ஒருவன் - ஒருவன்

தன்நெஞ்சத்து - தன் மனத்தில்

அழுக்காறு - பொறாமை

இலாத - இல்லாமல்

இயல்பு - வாழும் பண்பு


பொருளுரை:

ஒருவன் தன் மனத்தில் பொறாமை இல்லாமல் வாழும் பண்பினை ஒழுக்கத்தின் சிறந்த வழியாகக் கொள்ளவேண்டும்.


விளக்கவுரை:

அழுக்காறாமை – அழுக்கு + ஆறாமை - அழுக்கு +அறாமை. மனதிலே பொறாமைக் குணம் அறாது இருத்தல். இயல்பு – இயல்பான தன்மை. அழுக்குஅறாமை என்பதே அழுக்குஆறாமை என நீண்டு நிற்கிறது.
பொறாமை இல்லாமல் இருத்தலை தனக்கு இயல்பான தன்மையாக பழகிக் கொள்ளவேண்டும். அதனையே தன் ஒழுக்கத்தின் வழியாகவும் கொள்ளவேண்டும். மனத்திலே பொறாமைக்குணம் கொள்வது என்பது மனக்குற்றம் ஆகும்.
அழுக்கறு என்பது வினைச்சொல். அழுக்காறு என்பது எதிர்மறை வினைப்பெயர்.



குறள் 162

விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு
மழுக்காற்றி னன்மை பெறின்.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.


சொல்லுரை:

விழுப்பேற்றின் - சிறந்த செல்வங்களில்

அஃதொப்பது - அதற்கு ஒப்பானது

இல்லை - இல்லை

யார்மாட்டும் - எவரிடத்திலும்

அழுக்காற்றின் - பொறாமை கொள்வதிலிருந்து

அன்மை - விலகி

பெறின் - இருக்கும் தன்மையுடன் வாழப்பெற்றால்


பொருளுரை:

எவரிடத்திலும் பொறாமை கொள்வதிலிருந்து விலகி இருக்கும் தன்மையுடன் வாழப்பெற்றால் சிறந்த செல்வங்களில் அதற்கு ஒப்பானது இல்லை.


விளக்கவுரை:

யார்மாட்டும் என்று இங்கு கூறப்படுவது பகைவரிடத்திலும் பொறாமை கொள்ளுதல் கூடாது என்பதாம். தனக்கு உள்ளது போதும் என்ற நிறைவின்மையும் மற்றும் தானும் நல்நிலையை அடையவேண்டும் என்ற முயற்சியும் இன்றி தன்னைக்காட்டிலும் நல்ல நிலையில் உள்ளவர்களைப் பற்றி பொறாமைப்படுதலே ‘அழுக்காறு’. மக்களின் மனதிலே அமைதியின்மையை விளைவிப்பதும் பொறாமைக்குணமே. பொறாமையற்று இருப்பவனிடமே மற்ற நல்ல குணங்களும் குடிகொண்டிருக்கும். அதனாலேயே பொறாமையற்று இருப்பதை சிறந்த செல்வமாக மதிக்கப்படுகிறது.



குறள் 163

அறன்ஆக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.


சொல்லுரை:

அறன்ஆக்கம் - அறத்தையும், அறத்தின்மூலம் வரும் செல்வத்தையும்

வேண்டாதான் - வேண்டாம் என்று

என்பான் - சொல்லுபவன்

பிறனாக்கம் - பிறருடைய செல்வத்தைக் கண்டு

பேணாது - மகிழ்ந்து

அழுக்கறுப் பான் - பொறாமைப்படுவான்


பொருளுரை:

அறத்தையும் அறத்தின்மூலம் வரும் செல்வத்தையும் வேண்டாம் என்று சொல்லுபவன் பிறருடைய செல்வத்தைக் கண்டு மகிழ்ந்து பொறாமைப்படுவான்.


விளக்கவுரை:

அறத்தின்மூலம் வரும் ஆக்கமாவது இம்மைக்கும் மறுமைக்கும், அதாவது இப்பிறப்பிற்கும் மறுபிறப்பிற்கும் வேண்டிய செல்வத்தை, புண்ணியங்களை அறவழியே சேர்ப்பது. பிறரின் நல்ல நிலையைக் கண்டு ஒருவன் பொறாமை கொண்டு வாழ்வானாகில் அறத்தின்வழி நின்று தனக்கு வேண்டிய செல்வத்தைச் சேர்க்கும் தன்மையை இழந்துவிடுவான். அதனால் தனக்குத்தானே கேட்டினை விளைவித்துக்கொள்வான்.



குறள் 164

அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
னேதம் படுபாக் கறிந்து.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.


சொல்லுரை:

அழுக்காற்றின் - பொறாமையினால்

அல்லவை - அறம் அல்லாதவைகளை

செய்யார் - செய்யமாட்டார்

இழுக்காற்றின் - பொறாமையாகிய குற்றச் செயலால்

ஏதம் - துன்பம்

படுபாக்கு - உண்டாவது

அறிந்து - தெரிந்து


பொருளுரை:

பொறாமையாகிய குற்றச் செயலால் துன்பம் உண்டாவது தெரிந்து பொறாமையினால் அறம் அல்லாதவைகளைச் செய்யமாட்டார்.


விளக்கவுரை:

பொறாமை எண்ணம் தீய செயல்களை செய்வதற்கு வழிவகுக்கும். அதன்மூலம் ஒருவனுக்கு துன்பமே உண்டாகும். பொறாமை குற்றச் செயல்கள் புரிவதற்குத் தூண்டும். பொறாமை துன்பத்தையே உண்டாக்குவதால் நாம் பிறருக்கு தீங்குகளை செய்யாதிருத்தல் வேண்டும்.



குறள் 165

அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.


சொல்லுரை:

அழுக்காறு - பொறாமை

உடையார்க்கு - உடையவர்க்கு

அதுசாலும் - அப்பொறாமையே போதுமானதாகும்

ஒன்னார் - பகைவர்

வழுக்கியும் - தீமை செய்யத் தவறினாலும்

கேடு - பொறாமையே கேட்டினை

ஈன்பது - விளைவிக்கும், உண்டாக்கும்


பொருளுரை:

பொறாமைக் குணம் உடையவர்க்கு கேட்டினை விளைவிக்க அப்பொறாமையே போதுமானதாகும். பகைவர் தீமை செய்யத் தவறினாலும் பொறாமையே கேட்டினை விளைவிக்கும்.


விளக்கவுரை:

பொறாமைக் குணம் உடையவர்க்குக் கேடு உண்டாக்க அப்பொறாமைக் குணமே போதுமானதாகும். பகைவர்கள் என்று தனியாக கேடு உண்டாக்கத் தேவையில்லை. பொறாமைக் குணம் பகைவரினும் கொடிது. எப்படியெனில், பகைவர்களால் தனக்கு தீங்கு நேராமலும் போகலாம். ஆனால் பொறாமைக் குணத்தால் தனக்கு கேடு நிகழ்வது திண்ணம். அதனால், பகைவரினும் கொடியதாகக் கருதப்படுகிறது பொறாமை.



குறள் 166

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.


சொல்லுரை:

கொடுப்பது - ஒருவன் பிறருக்கு கொடுப்பதைக் கண்டு

அழுக்கறுப்பான் - பொறாமைப் படுபவனின்

சுற்றம் - உறவினர்கள், சுற்றமானது

உடுப்பதூஉம் - உடுத்த உடையும்

உண்பதூஉம் - உண்ண உணவும்

இன்றிக் - இல்லாமல்

கெடும் - அழியும்


பொருளுரை:

ஒருவன் பிறருக்கு கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுபவனின் சுற்றமானது உடுத்த உடையும் உண்ண உணவும் இல்லாமல் அழியும்.


விளக்கவுரை:

செல்வம் உடைய ஒருவன் பிறருக்குக் கொடை கொடுப்பதைக் கண்டு பொறாமையால் தடுப்பவன், பிறர் செல்வந்தனிடம் பொருளைப் பெற்று தம் வறுமையை போக்கிக்கொள்வதை தடுப்பதினால், பொறாமை உடையவன் தானும் உணவும் உடுப்பும் இல்லாத நிலையை எய்துவான் என்றும், தான் மட்டுமின்றி தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தாரும் அதே நிலையை எய்தவேண்டி வரும் என்பதாம். தான் செய்த பாவம் தன் குடும்பத்தையும் தாக்கும் என்றாயிற்று. இங்கு சுற்றம் என்று குறிப்பிடப்படுவது தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினரைக் குறிக்கும்.



குறள் 167

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ
டவ்வையைக் காட்டி விடும்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.


சொல்லுரை:

அவ்வித்து - மனந்திரிந்து பொறாமைகொண்டு

அழுக்காறு - பொறாமைக் குணத்துடன்

உடையானைச் - வாழ்பவனை

செய்யவள் - திருமகள்

தவ்வையைக் - தமக்கையை, தன் அக்காவான மூதேவியை

காட்டி விடும் - சுட்டிக்காட்டிவிட்டு நீங்குவாள்


பொருளுரை:

மனந்திரிந்து பொறாமைகொண்டு பொறாமைக் குணத்துடன் வாழ்பவனை திருமகள் தன்னுடைய அக்காவான மூதேவியை சுட்டிக்காட்டிவிட்டு நீங்குவாள்.


விளக்கவுரை:

பொறாமைக்குணம் உடையவனிடம் திருமகள் தங்குவதில்லை. அவனை விட்டு விலகி, வறுமைக்கு தலைவியாகிய தன்னுடைய அக்காள் மூதேவியிடம் சுட்டிக்காட்டிவிட்டு நீங்கிவிடுவாள். பொறாமைக்குணம் உடையவனை வறுமை சூழும் என்பது கருத்து.
அவ்வை = மூத்தவள், முதியவள்
தம் + அவ்வை = தவ்வை = தனக்கு மூத்தவள்
அக்கை = அக்காள்
தம் + அக்கை = தமக்கை = தன்னுடைய அக்காள்



குறள் 168

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.


சொல்லுரை:

அழுக்காறு - பொறாமை

எனஒரு பாவி - என்னும் ஒப்பில்லாத பாவி

திருச்செற்றுத் - செல்வத்தை அழித்து

தீயுழி - நரகத்தினுள்

உய்த்து விடும் - செலுத்திவிடும்


பொருளுரை:

பொறாமை என்னும் ஒப்பில்லாத பாவி செல்வத்தை அழித்து நரகத்தினுள் செலுத்திவிடும்.


விளக்கவுரை:

பொறாமை என்னும் தீய குணமே ஒருவனை இப்பிறப்பில் செல்வத்தை இழக்கச் செய்து மறுமையில் நரகத்தில் தள்ளிவிடும். தீயுழி என்பது தீமை நிறைந்த நரக உலகமாகும். பொறாமை உடையவன் பிறருடைய செல்வத்தைக் கண்டே காலத்தைக் கழிப்பானே ஒழுய நல்ல நெறியில் தானும் நடந்து செல்வத்தைச் சேர்க்கவேண்டும் என்று முயற்சி செய்யமாட்டான். அதனால் வறுமை நிலையிலேயே இருப்பான். அது மட்டுமின்றி பொறாமைக்குணத்தால் தீய வழியை நாடி தீயனவற்றையே செய்வதால் அவன் மறுமையில் நரகத்திலேதான் தள்ளப்படுவான்.



குறள் 169

அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான்
கேடு நினைக்கப் படும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.


சொல்லுரை:

அவ்விய - பொறாமை

நெஞ்சத்தான் - மனம் கொண்டவனின்

ஆக்கமும் - செல்வமும்

செவ்வியான் - பொறாமையற்ற நல்ல மனமுடையவனின்

கேடும் - வறுமையும், துன்பமும்

நினைக்கப் படும் - ஆராயத்தக்கது


பொருளுரை:

பொறாமை மனம் கொண்டவனின் செல்வமும் பொறாமையற்ற நல்ல மனமுடையவனின் வறுமையும், துன்பமும் ஆராயத்தக்கது.


விளக்கவுரை:

பொறாமை குணமுள்ளவனின் செல்வப்பெருக்கும் பொறாமையற்ற நற்குணமுள்ளவனின் சீரழிவும் இயற்கைக்கும் அறநூற் கொள்கைக்கும் மாறானவை. ஒருவனுடைய வாழ்வில் நிகழும் நிகழ்வுகள் அவனின் முற்பிறவி பாவ புண்ணியங்களையும் சார்ந்திருப்பதால் இப்பிறவியில் ஏற்படும் மேற்கூறப்பட்ட முரண்பாடுகள் தன்னுடைய முற்பிறவியில் மேற்கொண்ட நல்வினை, தீவினைகளைப் பொறுத்தே அமையும் என்று உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும்.



குறள் 170

அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
பெருக்கத்திற் றீர்ந்தாரு மில்.

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.


சொல்லுரை:

அழுக்கற்று - பொறாமையுற்று

அகன்றாரும் - செல்வத்தில் வளர்ந்தவரும்

இல்லை - இல்லை

அஃதுஇல்லார் - பொறாமை அற்றவர்

பெருக்கத்தில் - செல்வத்திலிருந்து

தீர்ந்தாரும் - குறைந்தவரும்

இல் - இல்லை


பொருளுரை:

பொறாமையுற்று செல்வத்தில் வளர்ந்தவரும் இல்லை. பொறாமை அற்றவர் செல்வத்திலிருந்து குறைந்தவரும் இல்லை.


விளக்கவுரை:

பொறாமையுற்று வாழ்வோர் செல்வத்தில் வளர்வது இல்லை. பொறாமையற்று வாழ்பவர் செல்வப்பெருக்கில் குறைவதும் இல்லை. இது முற்பிறவி நல்வினை, தீவினைப் பயன்களின் தாக்கம் இல்லாமல் உண்டாகும் நிலை.



uline