இல்லறவியல்

16. பொறையுடைமை

( பொறுமையை கடைபிடித்தல் )

151. அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
        யிகழ்வார்ப் பொறுத்த றலை.

152. பொறுத்த லிறப்பினை யென்று மதனை
        மறத்த லதனினு நன்று.

153. இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
        வன்மை மடவார்ப் பொறை.

154. நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
        போற்றி யொழுகப் படும்.

155. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
        பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

156. ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
        பொன்றுந் துணையும் புகழ்.

157. திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
        தறனல்ல செய்யாமை நன்று.

158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
        தகுதியான் வென்று விடல்.

159. துறந்தாரிற் றூய்மை யுடைய ரிறந்தார்வா
        யின்னாச்சொ னோற்கிற் பவர்.

160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு
        மின்னாச்சொ னோற்பாரிற் பின்.



குறள் 151

அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.


சொல்லுரை:

அகழ்வாரை - தன்னை வெட்டித் தோண்டுவாரை

தாங்கும் - சுமக்கும்

நிலம்போல - நிலத்தைப் போல

தம்மை - தம்மை

இகழ்வார் - இகழ்ந்து பேசுவாரை

பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்

தலை - சிறந்த அறமாகும்


பொருளுரை:

தன்னை வெட்டித் தோண்டுவாரை சுமக்கும் நிலத்தைப் போல தம்மை இகழ்ந்து பேசுவாரை பொறுத்துக்கொள்ளுதல் சிறந்த அறமாகும்.


விளக்கவுரை:

இந்த நிலவுலகமானது தன்னைத் தோண்டி துன்புறுத்துகிறவர்களையும், தன்மீது வாழும் அனைத்து உயிர்களையும் சுமத்தல் என்பது தனக்கு விதிக்கப்பட்ட அறமாதலால் தனக்கு தீங்கு செய்பவர்களையும் தாங்கி வாழவைக்கிறது.
இந்த நிலவுலகம் நெருப்புப் பிழம்பாக இருந்து பன்னெடுங்காலத்திற்குப் பிறகு உயிர்கள் வாழ்வதற்கு தகுந்த இடமாக மாறியுள்ளது. மேற்பகுதி மட்டுமே வாழத்தகுந்த இடமாகவும் உட்பகுதி இன்னும் நெருப்புப் பிழம்பாகவும் உள்ளதை அனைவரும் அறிவர். இவ்வாறு பல்லாண்டு காலமாய் சமைக்கப்பட்ட நிலவுலகை மனிதரினம் கனிமங்களை அடைய நிலத்தை குடைந்தும், இயற்கையான பாறைகளையும், மலைகளையும் அழித்து பேரழிவை உண்டாக்கும் பள்ளத்தாக்குகளை உருவாக்கி சீரழிப்பதை உணர்க. அவ்வாறு தன்னை துன்புறுத்தினாலும், இந்த நிலவுலகம் தன் மீதுள்ள உயிரினங்களை சுமக்கிறது. அதுபோல தம்மை இகழ்ந்து பேசுவோரை பொறுத்துக்கொள்ளுதல் சிறந்த அறமாகும்.



குறள் 152

பொறுத்த லிறப்பினை யென்று மதனை
மறத்த லதனினு நன்று.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.


சொல்லுரை:

பொறுத்தல் - பொறுத்துக்கொள்க

இறப்பினை - ஒருவனுடைய வரம்பு மீறிய குற்றத்தை

என்றும் - எக்காலத்திலும்

அதனை - அக்குற்றத்தை

மறத்தல் - மறந்துவிடுதல்

அதனினும் - அப்பொறுத்தலைக் காட்டிலும்

நன்று - மிக நல்லதாகும்


பொருளுரை:

ஒருவனுடைய வரம்பு மீறிய குற்றத்தை எக்காலத்திலும் பொறுத்துக்கொள்க. அக்குற்றத்தை மறந்துவிடுதல் அப்பொறுத்தலைக் காட்டிலும் மிக நல்லதாகும்.


விளக்கவுரை:

ஒருவன் வரம்பு கடந்து தீமை செய்யும்போது பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் உண்டானால் அல்லது தனக்கு தீங்கு செய்தவரை தண்டித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் உண்டானால் அப்படிப்பட்ட நிலையிலும் தனக்கு தீங்கு செய்ததை பொறுத்துக் கொள்வதே சிறந்த பொறையுடைமை ஆகும். பழிக்குப் பழி எண்ணத்தை நீக்கி, தனக்கு செய்த தீமையை பொறுத்துக்கொள்வது மட்டுமின்றி, பிறர் தனக்கு தீமை புரிந்தது தன் மனத்தில் இருக்குமானால் அது எதிர்மறை எண்ணங்களை உண்டாக்குவதுடன் உடல் நலத்தையும் பாதிக்குமாதலால் அத்தீங்கினை மறந்துவிடுதல் பொறுத்துக்கொள்வதைக் காட்டிலும் மேலும் நன்மை பயப்பதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகிறது.



குறள் 153

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.


சொல்லுரை:

இன்மையுள் - வறுமையிலும்

இன்மை - வறுமையானது

விருந்துஒரால் - விருந்தினரை ஏற்காமல் நீங்குதல் ஆகும்

வன்மையுள் - வல்லமையுள்

வன்மை - வல்லமையாவது

மடவார் - அறிவில்லாதார் செய்த தீமையை

பொறை - பொறுத்துக்கொள்ளுதல் ஆகும்


பொருளுரை:

வறுமையிலும் வறுமையானது விருந்தினரை ஏற்காமல் நீங்குதல் ஆகும். வல்லமையுள் வல்லமையாவது அறிவில்லாதார் செய்த தீமையை பொறுத்துக்கொள்ளுதல் ஆகும்.


விளக்கவுரை:

பொருளின்றி வாடுதல் மட்டும் வறுமையன்று. பொருளிருந்தும் விருந்தினரைப் பேணாது இருத்தல் வறுமையிலும் வறுமையாக கருதப்படுகிறது. கருமித்தனத்தால் உண்டாகும் கடினமான மனம் பொருளிருந்தும் விருந்தினரை பேணாதது. ஆனால் அறிவற்றவர்கள் செய்யும் தீமையை பொறுத்துக்கொள்ளும் மனவலிமையானது நெஞ்சுரத்தினால் உண்டாவது. அந்த மனவலிமையே ஒருவனுக்கு வலிமையில் எல்லாம் சிறந்த வலிமையாக போற்றப்படுகிறது.



குறள் 154

நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.


சொல்லுரை:

நிறையுடைமை - நிறைவான குணங்களை உடைய தன்மை

நீங்காமை - தன்னைவிட்டு நீங்காமலிருக்க

வேண்டின் - ஒருவன் விரும்பினால்

பொறையுடைமை - பொறுமையுடன் இருக்கும் தன்மையை

போற்றி - தவறாது பாதுகாத்து

ஒழுகப் படும் - நடக்கவேண்டும், வாழவேண்டும்


பொருளுரை:

நிறைவான குணங்களை உடைய தன்மை தன்னைவிட்டு நீங்காமலிருக்க ஒருவன் விரும்பினால் பொறுமையுடன் இருக்கும் தன்மையை தவறாது பாதுகாத்து வாழவேண்டும்.


விளக்கவுரை:

பிறர் தனக்கு செய்யும் தீங்குகளை ஒருவன் பொறுத்துக்கொள்வதுடன் அத்தீங்கினை தன் மனதிலிருந்து நீக்கி வாழ்வானாயின், அந்த தீய எண்ணங்களின் நீக்கமே, நல்ல எண்ணங்கள் மனதில் குடிகொள்வதற்கு இடமளிக்கிறது. அதுவே நிறைவான குணங்களை உடைய தன்மையை ஒருவனுக்கு அளிக்கிறது.



குறள் 155

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.


சொல்லுரை:

ஒறுத்தாரை - பிறர் தமக்கு தீங்கு செய்தவிடத்து அவரை தண்டித்தவரை

ஒன்றாக - ஒரு பொருளாக

வையாரே - உலக மக்கள் தம் மனத்துள் வைக்கமாட்டார்

வைப்பர் - மனத்துள் வைப்பர்

பொறுத்தாரை - அத்தீமை செய்தவரை தண்டிக்காமல் பொறுத்தவரை

பொன்போல் - பொன்னைப்போல்

பொதிந்து - பத்திரப்படுத்தி, பாதுகாத்து


பொருளுரை:

பிறர் தமக்கு தீங்கு செய்தவிடத்து அவரை தண்டித்தவரை ஒரு பொருளாக உலக மக்கள் தம் மனத்துள் வைக்கமாட்டார். அவ்வாறு தீமை செய்தவரை தண்டிக்காமல் பொறுத்துக்கொண்டவரை தன் மனத்தினுள் பொன்னைப்போல் பத்திரப்படுத்தி பாதுகாத்து வைப்பர்.


விளக்கவுரை:

தீங்கு செயதவர்க்கு திருப்பி தீங்கு செய்தவரை உலகத்தார் ஒரு பொருளாக கருதாதற்குக் காரணம் அவ்விருவரும் ஒரே தன்மையுடைவர். ஏனெனில் தீங்கு செய்தவனுக்கும் அதற்கான திருப்பி தீங்கு செய்பவனுக்கும் வேறுபாடு ஏதுமில்லை. ஆனால் தமக்கு இழைக்கப்பட்ட தீங்கை பொறுத்துக்கொண்டு திருப்பி தண்டிக்காமல் இருப்பவர் அறநெறி நிலைநாட்டுபவர்கள் ஆதலால் உலகத்தார் அவர்களை தங்கள் மனத்தினுள் பொன்னைப்போல் பத்திரப்படுத்தி பாதுகாத்து வைப்பர்.



குறள் 156

ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.


சொல்லுரை:

ஒறுத்தார்க்கு - தமக்குத் தீமை செய்தவரை தண்டித்தவர்க்கு

ஒருநாளை - தண்டித்த அந்த ஒரு நாள் மட்டுமே

இன்பம் - இன்பம் ஆகும்

பொறுத்தார்க்கு - அத்தீமையை பொறுத்துக்கொண்டவர்க்கு

பொன்றும் - இவ்வுலகம் அழியும்

துணையும் - கால அளவு வரை

புகழ் - புகழ் நிலைத்திருக்கும்


பொருளுரை:

தமக்குத் தீமை செய்தவரை தண்டித்தவர்க்கு தண்டித்த அந்த ஒரு நாள் மட்டுமே இன்பம் ஆகும். அத்தீமையை பொறுத்துக்கொண்டவர்க்கு இவ்வுலகம் அழியும் கால அளவு வரை புகழ் நிலைத்திருக்கும்.


விளக்கவுரை:

தமக்கு தீங்கு செய்தவரை தண்டித்தவர்க்கு உண்டாவது ‘தண்டித்துவிட்டோம்’ என்ற தன் வன்ம எண்ணத்திற்கு தீனி போடும் இன்பம் மட்டுமே. ‘ஒருநாளை இன்பம்’ என்பதினால் அது ஒரு நிலையற்ற தன்மையுடைய அற்ப இன்பம். ஆனால் தமக்கு இழைக்கப்பட்ட தீங்கினை பொறுத்துக்கொண்டார்க்கு இவ்வுலகம் உள்ளளவும் புகழே நிலைத்திருக்கும்.



குறள் 157

திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.


சொல்லுரை:

திறனல்ல - செய்யத்தகாத கொடிய செயல்களை

தன்பிறர் - தன்னிடத்து மற்றவர்

செய்யினும் - செய்தாலும்

நோ - அதனால் ஏற்படும் துன்பத்தினால்

நொந்து - மனம் வருந்தி

அறன்அல்ல - அறமற்ற செயல்களை

செய்யாமை - செய்யாதிருத்தல்

நன்று - நல்லதாகும்


பொருளுரை:

செய்யத்தகாத கொடிய செயல்களை தன்னிடத்து மற்றவர் செய்தாலும் அதனால் ஏற்படும் துன்பத்தினால் மனம் வருந்தி அறமற்ற செயல்களை செய்யாதிருத்தல் நல்லதாகும்.


விளக்கவுரை:

நோ – நோய், துன்பம். பிறர் தனக்கு செய்யத்தகாத கொடிய துன்பச்செயல்களை செய்யும்பொழுது மனம் வருந்துதலும் தீங்கு செய்தவர்க்கு எதிராக வெகுண்டு எழுதலும் மனத்தின் இயல்பு. அவ்வாறான நிலையிலும் மனத்தில் அமைதி காத்து அறம் சார்ந்த நிலையில் நிற்பதே நல்ல செயலாகும்.



குறள் 158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தான்தம்
தகுதியான் வென்று விடல்.


சொல்லுரை:

மிகுதியான் - செருக்கினால், கர்வத்தினால்

மிக்கவை - தீயனவற்றை

செய்தாரை - தமக்குச் செய்தவர்களை

தாம்தம் - தாம் தம்முடைய

தகுதியான் - பொறுமையினால்

வென்று விடல் - வென்றுவிட வேண்டும்.


பொருளுரை:

செருக்கினால் தீயனவற்றை தமக்குச் செய்தவர்களை தாம் தம்முடைய பொறுமையினால் வென்றுவிட வேண்டும்.


விளக்கவுரை:

செல்வம், அதிகாரம், ஆள்பலம் போன்ற செருக்கினால் தீயனவற்றை தமக்கு செய்தவர்களை தன்னுடைய பொறுமையால் வெல்லவேண்டும். அது தோல்வியாகாது. தீமை செய்பவர்கள் எல்லாக் காலத்தும் செல்வச் செருக்கோடும், அதிகார ஆள்பலத்தோடும் வாழமுடியாது. காலங்கள் மாறும். காட்சிகளும் மாறும். ஆதலால், ஒருவன் தனக்கு செருக்கினால் தீங்கிழைக்கும்போது காலத்தின் தன்மை கருதி பொறுமை காக்கவேண்டும்.



குறள் 159

துறந்தாரிற் றூய்மை யுடைய ரிறந்தார்வா
யின்னாச்சொ னோற்கிற் பவர்.

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.


சொல்லுரை:

துறந்தாரின் - முற்றுந்துறந்த துறவியைப்போல

தூய்மை - தூய்மையான குணநலனை

உடையர் - உடையவர் ஆவார்

இறந்தார் - நல்வழியைக் கடந்தவரின்

வாய் - வாயினால் உண்டாகும்

இன்னாச்சொல் - துன்பம் தரும் சொற்களை

நோற்கிற் பவர் - பொறுத்துக்கொள்பவர்


பொருளுரை:

நல்வழியைக் கடந்து தீயவழியில் பயணிப்பவரின் வாயினால் உண்டாகும் துன்பம் தரும் சொற்களை பொறுத்துக்கொள்பவர் முற்றுந்துறந்த துறவியைப்போல தூய்மையான குணநலனை உடையவர் ஆவார்.


விளக்கவுரை:

நெறிகடந்த கீழ்மக்களின் வாயிலிருந்து உண்டாகும் துன்பம் தரும் கொடுஞ்சொற்களை பொறுத்துக் கொள்ளும் சான்றோர்கள் துறவிகளைப்போன்று தூய்மையான குணநலனை உடையவராவர். பொறையுடைமைக்கு தூய மனம் இன்றியமையாதது.
‘துறந்தாரின் தூய்மை’ என்பதற்கு ‘துறந்தவரின் தூய்மையைப் போல’ என்றும் ‘துறந்தவரைவிட தூய்மையானவர்’ என்று இரு பொருள் கொள்ளப்படுகிறது. முற்றுந்துறந்தவர் தூய்மை மேலானது என்பதால் ‘துறந்தவரின் தூய்மையைப் போல’ என்று எடுத்துக்கொள்வதே சிறப்பாக அமையும்.



குறள் 160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு
மின்னாச்சொ னோற்பாரிற் பின்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.


சொல்லுரை:

உண்ணாது - விரதங்களினால் உண்ணாமல்

நோற்பார் - தன் பசிப்பிணியை பொறுப்பவர்

பெரியர் - பெரியவராவர்

பிறர்சொல்லும் - பிறர் தம்மை இழித்துக் கூறும்

இன்னாச்சொல் - கொடிய சொற்களை

நோற்பாரின் - பொறுத்துக்கொள்பவர்களுக்கு

பின் - அடுத்தபடிதான்


பொருளுரை:

விரதங்களினால் உண்ணாமல் தன் பசிப்பிணியை பொறுப்பவர் பெரியவராவர். ஆனால் அவர்க்ளும், பிறர் தம்மை இழித்துக் கூறும் கொடிய சொற்களை பொறுத்துக்கொள்பவர்களுக்கு அடுத்தபடிதான்.


விளக்கவுரை:

உணவு உண்ணாது பசிப்பிணி பொறுத்து தவம் செய்பவர்கள் துறவிகள். ‘உண்டினை சுருக்கி உள்ளொளி பெருக்கும்’ நோக்கத்தோடு செய்யப்படுவது தவம். அப்படிப்பட்ட பெரியோராகிய துறவிகள்கூட பிறர் தம்மை பழித்துக் கூறும் துன்பம் தரும் கொடிய சொற்களை பொறுத்துக்கொள்பவர்க்கு அடுத்தபடியானவர்களே ஆவர்.
துறவிகளுக்கு இங்கு ஒரு குறிப்பு உரைக்கப்பட்டுள்ளது. உண்ணாது தவமிருந்து ஆற்றலைப் பெற்றாலும் பொறையுடைமையும் அவர்களுக்கு இன்றியமையாத பண்பாக இருக்கவேண்டும் என்பதாகும்.



uline