இல்லறவியல்

15. பிறனில் விழையாமை

( பிறன் மனைவியை விரும்பாமை )

141. பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
        தறம்பொருள் கண்டார்க ணில்.

142. அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
        நின்றாரிற் பேதையா ரில்.

143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்
        தீமை புரிந்துதொழுகு வார்.

144. எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையும்
        தேரான் பிறனில் புகல்.

145. எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
        விளியாது நிற்கும் பழி.

146. பகைபாவ மச்சம் பழியென நான்கு
        மிகவாவா மில்லிறப்பான் கண்.

147. அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள்
        பெண்மை நயவா தவன்.

148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
        கறனொன்றோ வான்ற வொழுக்கு.

149. நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற்
        பிறர்க்குரியா டோடோயா தார்.

150. அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
        பெண்மை நயவாமை நன்று.



குறள் 141

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.

பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.


சொல்லுரை:

பிறன் - பிறனுக்கு

பொருளாள் - உரிமையான மனைவியை

பெட்டு - விரும்பி

ஒழுகும் - நடக்கின்ற

பேதைமை - அறிவற்ற தன்மை

ஞாலத்து - உலகத்தில்

அறம்பொருள் - அறத்தையும் பொருளையும்

கண்டார்கண் - ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம்

இல் - இல்லை


பொருளுரை:

பிறனுக்கு உரிமையான மனைவியை விரும்பி நடக்கின்ற அறிவற்ற தன்மை உலகத்தில் அறத்தையும் பொருளையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.


விளக்கவுரை:

‘அறம்பொருள் கண்டார்கண்’ என்பது அறநூல்கள் கூறும் அறநெறித்தன்மையும், பொருள்நூல் கூறும் பொருள்நெறிகளின் தன்மையும் ஆராய்ந்து அறிந்தவர்களைக் குறிக்கும். காம இச்சையினால் பிறனுடைய மனைவியை விரும்புபவனுக்கு பொருளின் நெறி அறியாததினால் பிறன் மனைவி பிறனுடைய பொருளென்பதும், அறநெறியை அறியாததினால் பிறனுடைய பொருளை அடைய விரும்புதல் தீவினையென்பதும் தெரியாத அறிவற்றவனாகிறான்.



குறள் 142

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.


சொல்லுரை:

அறன்கடை - அறத்தின் கடைசிப்பகுதியாகிய, மறுபகுதியாகிய

நின்றாருள் - பாவத்தில் நின்றவர்

எல்லாம் - எல்லார் உள்ளும்

பிறன்கடை - பிறர் மனைவியை விரும்பி அவன் வீட்டு வாசலில்

நின்றாரின் - நின்றாரைவிட

பேதையார் - அறிவற்றவர்

இல் - யாரும் இல்லை


பொருளுரை:

பிறர் மனைவியை விரும்பி அவன் வீட்டு வாசலில் நின்றாரைவிட அறத்தின் மறு பகுதியாகிய பாவத்தில் நின்றவர் அறிவற்றவர் இல்லை.


விளக்கவுரை:

கடை – கடைக்கோடி – கடைசிப்பகுதி. அறன்கடை என்பது அறத்திற்கு அப்பாற்பட்டு உள்ளதாகிய பாவம் என்பதாகும். பிறனுடைய மனைவியை விரும்புபவன் பாவங்களையே செய்து வாழ்பவனைவிட மிகவும் கொடிய பாவத்தைச் செய்பவனாக ஆகிறான். அவன் செய்யும் பாவத்திலிருந்து மீளும் வழியில்லையாதலால் அவன் செய்யும் செயல் அறிவற்ற செயல் எனப்பட்டது. பிறன்கடை நின்றார் என்பது பிச்சை எடுக்கும் நிலைபோன்று இழிவான தன்மை என்பதை உணர்த்துகிறது.



குறள் 143

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்
தீமை புரிந்தொழுகு வார்.

விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்து ஒழுகு வார்.


சொல்லுரை:

விளிந்தாரின் - செத்தவரைவிட

வேறுஅல்லர் - வேறாக மாட்டார்

மன்ற - ஐயமின்றி

தெளிந்தார் - தம்மை நல்லவரென்று நம்பியவரின்

இல் - மனையாளிடம்

தீமை - தீமைச்செயலை

புரிந்து - செய்து

ஒழுகு வார் - நடப்பவர்


பொருளுரை:

ஐயமின்றி தம்மை நல்லவரென்று நம்பியவரின் மனையாளிடம் தீமைச்செயலை செய்து நடப்பவர் செத்தவரைவிட வேறாக மாட்டார்.


விளக்கவுரை:

தம்மை நல்லவரென்று நம்பியவரின் மனைவியிடத்து தகாத முறையில் நடப்பவனுக்கு எவ்வித நற்குண பண்புகளும் இருத்தல் என்பதற்கு இடமில்லை ஆகையால் அவனை உயிருடன் இருந்தாலும் செத்த பிணமாகவே கருதப்படுவான். செத்த பிணம் மீண்டும் உயிர்பெற்று வருவதற்கு வழியில்லாதல் போல மேற்கூறப்பட்ட தகாத தீமைச்செயல்களில் இருந்து மீண்டு வருவதற்கு வழியே இல்லை. அதற்கான தீவினைப்பயனை அவன் அனுபவித்தே ஆகவேண்டும்.



குறள் 144

எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல்.


சொல்லுரை:

எனைத்துணையர் - எத்துணை பெருமையுடையவராய்

ஆயினும் - இருப்பினும்

என்னாம் - என்ன பயன் உண்டு

தினைத்துணையும் - சிறிய தினையளவு கூட

தேரான் - தன் குற்றத்தை எண்ணாமல்

பிறன்இல் - மாற்றானின் மனைவியிடத்தே

புகல் - (தவறான வழியில்) செல்லுதல்


பொருளுரை:

சிறிய தினையளவு கூட தன் குற்றத்தை எண்ணாமல் மாற்றானின் மனைவியிடத்தே தவறான வழியில் செல்லுபவன் எத்துணை பெருமையுடையவராய் இருப்பினும் என்ன பயன் உண்டு ?


விளக்கவுரை:

சமுதாயத்தில் எவ்வகைப்பட்ட பெருமைகளை உடையவனாய் ஒருவன் வாழ்ந்தாலும் பிறன்மனை நோக்கும் கொடுங்குற்றத்தை சிறிதளவுகூட சிந்திக்காமல் செய்பவனை கீழ்த்தரமானவனாகவே தூற்றப்படுவான். மற்ற எந்தவகைப் பெருமைகளும் அப்போது அவனுக்கு துணை நிற்காது. சமுதாயத்தில் அவன் மதிப்பிழந்து கயவனாகவே நடத்தப்படுவான்.



குறள் 145

எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

எளிதுஎன இல்இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.


சொல்லுரை:

எளிதுஎன - எளிமையான செயல் என் நினைத்து

இல் - மாற்றான் மனைவியிடம்

இறப்பான் - செல்லுகின்றவன்

எய்தும் - அடைவான்

எஞ்ஞான்றும் - எப்பொழுதும், எக்காலமும்

விளியாது - அழியாமல்

நிற்கும் - நிலைத்திருக்கும்

பழி - பழியை


பொருளுரை:

எளிமையான செயல் என் நினைத்து மாற்றான் மனைவியிடம் செல்லுகின்றவன் எக்காலமும் அழியாமல் நிலைத்திருக்கும் பழியை அடைவான்.


விளக்கவுரை:

பிறன் மனைவியை அடைவது எளிது என்று எண்ணி பின்விளைவு கருதாமல் செய்யும் தீய செயலால் அவன்மீதான பழியானது வாழ்நாளில் மட்டுமின்றி அவன் இவ்வுலகை விட்டு மறைந்த பின்னும் அழியாது நிலைத்திருக்கும். எக்காலத்துக்கும் அவன் தூற்றப்படுவான். இல்இறப்பான் என்பதற்கு அந்த இல்லத்தில் கொல்லப்பட்டு சாவான் என்றும் பொருள் கொள்ளப்படும்.



குறள் 146

பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்.


சொல்லுரை:

பகை - பகைமை

பாவம் - பாவம்

அச்சம் - அச்சம் அல்லது பயம்

பழிஎன - பழி என்ற

நான்கும் - நான்கு குற்றங்களும்

இகவாவாம் - ஒருபொழுதும் நீங்காதாம்

இல் - மாற்றான் மனைவியிடம்

இறப்பான் - செல்கின்றவன்

கண் - இடம்


பொருளுரை:

மாற்றான் மனைவியிடம் செல்கின்றவனிடம் பகைமை, பாவம், அச்சம் அல்லது பயம், பழி என்ற நான்கு குற்றங்களும் ஒருபொழுதும் நீங்காதாம்.


விளக்கவுரை:

சமூகத்தில் பிறன்மனை நோக்குபவனுக்குப் பகை உருவாவது இயல்பு. அந்தப் பகையானது இவனைக் கொன்று இவ்வுலகிலிருந்து அப்புறப்படுத்தவே துடிக்கும். இக்குற்றத்தைச் செய்பவனுக்கு பாவம் சேர்கிறது. குற்றத்தைப் புரிந்ததினால் தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுத்துவார்களோ, கொலை செய்துவிடுவார்களோ என்ற அச்சம் உண்டாகிறது. பிறன்மனை நோக்கியவன் என்ற பழிச்சொல்லால் இவ்வுலகில் தன் வாழும் காலத்தும், தான் இறந்த பின்பும் பலராலும் தூற்றப்படுவான்.



குறள் 147

அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலாள்
பெண்மை நயவா தவன்.


சொல்லுரை:

அறன்இயலான் - அறத்தின் இயல்புடன்

இல்வாழ்வான் - இல்லறத்தில் வாழ்பவன்

என்பான் - என்பவன்

பிறன்இயலாள் - பிறனுக்கு உரிமையுள்ள மனைவியின்

பெண்மை - பெண் தன்மையை

நயவா தவன் - விரும்பாதவனே ஆவான்


பொருளுரை:

அறத்தின் இயல்புடன் இல்லறத்தில் வாழ்பவன் என்பவன் பிறனுக்கு உரிமையுள்ள மனைவியின் பெண் தன்மையை விரும்பாதவனே ஆவான்.


விளக்கவுரை:

பிறன்மனை நோக்காதவனே இல்லற நெறியில் வாழ்பவனாகக் கருதப்படுகிறான். அக்குற்றத்தைச் செய்பவன் இல்லற வாழ்க்கை நடத்த தகுதியற்றவனாக கருதப்படுகிறான். அதனால் அவன் இவ்வுலக வாழ்வில் வாழத் தகுதியற்றவனாகி தனிமைப்படுத்தப்படுவான். இக்குற்றம் புரிவதினால் உண்டாகும் பகையின் காரணமாக கொலையும் செய்யப்படுவான்.



குறள் 148

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு.


சொல்லுரை:

பிறன்மனை - பிறன் மனைவியை

நோக்காத - தீய நோக்கால் காணாத

பேராண்மை - சிறந்த ஆண்மை

சான்றோர்க்கு - சான்றோர்க்கு

அறன்ஒன்றோ - அறம் ஒன்று மட்டுமா

ஆன்ற - நிறைந்த

ஒழுக்கு - ஒழுக்கமும் ஆகும்.


பொருளுரை:

பிறன் மனைவியை தீய நோக்கால் காணாத சிறந்த ஆண்மை சான்றோர்க்கு அறம் ஒன்று மட்டுமா? இல்லை. நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.


விளக்கவுரை:

பிறன்மனை நோக்காத மன உறுதி கொண்டவன் பேராண்மை மிக்கவனாக போற்றப்படுகிறான். அது மட்டுமின்றி சான்றோனாக மதிக்கப்படுகிறான். பிறன்மனை நோக்காத தன்மை அறநெறிப் பண்பாக எண்ணப்படுகிறது. அது மட்டுமின்றி, சிறந்த ஒழுக்க நெறியாகவும் போற்றப்படுகிறது.



குறள் 149

நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற்
பிறர்க்குரியா டோடோயா தார்.

நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பில்
பிறர்க்குஉரியாள் தோள்தோயா தார்.


சொல்லுரை:

நலக்கு - நன்மைக்கு

உரியார் - உரியவர்

யார்எனின் - யார் என்றால்

நாமநீர் - அச்சம் தரும் கடலால் சூழப்பெற்ற

வைப்பில் - உலகில்

பிறர்க்கு - பிறருக்கு

உரியாள் - உரிமையான மனைவியின்

தோள் - தோள்களை

தோயாதார் - சேராதவரே ஆவர்.


பொருளுரை:

நன்மைக்கு உரியவர் யார் என்றால் அச்சம் தரும் கடலால் சூழப்பெற்ற உலகில் பிறருக்கு உரிமையான மனைவியின் தோள்களை சேராதவரே ஆவர்.


விளக்கவுரை:

நாமம் என்பது அச்சம். கடல் அச்சம் தருவது எதனால்? கடல் கொந்தளிப்பு, கடல்கோள் மூலம் நிலப்பரப்பு கடலில் மூழ்கிப்போதல் போன்றவைகளால். முதற்சங்கம் வளர்த்த தென்மதுரையும், இடைச்சங்கம் வளர்த்த கபாடபுரமும், சோழர்கள் ஆண்ட காவிரிப்பூம்பட்டினமும் கடலினுள் மூழ்கடிக்கப்பட்டதன் மூலம் கடலினால் தமிழர்கள் அடைந்த துயரத்தை உணரலாம். இவ்வகையான அச்சம் சூழ்ந்த இவ்வுலகில், அவ்வகை அச்சத்தினின்று காக்கப்பட்டு எல்லாவகையான நலத்திற்கும் உரியவர் பிறன் மனை நோக்காதவரே ஆவர்.



குறள் 150

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.


சொல்லுரை:

அறன் - அறத்தை

வரையான் - மேற்கொள்ளாதவனாய்

அல்ல - பாவங்களையே

செயினும் - செய்வான் ஆயினும்

பிறன் - பிறனுக்கு

வரையாள் - உரிமையானவளின்

பெண்மை - பெண் தன்மையை

நயவாமை - விரும்பாமல் இருத்தல்

நன்று - நல்லது


பொருளுரை:

அறத்தை மேற்கொள்ளாதவனாய் பாவங்களையே செய்வான் ஆயினும் பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாமல் இருத்தல் நல்லது.


விளக்கவுரை:

அறநெறியின் வரைமுறை அறியாது பாவங்களைச் செய்பவன் ஆயினும், பிறனுக்கு உரிமையான மனைவியின் பெண்மைத்தன்மையை விரும்புவது தவறு என்னும் நிலையைப் பின்பற்றி வாழ்வானாயின், அது அவனுக்கு நன்மையை விளைவிக்கும். இதன்மூலம், அறநெறி பின்பற்றி வாழும் இல்லற வாழ்வில் பிறன்மனை நோக்காமையே உயர்ந்த அறநெறியாக போற்றப்படுகிறது.



uline