இல்லறவியல்

14. ஒழுக்கமுடைமை

( நல்லொழுக்கம் உடையவராக விளங்குதல் )

131. ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
        முயிரினு மோம்பப் படும்.

132. பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
        தேரினு மஃதே துணை.

133. ஒழுக்கம் முடைமை குடிமை யிழுக்க
        மிழிந்த பிறப்பாய் விடும்.

134. மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
        பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

135. அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை
        யொழுக்க மிலான்க ணுயர்வு.

136. ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
        னேதம் படுபாக் கறிந்து.

137. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
        னெய்துவ ரெய்தாப் பழி.

138. நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
        மென்று மிடும்பை தரும்.

139. ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
        வழுக்கியும் வாயாற் சொலல்.

140. உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்
        கல்லா ரறிவிலா தார்.



குறள் 131

ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
முயிரினு மோம்பப் படும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.


சொல்லுரை:

ஒழுக்கம் - ஒருவன் நல்வழியில் நடத்தல் அல்லது ஒழுகுதல்

விழுப்பம் - சிறப்பு

தரலான் - தரவல்லது ஆதலால்

ஒழுக்கம் - அவ்வொழுக்கம்

உயிரினும் - உயிரினும் மேலானதாக போற்றி

ஓம்பப் படும் - பேணப்படும்


பொருளுரை:

ஒருவன் நல்வழியில் நடத்தல் அல்லது ஒழுகுதல் சிறப்பைத் தரவல்லது ஆதலால் அவ்வொழுக்கம் உயிரினும் மேலானதாகப் போற்றி பேணப்படும்.


விளக்கவுரை:

ஒருவனின் வாழ்விற்கு முக்கியமானதும் மேலானதும் ஆவது அவனின் உயிர் ஆகும். ஓருவனின் நன்னடத்தை அவனுக்கு மேலான சிறப்பைத் தரும். அந்தச் சிறப்பை உயிரினாலும் தரமுடியாது. ஆதலால் ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாக போற்றி பேணப்படவேண்டும். ஒருவன் வெறுமனே உயிர் வாழ்வதால் சிறப்பு ஏற்படாது. நல்லொழுக்க நெறியில் வாழ்வதன்மூலம் உண்டாகும் சிறப்பே அவன் வாழ்வதற்கு ஓர் அர்த்தத்தை உண்டாக்குவதால் அவ்வொழுக்கம் உயிரினும் மேலானதாகப் போற்றப்படவேண்டும்.



குறள் 132

பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினு மஃதே துணை.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.


சொல்லுரை:

பரிந்துஓம்பி - வருந்தியும் பேணி

காக்க - காக்கவேண்டும்

ஒழுக்கம் - ஒழுக்கத்தை

தெரிந்துஓம்பி - ஆராயவேண்டியவற்றை ஆராய்ந்து போற்றி

தேரினும் - தேர்ந்தெடுத்துப் பார்த்தாலும்

அஃதே - அவ்வொழுக்கமே

துணை - துணையாய் அமையும்


பொருளுரை:

ஒழுக்கத்தை வருந்தியும் பேணிக்காக்கவேண்டும். ஆராயவேண்டியவற்றை ஆராய்ந்து போற்றி தேர்ந்தெடுத்துப் பார்த்தாலும் அவ்வொழுக்கமே துணையாய் அமையும்.


விளக்கவுரை:

ஒருவன் தனக்கு சிறந்த துணையாய் அமையும் என்று நோக்குங்கால் ஆராயப்படவேண்டிய எல்லாவற்றையும் ஆராய்ந்து தெளிந்து, அவற்றுள் போற்றப்பட வேண்டியவற்றை தேர்ந்தெடுத்துப் பார்த்தாலும் அவனின் நல்லொழுக்க நன்னடத்தையே துணையாக அமையும்.



குறள் 133

ஒழுக்கம் முடைமை குடிமை யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.


சொல்லுரை:

ஒழுக்கம் - ஒழுக்கத்தை

உடைமை - உடைமையாகக் கொள்வதே

குடிமை - குடிப் பெருமையாகும்

இழுக்கம் - ஒழுக்கக் கேடு

இழிந்த - தாழ்மையான நிலையுடைய

பிறப்பாய் - பிறப்பாக

விடும் - அமைந்துவிடும்


பொருளுரை:

ஒழுக்கத்தை உடைமையாகக் கொள்வதே குடிப் பெருமையாகும். ஒழுக்கக் கேடு தாழ்மையான நிலையுடைய பிறப்பாக அமைந்துவிடும்.


விளக்கவுரை:

ஒருவரின் குடிக்கு சிறப்பு அல்லது பெருமை அவரின் நல்லொழுக்க நெறியினாலே உண்டாவது. நல்லொழுக்கம் பேணிக் காக்கப்படவில்லை எனில் இழிநிலை அல்லது தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுகிறார். ஒருவருக்கு உயர்குடித்தன்மை அவரின் பிறப்பால் வருவதன்று; அவரின் நல்லொழுக்க நெறியால் வருவது ஆகும்.



குறள் 134

மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.


சொல்லுரை:

மறப்பினும் - மறந்து போனாலும் (மீண்டும்)

ஓத்துக் - வேதத்தை ஓதி

கொளல்ஆகும் - கொள்ளமுடியும்

பார்ப்பான் - பார்ப்பான்

பிறப்பொழுக்கம் - உயர்குடித்தன்மை ஒழுக்கத்தில்

குன்றக் - குன்றினால்

கெடும் - அழிந்து போகும்.


பொருளுரை:

மறந்து போனாலும் மீண்டும் வேதத்தை ஓதிக் கொள்ளமுடியும். பார்ப்பான் உயர்குடித்தன்மை ஒழுக்கத்தில் குன்றினால் அழிந்து போகும்.


விளக்கவுரை:

மறை அல்லது வேதம் என்பது எழுதாக் கிளவி. அதாவது வேதத்தை யாரும் எழுதி வைப்பதில்லை. அதை கற்றறிந்தோர் ஒருவர் கூற மற்றவர் அவரைப் பின்பற்றி அவர் கூறியவாறே கூறி மனப்பாடம் செய்வர். ஒருவர் கூறுவதை ஒத்து மற்றவர் கூறுவதால் வேதம் கற்கும் முறையை ஓத்து என்பர். மங்கல வாத்திய வாசிப்பிலும் மற்றவர்கள் வாசிப்பதை ஒத்து ஒருவர் வாசிப்பதால் ‘ஒத்து ஊதுதல்’ என்பர். பார்ப்பான் தான் கற்ற மறையினை மறந்துபோனாலும் மீண்டும் ஓதிக்கொள்ளுதல் முடியும். அதனால் அவன் குடிப்பெருமை கெட்டுவிடாது. ஆனால் அவன் நல்லொழுக்க நெறியில் இருந்து விலகுவானேல் அவன் குடிப்பெருமை கெடும் என்பதாம்.



குறள் 135

அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை
யொழுக்க மிலான்க ணுயர்வு.

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.


சொல்லுரை:

அழுக்காறு - பொறாமை

உடையான்கண் - உடையவனிடம்

ஆக்கம்போன்று - செல்வம் நிலைத்து நில்லாததுபோன்று

இல்லை - இல்லாததாகும்

ஒழுக்கம் - நல்லொழுக்கம்

இலான்கண் - இல்லாதவனிடம்

உயர்வு - உயர்வு


பொருளுரை:

பொறாமை உடையவனிடம் செல்வம் நிலைத்து நில்லாததுபோன்று நல்லொழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இல்லாததாகும்.


விளக்கவுரை:

பொறாமை உடையவரிடம் செல்வம் நிலைத்து நிற்பதில்லை. அதுபோல, ஒழுக்கம் இல்லாதவனிடத்து உயர்வு இல்லை. ஒருவன் நல்லொழுக்கத்தின் மூலமே உயர்வு நிலையை அடைய முடியும் என்பது வள்ளுவன் வாக்கு.



குறள் 136

ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுபாக் கறிந்து.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.


சொல்லுரை:

ஒழுக்கத்தின் - ஒழுக்கத்தினின்று

ஒல்கார் - தவறமாட்டார்கள், தளரார்

உரவோர் - மனவலிமை உடையோர்

இழுக்கத்தின் - ஒழுக்கம் தவறுதலால்

ஏதம் - தீயவை, துன்பம்

படுபாக்கு - உண்டாவதை

அறிந்து - உணர்ந்து


பொருளுரை:

ஒழுக்கம் தவறுதலால் தீயவை, துன்பம் உண்டாவதை உணர்ந்து ஒழுக்கத்தினின்று தவறமாட்டார்கள் மனவலிமை உடையோர்.


விளக்கவுரை:

ஒழுக்கம் தவறாமல் நடப்பதற்கு மனவலிமை இன்றியமையாதது. ஒருவனுக்கு அறிவுத்திறன் இருப்பினும் மனவலிமையே அவனை ஒழுக்க நெறியில் இருந்து எந்தவித இடர்ப்பாட்டிலும் தளராமல் பின்பற்றிச் செல்ல வைக்கும்.



குறள் 137

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.


சொல்லுரை:

ஒழுக்கத்தின் - நல்லொழுக்கத்தினால்

எய்துவர் - அடைவர்

மேன்மை - மேன்மையை, உயர்வை

இழுக்கத்தின் - தீயொழுக்கத்தினால்

எய்துவர் - அடைவர்

எய்தாப் - தாம் அடைவதற்கு உரியது அல்லாத

பழி - பழியை


பொருளுரை:

நல்லொழுக்கத்தினால் மேன்மையை அடைவர். தீயொழுக்கத்தினால் தாம் அடைவதற்கு உரியது அல்லாத பழியை அடைவர்.


விளக்கவுரை:

ஒழுக்கம் தவறி ஒருவன் குற்றமிழைத்தால் அச்சமயங்களில் தான் செய்யாத குற்றத்திற்கும் பழி சுமத்தப்படுவர். அதனையே வள்ளுவர் ‘எய்தாப் பழி’ என்கிறார்.



குறள் 138

நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.


சொல்லுரை:

நன்றிக்கு - நன்மைக்கு

வித்தாகும் - விதையாவது

நல்லொழுக்கம் - நல்லொழுக்கம் ஆகும்

தீயொழுக்கம் - தீய ஒழுக்கமானது

என்றும் - எந்தக் காலத்திலும்

இடும்பை - பெருந்துன்பத்தையே

தரும் - தரும்


பொருளுரை:

நன்மைக்கு விதையாவது நல்லொழுக்கம் ஆகும். தீய ஒழுக்கமானது எந்தக் காலத்திலும் பெருந்துன்பத்தையே தரும்.


விளக்கவுரை:

நல்லொழுக்க நெறியில் நடப்பவர்க்கு அது உடனே நன்மையைத் தராவிட்டாலும், பின்னால் ஏற்படும் நன்மைகளுக்கு வித்தாக அமையும். தீயொழுக்க நெறியில் செல்பவனுக்கு, அது துன்பத்தை உடனே விளைவிப்பது மட்டுமின்றி, எக்காலத்திலும் அது பெருந்துன்பத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்.



குறள் 139

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.


சொல்லுரை:

ஒழுக்கம் - நல்லொழுக்கம்

உடையவர்க்கு - உடையவர்க்கு

ஒல்லாவே - இயலாதது, பொருந்தாதது

தீய - தீயனவற்றை

வழுக்கியும் - மறந்தும், தவறுதலாகவும்

வாயாற் - தன் வாயினால்

சொலல் - சொல்லுதல்


பொருளுரை:

நல்லொழுக்கம் உடையவர்க்கு இயலாதது யாதெனில் தீயனவற்றை மறந்தும் தன் வாயினால் சொல்லுதல் ஆகும்.


விளக்கவுரை:

ஒழுக்க நெறியில் வாழ்பவர்கள் மறந்த நிலையிலும், மயக்க நிலையிலும் கூட தீயன விளைவிக்கும் சொற்களை தன் வாயினால் சொல்லமாட்டார்கள் என்பது பொருள்.



குறள் 140

உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.


சொல்லுரை:

உலகத்தோடு - உலக மக்களொடு

ஒட்ட - சேர்ந்து, பொருந்தி

ஒழுகல் - வாழ்தல், நடத்தல்

பலகற்றும் - பல நூல்களை கற்றிருந்தாலும்

கல்லார் - கல்லாதவரே

அறிவிலாதார் - அறிவு அற்றவர்களாவர்


பொருளுரை:

உலக மக்களொடு பொருந்தி வாழ்தலை அறியாதவர்கள் பல நூல்களை கற்றிருந்தாலும் கல்லாதவரே ஆவர். மற்றும் அவர்கள் அறிவு அற்றவர்கள் ஆவர்.


விளக்கவுரை:

கல்வி கற்பதினால் அறிவு வளரும். அறிவு வளர்ச்சியினால் மனம் தெளிவுறும். மனத்தெளிவினால் மனவலிமை உண்டாகும். மனவலிமை ஒழுக்க நெறியில் இருந்து தவறாமல் நடக்க துணைபுரியும். உலத்தோடு ஒட்ட ஒழுகல் என்பது உலகில் உள்ள உயர்ந்தோர் பலரும் ஒழுகிய வழியில் நடத்தலாகும். அந்த வழிமுறைகளை கற்றல் என்பது சான்றோர் வழிமுறைகளை ஒழுகிப் பண்படுதல். கல்வியின் பயன் அறிவு. அறிவின் பயன் ஒழுக்கம். ஒழுக்க நெறியில் நில்லாதவர் பல நூல்களைக் கற்றிருந்தும், அதனால் அறிவு பெற்றிருந்தும் இறுதிப் பயனாகிய ஒழுக்கத்தை அடையாமையால் அவர் கல்லாதவரே, அறிவற்றவரே.



uline