இல்லறவியல்

13. அடக்கமுடைமை

( அடக்கத்துடன் வாழ்தல் )

121. அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
        யாரிரு ளுய்த்து விடும்.

122. காக்க பொருளா வடக்கத்தை யாக்க
        மதனினூங் கில்லை யுயிர்க்கு.

123. செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்
        தாற்றி னடங்கப் பெறின்.

124. நிலையிற் திரியா தடங்கியான் றோற்ற
        மலையினு மாணப் பெரிது.

125. எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
        செல்வர்க்கே செல்வந் தகைத்து.

126. ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
        னெழுமையு மேமாப் புடைத்து.

127. யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
        சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

128. ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய ணுண்டாயி
        னன்றாகா தாகி விடும்.

129. தீயினாற் சுட்டபு ணுள்ளாறு மாறாதே
        நாவினாற் சுட்ட வடு.

130. கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
        யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.



குறள் 121

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.


சொல்லுரை:

அடக்கம் - அடங்கி நடக்கும் நற்பண்பானது

அமரருள் - (தேவர்) அமரர் உலகத்துள்

உய்க்கும் - கொண்டுபோய்ச் சேர்க்கும்

அடங்காமை - அடக்கமற்ற தன்மையானது

ஆர்இருள் - நிறைந்த இருட்டாகிய நரகத்தில்

உய்த்து - கொண்டுபோய்

விடும் - விட்டுவிடும்.


பொருளுரை:

அடங்கி நடக்கும் நற்பண்பானது தேவர் உலகத்துள் கொண்டுபோய்ச் சேர்க்கும். அடக்கமற்ற தன்மையானது நிறைந்த இருட்டாகிய நரகத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.


விளக்கவுரை:

அடக்கக் குணம் ஒருவனுக்கு சிந்திக்கும் திறனை உருவாக்குகிறது. அதற்கான காலத்தை அது வழங்குகிறது. அந்த சிந்திக்கும் திறன், அவனை நல்வழியில் நடத்திச் செல்ல உதவுகிறது. அதுவே, அவனை தேவர் உலகத்துள் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. அடங்காமை என்னும் குணத்தால் சிந்திக்கும் திறனிழந்து தீயவழியில் தள்ளப்பட்டு இருள் நிறைந்த நரகத்தை அடைகிறான்.



குறள் 122

காக்க பொருளா வடக்கத்தை யாக்க
மதனினூங் கில்லை யுயிர்க்கு.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங்கு இல்லை உயிர்க்கு.


சொல்லுரை:

காக்க - காப்பாற்றுக

பொருளா - சிறந்த பொருளாக, உறுதிப் பொருளாக

அடக்கத்தை - அடக்கம் என்ற நற்பண்பை

ஆக்கம் - செல்வம், உயர்வு

அதனினூஉங்கு - அதைவிட சிறந்தது

இல்லை - இல்லை

உயிர்க்கு - மக்களுக்கு


பொருளுரை:

அடக்கம் என்ற நற்பண்பை சிறந்த பொருளாக, உறுதிப் பொருளாக காப்பாற்றுக. மக்களுக்கு செல்வம் அதைவிட சிறந்தது இல்லை.


விளக்கவுரை:

ஒருவனுக்கு சிறந்த செல்வமாக அமைவது அடக்கம் என்ற நற்குணமே. அதுவே அவனை நல்லறத்தில் நடத்திச் செல்வதால், அடக்கத்தை சிறந்த செல்வமாகக் கருதி போற்றிப் பாதுகாக்கவேண்டும்.



குறள் 123

செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின்.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.


சொல்லுரை:

செறிவறிந்து - அடக்கத்தின் மிகுதி அறியப்பட்டு

சீர்மை - சிறப்பு

பயக்கும் - தரும்

அறிவறிந்து - அறியவேண்டியவற்றை அறிந்து

ஆற்றின் - நல்வழியில்

அடங்கப் - அடங்கி நடக்கும் தன்மையை

பெறின் - பெற்றால்


பொருளுரை:

அறியவேண்டியவற்றை அறிந்து நல்வழியில் அடங்கி நடக்கும் தன்மையைப் பெற்றால் அடக்கத்தின் மிகுதி அறியப்பட்டு சிறப்பு தரும்.


விளக்கவுரை:

ஒருவன் அறியவேண்டியவற்றை அறிந்து அதன்படி நல்வழியில் நடந்துகொள்ளவேண்டும். அவ்வாறு, எல்லாவற்றையும் அறிந்திருந்தாலும் அடக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டும். ஒருவன் அறிவை வளர்த்துக்கொள்வதுடன் அடக்கத்துடன் நடந்துகொள்ள பழகுதல் வேண்டும். இவ்விரண்டும் சேர்ந்த மிகுதித்தன்மையே, செறிவே சிறப்பு உண்டாக்கும்.



குறள் 124

நிலையிற் திரியா தடங்கியான் றோற்ற
மலையினு மாணப் பெரிது.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.


சொல்லுரை:

நிலையின் - தனக்குரிய நெறிகளில் இருந்து

திரியாது - மாறுபடாமல்

அடங்கியான் - அடங்கி வாழ்பவனின்

தோற்றம் - உயர்வு, புகழ்

மலையினும் - மலையைக் காட்டிலும்

மாணப் - மிகவும்

பெரிது - பெரியதாகும்


பொருளுரை:

தனக்குரிய நெறிகளில் இருந்து மாறுபடாமல் அடங்கி வாழ்பவனின் உயர்வானது மலையைக் காட்டிலும் மிகவும் பெரியதாகும்.


விளக்கவுரை:

பிறரிடம் பணிவுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மனிதன் தனக்கு வகுக்கப்பட்ட கொள்கைகளை விட்டுவிடக்கூடாது. தன் நெறிகளில் இருந்து எந்த சூழ்நிலையிலும் மாறுபடாமல், அதே நேரம் அடக்கத்துடன் நடந்து கொள்பவனின் உயர்வானது மலையைவிட மிகவும் உயர்ந்ததாகும்.



குறள் 125

எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.


சொல்லுரை:

எல்லார்க்கும் - எல்லாருக்கும்

நன்றாம் - நல்லதாம், நன்மை பயப்பதாம்

பணிதல் - பணிவுடன் வாழ்தல், அடக்கததுடன் வாழ்தல்

அவர்உள்ளும் - அந்த எல்லோருக்குள்ளும்

செல்வர்க்கே - செல்வம் உடையவருக்கே

செல்வம் - சிறந்த செல்வமாக

தகைத்து - பெருமையுடைத்து


பொருளுரை:

அடக்கததுடன் வாழ்தல் எல்லாருக்கும் நன்மை பயப்பதாம். அந்த எல்லோருக்குள்ளும் செல்வம் உடையவருக்கே சிறந்த செல்வமாக பெருமையுடைத்து.


விளக்கவுரை:

ஒருவன் செல்வந்தனாக ஆகும்போது அடங்காமை என்னும் தீய குணம் எட்டிப்பார்ப்பது இயல்பு. அது அவனுடைய செல்வத்தையெல்லாம் அழிக்கும் தன்மையுடையது. அடக்கம் என்னும் நற்பண்பை பெற்றிருப்பானாயின் அது அவனின் செல்வம் அனைத்தையும் அவனிடமிருந்து அகலாது காக்கும் சிறப்புடைய செல்வமாகத் திகழும்.



குறள் 126

ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.


சொல்லுரை:

ஒருமையுள் - ஒரு பிறவியில்

ஆமைபோல் - ஆமையைப்போல்

ஐந்தடக்கல் - ஐம்பொறிகளையும் அடக்கி

ஆற்றின் - நடந்தால்

எழுமையும் - அடுத்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும்

ஏமாப்பு - பாதுகாப்பு

உடைத்து - போன்றது


பொருளுரை:

ஆமையைப்போல் ஒரு பிறவியில் ஐம்பொறிகளையும் அடக்கி நடந்தால் அடுத்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும் பாதுகாப்பு போன்றது.


விளக்கவுரை:

ஆமை தனக்கு துன்பம் வருங்கால் தனது பொறிகளாகிய நான்கு கால்களையும் ஒரு தலையையும் ஆக ஐந்து பொறிகளையும் தனது ஓட்டினுள் அடக்கி ஒடுங்கிக்கொள்ளும். அதனால் தனக்கு ஊறு விளைவிக்கும் பிற உயிர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும். அந்த ஆமையைப்போல, ஒருவன் தன் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அடக்கி ஆளும்பொழுது அவன் நல்வழியில் நடந்துகொள்ளும் தன்மை உயருகிறது. நல்வினை, தீவினைப் பயன்களே ஒருவனின் அடுத்தடுத்து வரும் பிறவிகளுக்கு தொடர்கிறது. அதனால் ஐம்பொறிகளை அடக்கி, நல்வினை ஆற்றுவானாயின் அதுவே அடுத்தடுத்து வரும் பிறவியில் பாதுகாப்பு தருவதாக அமையும்.



குறள் 127

யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.


சொல்லுரை:

யாகாவார் - ஒருவர் எவற்றையும் காப்பாற்றதவராக

ஆயினும் - இருப்பினும்

நாகாக்க - நாவினை அடக்கி ஆள்க

காவாக்கால் - அங்ஙனம் அடக்காவிட்டால்

சோகாப்பர் - வருந்துவர், துன்பப்படுவர்

சொல்இழுக்குப் - சொல்லில் குற்றம்

பட்டு - ஏற்பட்டு


பொருளுரை:

ஒருவர் எவற்றையும் காப்பாற்றதவராக இருப்பினும் நாவினை அடக்கி ஆள்க. அங்ஙனம் அடக்காவிட்டால் சொல்லில் குற்றம் ஏற்பட்டு துன்பப்படுவர்.


விளக்கவுரை:

ஐம்பொறிகளையும் அடக்கி ஆள்வதில் முக்கியமானது நாவடக்கம். ஒருவருக்கு நாவடக்கம் இல்லையெனில் சொற்குற்றம் ஏற்பட்டு பேரிழப்பை ஏற்படுத்திவிடும். சொற்குற்றத்தினால் ஏற்படும் தீங்கைக் களைவது என்பது மிகவும் கடினமான செயலாகும்.



குறள் 128

ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய ணுண்டாயி
னன்றாகா தாகி விடும்.

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.


சொல்லுரை:

ஒன்றானும் - சொல்லுவது ஒரு சொல்லாயினும்

தீச்சொல் - தீமை பயக்கும் சொல்லாகி

பொருட்பயன் - தீவினைப் பொருட்பயன்

உண்டாயின் - ஏற்படுமானால்

நன்றாகாது - இதுவரை செய்துவந்த நன்மையும் நன்மையற்றதாக

ஆகிவிடும் - ஆகிவிடும்


பொருளுரை:

சொல்லுவது ஒரு சொல்லாயினும் தீமை பயக்கும் சொல்லாகி தீவினைப் பொருட்பயன் ஏற்படுமானால் இதுவரை செய்துவந்த நன்மையும் நன்மையற்றதாக ஆகிவிடும்.


விளக்கவுரை:

ஒருவன் பேசும் சொற்களில் மறைமுகமாகவுங்கூட ஏதாவது ஒரு சொல் தீமை பயக்கும் பொருட்பயனை உண்டாக்குமானால் அவன் இதுவரை செய்துவந்த பிற அறங்கள் யாவும் பயன்படாமல் போகும்.



குறள் 129

தீயினாற் சுட்டபு ணுள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.


சொல்லுரை:

தீயினால் - நெருப்பினால்

சுட்டபுண் - சுடப்பட்டு ஏற்பட்ட புண்ணின் வடு உடம்பிலிருந்தாலும்

உள்ஆறும் - மனதில் ஏற்பட்ட துன்பம் ஆறிவிடும்

ஆறாதே - ஆறாது

நாவினால் - தீய சொற்களால்

சுட்ட - சுடப்பட்டதால்

வடு - மனத்தில் உண்டான வடு


பொருளுரை:

நெருப்பினால் சுடப்பட்டு ஏற்பட்ட புண்ணின் வடு உடம்பிலிருந்தாலும் மனதில் ஏற்பட்ட துன்பம் ஆறிவிடும். தீய சொற்களால் சுடப்பட்டதால் மனத்தில் உண்டான வடு ஆறாது.


விளக்கவுரை:

உடம்பில் ஏற்படும் தீப்புண்கள் நாளடைவில் ஆறிவிடும். தீப்புண்ணினால் ஏற்பட்ட வலியும் மனதிலிருந்து மறைந்துபோகும். ஆனால், நாவடக்கமின்மையால் பேசப்படும் தீய சொற்கள் ஒருவருடைய மனத்தில் மாறாத வடுவினை ஏற்படுத்திவிடும். அது மனத்திலிருந்து என்றும் நீங்குவதில்லை என்பதால் அதனை “வடு” என்றார்.



குறள் 130

கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.


சொல்லுரை:

கதங்காத்து - கோபம் வராமல் காத்து

கற்றுஅடங்கல் - கல்வி கற்று அடங்கி நடப்பதில்

ஆற்றுவான் - (வல்லமை) ஆற்றல் உடையவனாயின்

செவ்வி - தக்க சமயத்தில்

அறம்பார்க்கும் - அறக்கடவுள் எதிர்பார்த்திருக்கும்

ஆற்றின் - அவன் செல்லும் வழியிலே

நுழைந்து - சென்று சேர நுழைந்து


பொருளுரை:

ஒருவன் கோபம் வராமல் காத்து கல்வி கற்று அடங்கி நடப்பதில் ஆற்றல் உடையவனாயின் தக்க சமயத்தில் அவன் செல்லும் வழியிலே சென்று சேர நுழைந்து அறக்கடவுள் எதிர்பார்த்திருக்கும்.


விளக்கவுரை:

சினம் வராமல் காத்து கல்வி கற்று அடங்கி நடக்கும் ஆற்றல் பெற்றவனின் மனநிலையை செவ்விய மனநிலை என்றார். செவ்விய மனநிலையானது ஒருவரைக் கண்டு உரையாடுதலுக்கு ஏற்ற மனநிலையாகும். அறக்கடவுளே அத்தகைய சமயத்திற்கு காத்திருந்து அடக்கமுடையவனை சென்றுசேர நினைப்பானாயின் அடக்கமுடையவனின் பெருமை இங்கு கூறப்பட்டது.



uline