இல்லறவியல்

12. நடுவு நிலைமை

( நேர்மையோடு நடந்துகொள்ளுதல் )

111. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
        பாற்பட் டொழுகப் பெறின்.

112. செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
        யெச்சத்திற் கேமாப் புடைத்து

113. நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
        யன்றே யொழிய விடல்.

114. தக்கார் தகவில ரென்ப தவரவ
        ரெச்சத்தாற் காணப் படும்.

115. கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
        கோடாமை சான்றோர்க் கணி.

116. கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
        நடுவொரீஇ யல்ல செயின்.

117. கெடுவாக வையா துலக நடுவாக
        நன்றிக்கட் டங்கியான் றாழ்வு.

118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால்
        கோடாமை சான்றோர்க் கணி.

119. சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
        வுட்கோட்ட மின்மை பெறின்.

120. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
        பிறவுந் தமபோற் செயின்.



குறள் 111

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.

தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.


சொல்லுரை:

தகுதி - நடுவுநிலைமை

எனஒன்று - என்று சொல்லப்படுகின்ற ஒன்று

நன்றே - நல்லதாகும்

பகுதியால் - பகைவர், நண்பர், அயலார், தெரிந்தவர் என்று பகுப்பினால்

பாற்பட்டு - அவர்களின் நிலையின்பால் நின்று

ஒழுகப் - நடந்து

பெறின் - கொள்வோமானால்


பொருளுரை:

பகைவர், நண்பர், அயலார், தெரிந்தவர் என்று பகுப்பினால் அவர்களின் நிலையின்பால் நின்று நடந்து கொள்வோமானால் அப்பொழுதே நடுவுநிலைமை என்று சொல்லப்படுகின்ற ஒன்று நல்லதாகும்.


விளக்கவுரை:

நடுவுநிலையில் இருந்து ஆராய்ந்து நல்லதை எடுத்துக்கூறும் நிலையில் உள்ளோர் சமூகத்தில் இருக்கும் பகைவர், நண்பர், உற்றார், அயலார், தெரிந்தவர் என்று பகுக்கப்பட்ட வேறுவேறு நிலையுள்ளவர்களின் நிலையில் தானும் இருந்து அறநெறியில் நடந்துகொள்வார்களேயானால் அப்பொழுதே நடுவுநிலைமை என்று சொல்லப்படும் அறம் நன்றானதாகும்.



குறள் 112

செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து.

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.


சொல்லுரை:

செப்பம் - நடுவுநிலைமை, நேர்மை

உடையவன் - உடையவன்

ஆக்கம் - செல்வம்

சிதைவின்றி - அழிந்து போகாமல்

எச்சத்திற்கு - அவன் சந்ததிக்கு

ஏமாப்பு - உறுதுணை, பாதுகாப்பு

உடைத்து - உடையதாகும்


பொருளுரை:

நடுவுநிலைமை உடையவன் செல்வம் அழிந்து போகாமல் அவன் சந்ததிக்கு பாதுகாப்பு உடையதாகும்.


விளக்கவுரை:

நடுவுநிலைமையோடு நேர்மையான வழியில் ஈட்டப்படும் செல்வமே ஒருவனின் பரம்பரைக்கு உறுதுணையாக இருக்கும். செல்வம் என்பது பணம், பொருள், புகழ் என்று அனைத்தையும் அடக்கியது.



குறள் 113

நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
யன்றே யொழிய விடல்.

நன்றே தரினும் நடுவுஇகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.


சொல்லுரை:

நன்றே - நன்மையே

தரினும் - தருவதாயினும்

நடுவுஇகந்தாம் - நடுவுநிலைமை தவறுவதால் உண்டாகும்

ஆக்கத்தை - செல்வத்தை

அன்றே - அப்பொழுதே

ஒழிய - நீங்கும்படி

விடல் - விடவேண்டும்


பொருளுரை:

நன்மையே தருவதாயினும் நடுவுநிலைமை தவறுவதால் உண்டாகும் செல்வத்தை அப்பொழுதே நீங்கும்படி விடவேண்டும்.


விளக்கவுரை:

தகுதியற்ற வழியில் சேர்க்கப்படும் செல்வம் நன்மையைத் தராது. அவ்வாறு தருவதாயினும் அது ஒருவன் கொள்ளத்தக்கது அல்ல. ஏனெனில், அது பிற்காலத்தில் தனக்கும், தனது சந்ததிக்கும் தீமையைத் தரும் என்பதால்.



குறள் 114

தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.


சொல்லுரை:

தக்கார் - நடுவு நிலைமை உடையவர்

தகவிலர் - நடுவுநிலைமை அற்றவர்

என்பது - என்னும் நிலை

அவரவர் - அவரவர்களின்

எச்சத்தால் - எஞ்சி நிற்கும் புகழால்

காணப்படும் - கண்டறியப்படும்


பொருளுரை:

ஒருவர் நடுவு நிலைமை உடையவர் அல்லதுய நடுவுநிலைமை அற்றவர் என்னும் நிலை அவரவர்களின் எஞ்சி நிற்கும் புகழால் கண்டறியப்படும்.


விளக்கவுரை:

ஒருவர் நடுநிலையானவர், நடுநிலையற்றவர் என்பது அவர்களின் எஞ்சி நிற்கும் புகழ், பழியால் அறியப்படும். ‘எச்சத்தால்’ என்பதற்கு அவரவர் பெற்ற மக்களின் தன்மையால் அறியப்படும் என்பாரும் உளர்.



குறள் 115

கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

கேடும் பெருக்கமும் இல்அல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.


சொல்லுரை:

கேடும் - தீவினையால் வரும் கேடும், வறுமையும், துன்பமும்

பெருக்கமும் - நல்வினையால் வரும் உயர்நிலையும், செல்வமும்

இல்அல்ல - இல்லாதவையல்ல. அது இயற்கையே

நெஞ்சத்து - உள்ளத்தில்

கோடாமை - நடுவுநிலைமை தவறாமை

சான்றோர்க்கு - அறிவிற் சிறந்தோர்க்கு

அணி - அழகு


பொருளுரை:

தீவினையால் வரும் கேடும், வறுமையும், துன்பமும் நல்வினையால் வரும் உயர்நிலையும், செல்வமும் இல்லாதவையல்ல. அது இயற்கையே. எந்நிலையிலும் உள்ளத்தில் நடுவுநிலைமை தவறாமை அறிவிற் சிறந்தோர்க்கு அழகு.


விளக்கவுரை:

ஊழ்வினைப் பயனால் ஒருவனுக்கு கெட்ட காலம் வருவதும், நல்ல காலம் வருவதும் இயல்பானதே. எவ்வகைப்பட்ட காலமாயினும், தான் எந்நிலையில் இருந்தாலும், தன்நெஞ்சம் நடுவுநிலை தவறாது நடத்தலே சான்றோர்க்கு அழகாகும்.



குறள் 116

கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின்.

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.


சொல்லுரை:

கெடுவல் - கெடப்போவது, துன்பப்படப்போவது

யான் - தான்

என்பது - என்பதை

அறிக - அறிந்துகொள்க

தன் நெஞ்சம் - தன்னுடைய நெஞ்சம்

நடுவொரீஇ - நடுவுநிலைமையிலிருந்து நீங்கி

அல்ல - தீயனவற்றை

செயின் - செய்யுமானால்


பொருளுரை:

ஒருவன் தன்னுடைய நெஞ்சம் நடுவு நிலைமையிலிருந்து நீங்கி தீயனவற்றை செய்யுமானால் அதனால் கெடப்போவது தான் என்பதை அறிந்துகொள்க.


விளக்கவுரை:

ஒருவன் தன்னுடைய நெஞ்சம் அறிய நடுவுநிலைமை நீங்கி தீயனவற்றைச் செய்தால், அத்தீமையால் கெடப்போவது பிறர் அல்ல, தானே என்பதை அறியவேண்டும்.



குறள் 117

கெடுவாக வையா துலக நடுவாக
நன்றிக்கட் டங்கியான் றாழ்வு.

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.


சொல்லுரை:

கெடுவாக - கெட்டுவிட்டதாக

வையாது - நினைக்காது, கருதாது

உலகம் - உலகம் (சான்றோரின் )

நடுவாக - நடுவுனிலைமையில் நின்று

நன்றிக்கண் - நல்வழியில், அறத்தின் வழியில்

தங்கியான் - வாழ்ந்தவனின்

தாழ்வு - வறுமை நிலையை, துன்பநிலையை


பொருளுரை:

நடுவுநிலைமையில் நின்று நல்வழியில் வாழ்ந்தவன் வறுமை நிலையை அடைந்தாலும் அவன் துன்பநிலையை கெட்டுவிட்டதாக எண்ணாது சான்றோரின் உலகம்.


விளக்கவுரை:

நடுவுநிலையில் நின்று அறவழியில் நிலைகொண்டவனின் வறுமை அவனுக்கு சோதனைக்காலமாகவே கருதப்படும். அவன் கெட்டுவிட்டதாக உலகத்திலுள்ள சான்றோர்கள் கருதமாட்டார்கள்.



குறள் 118

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.


சொல்லுரை:

சமன்செய்து - தன்னை சம அளவில் நிறுத்தி

சீர்தூக்கும் - தன்னில் வைக்கப்பட்ட பொருளின் அளவினை அளவிட்டுக்காட்டும்

கோல்போல் - துலாக்கோல்போல்

அமைந்து - நன்முறையில் நின்று

ஒருபால் - ஒரு பக்கமாக

கோடாமை - சார்ந்து விடாது இருத்தல்

சான்றோர்க்கு - அறிவிற் சிறந்த சான்றோர்க்கு

அணி - அழகாகும்.


பொருளுரை:

தன்னை சம அளவில் நிறுத்தி தன்னில் வைக்கப்பட்ட பொருளின் அளவினை அவிட்டுக்காட்டும் துலாக்கோல்போல் நன்முறையில் நின்று ஒரு பக்கமாக சார்ந்து விடாது இருத்தல் அறிவிற் சிறந்த சான்றோர்க்கு அழகாகும்.


விளக்கவுரை:

துலாக்கோல் முதலில் தன்னை சமநிலையில் நிறுத்திக்கொண்டு, பின்னர் தன்னில் வைக்கப்பட்ட பொருளைச் சரியாக அளவிட்டுக்காட்டும் தன்மையுடையது. அதுபோல, ஒருவர் தன்னை முதலில் சமநிலைப்படுத்திக்கொண்டு எந்த ஒரு பக்கமும் சார்பு நிலை காட்டாது உண்மை உரைத்தலே சான்றோர்க்கு அழகாகும்.



குறள் 119

சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
வுட்கோட்ட மின்மை பெறின்.

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.


சொல்லுரை:

சொல்கோட்டம் - சொல்லில் கோணுதல்

இல்லது - இல்லாதிருப்பது

செப்பம் - நடுவுநிலைமையோடு சொல்வதாகும்

ஒருதலையா - ஒரு பக்கமாக சார்ந்து

உள்கோட்டம் - மனதினுள் கோணுதல் எண்ணங்கள்

இன்மை - இல்லாதிருக்கப்

பெறின் - பெற்றிருந்தால்


பொருளுரை:

மனதினுள் கோணுதல் எண்ணங்கள் இல்லாதிருக்கப் பெற்று, சொல்லிலும் கோணுதல் இல்லாதிருந்து, ஒரு பக்கமாக சாராமல் பேசுதலே நடுவுநிலைமையோடு சொல்வதாகும்.


விளக்கவுரை:

நடுவுநிலையோடு இருத்தல் என்பது தான் சொல்லினால் கோணுதல் இல்லாதிருப்பதும், மனத்தில் எண்ணும் எண்ணத்தினால் கோணுதல் இல்லாதிருப்பதும் ஆகும். உள்ளத்தில் தோன்றும் எண்ணம் தூய்மையானதாக இருந்தால் மட்டுமே உள்ளத்திலிருந்து வெளிப்படும் சொற்களும் தூய்மையானதாய் நடுவுநிலைமையோடு இருக்கும் என்பதாம்.



குறள் 120

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.


சொல்லுரை:

வாணிகம் - வியாபாரம்

செய்வார்க்கு - நடத்துவோர்க்கு

வாணிகம் - வியாபாரம் நல்லதாகும்.

பேணிப் - வியாபாரத்தை நேசித்து

பிறவும் - பிறர் பொருளையும்

தமபோல் - தம் பொருள்போல் கருதி

செயின் - செய்தால்.


பொருளுரை:

வியாபாரத்தை நேசித்து பிறர் பொருளையும் தம் பொருள்போல் கருதி செய்தால் வியாபாரம் நடத்துவோர்க்கு வியாபாரம் நல்லதாகும்.


விளக்கவுரை:

வாணிகம் செய்வோர் பிறர் பொருளையும் தம்முடைய பொருளின் தன்மையைப் போல் கருதி வாணிகம் செய்தால் அது நல்ல வாணிகமாகும். அதுபோல நடுவுநிலைமை வகிப்பவனும் தாம் பிறருக்கு கூறும் நியாயத்தை தமக்குக் கூறப்படும் நியாயமாகக் கருதி ஏற்றத்தாழ்வில்லாமல் நேர்மையுடன் கூறவேண்டும்.



uline