இல்லறவியல்

19. புறங்கூறாமை

( காணாத இடத்தில் யாரையும் குறை கூறாமை )

181. அறங்கூறா னல்ல செயினு மொருவன்
        புறங்கூறா னென்ற லினிது.

182. அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
        புறனழீஇப் பொய்த்து நகை.

183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
        லறங்கூறு மாக்கந் தரும்.

184. கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
        முன்னின்று பின்நோக்காச் சொல்.

185. அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்
        புன்மையாற் காணப் படும்.

186. பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
        திறன்றெரிந்து கூறப் படும்.

187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
        நட்பாட றேற்றா தவர்.

188. துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா
        ரென்னைகொ லேதிலார் மாட்டு.

189. அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
        புன்சொ லுரைப்பான் பொறை.

190. ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற்
        றீதுண்டோ மன்னு முயிர்க்கு.



குறள் 181

அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது.

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.


சொல்லுரை:

அறங்கூறான் - அறவழியில் நடந்து நல்லனவற்றைக் கூறாமல்

அல்ல - பாவங்களை

செயினும் - செய்வானாயினும்

ஒருவன் - ஒருவன்

புறங்கூறான் - புறம் கூறமாட்டான்

என்றல் - என்று பெயரெடுத்தல்

இனிது - இனிதாகும்


பொருளுரை:

அறவழியில் நடந்து நல்லனவற்றைக் கூறாமல் பாவங்களை செய்வானாயினும் ஒருவன் புறம் கூறமாட்டான் என்று பெயரெடுத்தல் இனிதாகும்.


விளக்கவுரை:

அறங்கூறான் என்பது அறநெறி வழிகளை மற்றவர்களிடம் எடுத்துரைக்காது இருத்தல். புறங்கூறான் என்பது எவ்வகை மனநிலையிலும் பிறரைப்பற்றி மற்றவர்களிடம் தீதாக எதையும் கூறாதிருத்தல். இவ்விரண்டுமே, ஒருவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் கூறுகின்ற சொல்லின் தன்மையை எடுத்துரைக்கிறது.
ஒருவன் அறங்கூறானாயினும் அவனுக்கு பழி வராது. ஆனால் புறங்கூறுவானாயின் மிகப்பெரிய பழி வந்து சேரும். அதனால் புறங்கூறாதவன் என்று பெயரெடுத்தல் அறங்கூறுவதைக் காட்டிலும் மிகவும் நல்லதாகும்.



குறள் 182

அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.


சொல்லுரை:

அறனழீஇ - அறநெறிச் செயல்களை அழித்து

அல்லவை - பாவங்களை

செய்தலின் - செய்தலைவிட

தீதே - தீமையானது

புறனழீஇப் - ஒருவனை காணாதவிடத்து பழித்துப் பேசி

பொய்த்து - கண்டவிடத்து பொய்யாக

நகை - நகைத்துப் பேசுதல்


பொருளுரை:

அறநெறிச் செயல்களை அழித்து பாவங்களைச் செய்தலைவிட தீமையானது ஒருவனை காணாதவிடத்து பழித்துப் பேசி கண்டவிடத்து பொய்யாக நகைத்துப் பேசுதல் ஆகும்.


விளக்கவுரை:

இக்குறளில் புறங்கூறும் பாவச்செயலைவிட அவனைக் கண்டவிடத்து பொய்யாக நகைத்துப் பேசும் பெருங்கொடுஞ்செயலை குறிப்பிடுகின்றார். புறங்கூறுதல் கீழ்த்தரமான செயல். புறங்கூறப்பட்டவன் எதிரில் வரும்போது அவனிடம் பொய்யாக நகைத்துப் பேசுதல் அதனினும் கீழ்த்தரமான செயலாகும். இவை அறநெறிச் செயல்களை அழித்து பாவச்செயல்கலை செய்வதைவிட மிகவும் தீமையானது ஆகும்.



குறள் 183

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறங்கூறு மாக்கந் தரும்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.


சொல்லுரை:

புறங்கூறிப் - காணாதவிடத்து இழித்துப் பேசி

பொய்த்துயிர் - கண்டவிடத்து பொய்யாக மகிழ்ந்து பேசி

வாழ்தலின் - உயிர்வாழும் வாழ்வைக் காட்டிலும்

சாதல் - இறந்துவிடுதல்

அறங்கூறும் - அறநூல்கள் கூறும்

ஆக்கம் - பயனைக்

தரும் - கொடுக்கும்


பொருளுரை:

ஒருவனைக் காணாதவிடத்து இழித்துப் பேசி கண்டவிடத்து பொய்யாக மகிழ்ந்து பேசி உயிர்வாழும் வாழ்வைக் காட்டிலும் இறந்துவிடுதல் அறநூல்கள் கூறும் பயனைக் கொடுக்கும்.


விளக்கவுரை:

ஒருவன் வாழுங்காலத்து மற்றவரைப்பற்றி புறங்கூறி, கண்டவிடத்து நல்லவனாக நடித்து உயிர்வாழ்வதைவிட, அவன் செத்தால்தான் இக்குற்றத்தை நிறுத்துவானாயின் செத்தொழிதலே அவன் செய்யும் அறமாகும். புறங்கூறும் குற்றத்துடன் உயிர்வாழ முற்படுவது இழிவான முறையில் உயிர்வாழ்வதைக் குறிக்கிறது.



குறள் 184

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.


சொல்லுரை:

கண்ணின்று - ஒருவனை தன் கண்முன் வைத்து

கண்ணறச் - இரக்கமின்றி, கண்ணோட்டமின்றி

சொல்லினும் - கடுஞ்சொற்களை சொன்னாலும்

சொல்லற்க - சொல்லாதிருப்பாயாக

முன்னின்று - அவன் எதிரே இல்லாதபோது

பின்நோக்காச் - பின்விளைவை நோக்காது

சொல் - சொல்வதை


பொருளுரை:

ஒருவனை தன் கண்முன் வைத்து இரக்கமின்றி கடுஞ்சொற்களைச் சொன்னாலும் அவன் எதிரே இல்லாதபோது பின்விளைவை நோக்காது புறங்கூறுவதை சொல்லாதிருப்பாயாக.


விளக்கவுரை:

ஒருவனை கண்ணெதிரிலேயே இரக்கமற்று கடுஞ்சொற்களால் பேசுவது அவனை அவமானப்படுத்துவதும் அவனைப் புண்படுத்துவதும் ஆகும். இது ஒரு கொடிய செயல். இதைவிடக் கொடுமையானது அவன் கண்ணெதிரில் இல்லாதபோது அவனைப்பற்றி புறங்கூறுவது. கண்ணெதிரே கூறிய கடுஞ்சொல்லுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம். ஆனால் புறங்கூறியமைக்கு மன்னிப்பு கிடையாது.



குறள் 185

அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.


சொல்லுரை:

அறஞ்சொல்லும் - ஒருவன் அறநெறி எடுத்துரைக்கும்

நெஞ்சத்தான் - மனமுள்ளவன்

அன்மை - அல்லன் என்பது

புறஞ்சொல்லும் - அவனின் புறம் பேசும்

புன்மையாற் - இழிச்செயலால்

காணப் படும் - தெரிந்துகொள்ளலாம்


பொருளுரை:

ஒருவன் அறநெறி எடுத்துரைக்கும் மனமுள்ளவன் அல்லன் என்பது அவனின் புறம் பேசும் இழிச்செயலால் தெரிந்துகொள்ளலாம்.


விளக்கவுரை:

இங்கு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் தன்மையைப் பற்றி கூறப்படுகிறது. புறம் சொல்லும் ஒருவனால் அறத்தைப் பற்றி நெஞ்சார எதையும் எடுத்துரைக்க முடியாது என்பதும் அவ்வாறு எடுத்துரைக்க முனைவானாயினும் அவன் புறங்கூறுபவன் என்பதை மற்றவர்கள் அறிந்ததினால் அவன் நெஞ்சம் அறம் கூறும் தன்மையற்றது என்பதையும் அதற்கான நெஞ்சுரம் அவனிடம் இல்லை என்பதையும் மற்றவர்கள் தெரிந்துகொள்ளலாம்.



குறள் 186

பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும்.

பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.


சொல்லுரை:

பிறன்பழி - பிறருடைய பழியை

கூறுவான் - அவர்கள் காணாதவிடத்துக் கூறுபவன்

தன்பழி - தன்னுடைய குற்றங்கள்

உள்ளும் - பலவற்றினுள்ளும்

திறன்தெரிந்து - வலிமையுள்ள குற்றங்களைக் கண்டுபிடித்து

கூறப் படும் - பழித்துப் பேசப்படுவான்


பொருளுரை:

பிறருடைய பழியை அவர்கள் காணாதவிடத்துக் கூறுபவன் தன்னுடைய குற்றங்கள் பலவற்றினுள்ளும் வலிமையுள்ள குற்றங்களைக் கண்டுபிடித்து பழித்துப் பேசப்படுவான்.


விளக்கவுரை:

பிறருடைய குற்றங்களை அவர்கள் இல்லாதவிடத்து கோள் சொல்லும்போது, கோள் கேட்கின்றவன் தன்னுடைய குற்றங்களை தேடிக்கண்டுபிடித்து பிறரிடம் புறங்கூறுவான் என்பதையும் உணரவேண்டும். பிறருக்குத் தான் செய்யும் தீங்கானது, பிறரால் தனக்கும் அதேவகை தீங்கு உண்டாகும் என்பது கருத்து.



குறள் 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாட றேற்றா தவர்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.


சொல்லுரை:

பகச்சொல்லிக் - பகையுணர்வு ஏற்படும்படி புறம் சொல்லி

கேளிர்ப் - உறவினர்களை

பிரிப்பர் - பிரியும்படி செய்வர்

நகச்சொல்லி - மகிழ்ச்சியுடன் கூடிப் பேசி

நட்பாடல் - நண்பர்களாக்கிக் கொள்ள

தேற்றா தவர் - தெரியாதவர்கள்


பொருளுரை:

பகையுணர்வு ஏற்படும்படி புறம் சொல்லி உறவினர்களை பிரியும்படி செய்வர் மகிழ்ச்சியுடன் கூடிப் பேசி நண்பர்களாக்கிக் கொள்ள தெரியாதவர்கள்.


விளக்கவுரை:

பகுத்தல் – பிரித்தல். பகச்சொல்லி - பிரிய நேரும்படி பகையுணர்வு உண்டாக புறஞ்சொல்லுதல். பகை – பிரிவு. உறவினரைப்பற்றி புறங்கூறுதல் மிகவும் தீய செயலாகும். அவ்வாறு செய்வானாயின் ஒருவன் சுற்றமே இல்லாதவனாகி விடுவான். பிறரினத்தாரிடமும் உறவினரிடையே புறங்கூறும் தீங்கினை உண்டாக்குபவனும் பொல்லாதவனாவான். இவ்வாறு புறங்கூறுபவர்கள் மற்றவர்களுடன் மகிழ்ந்து பேசி நட்பு பாராட்டும் தன்மை அற்றவராக இருப்பார்கள்.



குறள் 188

துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா
ரென்னைகொ லேதிலார் மாட்டு.

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.


சொல்லுரை:

துன்னியார் - தன்னுடன் நெருங்கியவர்களின்

குற்றமும் - குற்றத்தையும்

தூற்றும் - புறம்பேசி பழிக்கும்

மரபினார் - தன்மையுடையவர்கள்

என்னைகொல் - எப்படி நடந்துகொள்வார்களோ

ஏதிலார் - அயலார்

மாட்டு - இடத்து


பொருளுரை:

தன்னுடன் நெருங்கியவர்களின் குற்றத்தையும் புறம்பேசி பழிக்கும் தன்மையுடையவர்கள் அயலார் இடத்து எப்படி நடந்துகொள்வார்களோ?


விளக்கவுரை:

புறங்கூறுவதிலேயே மிகவும் கொடியது தன்னிடம் நெருங்கி பழகுகிறவர்களைப் பற்றியே புறங்கூறுவது. தூற்றுதல் என்பது நல்ல நெல்மணிகளை பதரிலிருந்து பிரிப்பதற்காக ஆளுயரத்திலிருந்து காற்றின் திசைக்கேற்ப நெல்மணிகளைக் காற்றிலே பறக்கவிடுவது. இங்கு தூற்றுவது எனக் குறிப்பிடப்படுவது தன்னிடம் நெருங்கிப் பழகுகிறவர்களைப் பற்றி தவறாகப் பலரிடம் புறங்கூறுதல். தூற்றுவதினால் பதரானது காற்றடிக்கும் திசையில் செல்வதுபோல புறங்கூறுபவர்களின் சொல்லும் கட்டுப்பாடின்றி பலரிடம் சென்று பரவுவதால் அது தூற்றுதல் எனப்பட்டது. நெருங்கிப் பழகியவரைப் பற்றியே புறங்கூறும் கொடியவர்கள் அயலாரிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்ளும் மிகக் கொடியவராகவே இருப்பர் என்பது கருத்து.



குறள் 189

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.


சொல்லுரை:

அறன்நோக்கி - எதையும் சுமத்தலே தன் அறம் என்று

ஆற்றுங்கொல் - சுமத்தலைச் செய்கிறதோ

வையம் - இவ்வுலகம்

புறன்நோக்கிப் - பிறர் இல்லாத நிலை பார்த்து

புன்சொல் - அவரைப்பற்றி பழிச்சொற்களை

உரைப்பான் - சொல்பவனின்

பொறை - உடலை சுமத்தலை


பொருளுரை:

பிறர் இல்லாத நிலை பார்த்து அவரைப்பற்றி பழிச்சொற்களை சொல்பவனின் உடலை சுமத்தலை இவ்வுலகம் எதையும் சுமத்தலே தன் அறம் என்று செய்கிறதோ?


விளக்கவுரை:

பொறுமைக்கு உதாரணமாக கூறப்படும் இப்பூவுலகமும் புறங்கூறுவானை சுமக்க விரும்பாது. இவ்வுலகம் அவனை சுமப்பது எதனால் எனின், தன்மீது உள்ள உயிர்களை சுமப்பது தனக்கு விதிக்கப்பட்ட அறம் என்ற ஒரே காரணத்திற்காக. புறங்கூறுபவன் உயிர் வாழ்பவனாக கருதப்படாமையால் அவனை இப்பூவுலகம் தாங்குவதை, பிணத்தைச் சுமப்பது போன்று ‘சுமத்தல்’ எனப்பட்டது.



குறள் 190

ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற்
றீதுண்டோ மன்னு முயிர்க்கு.

ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.


சொல்லுரை:

ஏதிலார் - அயலாரின்

குற்றம்போல் - குற்றம் கண்டு புறம்பேசுதலைப் போல

தன்குற்றம் - தன் குற்றங்களையும்

காண்கிற்பின் - காண வல்லவனாயின்

தீதுண்டோ - தீமை உண்டாகுமோ

மன்னும் - நிலைப்பேற்றுடன் உலகில் வாழும்

உயிர்க்கு - உயிர்களுக்கு


பொருளுரை:

அயலாரின் குற்றம் கண்டு புறம்பேசுதலைப் போல தன் குற்றங்களையும் காண வல்லவனாயின் நிலைப்பேற்றுடன் உலகில் வாழும் உயிர்களுக்கு தீமை உண்டாகுமோ ?


விளக்கவுரை:

புறங்கூறும்பொழுது பிறரது குற்றங்களைப் பற்றியே அதிகம் பேசுவார்கள். பிறரது குற்றங்களை அலசி ஆராய்வதிலேயே காலங்கழிப்பார்கள். அதனால் தம்முடைய குற்றங்களை அலசி ஆராயும் தன்மையின்றி, அதற்கான எண்ணமுமின்றி, அதைச் செய்வதற்கான தகுதியுமின்றி வாழ்வதால் அவர்கள் வாழ்வில் நலம் பெறுதல் அரிது. பிறர் குற்றம் ஆராய்வதற்குத் தேவையான தகுதியைவிட தம் குற்றம் ஆராய்வதற்கு நல்ல தகுதி, அதற்குண்டான மனப்பக்குவம் தேவை. அவ்வாறு ஒருவன் தன் குற்றத்தை ஆராய்ந்து களைய வல்லவனாயின் அவனைத் தீங்கு எதுவும் அண்டாது. அவனால் மற்றவர்களுக்கும் தீங்கு நேரிடாது. ஒவ்வொருவரும் தம் குற்றங்களை அலசி ஆராய்ந்து களைய முற்படவேண்டும்.



uline