இல்லறவியல்

20. பயனில சொல்லாமை

( யார்க்கும் பயன் தராத சொற்களைச் சொல்லாமை )

191. பல்லார் முனியப் பயனில சொல்லுவா
        னெல்லாரு மெள்ளப் படும்.

192. பயனில பல்லார்முற் சொல்ல னயனில
        நட்டார்கட் செய்தலிற் றீது.

193. நயனில னென்பது சொல்லும் பயனில
        பாரித் துரைக்கு முரை.

194. நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப்
        பண்பில்சொற் பல்லா ரகத்து.

195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
        நீர்மை யுடையார் சொலின்.

196. பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
        மக்கட் பதடி யெனல்.

197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
        பயனில சொல்லாமை நன்று.

198. அரும்பய னாயும் மறிவினார் சொல்லார்
        பெரும்பய னில்லாத சொல்.

199. பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த
        மாசறு காட்சி யவர்.

200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
        சொல்லிற் பயனிலாச் சொல்.



குறள் 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும்.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.


சொல்லுரை:

பல்லார் - பலராலும்

முனியப் - வெறுக்கத்தக்க

பயனில - பயனற்ற சொற்களை

சொல்லுவான் - சொல்பவன்

எல்லாரும் - எல்லோராலும்

எள்ளப் படும் - இகழப்படுவான்


பொருளுரை:

பலராலும் வெறுக்கத்தக்க பயனற்ற சொற்களைச் சொல்பவன் எல்லோராலும் இகழப்படுவான்.


விளக்கவுரை:

பயன் விளைவிக்காத சொற்களை ஒருவன் பேசுவானாகில் அவன் அறிவுடையோரால் வெறுக்கப்படுவான். ஏனெனில் பயனற்ற சொற்களைப் பேசுபவன் தன்னுடைய நேரத்தையும், ஆற்றலையும் வீணடிப்பதோடு மற்றவர்களுடைய நேரத்தையும் ஆற்றலையுங்கூட வீணடிக்கிறான். இதனால் எல்லோரும் அவனை இகழ்வர்.



குறள் 192

பயனில பல்லார்முற் சொல்ல னயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.


சொல்லுரை:

பயனில - பயனற்ற சொற்களை

பல்லார்முன் - பலர் முன்னிலையில்

சொல்லல் - சொல்லுதல்

நயனில - விரும்பத்தக்க அல்லாதவை

நட்டார்கண் - தன் நண்பரிடத்து

செய்தலின் - செய்வதைக்காட்டிலும்

தீது - தீமையானது


பொருளுரை:

பயனற்ற சொற்களை பலர் முன்னிலையில் சொல்லுதல் தன் நண்பரிடத்து விரும்பத்தக்க அல்லாதவை செய்வதைக்காட்டிலும் தீமையானது.


விளக்கவுரை:

நண்பர்களிடத்து விரும்பத்தகாத பேச்சுக்களை பேசிவிட்டால் நட்பின் காரணமாக மன்னிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் பயன் தராத வீண்சொற்களை பலர் முன்னிலையில் பேசுபவனுக்கு தீமையே உண்டாகும்.



குறள் 193

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை.

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.


சொல்லுரை:

நயனிலன் - அறநெறி இல்லாதவன்

என்பது - என்பதை

சொல்லும் - அறிவிக்கும்

பயனில - பயனற்ற வெறும் பேச்சுக்களை

பாரித்து - விரித்து

உரைக்கும் - பேசும்

உரை - சொற்கள்


பொருளுரை:

ஒருவனின் பயனற்ற வெறும் பேச்சுக்களை விரித்துப் பேசும் பேச்சிலேயே அவன் அறநெறி இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.


விளக்கவுரை:

பயனற்ற பேச்சுக்களை விரித்துக் கூறித் திரியும் தன்மையுடையவன் எதையும் சீராக புரிந்து பேசும் தன்மை அற்றவனாக இருப்பான். அவ்வாறு பேசுபவன் நடுவுநிலைமை உணர்ந்து பேசும் தகுதி இல்லாதவன் ஆவான். அவன் பேசும் வீண் பேச்சுக்களே அவனை ஒரு வீணன் என்பதையும், நயத்தோடு நடந்துகொள்ளும் தன்மை அற்றவன் என்பதையும் காட்டிக் கொடுக்கும்.



குறள் 194

நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப்
பண்பில்சொற் பல்லா ரகத்து.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.


சொல்லுரை:

நயன்சாரா - அறத்தோடு பொருந்தாததாய்

நன்மையின் - நன்மையிலிருந்து

நீக்கும் - பிரித்துவிடும்

பயன்சாராப் - பயனொடு பொருந்தாத

பண்பில்சொல் - பண்பில்லாத சொற்களை

பல்லார் அகத்து - பலரிடத்தில் (பேசுவது)


பொருளுரை:

பயனொடு பொருந்தாத பண்பில்லாத சொற்களைப் பலரிடத்தில் பேசுவது அறத்தோடு பொருந்தாததாய் நன்மையிலிருந்து பிரித்துவிடும்.


விளக்கவுரை:

பயனற்ற சொற்களைப் பலரிடம் பேசுவது ஒருவனின் பண்பற்ற தன்மையைக் காட்டுகிறது. அவ்வாறு பேசுபவனுக்கு அறத்தோடு பொருந்தாமல் நல்லனவற்றிலிருந்து பிரித்துவிடும். சொல்லின் பயன் நற்பொருளைத் தருவது; நற்பயனை உண்டாக்குவது; பண்பினைத் தோற்றுவிப்பது. வீண்சொற்கள் இவைகளை ஒருவனிடம் இருந்து நீக்கிவிடும் என்பதாம்.



குறள் 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்.


சொல்லுரை:

சீர்மை - மேன்மை

சிறப்பொடு - மதிப்புடன் சேர்ந்து

நீங்கும் - நீங்கிவிடும்

பயனில - பயனற்ற சொற்களை

நீர்மை - நல்ல குணங்களை

உடையார் - உடையவர்

சொலின் - கூறுவாராயின்


பொருளுரை:

நல்ல குணங்களை உடையவர் பயனற்ற சொற்களைக் கூறுவாராயின் அவர்களின் மேன்மையானது மதிப்புடன் சேர்ந்து நீங்கிவிடும்.


விளக்கவுரை:

நற்குணங்கள் நிறைந்தவர்கள் பயன் தராத சொற்களைப் பேசுவது இல்லை. தவறுதலாகவோ, வினைப்பயனாலோ அவர்கள் பயனற்ற சொற்களைப் பேசினால் அவர்களுடைய உயர்வும், மேன்மையும் அவர்களின் மீதிருந்த மதிப்போடு சேர்ந்து நீங்கிவிடும்.



குறள் 196

பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கள் பதடி எனல்.


சொல்லுரை:

பயனில்சொல் - பயனில்லாத சொற்களை

பாராட்டுவானை - பலமுறை பலரிடம் பேசித்திரிபவனை

மகன்எனல் - மனிதன் என்று கூறலாமா? கூடாது

மக்கள் - மக்களில்

பதடி - (அவனை) பதர்

எனல் - என்று கூறுக


பொருளுரை:

பயனில்லாத சொற்களைப் பலமுறை பலரிடம் பேசித்திரிபவனை மனிதன் என்று கூறலாமா? கூடாது. மக்களில் அவனைப் பதர் என்று கூறுக.


விளக்கவுரை:

பதர் என்பது நெல் உமியினுள்ளே அரிசியில்லாமல் வெறும் உமி மட்டும் இருப்பதாகும். இது காய் பிடிக்காத நெல் ஆகும். உணவுக்குப் பயன்படாது. பயனற்ற சொற்களைப் பேசித் திரிபவனும் உமியினுள் அரிசியில்லாத பதர் நெல்போல அறிவில்லாத மனிதனில் அவன் பதராவான். அவனை மனிதன் என்று கூறக்கூடாது.



குறள் 197

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.


சொல்லுரை:

நயனில - அறத்திற்குப் பொருந்தாத

சொல்லினும் - சொற்களைச் சொன்னாலும்

சொல்லுக - சொல்லுக

சான்றோர் - சான்றோர்கள்

பயனில - பயனற்ற சொற்களை

சொல்லாமை - சொல்லாதிருத்தல்

நன்று - நல்லதாகும்


பொருளுரை:

அறத்திற்குப் பொருந்தாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுக. சான்றோர்கள் பயனற்ற சொற்களை சொல்லாதிருத்தல் நல்லதாகும்.


விளக்கவுரை:

பயன் தராத வீண்சொற்கள் நீதிக்குப் பொருந்தாத சொற்களைக் காட்டிலும் மிகவும் தீயனவாகக் கருதப்படுகிறது. சான்றோர்கள் எக்காலத்தும் நீதிக்குப் புறம்பான சொற்களைப் பேசுவது இல்லை. ஆனால், நீதிக்குப் புறம்பான சொற்களைப் பேச நேர்ந்தாலும் அதனால் வரும் குற்றம் போக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் பயன் தராத சொற்களைப் பேசிப் பழகக் கூடாது. அதனை வாழ்நாளில் மாற்றுவது அரிதானது. அதனால் உண்டாகும் தீமையும் மிகப்பலவாம். துறவிகளும் இல்லறத்தாரும் பேசாநோன்பிருத்தல் பயன் தராத சொற்களைப் பேசாதிருப்பதற்கான ஒருவகைப் பயிற்சியே.



குறள் 198

அரும்பய னாயும் மறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.


சொல்லுரை:

அரும்பயன் - சிறந்த பயன்களை

ஆயும் - ஆராய்ந்து அறியும்

அறிவினார் - அறிவினை உடையோர்

சொல்லார் - சொல்லமாட்டார்கள்

பெரும்பயன் - பெரிய நன்மை

இல்லாத - விளைவிக்காத

சொல் - சொற்களை


பொருளுரை:

சிறந்த பயன்களை ஆராய்ந்து அறியும் அறிவினை உடையோர் பெரிய நன்மை விளைவிக்காத சொற்களைச் சொல்லமாட்டார்கள்.


விளக்கவுரை:

அறிதற்கரிய பயன்களை ஆராய்வது என்பது பெரும்பயன் விளைவிக்கும் மெய்ப்பொருள் காண்பதும், வீடுபேறு அடையும் வழியைக் காண்பதும் ஆகும். அதுவே ஒவ்வொரு உயிர்களுக்கும் தாம் அடையவேண்டிய பெரும்பயனாகக் கருதப்படுகிறது. இவைகளை ஆய்ந்தறியும் தன்மையுடையவர்கள் மேற்கூறப்பட்ட மேன்மையான பயன் தருவனவற்றைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். மற்றவைகளை எக்காலத்தும் பேசமாட்டார்கள்.



குறள் 199

பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த
மாசறு காட்சி யவர்.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.


சொல்லுரை:

பொருள்தீர்ந்த - பொருளற்ற (சொற்களை )

பொச்சாந்தும் - மறந்தும்கூட

சொல்லார் - சொல்லமாட்டார்கள்

மருள்தீர்ந்த - அறியாமை என்னும் மயக்கம் நீங்கிய

மாசறு - குற்றமில்லாத

காட்சி யவர் - அறிவினை உடையவர்கள்


பொருளுரை:

அறியாமை என்னும் மயக்கம் நீங்கிய குற்றமில்லாத அறிவினை உடையவர்கள் பொருளற்ற சொற்களை மறந்தும்கூட சொல்லமாட்டார்கள்.


விளக்கவுரை:

அறியாமை என்னும் மயக்கம் நீங்கிய குற்றமற்ற தன்மையுடையவர்கள் மெய்ஞ்ஞானம் அறிந்தவர்களாவர். அவர்களின் தன்மையே மெய்ப்பொருள் காண்பதாகும். அவர்கள் பொருளற்ற சொற்களை மறந்தும் பேசுவது இல்லை.



குறள் 200

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.


சொல்லுரை:

சொல்லுக - சொல்லவேண்டும்

சொல்லில் - சொற்களில்

பயனுடைய - பயனுடைய சொற்களை

சொல்லற்க - சொல்லாதிருக்கவேண்டும்

சொல்லில் - சொற்களில்

பயனிலா - பயன் இல்லாத

சொல் - சொற்களை


பொருளுரை:

சொற்களில் பயனுடைய சொற்களைச் சொல்லவேண்டும். சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாதிருக்கவேண்டும்.


விளக்கவுரை:

பயனில சொல்லாமைக்கு முத்தாய்ப்பாக உள்ள குறளாகும் இது. மிக எளிய சொற்களில் கட்டளையாகச் சொல்லியுள்ளார். ஒருவன் பயன் தரும் சொற்களைப் பேசுவதையே பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். பேசும்போது பயன் தரும் சொற்களையே ஆராய்ந்து உணர்ந்து பேசவேண்டும். பயன் இல்லாத சொற்களை சொல்லாதிருக்க வேண்டும்.
உலகில் நடைபெறும் பெரும் தீமைகளுக்கும், தனிமனிதனின் வாழ்வில் ஏற்படும் தீங்குகளுக்கும் பெரும்பாலான நேரங்களில் பயனற்ற சொற்களே காரணமாக அமைகின்றன. ஆதலால் பயன் விளைவிக்காத சொற்களைப் பேசாதிருக்க வேண்டும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் ‘ என்பதுபோல பயனற்ற வீண்பேச்சுக்களை பேசாதிருக்க தன்னைப் பழகிக்கொள்ளுதல் நலம்.



uline