201. தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
       
தீவினை யென்னுஞ் செருக்கு.
202. தீயவை தீய பயத்தலாற் தீயவை
       
தீயினு மஞ்சப் படும்.
203. அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
       
செறுவார்க்குஞ் செய்யா விடல்.
204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி
       
னறஞ்சூழஞ் சூழ்ந்தவன் கேடு.
205. இலனென்று தீயவை செய்யற்க செய்யி
       
னிலனாகு மற்றும் பெயர்த்து.
206. தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
       
தன்னை யடல்வேண்டா தான்.
207. எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை
       
வீயாது பின்சென் றடும்.
208. தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
       
வீயா தடிறைந் தற்று.
209. தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந்
       
துன்னற்க தீவினைப் பால்.
210. அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
       
தீவினை செய்யா னெனின்.
குறள் 201
தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
சொல்லுரை:
தீவினையார் - தீவினை ஆற்றுவோர்
அஞ்சார் - அஞ்சமாட்டார்கள்
விழுமியார் - உயர்ந்த குணமுடையோர், மேலோர்
அஞ்சுவர் - அஞ்சுவார்கள்
தீவினை - தீவினை
என்னும் - என்னும்
செருக்கு - அகங்காரமான செயலுக்கு
பொருளுரை:
தீவினை என்னும் அகங்காரமான செயலுக்கு முன்பே தீவினை செய்து பழகியவர்கள் அஞ்சமாட்டார்கள். ஆனால், உயர்ந்த குணமுடையோர் தீவினையைக் கண்டு அஞ்சுவார்கள்.
விளக்கவுரை:
விழுமியார் தீவினைக்கு அஞ்சுவர் என்று கூறப்படுவது தீவினைச் செயல்களே ஒருவன் அடையும் துன்பங்கள் அனைத்திற்கும் காரணமாக இருப்பதால். தன் வாழ்வில் துன்பங்கள் அகற்றி தூய வாழ்வு வாழ முனைவோர் தீவினைச் செயல்களுக்கு அஞ்சுவர்.
குறள் 202
தீயவை தீய பயத்தலாற் தீயவை
தீயினு மஞ்சப் படும்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
சொல்லுரை:
தீயவை - பாவச்செயல்கள்
தீய - துன்பங்களையே
பயத்தலால் - தருவதால்
தீயவை - பாவச்செயல்கள்
தீயினும் - தீயைக்காட்டிலும்
அஞ்சப் படும் - மிகவுக் கொடியதாக அஞ்சப்படும்
பொருளுரை:
பாவச்செயல்கள் துன்பங்களையே தருவதால் அந்த பாவச்செயல்கள் தீயைக்காட்டிலும் மிகவுக் கொடியதாக அஞ்சப்படும்.
விளக்கவுரை:
தீ – தீய்க்கும் தன்மை – அழிக்கும் தன்மை. தீயானது தீண்டுவோரை சுட்டுவிட்டாலும் அல்லது எரித்துவிட்டாலும் அது மக்களின் வாழ்வில் பல நன்மைகளைச் செய்கிறது. ஐவகை பூதங்களிலும் தீயிடம் உயிர்களுக்கு மிகுந்த எச்சரிக்கை உணர்வு தேவைப்படுகிறது. எச்சரிக்கை இல்லையாயின் சடுதியில் கெடுதியை உண்டுபண்ணிவிடும். ஆனால் பாவச்செயலானது எப்பொழுதும் துன்பத்தையே விளைவிப்பதால் அது தீயைக் காட்டிலும் மிகவும் கொடியதாக அஞ்சப்படுகிறது.
குறள் 203
அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்.
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
சொல்லுரை:
அறிவினுள் - அறிவுகள்
எல்லாம் - எல்லாவற்றிலும்
தலையென்ப - சிறந்தது என்பர்
தீய - தீமைகளை
செறுவார்க்கும் - தம்முடைய பகைவர்க்கும்
செய்யா - செய்யாமல்
விடல் - விடவேண்டும்
பொருளுரை:
தீமை தரும் செயல்களை தம்முடைய பகைவர்க்கும் செய்யாமல் விடவேண்டும். இதனை அறிவுகள் எல்லாவற்றிலும் சிறந்தது என்பர்.
விளக்கவுரை:
மக்கள் தமக்கு நன்மை செய்பவர்க்கு நன்மை செய்ய முற்படுவர். தீமை செய்பவர்க்கு பழிவாங்கும் காரணமாக தீமை செய்ய முனைவர். அவ்வாறு மனம் போன போக்கில் தீமை செய்ய முற்படுவாராயின் அவர் வாழ்வில் தீமைச் செயல்களே அதிக செய்யப்பட்டிருக்கும். அவ்வாறின்றி மனத்தை பக்குவப்படுத்தி அறிவின் துணைகொண்டு நல்லனவற்றை உணர்ந்து, தமக்கு தீங்கு செய்யும் பகைவர்க்கும் நன்மையே செய்வாராயின் அவர் வாழ்வில் நற்செயல்கள் மேலோங்கி நிற்கும். அவ்வாறு ஒருவர் நடந்துகொள்வதே அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவாகும்.
குறள் 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி
னறஞ்சூழஞ் சூழ்ந்தவன் கேடு.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
சொல்லுரை:
மறந்தும் - மறந்துங்கூட
பிறன்கேடு - பிறர்க்கு கெடுதலை
சூழற்க - செய்ய எண்ணாது இருப்பாயாக
சூழின் - எண்ணினால்
அறஞ்சூழம் - அறக்கடவுள் எண்ணுவான்
சூழ்ந்தவன் - தீமை செய்ய எண்ணினவனுக்கு
கேடு - கேட்டினை தரும் வினையை
பொருளுரை:
மறந்துங்கூட பிறர்க்குக் கெடுதலை செய்ய எண்ணாது இருப்பாயாக. கெடுதியை செய்ய எண்ணினால் அவ்வாறு எண்ணினவனுக்கு கேட்டினை தரும் வினையை அறக்கடவுள் எண்ணுவான்.
விளக்கவுரை:
ஒருவன் தீய வினையை செய்ய எண்ணும்போதே அவன் பாவம் செய்தவனாகிறான். அதனால், அறக்கடவுளும் தீமை செய்ய எண்ணினவனுக்கு கேடு உண்டாக்க எண்ணும். அது அறக்கடவுள் கடமையாகும்.
குறள் 205
இலனென்று தீயவை செய்யற்க செய்யி
னிலனாகு மற்றும் பெயர்த்து.
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
சொல்லுரை:
இலன்என்று - தாம் தற்பொழுது வறுமையில் உள்ளோம் என்று
தீயவை - தீய செயல்களை
செய்யற்க - செய்யக்கூடாது
செய்யின் - அப்படி மீறிச் செய்தால்
இலனாகும் - வறுமையுள்ளவனாவன்
மற்றும் - மீண்டும்
பெயர்த்து - இருக்கும் நிலையைவிட கீழான நிலைக்கு
பொருளுரை:
தாம் தற்பொழுது வறுமையில் உள்ளோம் என்று தீய செயல்களை செய்யக்கூடாது. அப்படி மீறிச் செய்தால் வறுமையுள்ளவனாவன் மீண்டும் இருக்கும் நிலையைவிட கீழான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவான்.
விளக்கவுரை:
பொருட்செல்வம் இல்லாது வறுமை நிலையில் இருப்பவன் நல்ல வழியில் பொருள் ஈட்டுவதை விட்டுவிட்டு, தீய செயல்கள் மூலம் பொருளை அடைய முற்படுவானாயின் அவனுடைய தீய செயல்களுக்காக தண்டிக்கப்பட்டு தீய வழியில் அடைந்த பொருளும் அவனிடமிருந்து பறிக்கப்படும். வறுமை நிலையோடு தண்டனையும் பெருவதுடன் பிறரால் வெறுத்து ஒதுக்கப்படுவான். இதனால் முன்பிருந்த வறுமை நிலையைவிட இன்னும் கீழான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவான்.
குறள் 206
தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான்.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
சொல்லுரை:
தீப்பால - தீமை பயக்கும் தன்மையுடைய செயல்களை
தான்பிறர்கண் - தான் பிறர்க்கு
செய்யற்க - செய்யாதிருக்க வேண்டும்
நோய்ப்பால - துன்பம் தரும் தன்மையுடைய தீமைகள்
தன்னை - தன்னை
அடல் - அடைந்து வருத்துதலை
வேண்டா தான் - விரும்பாதவன்
பொருளுரை:
துன்பம் தரும் தன்மையுடைய தீமைகள் தன்னை அடைந்து வருத்துதலை விரும்பாதவன் தீமை பயக்கும் தன்மையுடைய செயல்களைத் தான் பிறர்க்கு செய்யாதிருக்க வேண்டும்.
விளக்கவுரை:
பிறருக்குத் தீங்கு செய்பவனுக்கு துன்பம் நேர்ந்து அதனால் அவன் வருத்தமுறுவது உறுதி. துன்பம் தன்னை வருத்தாதிருக்க விரும்புபவன் பிறர்க்குத் தீங்கு செய்யாமல் இருப்பதினாலேயே அந்நிலையை அடைய முடியும்.
குறள் 207
எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
சொல்லுரை:
எனைப்பகை - எவ்வளவு பெரிய பகையை
உற்றாரும் - அடைந்தவரும்
உய்வர் - தப்பித்துக்கொள்வர்
வினைப்பகை - தீவினையால் வரும் பகை
வீயாது - அழியாது, நீங்காது
பின்சென்று - செய்தவனை பின் தொடர்ந்து சென்று
அடும் - துன்புறுத்தும், கொல்லும்
பொருளுரை:
எவ்வளவு பெரிய பகையை அடைந்தவரும் தப்பித்துக்கொள்வர். தீவினையால் வரும் பகையானது ஒருவனை விட்டு நீங்காது செய்தவனை பின் தொடர்ந்து சென்று துன்புறுத்தும்.
விளக்கவுரை:
ஒருவன் பெரும்பகையை சம்பாதித்துவிட்டால் அந்தப் பகையை பகைவனுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்பாட்டின் மூலமோ, தன் நிலையை விட்டுக்கொடுப்பதின் மூலமோ அல்லது பகைவனின் தொடர்பிலிருந்து அகன்று இருப்பதின் மூலமோ அல்லது பிற வகையிலோ அந்தப் பகையிலிருந்து வெளிவர முடியும். ஆனால், தீவினை செய்வதனால் தான் தேடிக்கொண்ட பகையானது, எவ்விடத்திற்குச் சென்றாலும் அல்லது இப்பிறப்பு முடிந்து மறுபிறப்பிற்குச் சென்றாலும் அவனைத் தொடர்ந்து சென்று துன்புறுத்தும்.
குறள் 208
தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடிறைந் தற்று.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
சொல்லுரை:
தீயவை - தீமைகளை
செய்தார் - செய்தவர்
கெடுதல் - கெட்டுப்போவது எத்தகையது எனில்
நிழல்தன்னை - ஒருவனின் நிழல் அவனைவிட்டு
வீயாது - நீங்காது
அடி - அவன் கால் அடியிலேயே
உறைந்து - தங்கியிருப்பது
அற்று - போலாகும்
பொருளுரை:
தீமைகளைச் செய்தவர் கெட்டுப்போவது எத்தகையது எனில் ஒருவனின் நிழல் அவனைவிட்டு நீங்காது அவன் காலடியிலேயே தங்கியிருப்பது போலாகும்.
விளக்கவுரை:
ஒருவனின் நிழல் அவனை விட்டு நீங்காது அவன் செல்லுமிடமெல்லாம் காலடியிலேயே எவ்வாறு உறைந்திருக்குமோ அதுபோல தீய செயல்களை புரிந்தவர்களுக்கும் கெடுதலானது எங்கு சென்றாலும் அவர்களை விட்டு நீங்காது துன்பத்தைத் தந்துகொண்டே இருக்கும். முன்பு கூறிய குறளில் துன்பம் தொடர்ந்து வருவது கூறப்பட்டது. இக்குறளில் துன்பம் எப்பொழுதும் ஒன்றியே இருக்கும் என்று கூறப்பட்டதின்மூலம் துன்பத்தின் கடுமை எடுத்துரைக்கப்படுகிறது.
குறள் 209
தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்.
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
சொல்லுரை:
தன்னைத்தான் - ஒருவன் தன்னைத் தான்
காதலன் - விரும்புவான், காத்துக்கொள்பவன்
ஆயின் - ஆயின்
எனைத்து ஒன்றும் - எவ்வளவு சிறிது ஆயினும்
துன்னற்க - நெருங்காதிருக்க
தீவினைப் பால் - தீவினையிடத்து, தீவினையாகிய பிரிவினுள்
பொருளுரை:
ஒருவன் தன்னைத் தான் விரும்புவான் ஆயின் எவ்வளவு சிறிது ஆயினும் தீவினையிடத்து நெருங்காதிருக்க.
விளக்கவுரை:
‘தன்னைத்தான் காதலன்’ என்று கூறப்படுவது ஒருவன் தனக்கு நல்லதையே நினைத்து தன்னை காத்துக்கொள்ள விரும்புபவன். பிறருக்குத் தீவினை செய்யும் நோக்கம் இல்லாமல் இருத்தலே தனக்கு துன்பத்தைத் தராமல் இருக்கும்.
குறள் 210
அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யா னெனின்.
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
சொல்லுரை:
அருங்கேடன் - கேடு இல்லாதவன்
என்பது - என்பதை
அறிக - அறிந்துகொள்க
மருங்குஓடி - பாவத்தின் பக்கம் சென்று
தீவினை - தீமைகளை
செய்யான் - செய்யாதிருப்பவன்
எனின் - எனில்
பொருளுரை:
பாவத்தின் பக்கம் சென்று தீமைகளை செய்யாதிருப்பவன் எனில் அவன் கேடு இல்லாதவன் என்பதை அறிந்துகொள்க.
விளக்கவுரை:
அருங்கேடன் – அருமை + கேடன். அருமை என்றால் ஒன்றுமற்ற தன்மை, இல்லாமை. கேடுகள் அற்ற தன்மையுடயவன். ஒருவன் கேடற்றவன் என்பது அவன் தீவினை செய்யாதிருப்பதின் மூலம் அறியலாம். கேடற்றவனாக இருப்பதற்கு பாவத்தைச் செய்வதற்கு அஞ்சவேண்டும். தீவினைகளைச் சிறிதும் செய்யாதிருக்கவேண்டும்.