இல்லறவியல்

22. ஒப்புரவறிதல்

( உலக நடைமுறை அறிந்து பிறர்க்கு உதவுதல் )

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
        டென்னாற்றுங் கொல்லோ வுலகு.

212. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
        வேளாண்மை செய்தற் பொருட்டு.

213. புத்தே ளுலகத்து ஈண்டும் பெறலரிதே
        யொப்புரவி னல்ல பிற.

214. ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
        செத்தாருள் வைக்கப் படும்.

215. ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
        பேரறி வாளன் திரு.

216. பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ
        நயனுடை யான்கட் படின்.

217. மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
        பெருந்தகை யான்கட் படின்.

218. இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
        கடனறி காட்சி யவர்.

219. நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயுநீர
        செய்யா தமைகலா வாறு.

220. ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
        விற்றுக்கோட் டக்க துடைத்து.



குறள் 211

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.


சொல்லுரை:

கைம்மாறு - பதில் உதவியை

வேண்டா - எதிர்பார்க்காது

கடப்பாடு - தன் கடமையாகச் செய்யும்

மாரிமாட்டு - மழை மேகத்திற்கு

என்ஆற்றுங் கொல்லோ - என்ன உதவியைச் செய்யமுடியும்

உலகு - இவ்வுலகிலுள்ள உயிர்கள்


பொருளுரை:

பதில் உதவியை எதிர்பார்க்காது தன் கடமையாகச் செய்யும் மழை மேகத்திற்கு என்ன உதவியைச் செய்துவிட முடியும் இவ்வுலகிலுள்ள உயிர்கள் ?


விளக்கவுரை:

உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு நீரை மேகம் மழையாகத் தருகிறது. கடல் நீரை முகர்ந்த முகில் உலகில் மழை பெய்வதற்கான சூழல் உண்டாகும்போது, அந்த சூழல் உண்டாகும் இடத்தில் மழையாக, நன்னீராக இவ்வுலக உயிர்களுக்கு ஈந்து காக்கிறது. இதனை, முகில்கள் தங்களின் கடமையாகச் செய்கிறதே அன்றி பதிலுக்கு எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. அவ்வாறு இவ்வுலக உயிர்களைக் காக்கும் பணியைச் செய்யும் மேகத்திற்கு இவ்வுலக உயிர்கள் என்ன கைம்மாறு செய்துவிட முடியும் ? ஒன்றுமில்லை. அதுபோல செல்வம் படைத்தவர்களும் இவ்வுலகிலிருந்தே அப்பொருளைப் பெற்றதால் இவ்வுலகில் பொருள் வேண்டியவர்க்கு கொடுத்து உதவுதலே அவர்களின் கடப்பாடு அல்லது கடமை ஆகும். கைம்மாறு எதிர்பார்த்தல் ஆகாது.



குறள் 212

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.


சொல்லுரை:

தாள் ஆற்றி - முயற்சி செய்து

தந்த - சம்பாதிக்கப்பட்ட

பொருளெல்லாம் - பொருட்கள் எல்லாம்

தக்கார்க்கு - தகுதி படைத்த மக்களுக்கு

வேளாண்மை - உதவி

செய்தல் - செய்தல்

பொருட்டு - பொருட்டே ஆகும்


பொருளுரை:

முயற்சி செய்து சம்பாதிக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் தகுதி படைத்த மக்களுக்கு உதவி செய்தல் பொருட்டே ஆகும்.


விளக்கவுரை:

ஒவ்வொருவரும் இடைவிடாது முயற்சி செய்து தன் முயற்சித் திறனுக்கு ஏற்ப பொருளீட்ட வேண்டும். அவ்வாறு நல்வழியில் ஈட்டிய பொருளை தகுதி படைத்தவர்க்கு கொடுத்து உதவவேண்டும். இது பொருளீட்டியவனின் கடமை ஆகும். தகுதி படைத்தவனுக்கு கொடுப்பது என்று இங்கு குறிப்பிடப்படுவது பொருளீட்ட முடியாமல் இருப்பவர்க்கும், உழைத்து வாழ முடியாத நிலையில் இருப்பவர்க்கும் அதே நேரம் பொருளின் இன்றியமையாமையை உணர்ந்தோர்க்கும் கொடுத்தலாகும். உழைக்கும் திறனிருந்தும் அதற்கான சூழல் இருந்தும் உழைக்காமல் இருக்கும் சோம்பேறிகளுக்கு பொருள் கொடுப்பதை ஒதுக்கவேண்டும்.



குறள் 213

புத்தே ளுலகத்து ஈண்டும் பெறலரிதே
யொப்புரவி னல்ல பிற.

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.


சொல்லுரை:

புத்தேள் - தேவர்

உலகத்தும் - உலகிலும்

ஈண்டும் - இந்த மண்ணுலகிலும்

பெறல்அரிதே - பெறுதல் அரிதாகும்

ஒப்புரவின் - உதவி செய்வதைவிட

நல்ல - நன்மை பயக்கும்

பிற - பிற செயல்களை


பொருளுரை:

உதவி செய்வதைவிட நன்மை பயக்கும் பிற செயல்களை தேவர் உலகிலும் இந்த மண்ணுலகிலும் பெறுதல் அரிதாகும்.


விளக்கவுரை:

தேவருலகில் இரப்போர் இல்லை. அதனால் ஈவோரும் இல்லை. இத்தன்மையால் ஒப்புரவு என்று ஒன்று அங்கு இல்லை. இப்பூவுலகில் ஒப்புரவு ஆற்றுவோர் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகச் சிலரே ஆவர். அதனால் ஒப்புரவு செய்பவன் என்னும் தன்மை பெறுவது அரிய செயலாகத் தோன்றுகிறது. ஏனெனில், மனிதருக்கு பொருளீட்டுவது பெரும்பாலோருக்கு இயன்ற தன்மையாயினும் ஈன்ற பொருளை பொருளின் மீதுள்ள பற்றினால் கொடுத்துதவும் தன்மை பொருளீட்டிய அனைவர்க்கும் இல்லாமல் சொற்ப சிலரே அத்தன்மையைப் பெற்றிருப்பதால்.



குறள் 214

ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.


சொல்லுரை:

ஒத்தது - உலகிற்கு ஒத்துப் போகும் நடைமுறையை

அறிவான் - அறிகின்றவன்

உயிர்வாழ்வான் - உயிருடன் வாழ்கின்றவன் ஆவான்

மற்றையான் - உலக நடையை அறியாதவன்

செத்தாருள் - உயிர் துறந்தவருக்குச் சமமாக

வைக்கப் படும் - எண்ணப்படுவான்


பொருளுரை:

உலகிற்கு ஒத்துப் போகும் நடைமுறையை அறிகின்றவன் உயிருடன் வாழ்கின்றவன் ஆவான். உலக நடையை அறியாதவன் உயிர் துறந்தவருக்குச் சமமாக எண்ணப்படுவான்.


விளக்கவுரை:

இவ்வுலகில் தேவைகளும், இன்பதுன்பங்களும் ஒவ்வொரு உயிர்களுக்கும் இருக்கின்றன. ஒவ்வொருவனும் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்துகொண்டு துன்பத்திலிருந்து விடுபட்டு இன்பமாக வாழவே முற்படுகின்றான். இவ்வுலக இயல்பை அறிந்து தேவையுள்ளவர்களுக்கு தன்னால் முடிந்த அளவு உதவி செய்து வாழ்பவன்தான் உயிருடன் வாழ்பவனாவான். தான் உழைத்துச் சம்பாதித்த பொருளைப் பிறருக்கு வழங்காதவன் உயிர் இருந்தும் செத்தவருக்கு சமமாகவே மதிக்கப்படுவான்.



குறள் 215

ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் திரு.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.


சொல்லுரை:

ஊருணி - ஊர் மக்கள் குடிப்பதற்காக பயன்படும் குளம்

நீர்நிறைந்து - நீரினால் நிறைந்து

அற்றே - இருப்பதைப் போன்றதாகும்

உலகவாம் - உலத்தார் விரும்பும்படி

பேரறி வாளன் - சிறந்த அறிவுள்ளவன்

திரு - செல்வம்


பொருளுரை:

உலகத்தார் விரும்பும்படி சிறந்த அறிவுள்ளவன் செல்வத்தைப் பெற்றிருத்தல் ஊர் மக்கள் குடிப்பதற்காக பயன்படும் குளம் நீரினால் நிறைந்து இருப்பதைப் போன்றதாகும்.


விளக்கவுரை:

ஊரில் உள்ள குளத்தில் நீர் நிறைந்து இருக்குமானால் அந்த நீரை ஊர் மக்கள் மட்டுமல்லாது அவ்வழியே செல்வோரும் பயன்படுத்துவர். சிறந்த அறநெறி உள்ளவன் பெற்ற செல்வமும் ஊரில் உள்ள குளத்தில் நீர் நிறைந்துள்ளதைப் போன்றதே. எல்லா மக்களுக்கும் அவனுடைய செல்வத்தைக் கொடுப்பதனால் உலகத்தார் விரும்பும்படி அவனுடைய செயல் இருக்கும்.



குறள் 216

பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின்.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.


சொல்லுரை:

பயன்மரம் - பயன் தரக்கூடிய மரமானது

உள்ளூர்ப் - ஊரின் உள்ளே, ஊரின் நடுவே

பழுத்தற்றால் - பழுத்து இருப்பதைப் போன்றதாகும்

செல்வம் - செல்வமானது

நயன்உடையான்கண் - நன்மை செய்யும் குணம் உடையவனிடம்

படின் - சேருமானால்.


பொருளுரை:

செல்வமானது நன்மை செய்யும் குணம் உடையவனிடம் சேருமானால் அது பயன் தரக்கூடிய மரமானது ஊரின் உள்ளே பழுத்து இருப்பதைப் போன்றதாகும்


விளக்கவுரை:

பயன் தரக்கூடிய நல்ல சுவையுடைய கனிகளைத் தரும் மரமானது ஊரின் உள்ளே பழுத்து இருக்கும் காலத்தில் அனைவரும் விரும்பி பழங்களை எடுத்துச் சென்று சுவைப்பதைப் போல நன்மை செய்யும் குணம் உடையவனிடம் செல்வம் சேருமானால் வறியவர்களும், தேவையுள்ளோரும் அவனிடம் சென்று பொருளுதவி பெற்று மகிழ்வர்.



குறள் 217

மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.


சொல்லுரை:

மருந்தாகித் - எல்லா பாகங்களும் மருந்தாகி

தப்பா - தப்பாமல் பயன்படும்

மரத்தற்றால் - மரத்தைப் போன்றது ஆகும்

செல்வம் - செல்வமானது

பெருந்தகை யான் - உதவி செய்யும் பெருங்குணம்

கண் படின் - உள்ளவனிடம் உண்டாகுமானால்.


பொருளுரை:

செல்வமானது உதவி செய்யும் பெருங்குணம் உள்ளவனிடம் உண்டாகுமானால் அது எல்லா பாகங்களும் மருந்தாகி தப்பாமல் பயன்படும் மரத்தைப் போன்றது ஆகும்.


விளக்கவுரை:

வேர் முதல் கொழுந்துவரை தன்னுடைய எல்லா பாகங்களும் மூலிகை மருந்தாகி பயன்படும் மூலிகை மரத்தைப் போன்றது தன்னிடமுள்ள எல்லா பொருள்களையும் பிறருக்கு கொடுத்து உதவும் நற்குணம் உடையவனின் தன்மை. தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் எல்லா பொருள்களையும் கொடுத்து உதவுவதினால் அவன் ‘பெருந்தகையான்’ எனப்பட்டான்.



குறள் 218

இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.


சொல்லுரை:

இடனில் - செல்வத்திற்கு இடம் இல்லாத

பருவத்தும் - வறுமைக் காலத்திலும்

ஒப்புரவிற்கு - உதவி செய்வதற்கு

ஒல்கார் - தளரமாட்டார்கள்

கடனறி - தம் கடமையை அறிந்த

காட்சி யவர் - சான்றோர்


பொருளுரை:

செல்வத்திற்கு இடம் இல்லாத வறுமைக் காலத்திலும் உதவி செய்வதற்கு தளரமாட்டார்கள் தம் கடமையை அறிந்த சான்றோர் மக்கள்.


விளக்கவுரை:

ஒப்புரவு அறிந்தவர்கள் பிறருக்கு உதவி செய்வது தங்கள் கடமை என்பதை உணர்ந்தவர்கள் ஆவர். தன்னிடம் பொருள் இல்லாத நிலையிலும் மற்றவருக்கு உதவி செய்யும் சமயம் வரும் காலத்தில் எவ்வகையிலாவது அவர்களுக்கு உதவி செய்ய முயற்சிப்பார்கள்.



குறள் 219

நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயுநீர
செய்யா தமைகலா வாறு.

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா ஆறு.


சொல்லுரை:

நயனுடையான் - உதவி செய்யும் தன்மை உடையவன்

நல்கூர்ந்தான் - வறுமையுடையவனாக

ஆதல் - ஆவது

செயும்நீர - செய்யத்தக்க உதவிகளை

செய்யாது - செய்யமுடியாமல்

அமைகலா - வருந்தி இருக்கும்

ஆறு - தன்மையாகும்


பொருளுரை:

உதவி செய்யும் தன்மை உடையவன் வறுமையுடையவனாக ஆவது செய்யத்தக்க உதவிகளை செய்யமுடியாமல் வருந்தி இருக்கும் தன்மையாகும்.


விளக்கவுரை:

உதவி செய்யும் தன்மையுடையவன் தன்னிடம் பொருளில்லாமல் துன்புறுதலால் வறுமையுற்றதாக எண்ணமாட்டான். உதவி செய்யும் நற்குணமுடைய அவன் ஒருவருக்கு செய்யத்தக்க உதவிகளை செய்யமுடியாமல் போனால் அதனால் உண்டாகும் வருந்தி இருக்கவேண்டிய நிலையையே அவனுடைய வறுமை நிலையாகக் கருதுவான்.



குறள் 220

ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.


சொல்லுரை:

ஒப்புரவினால் - உதவி செய்வதினால்

வரும் - வருவது

கேடுஎனின் - கெடுதல் என்றால்

அஃதுஒருவன் - அக்கேட்டினை ஒருவன்

விற்றுக் - தன்னை விற்றாகிலும்

கோள் - பெற்றுக்கொள்ளும்

தக்கது - தன்மையை

உடைத்து - உடையதாகும்


பொருளுரை:

உதவி செய்வதினால் வருவது கெடுதல் என்றால் அக்கேட்டினை ஒருவன் தன்னை விற்றாகிலும் பெற்றுக்கொள்ளும் தன்மையை உடையதாகும்.


விளக்கவுரை:

உதவி செய்வவர்களில் பலவகை உண்டு. தன்னால் முடிந்த அளவு என்று ஒரு அளவுகோல் வைத்துக்கொண்டு அதுவரை உதவி செய்வது. அதற்கு மேல் உதவி செய்வதை சுருக்கிக்கொள்வது. மற்றொரு வகையினர் தன்னிடம் பொருள் இருக்கும் வரையிலும் பிறருக்கு கொடுத்து கொடுத்து உதவுவர். இவ்வகையில் அவர்கள் தன்னிடமுள்ள பொருள் அனைத்தையும் இழந்து வறுமை நிலையை அடைவதும் உண்டு. வறுமை உற்றவனிடம் எஞ்சியிருப்பது அவனுடைய உடல், உயிர் மட்டுமே. ஒப்புரவு ஆற்றுவதினால் தன்னை இழக்கும் நிலை உண்டாகினும் அது ஒருவன் பெறத்தக்க பேறு நிலையாகும். குமணவள்ளல் தன் தலையையும் ஈந்து புலவருக்கு உதவி செய்ய முனைந்ததைப் போல. இந்த ஒப்புயர்வற்ற தன்மையானது இம்மைக்கு புகழும் மறுமைக்கு பயனும் விளைவிக்கும்.



uline