இல்லறவியல்

24. புகழ்

( புகழ் நிலைக்க வாழ்தல் )

231. ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
        தூதிய மில்லை யுயிர்க்கு.

232. உரைப்பாரு ரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
        றீவார்மே னிற்கும் புகழ்.

233. ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
        பொன்றாது நிற்பதொன் றில்.

234. நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்
        போற்றாது புத்தே ளுலகு.

235. நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
        வித்தகர்க் கல்லா லரிது.

236. தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
        தோன்றலிற் றோன்றாமை நன்று.

237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
        யிகழ்வாரை நோவ தெவன்.

238. வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
        மெச்சம் பெறாஅ விடின்.

239. வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
        யாக்கை பொறுத்த நிலம்.

240. வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
        வாழ்வாரே வாழா தவர்.



குறள் 231

ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.


சொல்லுரை:

ஈதல் - வறியவர்க்கு வேண்டியதைக் கொடுத்து

இசைபட – புகழ் உண்டாகும்படி

வாழ்தல் – வாழ்வதே சிறந்தது

அதுவல்லது – அப்புகழைத் தவிர

ஊதியம் – வேறு பயன் எதுவும்

இல்லை - இல்லை

உயிர்க்கு – மக்கள் உயிர்க்கு


பொருளுரை:

வறியவர்க்கு வேண்டியதைக் கொடுத்து புகழ் உண்டாகும்படி வாழ்வதே சிறந்தது. மக்கள் உயிர்க்கு அப்புகழைத் தவிர வேறு பயன் எதுவும் இல்லை.


விளக்கவுரை:

இவ்வுலகில் வாழும் மக்களின் உயிர்க்கு வாழ்ந்ததின் பயனாக அமைவது வறியவர்க்கு ஈதலும், அதனால் உண்டாகும் புகழோடு வாழ்வதாகும். இதனைத்தவிர இவ்வுலகில் வாழ்ந்ததின் பயன் வேறு எதுவும் இல்லை. தமிழ்நாட்டை சங்ககாலம் முதல் பல மன்னர்கள் ஆண்டிருந்தாலும் பல செல்வந்தர்கள் வாழ்ந்திருந்தாலும் கடையேழு வள்ளல்களையும் ( பாரி, ஓரி, காரி, பேகன், நல்லி, ஆய், அதியமான் ) சடையப்ப வள்ளல், பண்ணன் போன்ற செல்வந்தர்களாய் இருந்து கொடைவள்ளல் புரிந்தவர்களையும் மட்டுமே இன்றும் மக்கள் போற்றுதலை நினைவு கூர்க.



குறள் 232

உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ்.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.


சொல்லுரை:

உரைப்பார் – புகழ்ந்து பேசுவோர்

உரைப்பவை – சொல்பவை

எல்லாம் – எல்லாம்

இரப்பார்க்கு - யாசிப்பவர்க்கு

ஒன்று - ஒரு பொருளை

ஈவார்மேல் - கொடுப்பவரிடம்

நிற்கும் - நிலைப்பெற்றிருக்கும் கொடைத்தன்மை

புகழ் - புகழே ஆகும்.


பொருளுரை:

இவ்வுலகில் புகழ்ந்து பேசுவோர் சொல்பவை எல்லாம் யாசிப்பவர்க்கு வேண்டிய ஒரு பொருளை கொடுப்பவரிடம் நிலைப்பெற்றிருக்கும் கொடைத்தன்மையாகிய புகழே ஆகும்.


விளக்கவுரை:

உலகில் புகழ்ந்து போற்றுவோர் சொல்பவை எல்லாம் வறியவர்க்கு ஈயும் புகழையே ஆகும். பன்னெடுங்காலம் முதல், இதிகாசங்கள் தொடங்கி இன்றுவரை வறியோர்க்கு ஈவோரையே உலகில் புகழப்படுகிறார்கள். மகாபாரதத்தில் வரும் கர்ணனும் சங்க காலத்தில் வாழ்ந்த கடையேழு வள்ளல்களும் கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல், பண்ணன் போன்றொர்களும் வறியோர்க்கு ஈந்ததினால் புகழ் அடைந்தவர்கள். தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டியர்கள் பேரரசுகளாக இருந்திருந்தாலும் சிற்றரசுகளாக வாழ்ந்த பாரி, ஓரி, காரி, பேகன், நல்லி, ஆய், அதியமான் ஆகியோர்களே கடையேழு வள்ளல்களாக போற்றப்பட்டமை அறிக.



குறள் 233

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்.


சொல்லுரை:

ஒன்றா - ஒப்பில்லாமல்

உலகத்து - இவ்வுலகத்தில்

உயர்ந்த - உயர்ந்த

புகழ்அல்லால் - புகழைத்தவிர

பொன்றாது - அழியாமல்

நிற்பது - நிலைத்திருப்பது

ஒன்று இல் - வேறொன்றும் இல்லை.


பொருளுரை:

ஒப்பில்லாமல் இவ்வுலகத்தில் அழியாமல் நிலைத்திருப்பது உயர்ந்த புகழைத்தவிர வேறொன்றும் இல்லை.


விளக்கவுரை:

உலகத்தில் அழியாமல் நிலைத்திருப்பது ஒருவனின் செய்தற்கரிய செயலால் உண்டாகும் புகழ் மட்டுமே. அதை ‘ஒன்றா உயர்ந்த புகழ்’ என்றார். அதாவது, ஒருவனால் செய்யப்பட்ட செய்தற்கரிய செயலால் ஏற்பட்ட ஒப்பில்லாத உயர்ந்த புகழ் என்பதாம். இதனைத் தவிர ஒருவனுக்கு அழியாமல் நிலைத்து நிற்பது வேறொன்றும் இல்லை. ‘ஒன்றா உலகத்து’ என்பதற்கு ‘பொருந்தாத உலகத்து’ என்று கூறி, பொருள் எதுவும் நிலைத்து நிற்காத இவ்வுலகில் ஒருவனுக்கு அழியாமல் நிலைத்து நிற்பது அவனுடைய புகழ் மட்டுமே என்று உரைப்பாரும் உளர்.



குறள் 234

நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.


சொல்லுரை:

நிலவரை - நிலவுலகின் எல்லையில்

நீள்புகழ் - நீண்ட நெடிய அழியாமல் புகழ்தரும்

ஆற்றின் - செயல்களை செய்வானாயின்

புலவரை - அறிவிற் சிறந்த ஞானிகளை

போற்றாது - பாராட்டாது

புத்தேள் - தேவருடைய

உலகு - உலகம்


பொருளுரை:

நிலவுலகின் எல்லையில் நீண்ட நெடிய அழியாமல் புகழ்தரும் செயல்களை செய்வானாயின் அவனை பாராட்டுமேயன்றி அறிவிற் சிறந்த ஞானிகளைப் பாராட்டாது தேவருடைய உலகம்.


விளக்கவுரை:

இம்மண்ணுலகில் மட்டுமல்லாது விண்ணுலகிலும் ஈகைச்செயலே மிகச்சிறந்த அறமாக போற்றப்படுகிறது. விண்ணுலகில் ஈகைச்செயல் தேவையில்லாத ஒன்றாகிறது. இம்மண்ணுலகில் நீண்ட காலம் அழியாமல் நிற்கும் புகழ்தரும் செயல்களை செய்வோர்களை விண்ணுலகில் உள்ளவர்கள் போற்றுவார்களேயன்றி அறிவிற் சிறந்த ஞானிகளைப் போற்றமாட்டார்கள். ஒருவன் அறிவிற் சிறந்த ஞானியாய் விளங்குவதை விண்ணுலகம் ஏற்றுக்கொண்டாலும் இவ்வுலகில் அழியாமல் புகழ் தரும் ஈகைச்செயல் செய்பவர்களையே மிகச்சிறந்த அறம் ஆற்றியவர்களாகப் போற்றும்.



குறள் 235

நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது.

நத்தம்போல் கேடும் உளதுஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.


சொல்லுரை:

நத்தம்போல் - புகழுடம்பின் கரு வளர்ச்சியடைவதுபோல்

கேடும் - பூதவுடம்பு தளர்ச்சியடைவதும்

உளதுஆகும் - புகழுடம்பின் பிறப்பும்

சாக்காடும் - பூதவுடம்பின் இறப்பும்

வித்தகர்க்கு - வித்தையில் தேர்ந்தவர்களுக்கு, நற்செயலாற்றும் ஈகையாளர்க்கு

அல்லால் - அல்லாமல், தவிர மற்றவர்களுக்கு

அரிது - இல்லை


பொருளுரை:

புகழுடம்பின் கரு வளர்ச்சியடைவதுபோல் பூதவுடம்பு தளர்ச்சியடைவதும், புகழுடம்பின் பிறப்பும் பூதவுடம்பின் இறப்பும் வித்தையில் தேர்ந்தவர்களுக்கு, நற்செயலாற்றும் ஈகையாளர்க்கு அல்லாமல் தவிர மற்றவர்களுக்கு இல்லை.


விளக்கவுரை:

நத்தம் – வளர்ச்சி. நற்செயல் புரிந்து புகழ் அடைவோர் காலம் செல்லச்செல்ல அவர்களின் வயதின் காரணமாக உடல் தளர்ந்து மரணத்தை நோக்கிப் பயணிக்கின்றனர். ஆனால், அவர்கள் ஆற்றும் அறநெறிச் செயல்களால் அவர்களின் புகழ், கரு உண்டாகி நித்தம் ஒரு நாளும் வளர்ச்சியுறுவதுபோல், வளர்ந்துகொண்டே போகிறது. அவர்களின் பருவுடல் வயதின் காரணமாக கேடுபடினும் புகழ் உடலானது கேடின்றி நன்கு வளர்கிறது. அவர்களின் உடலிலிருந்து உயிர் பிரியுங்கால் இதுநாள்வவரை கருவாக வளர்ந்த புகழ் இவ்வுலகில் பிறந்து தோன்றி நிலைபெற்று வாழ்கிறது. இத்தகைய தன்மை, எவ்வகை துன்பம் வரினும் அறநெறி வழியில் வாழும் ஈகைக்குணமுள்ள வாழ்வியல் திறன் மிக்கவர்களுக்கே கைவரப்பெற்றதாகும். மற்றவர்களுக்கு இது வாய்ப்பதில்லை.



குறள் 236

தோன்றிற் புகழோடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதுஇலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.


சொல்லுரை:

தோன்றின் - ஒருவன் இவ்வுலகில் பிறவியெடுத்து வாழ முற்படும்போது

புகழோடு - புகழ் சேர்க்கும் குணநலத்துடன்

தோன்றுக - வாழ முற்படவேண்டும்

அஃதுஇலார் - அக்குணமில்லாதார்

தோன்றலின் – இவ்வுலகில் பிறத்தலினும்

தோன்றாமை - பிறவாமையே

நன்று - நல்லது


பொருளுரை:

ஒருவன் இவ்வுலகில் பிறவியெடுத்து வாழ முற்படும்போது புகழ் சேர்க்கும் குணநலத்துடன் வாழ முற்படவேண்டும். அக்குணமில்லாதார் இவ்வுலகில் பிறத்தலினும் பிறவாமையே நல்லது.


விளக்கவுரை:

ஒருவன் இவ்வுலகில் பிறப்பானாயின் புகழ் உண்டாவதற்கான குணநலப் பண்புகளுடன் பிறக்கவேண்டும். புகழ் உண்டாகும் முறையில் ஒருவன் வாழவில்லையாயின் அவன் இவ்வுலகில் பிறவாமல் இருப்பதே நல்லதாகும். பிறப்பும் பிறவாமையும் அவரவர் விருப்பப்படி நடப்பதன்று. ஊழின் பயனாக, ஒருவன் செய்யும் நல்வினை, தீவினைகளின் பயனாக அமைவது. புகழ் உண்டாவதற்கான நல்வினைகளைச் செய்வானை ‘தோன்றுக’ என்று பாராட்டியும், அதைச் செய்யாதவனை ‘தோன்றற்க’ என்று பழித்தும் கூறினார்.



குறள் 237

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன்.

புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.


சொல்லுரை:

புகழ்பட - புகழ் உண்டாகும்படி

வாழாதார் - வாழ முடியாதவர்

தம்நோவார் - தம்மை நொந்துகொள்ளாமல்

தம்மை - தம்மை

இகழ்வாரை - பழித்துப் பேசுபவர்களை

நோவது - நொந்துகொள்வதினால்

எவன் - என்ன பயன் ?


பொருளுரை:

புகழ் உண்டாகும்படி வாழ முடியாதவர் தம்மை நொந்துகொள்ளாமல் தம்மை பழித்துப் பேசுபவர்களை நொந்துகொள்வதினால் என்ன பயன் ?


விளக்கவுரை:

புகழ் உண்டாகும்படி வாழ முடியாதவர்கள் தம்மையேதான் நொந்துகொள்ளவேண்டும். பிறர் தம்மைப் பழித்துப் பேசுவதனை நொந்துகொள்வதில் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் புகழ்பட வாழாமைக்கும் காரணம் தாமே என்பதை உணரவேண்டும். புகழ் ஏற்பட நல்வினை ஆற்றாது இருந்தது தன்னுடைய குற்றம் என்ற புரிதல் வேண்டும். புகழ்பட வாழவில்லையெனில் மற்றவரால் இகழப்படுவர் என்றும், புகழ் இல்லையெனில் பிறவியின் நல்வினைப்பயனை அடையவில்லை என்பதும் தெளிவு.



குறள் 238

வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
மெச்சம் பெறாஅ விடின்.

வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.


சொல்லுரை:

வசையென்ப - பழிக்கத்தக்கது ஆகும்

வையத்தார்க்கு - உலகத்தார்

எல்லாம் - அனைவருக்கும்

இசையென்னும் - புகழ் என்னும்

எச்சம் - தன் வாழ்விற்குப்பின் இவ்வுலகில் எஞ்சியிருக்கும் செல்வத்தை

பெறாஅ - பெறாது

விடின் - விட்டால்


பொருளுரை:

உலகத்தார் அனைவருக்கும் புகழ் என்னும் தன் வாழ்விற்குப்பின் இவ்வுலகில் எஞ்சியிருக்கும் செல்வத்தைப் பெறாது விட்டால் அது பழிக்கத்தக்கது ஆகும்.


விளக்கவுரை:

உலகில் வாழ்வோர் தாம் வாழும் காலத்தில் பெறத்தக்கது இவ்வுலகில் புகழ் ஒன்று மட்டுமே. தாம் இவ்வுலகை விட்டு நீங்கியபிறகு எஞ்சி நிற்பது புகழ் மட்டுமே. அதனால் புகழை எச்சம் என்றார். தம் வாழ்விற்குப் பின் இவ்வுலகில் தம்முடையதாக எஞ்சியிருக்கும் ஒரே பொருளாகிய புகழை ஒருவன் பெறாவிட்டால் அது பழிக்கதக்கது ஆகும்.



குறள் 239

வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.


சொல்லுரை:

வசையிலா - பழி இல்லாத

வண்பயன் - வளமான விளைவு

குன்றும் - குறையும்

இசையிலா - புகழ் இல்லாத

யாக்கை - உடம்பை

பொறுத்த - சுமந்த

நிலம் - இப்பூவுலகம்


பொருளுரை:

புகழ் இல்லாத உடம்பை சுமந்த இப்பூவுலகிற்கு அதனுடைய பழி இல்லாத வளமான விளைவு குறையும்.


விளக்கவுரை:

புகழ் இல்லாமல் வாழ்பவரை உயிருடன் வாழ்பவராக கருதப்படுவதில்லை. அதனாலேயே ‘இசையிலா யாக்கை’ என்றார். அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகில் இருப்பதை, தான் தேவையில்லாமல் சுமப்பதாகவே கருதுகிறது இந்த நிலம். பொறுமைக்கு சிகரமாகிய இப்பூவுலகம் புகழ் இல்லாதவர்களை சுமப்பதால் தன்னுடைய பழி இல்லாத விளைச்சலை உண்டாக்கும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும்.



குறள் 240

வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.


சொல்லுரை:

வசையொழிய - பழியின்றிப் புகழுடன்

வாழ்வாரே - வாழ்கின்றவர்களே

வாழ்வார் - உயிர் வாழ்கின்றவர்கள்

இசையொழிய - புகழின்றி பழியுடன்

வாழ்வாரே - வாழ்கின்றவர்கள்

வாழாதவர் - உயிர் வாழாதவர்கள் ஆவார்.


பொருளுரை:

பழியின்றிப் புகழுடன் வாழ்கின்றவர்களே உயிர் வாழ்கின்றவர்கள். புகழின்றி பழியுடன் வாழ்கின்றவர்கள் உயிர் வாழாதவர்கள் ஆவார்.


விளக்கவுரை:

பழிபாவத்திற்கு இடமின்றி புகழுடன் இவ்வுலகில் வாழ்பவர்களே உயிரோடு வாழ்பவர்களாக கருதப்படுவார்கள். புகழ் எதுவுமின்றி பழி பாவங்கள் செய்ய அஞ்சாமல் வாழ்பவர்கள் உலகில் உயிருடன் வாழ்வதாக எண்ணப்படமாட்டார்கள். இவ்வுலகில் இல்லறத்தில் வாழ்பவர்கள் அடையக்கூடிய பயன் புகழுடன் வாழ்வதே. அதுவே இல்லறத்தின் உயர்ந்த நிலை. அதனாலேயே இவ்வதிகாரம் இல்லறவியலில் கடைசி அதிகாரமாக வைக்கப்பட்டுள்ளது.



uline