துறவறவியல்

25. அருளுடைமை

( எல்லா உயிர்களிடத்தும் கருணை உணர்வுடன் இருத்தல் )

241. அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
        பூரியார் கண்ணு முள.

242. நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
        றேரினு மஃதே துணை.

243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
        வின்னா வுலகம் புகல்.

244. மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
        தன்னுயி ரஞ்சும் வினை.

245. அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
        மல்லன்மா ஞாலங் கரி.

246. பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி
        யல்லவை செய்தொழுகு வார்.

247. அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
        கிவ்வுலக மில்லாகி யாங்கு.

248. பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா
        ரற்றார்மற் றாத லரிது.

249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேறி
        னருளாதான் செய்யு மறம்.

250. வலியார்முற் றன்னை நினைக்கதான் றன்னின்
        மெலியார்மேற் செல்லு மிடத்து.

குறள் 241

அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.


சொல்லுரை:

அருள்செல்வம் - அருள் ஆகிய செல்வம்

செல்வத்துள் - செல்வங்களில் எல்லாம்

செல்வம் - சிறந்த செல்வமாகும்

பொருள்செல்வம் - பொருள் ஆகிய செல்வம்

பூரியார் - கீழ்மக்கள்

கண்ணும் - இடத்தும்

உள - உள்ளதாகும்


பொருளுரை:

அருள் ஆகிய செல்வம் செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும். பொருள் ஆகிய செல்வம் கீழ்மக்களிடத்தும் உள்ளதாகும்.


விளக்கவுரை:

பொருட்செல்வம் எல்லா மக்களிடத்தும் உள்ள செல்வமாகும். நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு இன்றி எல்லாரும் அடையக்கூடிய செல்வமாக பொருட்செல்வம் உள்ளது. ஆனால் அருட்செல்வமோ எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வாழ்வோர்க்கே அருட்செல்வம் வாய்க்கப்பெறும். அதனாலேயே “அருள் கருதி அன்புடையராதல் “ என்று கள்ளாமை என்னும் அதிகாரத்தில் கூறுவார். தூய அன்பு உள்ளத்துடன் ஒழுகி வாழ்பவர்க்கே அருள் வாய்க்குமாதலால் அருட்செல்வம் செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வமாக போற்றப்படுகிறது.



குறள் 242

நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை.

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.


சொல்லுரை:

நல்ஆற்றான் - நல்வழியில் நின்று

நாடி - அறிவுக்கு உகந்தவற்றை ஆராய்ந்து

அருள்ஆள்க - அருளினை ஆளவேண்டும்

பல்ஆற்றால் - பல வழிகளில்

தேரினும் - ஆராய்ந்து பார்க்கினும்

அஃதே - அவ்வருளே

துணை - துணையாகும்.


பொருளுரை:

நல்வழியில் நின்று, அறிவுக்கு உகந்தவற்றை ஆராய்ந்து அருளினை ஆளவேண்டும். பல வழிகளில் ஆராய்ந்து பார்க்கினும் அவ்வருளே துணையாகும்.


விளக்கவுரை:

நல்ல நெறிகளை எல்லாம் ஆராய்ந்து தெளியவேண்டும். அந்த நல்ல நெறிகளே ஒருவனுக்கு அருள் தன்மையை பெற வல்லது. அருள் ஆள்வதற்கு நல்ல நெறிகளாக சொல்லப்படுவன யாதெனில் உலகின் எல்லாவகை உயிர்களிடத்தும் அன்புடையவராய் இருத்தல், பிற உயிர்களின் ஊன் உண்ணாமை, பிற உயிர்களைக் கொல்லாமை, பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமை, பிறர் பொருளைக் கவர நினையாமை போன்றனவாகும். பற்பல சமயங்கள் கூறும் அறவழிகளை ஆராய்ந்து பார்த்தாலும் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துணையாக இருப்பது அவனுடைய அருள் தன்மையே ஆகும்.



குறள் 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
வின்னா வுலகம் புகல்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.


சொல்லுரை:

அருள்சேர்ந்த - அருள் நிறைந்த

நெஞ்சினார்க்கு - உள்ளம் உடையவர்க்கு

இல்லை - இல்லை

இருள்சேர்ந்த - பாவங்கள் நிறைந்த

இன்னா உலகம் - துன்பமயமான நரகம்

புகல் - புகுதல், அடைதல்


பொருளுரை:

அருள் நிறைந்த உள்ளம் உடையவர்க்கு பாவங்கள் நிறைந்த துன்பமயமான நரக உலகம் அடைதல் இல்லை.


விளக்கவுரை:

அருள் நிறைந்த நெஞ்சம் கொண்டு துறவு வாழ்வு வாழ்பவர்க்கு பாவங்கள் நிறைந்த துன்பமயமான நரக உலகத்துள் புகுதல் இல்லை. அருள் தன்மையை அடைதல் துறவறத்தின் முதல் படி. அருள் தன்மையை உடையவன் அனைத்தையும் ஆராய்ந்து அறியும் தன்மையும், அவ்வாறு ஆராய்ந்து தெளிந்தவற்றில் நல்நெறிகளை பின்பற்றும் மனஉறுதியை பெற்றவனவாகவும் திகழ்வதால் அதுவே அவனுக்கு நரக உலகத்தினுள் புகும் தன்மையை தடுத்துக் காக்கிறது.



குறள் 244

மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.


சொல்லுரை:

மன்உயிர் - நிலைபெற்ற உயிர்களை

ஓம்பி - பாதுகாத்து

அருள்ஆள்வார்க்கு - அவ்வுயிர்களிடத்து அருளாய் இருப்பவர்க்கு

இல்என்ப - இல்லை என்பர்

தன்னுயிர் - தன்னுடைய உயிர் பற்றி

அஞ்சும் - அஞ்சும்

வினை - செயல்


பொருளுரை:

நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாத்து அவ்வுயிர்களிடத்து அருள் தன்மையுடன் நடந்துகொள்பவர்க்கு தன்னுடைய உயிர் பற்றி அஞ்சும் செயல் இல்லை என்பர்.


விளக்கவுரை:

இவ்வுலகில் மற்ற உயிர்களிடம் அன்புடனும் பரிவுடனும் நடந்துகொள்பவனுக்கு தீவினைகள் ஏதும் நேரிடாது. அதனால் தன்னுடைய உயிரைப்பற்றி அஞ்சிட வேண்டியதில்லை. பிறவிதோறும் உடல் மட்டுமே மாறுகிறது. ஆனால், உயிர்கள் எல்லாம் நிலையானது. அதனால் ‘மன்னுயிர்’ எனப்பட்டது.



குறள் 245

அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி.

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.


சொல்லுரை:

அல்லல் - துன்பம்

அருளாள்வார்க்கு - அருள் உள்ளம் கொண்டவர்க்கு

இல்லை - இல்லை

வளிவழங்கும் - காற்று உலவுகின்ற

மல்லன் - வளம் நிறைந்த

மாஞாலம் - பெரிய நிலவுலகில் வாழ்வோரே

கரி - சான்று


பொருளுரை:

அருள் உள்ளம் கொண்டவர்க்கு துன்பம் இல்லை. காற்று உலவுகின்ற வளம் நிறைந்த பெரிய நிலவுலகில் வாழ்வோரே சான்று.


விளக்கவுரை:

அருள் உள்ளம் கொண்டவர்க்கு துன்பம் உண்டாதல் இல்லை. எப்படியெனில், அவர்களுக்கு தீவினைகள் உண்டாகாது ஆகையால் துன்பம் நேரிடாது. ஒருகால் பிறவிப்பயனால் துன்பம் உண்டானாலும், அருள் உள்ளம் கொண்டவர்கள் பிறவிப்பயனால் வரும் துன்பங்களின் தன்மையை உணர்ந்தவர்கள் ஆதலால் அத்துன்பத்தை துன்பமாகக் கருதாமல் அதை பிறவியறுத்தலுக்கான வழியாகத் தெளிந்து, அத்துன்பத்தை விட்டு அகலாமல் அதை அனுபவித்துக் கடப்பர். எனவே, அருள் உள்ளம் கொண்டவர்க்கு துன்பம் என்று ஒன்று இவ்வுலகில் இல்லவே இல்லை. அவ்வாறு அருள் உள்ளம் கொண்டு வாழ்பவர்கள் இடமானது வளம் நிறைந்த இடமாகவே இருக்கும். ஏனெனில், அவர்கள் மற்ற உயிர்களின் நலனையே முதற்கண் கொண்டு வாழ்வதால். அருள் உள்ளம் கொண்டோர்களாலேயே இவ்வுலகம் எல்லா வளங்களும் பெற்று வாழ்கிறது என்பதாம்.



குறள் 246

பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி
யல்லவை செய்தொழுகு வார்.

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.


சொல்லுரை:

பொருள்நீங்கிப் - அறம் என்ற உறுதிப் பொருளிலிருந்து நீங்கி

பொச்சாந்தார் - தம்மை மறந்தவர் ஆவர்

என்பர் - என்று சொல்வர்

அருள்நீங்கி - அருளைத் தம் உள்ளத்தில் இருத்தாது

அல்லவை - கெடுதல்களை

செய்தொழுகு வார் - செய்து நடப்பவர்கள்


பொருளுரை:

அருளைத் தம் உள்ளத்தில் இருத்தாது கெடுதல்களை செய்து நடப்பவர்கள் அறம் என்ற உறுதிப் பொருளிலிருந்து நீங்கி தம்மை மறந்தவர் ஆவர் என்று சொல்லப்படுவர்.


விளக்கவுரை:

அறம் என்ற உறுதிப்பொருளிலிருந்து நீங்கி அந்த அறத்தினை செய்ய மறந்ததினால் ஏற்பட்ட விளைவே, பிற உயிர்களிடத்து செய்யவேண்டிய அருளைத் தம் உள்ளத்தில் இருத்தாது கெடுதல்களை செய்து நடக்கும் தன்மையினர் ஆனது.



குறள் 247

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.


சொல்லுரை:

அருள்இல்லார்க்கு - அருள் இல்லாதவர்க்கு

அவ்வுலகம் - வீடுபேறு உலகம்

இல்லை - இல்லை

பொருளில்லார்க்கு - பொருள் இல்லாதவர்க்கு

இவ்வுலகம் - இந்தப் பூவுலக வாழ்க்கையானது

இல்ஆகி - இல்லாமல் ஆவது

யாங்கு - ஆங்கு


பொருளுரை:

பொருள் இல்லாதவர்க்கு இந்தப் பூவுலக வாழ்க்கையானது இல்லாமல் ஆவது போல அருள் இல்லாதவர்க்கு வீடுபேறு உலகம் இல்லை.


விளக்கவுரை:

பொருள் இல்லாத ஒருவர் இவ்வுலக வாழ்க்கையை நடத்துவது இயலாதது. இல்லற வாழ்வு நடத்துவதற்கு அறவழியில் ஈட்டிய பொருள் இன்றியமையாதது. அதுபோல துறவற வாழ்வு மேற்கொண்டு வீடுபேறு உலகம் அடைய முனைவோர்க்கு பிற உயிர்களிடத்து காட்டும் அருள் தன்மை இன்றியமையாதது. துறவு வாழ்வே அருள் தன்மையை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்படுவது. அருள் தன்மை இல்லையெனில் வீடுபேறு உலகம் கிட்டுவதற்கான வழியில்லை என்பதாம்.



குறள் 248

பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா
ரற்றார்மற் றாத லரிது.

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.


சொல்லுரை:

பொருள் அற்றார் - பொருட்செல்வம் இழந்து வறுமையுற்றவர்

பூப்பர் - செல்வம் அடைந்து பொலிவடையக்கூடும்

ஒருகால் - பின் ஒரு காலத்தில்

அருள் அற்றார் - அருள் செல்வத்தை இழந்தவர்களோ

அற்றார் - அழிந்தவரே ஆவர்

மற்று - பிறிதொரு சமயத்திலும்

ஆதல் - அந்த அழிவு நிலையிலிருந்து மீண்டு சிறப்புடையவராதல்

அரிது - இயலாதது ஆகும்.


பொருளுரை:

பொருட்செல்வம் இழந்து வறுமையுற்றவர் பின் ஒரு காலத்தில் அந்த பொருட்செல்வத்தை மீண்டும் அடைந்து பொலிவடையக்கூடும். ஆனால், அருட்செல்வத்தை இழந்தவர்களோ அழிந்தவரே ஆவர். பிறிதொரு சமயத்திலும் அந்த அழிவு நிலையிலிருந்து மீண்டு சிறப்புடையவராதல் இயலாதது ஆகும்.




விளக்கவுரை:

பொருட்செல்வமானது ஒருவனுடைய வாழ்வில் வரும்; போகும். பொருட்செல்வம் நிலையற்ற தன்மையுடையது. பிறவிப்பயனால் ஒருவன் தான் ஈட்டிய பொருளை இழந்துவிட்டாலும் மீண்டும் தன் முயற்சியினாலும் உழைப்பினாலும் இழந்த பொருளை மீண்டும் பெற்று, தன்னுடைய வறுமையைப் போக்கிக்கொண்டு சிறப்புற வாழமுடியும். ஒருவன் பொருளை இழந்து வறுமை உறுவதினாலோ அல்லது மீண்டும் பொருளீட்டி சிறப்புற வாழ்வதினாலோ அவனுடைய தனித்தன்மை பாதிக்கப்படுவதில்லை. ஆனால் பிற உயிர்களிடத்து அருளைப் பொழிந்து வாழவேண்டிய துறவி, அந்த அருள் குணத்தை இழந்து கடுமையாக நடந்துகொள்வானாயின் அதனால் அவனுக்கு பழியே உண்டாகும். அந்தப் பழியானது அவனுக்கு அழிவையே கொடுக்கும். துறவி தான் இழந்த அருள் குணத்தை மீண்டும் அடைவது என்பது இயலாதது ஆகும்.

குறள் 249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேறி
னருளாதான் செய்யு மறம்.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.


சொல்லுரை:

தெருளாதான் - அறிவில்லாதவன்

மெய்ப்பொருள் - மெய்ந்நூல்கள் சொல்லும் உண்மைப்பொருளை

கண்டற்றால் - கண்டது போலாகும்

தேரின் - ஆராய்ந்து பார்க்கின்

அருளாதான் - அருள் இல்லாதவன்

செய்யும் - செய்யும்

அறம் - அறமானது.


பொருளுரை:

ஆராய்ந்து பார்க்கின் அருள் இல்லாதவன் செய்யும் அறமானது அறிவில்லாதவன் மெய்ந்நூல்கள் சொல்லும் உண்மைப்பொருளை கண்டது போலாகும்.


விளக்கவுரை:

தெருள் – தெளிவு, அறிவு. எதையும் ஆராய்ந்து தெளியும் தன்மை இல்லாதவன் மெய்ந்நூல்கள் கூறும் உண்மைப்பொருளை புரிந்துகொள்ளுதல் இயலாதது. அதுபோல பிற உயிர்களிடத்து அருள் பொழியும் தன்மை இல்லாதவன் அறம் செய்வதும் இயலாதது. அறத்தின்வழி வாழ்வதற்கு அருள் தன்மை முக்கியம் என்பது பொருள்.



குறள் 250

வலியார்முற் றன்னை நினைக்கதான் றன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து.

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.


சொல்லுரை:

வலியார்முன் - தன்னைக் காட்டிலும் வலியவர்முன்

தன்னை - தான் அஞ்சி நிற்கும் நிலையினை

நினைக்க - நினைத்துப் பார்க்கவேண்டும்

தான் - அருள் தன்மை இன்றி ஒருவன்

தன்னின் - தன்னைக் காட்டிலும்

மெலியார்மேல் - வலிமை குறைந்த எளியவர்மேல்

செல்லும் - துன்புறுத்தச் செல்லும்

இடத்து - சமயத்தில்


பொருளுரை:

அருள் தன்மை இன்றி ஒருவன் தன்னைக் காட்டிலும் வலிமை குறைந்த எளியவர்மேல் துன்புறுத்தச் செல்லும் சமயத்தில் தன்னைவிட வலியவர்முன் தான் அஞ்சி நிற்கும் நிலையினை நினைத்துப் பார்க்கவேண்டும்.


விளக்கவுரை:

ஒருவன் தன்னைவிட வலிமை குறைந்த எளிய உயிர்களின்மேல் வெகுண்டெழுந்து துன்புறுத்த முனைவது தவறாகும். எடுத்துக்காட்டாக, மனிதன் தன்னைவிட வலிமை குறைந்த மற்ற உயிர்களாகிய ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள் முதலியவற்றின்மீதோ அல்லது தன்னைவிட வலிமை குறைந்த மனிதனின்மீதோ வெகுண்டு எழும்போது அவ்வுயிர்களுக்கு பெருந்துன்பத்தைச் செய்கின்றான். அது அவன் பிற உயிர்களின்மீது அருள்தன்மை கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அவ்வாறு நடந்துகொள்பவன், தன்னைவிட வலிமைமிகுந்த மனிதனிடமோ அல்லது பிற உயிர்களிடமோ தான் எவ்வாறு அஞ்சுவோம் என்பதை உணர்வானாயின் அதுவே அவன் பிற உயிர்களிடத்து அருள் குணம் காட்டுவதற்கு முதற்படியாக அமையும்.



uline