துறவறவியல்

26. புலான்மறுத்தல்

( இறைச்சி உண்ணுதலை விலக்கல் )

251. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
        னெங்ஙன மாளு மருள்.

252. பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
        யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.

253. படைகொண்டார் நெஞ்சம்போ னன்னூக்கா தொன்ற
        னுடல்சுவை யுண்டார் மனம்.

254. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
        பொருளல்ல தவ்வூன் றினல்.

255. உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
        வண்ணாத்தல் செய்யா தளறு.

256. தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
        விலைப்பொருட்டா லூன்றருவா ரில்.

257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
        புண்ண துணர்வார்ப் பெறின்.

258. செயிரிற் ற்லைப்பிரிந்த காட்சியா ருண்ணா
        ருயிரிற் றலைப்பிரிந்த வூன்.

259. அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
        னுயிர்செகுத் துண்ணாமை நன்று.

260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
        யெல்லா வுயிருந் தொழும்.

குறள் 251

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்.

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.


சொல்லுரை:

தன்ஊன் - தன்னுடைய உடலை

பெருக்கற்கு - வளர்ப்பதற்கு

தான்பிறிது - தான் பிற உயிர்களின்

ஊன்உண்பான் - உடலைத் தின்பவனுக்கு

எங்ஙனம் - எவ்வாறு

ஆளும் - உண்டாகும்

அருள் - அருள் தன்மையானது


பொருளுரை:

தன்னுடைய உடலை வளர்ப்பதற்கு தான் பிற உயிர்களின் உடலைத் தின்பவனுக்கு அருள் தன்மையானது எவ்வாறு உண்டாகும் ?


விளக்கவுரை:

ஒருவனுக்கு அருள் தன்மை உண்டாவதற்கு அடிப்படையானது அவன் பிற உயிர்களிடத்துக் காட்டும் அன்பு ஆகும். அவ்வாறிருக்க, பிற உயிர்களைக் கொன்று அதனின் உயிரற்ற உடலைத் தின்று தன்னுடைய உடலை வளர்ப்பவன், பிற உயிர்களிடத்தில் அவன் அன்பை செலுத்தவில்லை என்பதையே காட்டுகிறது. அவன் மனத்தில் அருள் தன்மை துளிர்விடாது. அன்புடைமை அற்றவனுக்கு அருளுடைமை கைவரப்பெறாது.



குறள் 252

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.


சொல்லுரை:

பொருளாட்சி - பொருளைக் கைவரப்பெற்று வாழும் வாழ்வு

போற்றாதார்க்கு - அப்பொருளைப் போற்றி பாதுகாக்காதவர்க்கு

இல்லை - இல்லை

அருளாட்சி - அருளைக் கைவரப்பெற்று வாழும் வாழ்வு

ஆங்கு - அதுபோல

இல்லை - இல்லை

ஊன் - உயிர் பிரிந்த உடலை

தின்பவர்க்கு - தின்பவர்க்கு


பொருளுரை:

பொருளைக் கைவரப்பெற்று வாழும் வாழ்வு அப்பொருளைப் போற்றி பாதுகாக்காதவர்க்கு இல்லை. அதுபோல, அருளைக் கைவரப்பெற்று வாழும் வாழ்வு உயிர் பிரிந்த உடலைத் தின்பவர்க்கு இல்லை.


விளக்கவுரை:

நல்வழியில் ஈட்டிய பொருளாயினும் அதனைப் போற்றி பாதுகாக்கவேண்டும். பொருளைப் போற்றி பாதுகாத்து வாழ்பவற்கே அப்பொருளின் பயன் கிட்டும். அதுபோல, தன்னிடம் அருள்தன்மை நிலைகொண்டிருக்க வேண்டுமெனின் ஒருவன் பிற உயிர்களின் உயிரற்ற உடலைத் தின்பதை விடவேண்டும்.



குறள் 253

படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்ற
னுடல்சுவை யுண்டார் மனம்.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.


சொல்லுரை:

படைகொண்டார் - பகைவர்களை அழிக்க கொலைக்கருவிகளை கையில் ஏந்தியவர்களின்

நெஞ்சம்போல் - மன உணர்வுகளைப் போல

நன்றுஊக்காது - நல்லனவற்றை எண்ணாது

ஒன்றன் - ஒரு உயிரின்

உடல்சுவை - உயிர் பிரிந்த உடலினைத் தின்று அந்த சுவையினை

உண்டார் - உண்ட

மனம் - மனம்


பொருளுரை:

பகைவர்களை அழிக்க கொலைக்கருவிகளை கையில் ஏந்தியவர்களின் மன உணர்வுகளைப் போல, ஒரு உயிரின் உயிர் பிரிந்த உடலினைத் தின்று அந்த சுவையினை உண்ட மனமானது நல்லனவற்றை எண்ணாது.


விளக்கவுரை:

பகைவர்களை அழிக்க கொலைக்கருவிகளை கையில் ஏந்தியவனின் மனம் பிறிதொரு உயிரினை அழிப்பதற்கு எவ்வகையிலும் அஞ்சாது. அந்த மனம் பகைவர்களை கொன்றழிப்பதிலேயே தீவிர சிந்தனை உடையதாயிருக்கும். அதுபோல, பிற உயிரினைக் கொன்று அதனுடைய உடலைத் தின்று, அந்த சுவையைக் கண்டுவிட்ட மனமானது பிற உயிர்களின்மேல் அன்பு செலுத்தும் தன்மையைக் கொண்டிராது. அதனால், மனமானது அருள் நெறியில் நாட்டத்தைக் காட்டாது.



குறள் 254

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல்.

அருள்அல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருள்அல்லது அவ்வூன் தினல்.


சொல்லுரை:

அருள் - அருள் என்பது

அல்லது - அருள் அல்லது என்பது

யாதெனில் - யாது என்றால்

கொல்லாமை - எந்த ஒரு உயிரையும் கொல்லாது இருத்தலாகும்

கோறல் - ஒரு உயிரை கொல்லுதலாகும்

பொருள்அல்லது - பொருளற்ற தன்மையாகும்

அவ்வூன் - உயிரற்ற உடலை

தினல் - தின்பது


பொருளுரை:

அருள் என்பது யாது என்றால் எந்த ஒரு உயிரையும் கொல்லாது இருத்தலாகும். ஒரு உயிரைக் கொல்லுதல் அறம் அற்றது ஆகும். கொன்ற உயிரற்ற உடலைத் தினல் பொருளற்ற தன்மையாகும்.


விளக்கவுரை:

அருள் தன்மை என்பது எந்த உயிரையும் எந்த காரணத்திற்காகவும் கொல்லாது இருத்தல் ஆகும். அவ்வாறின்றி, ஒரு உயிரைக் கொல்லுதல் அருளற்ற தன்மையாகும். அருள்நெறியை மேற்கொண்டவன், ஒரு உயிரைக் கொன்று அதனின்று கிடைக்கும் ஊனினை தின்பது அறநெறி பொருளற்ற தன்மையாகும்.



குறள் 255

உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.


சொல்லுரை:

உண்ணாமை - ஊன் உண்ணாது

உள்ளது - இருத்தலே

உயிர்நிலை - ஒருவன் உயிர் வாழும் தன்மையாகும்

ஊன்உண்ண - ஊன் உண்ணுபவனை

அண்ணாத்தல் - வாய்திறத்தல்

செய்யாது - செய்யாது

அளறு - நரகம்


பொருளுரை:

ஊன் உண்ணாது இருத்தலே ஒருவன் உயிர் வாழும் தன்மையாகும். ஊன் உண்ணுபவனை நரகம் வெளியில் விடாது.


விளக்கவுரை:

ஊன் உண்ணாது இருத்தலே ஒருவன் உயிர் வாழும் தன்மைக்கு பொருள் சேர்க்கும். அண்ணம் என்பது வாயின் மேல்பகுதியைக் குறிக்கும். அண்ணாத்தல் என்பது வாயினை ஆவென்று திறப்பதைக் குறிக்கும். ஊன் உண்பவன் நரகத்தை அடைவது உறுதி என்பதும் அவனை நரகம் வெளியில் விடாது என்பதும், அவன் மீண்டும் பிறவி பெற்று தான் செய்த பாவத்தை அனுபவித்தே தீரவேண்டும் என்பதும் பொருள்.



குறள் 256

தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்.

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.


சொல்லுரை:

தினற்பொருட்டால் - தின்பதன் பொருட்டு

கொல்லாது - பிற உயிர்களைக் கொல்லமாட்டார்கள்

உலகெனின் - உலகில் உள்ளவர்கள் என்றால்

யாரும் - இவ்வுலகில் யாரும்

விலைப்பொருட்டால் - விற்பதன் பொருட்டு

ஊன்தருவார் - பிற உயிர்களைக் கொன்று ஊன் தருபவர்கள்

இல் - இருக்கமாட்டார்கள்


பொருளுரை:

தின்பதன் பொருட்டு பிற உயிர்களைக் கொல்லமாட்டார்கள் உலகில் உள்ளவர்கள் என்றால் இவ்வுலகில் யாரும் விற்பதன் பொருட்டு பிற உயிர்களைக் கொன்று ஊன் தருபவர்கள் இருக்கமாட்டார்கள்.


விளக்கவுரை:

புலால்கறியை தின்பதற்காக ஓர் உயிரைக் கொன்றால் அக்கொலைக்குற்றம் கொன்றவனையேச் சாரும் என்றும் புலால்கறி தின்றவனைச் சாராது என்றும் புத்தசமய அறவழியாகக் கூறப்பட்டதற்கு எதிர்கூற்றாக இக்குறள் அமைந்துள்ளது. ஊன் தின்பதற்கு வீட்டிலேயே உயிர்க்கொலை செய்து உண்பாரும், விலைக்கு புலால்கறி வாங்கி உண்பாரும் என இரு வகையினர். புலால்கறி தின்பவனே ஒரு உயிரைக்கொன்று புலால்கறி விற்பதற்கும் காரணமாக இருப்பதால் ஒரு உயிரைக் கொல்லும் குற்றம் தின்றவனையும் கொன்றவனையும் ஆகிய இருவரையுமே சேரும் என்பதாம்.



குறள் 257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.


சொல்லுரை:

உண்ணாமை - உண்ணாது

வேண்டும் - இருத்தல் வேண்டும்

புலாஅல் - பிற உயிர்களின் உயிர் நீக்கப்பட்ட உடலை

பிறிதுஒன்றன் - அது பிறிதொரு உயிரின்

புண்அது - செத்துப்போய் கெட்டுப்போன உடல்பாகத்தின் புண் என்று

உணர்வார்ப் - உணர்ந்தவர்கள்

பெறின் - ஆனால்


பொருளுரை:

புலால் என்பது பிறிதொரு உயிரின் செத்துப்போன உடல்பாகத்தின் புண்ணே ஆகும். இதை ஒருவர் உணர்ந்து தெளிந்தவர்களானால் பிற உயிர்களின் உயிர் நீக்கப்பட்ட உடலை உண்ணாது இருத்தல் வேண்டும்.


விளக்கவுரை:

ஒருவனுடைய உடலில் இரத்தம் செத்துப்போன பகுதியே புண்ணாக மாறுகிறது. புலாலும் பிறிதொரு உயிரினைக் கொல்வதினால் உயிரற்ற உடலிலிருந்து வெட்டப்பட்ட புண்ணே என்பதை ஒருவன் உணர்ந்து தெளிதல் வேண்டும். அங்ஙனம் தெளிவுற்றவராயின் புலாலை உண்ணார் என்பது கருத்து.



குறள் 258

செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைப்பிரிந்த வூன்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.


சொல்லுரை:

செயிரின் - மயக்கமாகிய குற்றத்தின்

தலைப்பிரிந்த - நீங்கிய

காட்சியார் - அறிவினையுடையோர்

உண்ணார் - உண்ணமாட்டார்கள்

உயிரின் - ஓர் உடலிலிருந்து உயிர்

தலைப்பிரிந்த - நீங்கி வந்த

ஊன் -ஊனினை


பொருளுரை:

ஓர் உடலிலிருந்து உயிர் நீங்கி வந்த ஊனினை மயக்கமாகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையோர் உண்ணமாட்டார்கள்.


விளக்கவுரை:

பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்கும் குற்றத்தை விட்டொழித்து நல்வழியில் செல்லுதலை மேற்கொண்டோர் தெளிந்த அறிவினை உடையோர் ஆவர். அவ்வகை தெளிவுற்றோர், பிற உயிர்களுக்குத் துன்பத்தை விளைவித்துக் கொன்று புலாலை உண்ணார் என்பது கருத்து. உயிரினின்று நீங்கிய உடல் பிணமென்று உணர்தலால் அதனை உண்ணார் என்பதாம்.



குறள் 259

அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.


சொல்லுரை:

அவிசொரிந்து - நெய் முதலியவற்றை சொரிந்து

ஆயிரம் - ஆயிரம்

வேட்டலின் - வேள்விகளை செய்வதைக் காட்டிலும்

ஒன்றன் - ஒரு உயிரியின்

உயிர்செகுத்து - உயிரினைப் பிரித்து

உண்ணாமை - உயிரற்ற உடலை உண்ணாது இருத்தல்

நன்று - நல்லதாகும்


பொருளுரை:

நெய் முதலியவற்றை சொரிந்து ஆயிரம் வேள்விகளை செய்வதைக் காட்டிலும் ஒரு உயிரியின் உயிரினைப் பிரித்து உயிரற்ற உடலை உண்ணாது இருத்தல் நல்லதாகும்.


விளக்கவுரை:

தேவர்களை மகிழ்வித்து நன்மையும் வலிமையும் பெறும் பொருட்டு துறவிகள் வேள்விகளைச் செய்வது உண்டு. துறவிகள் மட்டுமல்லாது இல்லற வாழ்வில் ஈடுபட்டு வாழ்வோரும் நாட்டின் நலன் மற்றும் குடும்ப நலன் வேண்டி, அரசர்களும் மக்களும்கூட இவ்வகை வேள்விகளை அந்தணர்கள்மூலம் செய்வது உண்டு. ஆனால், இவ்வகை வேள்விகளைச் செய்து பெறும் நன்மைகள் மற்றும் வல்லமைகளைவிட ஒரு உயிரியின் உயிரினைப் பிரித்து அதன் உடலை உண்ணாது இருத்தலால் உண்டாகும் நன்மையே உண்மையான நன்மை என்பதாம்.



குறள் 260

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.


சொல்லுரை:

கொல்லான் - ஓர் உயிரையும் கொல்லாதவனாகவும்

புலாலை - ஊன் உண்ணுதலை

மறுத்தானைக் - மறுத்தவனாய் இருப்பவனை

கைகூப்பி - கையைக் குவித்து

எல்லா - எல்லா

உயிரும் - உயிர்களும்

தொழும் - வணங்கும்


பொருளுரை:

ஓர் உயிரையும் கொல்லாதவனாகவும் ஊன் உண்ணுதலை மறுத்தவனாய் இருப்பவனை கையைக் குவித்து எல்லா உயிர்களும் வணங்கும்.


விளக்கவுரை:

பிற உயிர்களைக் கொல்பவன் ஊன் உண்ணாதவனாகவும் இருக்கலாம். புலால் உண்பவன் பிற உயிர்களைக் கொல்பவனாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் பிற உயிர்களைக் கொல்வதும், புலால் உண்பதும் பிற உயிர்களுக்கு தீங்கிழைக்கும் கருணை இல்லாத செயலாகும். இவ்விரு குற்றங்களையும் செய்யாதிருப்பவன் உள்ளத்தில்தான் அருள் தன்மை குடிகொண்டிருக்கும். உலகில் உள்ள எந்த உயிர்க்கும் தீங்கிழக்காத, அருள் தன்மை நிறைந்த உள்ளங்களை உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் கைகூப்பி வணங்கும்.



uline