துறவறவியல்

27. தவம்

( தவம் செய்யும் நெறியும் அதன் வலிமையும் )

261. உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
        யற்றே தவத்திற் குரு.

262. தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
        யஃதிலார் மேற்கொள் வது.

263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
        மற்றை யவர்க டவம்.

264. ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
        மெண்ணிற் றவத்தான் வரும்.

265. வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
        மீண்டு முயலப் படும்.

266. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
        ரவஞ்செய்வா ராசையுட் பட்டு.

267. சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
        சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

268. தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
        மன்னுயி ரெல்லாந் தொழும்.

269. கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
        னாற்ற றலைப்பட் டவர்க்கு.

270. இலர்பல ராகிய காரண நோற்பார்
        சிலர்பலர் நோலா தவர்.

குறள் 261

உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு.

உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.


சொல்லுரை:

உற்றநோய் - தமக்கு நேரிடும் துன்பத்தை

நோன்றல் - பொறுத்துக் கொள்ளுதலும்

உயிர்க்கு - பிற உயிர்களுக்கு

உறுகண் - துன்பத்தை

செய்யாமை - செய்யாது இருத்தலும்

அற்றே - அவ்வளவே

தவத்திற்கு - தவத்திற்கான

உரு - வடிவமாகும்


பொருளுரை:

தமக்கு நேரிடும் துன்பத்தை பொறுத்துக் கொள்ளுதலும் பிற உயிர்களுக்கு துன்பத்தை செய்யாது இருத்தலும் அவ்வளவே தவத்திற்கான வடிவமாகும்.


விளக்கவுரை:

துறவு வாழ்க்கையில் தனக்கு எவ்வகைத் துன்பம் நேரிடினும் அதை பொறுத்துக்கொள்ளுதலும், உலகில் வாழும் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எவ்வகைப்பட்ட உயிர்களுக்கும் துன்பம் செய்யாதிருத்தலுமே தவத்திற்கான அடிப்படை இலக்கணம் ஆகும். துறவறப் பயிற்சிகள் பல உள்ளன. அவைகளை மேற்கொள்ள அடிப்படையாக தன்னுடைய உடலையும் மனத்தையும் செம்மைப்படுத்தும்பொருட்டு தனக்கு நேரும் துன்பங்களை பொறுத்துக்கொள்ள வேண்டுமென்றும், பிற உயிர்களுக்கு எவ்வகையிலும் துன்பம் இழைக்கக் கூடாது என்றும் கூறப்பட்டன. புலால் உண்ணாமையும், காய்கறி உணவுகளாயினும் சிறிய அளவே உண்ணுதலும் துறவற வாழ்வில் மேற்கொள்ளப்பட்டன. இதனையே “ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி “ என்று மாணிக்கவாசரால் திருவாசகத்தில் போற்றப்பட்டது. உள்ளொளி வேண்டுமாயின் தன்னுடைய ஊனினை உருக்கவேண்டும். அதற்கு உண்டினை சுருக்கவேண்டும்.



குறள் 262

தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது.

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதுஇலார் மேற்கொள் வது.


சொல்லுரை:

தவமும் - தவமாகிய செயலானது

தவம் உடையார்க்கு - தவத்திற்குரிய குணங்களை உடையவர்க்கே

ஆகும் - கைவரப் பெறும்

அவம் - வீணான செயலாகும்

அதனை - தவத்தினை

அஃதுஇலார் - தவத்திற்குரிய குணங்கள் அற்றோர்

மேற்கொள்வது - மேற்கொள்வது


பொருளுரை:

தவமாகிய செயலானது தவத்திற்குரிய குணங்களை உடையவர்க்கே கைவரப் பெறும். தவத்திற்குரிய குணங்கள் அற்றோர் தவத்தினை மேற்கொள்வது வீணான செயலாகும்.


விளக்கவுரை:

துறவற நெறியினை பின்பற்றுவோர் தவநெறிக்குரிய குணங்களையும் அதற்கான கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வாழ்தல் வேண்டும். தவத்திற்குரிய அடிப்படைக் குணங்களாக கூறப்பட்டவை உற்றநோய் நோன்றலும், உயிர்க்கு உறுகண் செய்யாமையும். இத்தகைய குணங்களை கைவரப்பெறாதவர் தவ வாழ்வில் ஈடுபடுவது வீணான செயலாகும்.



குறள் 263

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்க டவம்.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.


சொல்லுரை:

துறந்தார்க்கு - பற்றுகளைத் துறந்த துறவிகளுக்கு

துப்புரவு - உணவு அளித்து

வேண்டி - உதவிட வேண்டி

மறந்தார்கொல் - மறந்துவிட்டனரோ

மற்றையவர்கள் - இல்லறத்தைப் பற்றி நிற்போர்

தவம் - தவம் செய்தலை


பொருளுரை:

பற்றுகளைத் துறந்த துறவிகளுக்கு உணவு அளித்து உதவிட வேண்டி இல்லறத்தைப் பற்றி நிற்போர் தவம் செய்தலை மறந்துவிட்டனரோ ?


விளக்கவுரை:

துறவிகள் முற்றும் துறந்தவர்கள். அவர்கள் தமது தேவைக்கென்று எதையும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை. தவநெறியே அவர்களின் குறிக்கோள். இல்லறத்தான் கடமையாக முற்றுந் துறந்த துறவிகளின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை பூர்த்தி செய்யக் கூறப்பட்டுள்ளது. இல்லறத்தான் ஆற்றும் செயல்களில் இவை உயர்வானதாக கருதப்பட்டமையால் ‘இல்லறத்தார் தவம் செய்வதை மறந்துவிட்டனரோ” என்று ஐயத்துடன் கூடிய வியப்பாக கூறப்பட்டுள்ளது.



குறள் 264

ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும்.

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.


சொல்லுரை:

ஒன்னார் - பகைவரை

தெறலும் - அழித்தலும்

உவந்தாரை - விரும்பியவரை

ஆக்கலும் - உயர்வடையச் செய்தலும்

எண்ணின் - நினைத்தால்

தவத்தான் - அவை தவவலிமையால்

வரும் - உண்டாகும்


பொருளுரை:

பகைவரை அழித்தலும் விரும்பியவரை உயர்வடையச் செய்தலும் நினைத்தால் அவை தவவலிமையால் உண்டாகும்.


விளக்கவுரை:

தவ வலிமையினால் தனக்கு தீங்கிழைக்கும் பகைவரை அழித்தலும் தனக்கு விருப்பம் உள்ளவர்களை உயர்வடையச் செய்தலும் தவசிகள் நினைத்தால் முடியும். இது தவம் இயற்றியதால் அவர்களுக்கு உண்டான வலிமையும் ஆற்றலும் ஆகும். ‘நினைத்தால் முடியும்’ என்பதினால் தவசிகள் தன்னுடைய தவத்தினால் பெற்ற வலிமையை மெய்ப்பொருள் காண்பதற்கு மட்டுமே பயன்படுத்துவர் அன்றி, விருப்பு வெறுப்பிற்கு பயன்படுத்தமாட்டார்கள் என்பதாம்.



குறள் 265

வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும்.

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.


சொல்லுரை:

வேண்டிய - விரும்பியதை

வேண்டியாங்கு - விரும்பியவாறு

எய்தலால் - பெற இயலுமாதலால்

செய்தவம் - செய்யத்தகுந்த தவத்தினை

ஈண்டு - இவ்வுலகிலேயே, இப்பிறப்பிலேயே

முயலப் படும் - முயன்று செய்யப்படும்.


பொருளுரை:

விரும்பியதை விரும்பியவாறு பெற இயலுமாதலால் செய்யத்தகுந்த தவத்தினை இப்பிறப்பிலேயே முயன்று செய்யப்படும்.


விளக்கவுரை:

மறுமையில் தான் எய்த விரும்பும் வீடுபேற்றை தான் விரும்பியபடியே தவநெறியின்மூலம் பெற இயலுமாதலால் , செய்யத்தகுந்த அந்த தவத்தை இப்பிறப்பிலேயே முயற்சி மேற்கொண்டு செய்யவேண்டும் என்பதாம்.



குறள் 266

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு.

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.


சொல்லுரை:

தவஞ்செய்வார் - தவம் செய்கின்றவரே

தம் கருமம் - தம்முடைய காரியத்தை

செய்வார் - செய்கின்றவர் ஆவார்

மற்று - அது அல்லாமல்

அல்லார் - தவச் செயல்களில் ஈடுபடாதோர்

அவம் செய்வார் - வீண்செயல்களைச் செய்பவர் ஆவார்

ஆசைஉள் பட்டு - ஆசை வலையுள் அகப்பட்டு


பொருளுரை:

தவம் செய்கின்றவரே தம்முடைய காரியத்தைச் செய்கின்றவர் ஆவார். அது அல்லாமல், தவச் செயல்களில் ஈடுபடாதோர் ஆசை வலையுள் அகப்பட்டு வீண்செயல்களைச் செய்பவர் ஆவார்


விளக்கவுரை:

தவம் செய்பவர் என்று சொல்லப்படுவோர் தன்னுடைய தவத்திற்குண்டான செயல்களை மட்டுமே செய்பவர் ஆவார். தவச்செயல்களாக போற்றப்படுபவை உற்றநோய் நோன்றல் மற்றும் உயிர்க்குறுகண் செய்யாமை ஆகியவை ஆகும். மேலும், பிறவித் துன்பத்திலிருந்து விடுபட்டு பேரின்ப நிலையை அடையும் பொருட்டு உடலை ஒடுக்கி ஆசையை அடக்கி உள்ளத்தை இறைவன்பால் நிறுத்தி இறைவனொடு ஒன்றுவிக்கும் தவத்தை மேற்கொள்வதே சிறந்ததென்றும் அதைச் செய்பவரைத் ‘ தங்கருமஞ் செய்வார்’ என்றும் கூறப்படுகிறது. பிறவியறுத்தலுக்கான தவச்செயல்களில் ஈடுபடாமல் மற்ற செயல்களைச் செய்வாரெல்லாம் வீண்செயல்களைச் செய்பவராகவே கருதப்படுவர்.



குறள் 267

சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.


சொல்லுரை:

சுட - தீயிலிட்டு புடம் போடுவதினால்

சுடரும் - ஒளிரும்

பொன்போல் - பொன்னைப்போல

ஒளிவிடும் - ஞானம் பிரகாசிக்கும்

துன்பம் - துன்பம்

சுடச்சுட - தன்னை மீண்டும் மீண்டும் வருத்தினாலும்

நோற்கிற் பவர்க்கு - தவஞ்செய்யும் வல்லமையுடையோர்க்கு


பொருளுரை:

தீயிலிட்டு புடம் போடுவதினால் ஒளிரும் பொன்னைப்போல துன்பம் தன்னை மீண்டும் மீண்டும் வருத்தினாலும் தவஞ்செய்யும் வல்லமையுடையோர்க்கு ஞானம் பிரகாசிக்கும்.


விளக்கவுரை:

புடம் போட்டு உருக்கப்படும் பொன்னானது தீ தன்னைச் சுடச்சுட தன் மாசு மறு நீங்கி பிரகாசமாக ஒளிவிடுவதுபோல், தவநெறியில் வாழ்பவரை துன்பம் மீண்டும் மீண்டும் வருத்தினாலும் தன் தவநிலை விட்டகலாது நடந்துகொள்வாராயின் அவருடைய தவவலிமை உயர்ந்து அவரின் மெய்ஞ்ஞானமானது பிரகாசிக்கும்.



குறள் 268

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாந் தொழும்.


சொல்லுரை:

தன்னுயிர் - தனது உயிர் என்ற பற்றும்

தான் - தான் என்னும் செருக்கும்

அற - நீங்க

பெற்றானை - பெற்றவனை

ஏனைய - மற்றைய

மன்னுயிர் - நிலைத்த உயிர்கள்

எல்லாம் - எல்லாம்

தொழும் - வணங்கும்


பொருளுரை:

தனது உயிர் என்ற பற்றும், தான் என்னும் செருக்கும் நீங்கப் பெற்றவனை மற்றைய நிலைத்த உயிர்கள் எல்லாம் வணங்கும்.


விளக்கவுரை:

உலகப் பற்றை அறுத்தல் மட்டுமல்லாது, தன்னுடைய உயிரும் தனக்குரியவை அல்ல என்பதையும், தன்னுடைய ஆன்மாவானது ஈசன் என்ற பரம ஆன்மாவிடமிருந்து பிரிந்து வந்த ஒரு பகுதியே என்பதையும் உணர்ந்து, இந்த சீவ ஆன்மாவின் நோக்கமானது அந்த பரம்பொருளாகிய ஈசனிடம் மீண்டும் சென்றடைவதாகவே இருக்கவேண்டும். அதற்கு தன்னுயிர் என்று தனியாக ஒன்று இல்லை என்றும், தான் என்ற ஒரு நிலை தனியாக இல்லை என்றும் உணர்தல் வேண்டும். அப்படி உணரும்போது தன்னுயிர் என்ற பற்றும் தான் என்ற நிலையும் நீங்கி இறைவனோடு ஒன்றும் நிலை உருவாகும். அந்த நிலையை எய்திவர்களை இவ்வுலக உயிர்கள் அனைத்தும் வணங்கும் என்பதாம்.



குறள் 269

கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
னாற்ற றலைப்பட் டவர்க்கு.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.


சொல்லுரை:

கூற்றம் - உயிர் பறிக்கும் கூற்றுவனை

குதித்தலும் - தப்பித்தலும், தவிர்த்தலும், விலகிக் கொள்ளுதலும்

கைகூடும் - கைகூடும்

நோற்றலின் - தவஞ் செய்வதால் வரும்

ஆற்றல் - வல்லமையை

தலைப்பட் டவர்க்கு - பெற்றவர்க்கு


பொருளுரை:

தவஞ் செய்வதால் வரும் வல்லமையைப் பெற்றவர்க்கு, உயிர் பறிக்கும் கூற்றுவனிடமிருந்து தப்பித்தலும் கைகூடும்


விளக்கவுரை:

‘கூற்றம் குதித்தல்’ என்பது சாதலைப் பற்றிய அச்சத்திலிருந்து விடுபடுதலும் உடலிலிருந்து உயிர் நீங்கும் துன்பத்தை வெல்லுதலும் ஆகும். தவவலிமை பெற்றோர் தாம் விரும்பும் காலத்தில் தம்முடைய விருப்பமாகவே மரண வேதனை ஏதுமின்றி தன்னுடைய சீவ உடலில் இருந்து ஆன்மாவை பிரித்து சீவ சமாதி அடைவார்கள். இது அவர்களின் தவவலிமையினால் கைவரப்பெற்றதாகும்.



குறள் 270

இலர்பல ராகிய காரண நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.


சொல்லுரை:

இலர் - வல்லமை இல்லாதவர்கள்

பலர் - பலராக

ஆகிய - இருப்பதற்கு

காரணம் - காரணம்

நோற்பார் - தவம் ஆற்றுவோர்

சிலர் - சிலராகவும்

பலர் - பலர்

நோலா தவர் - தவம் செய்யாதவராகவும் இருப்பதினால்


பொருளுரை:

வல்லமை இல்லாதவர்கள் பலராக இருப்பதற்கு காரணம் தவம் ஆற்றுவோர் சிலராகவும், பலர் தவம் செய்யாதவராகவும் இருப்பதினால்தான்.


விளக்கவுரை:

தவவல்லமை இல்லாதவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம் தவநெறியை தேர்ந்தெடுத்தவர்கள் பலராயினும், அந்த தவநெறியில் நின்று எவ்வகைத் துன்பம் உண்டாயினும் தவச்செயல்களை ஆற்றுவோர் மிகச்சிலரே. மற்றவர்களெல்லாம் தவச்செயல்களை சரிவர ஆற்றாதவர்களே.



uline