துறவறவியல்

28. கூடாவொழுக்கம்

( தவ வடிவில் தீய ஒழுக்கம் கொண்டு நிற்றல் )

271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
        ளைந்து மகத்தே நகும்.

272. வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
        தானறி குற்றப் படின்.

273. வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
        புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று.

274. தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
        வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.

275. பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
        றேதம் பலவுந் தரும்.

276. நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
        வாழ்வாரின் வன்கணா ரில்.

277. புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
        மூக்கிற் கரியா ருடைத்து.

278. மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
        மறைந்தொழுகு மாந்தர் பலர்.

279. கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
        வினைபடு பாலாற் கொளல்.

280. மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம்
        பழித்த தொழித்து விடின்.

குறள் 271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும்.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.


சொல்லுரை:

வஞ்ச - வஞ்சக எண்ணங்கள்

மனத்தான் - மனத்திலே உடையவனின்

படிற்று - பொய்யான

ஒழுக்கம் - ஒழுக்கத்தினைக் கண்டு

பூதங்கள் - நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பூதங்கள்

ஐந்தும் - ஐந்தும்

அகத்தே - தமக்குள்ளே

நகும் - சிரிக்கும்


பொருளுரை:

வஞ்சக எண்ணங்கள் மனத்திலே உடையவனின் பொய்யான ஒழுக்கத்தினைக் கண்டு நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பூதங்கள் ஐந்தும் தமக்குள்ளே சிரிக்கும்.


விளக்கவுரை:

துறவறத்தை மேற்கொண்டவன் பிறருக்குத் தெரியாமல் துறவற நெறிக்குத் தகாத வாழ்க்கை நடத்துவானாயின், அவ்வாறு பிறரை வஞ்சித்து வாழ்பவனின் பொய்யான ஒழுக்க நெறியினைக் கண்டு பூதங்கள் ஐந்தும் அவன் உள்ளத்தே ஏளனமாக நகும் என்பதாம். மனிதனின் உடல் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது. இவ்வைந்தும் இவ்வுலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையுடையது. அதனாலேயே, மனிதர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களின் சாட்சியாக செய்வதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆதலால், பிறருக்குத் தெரியாமல் தவநெறிக்கு ஒவ்வாத வாழ்வு வாழ்வானாயினும் பஞ்ச பூதங்களுக்குத் தெரியாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் இவ்வுலக செயல்களுக்கு சாட்சியாக உள்ள அப்பூதங்கள் அவன் நெஞ்சத்தினுள்ளே மனச்சாட்சியாக நின்று ஏளனமாக சிரிக்கும் என்பதாம்.



குறள் 272

வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
தானறி குற்றப் படின்.

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.


சொல்லுரை:

வானுயர் - வான்போன்று உயர்ந்த தன்மையுடைய

தோற்றம் - தவவேடத்தினால்

எவன்செய்யும் - என்ன பயன் உண்டாகும்

தன்னெஞ்சம் - தன்னுடைய நெஞ்சமானது

தான்அறி - தான் அறிந்த

குற்றப் படின் - குற்றத்தில் ஈடுபடுமாயின்


பொருளுரை:

தன்னுடைய நெஞ்சமானது தான் அறிந்த குற்றத்தில் ஈடுபடுமாயின் வான்போன்று உயர்ந்த தன்மையுடைய தவவேடத்தினால் என்ன பயன் உண்டாகும்? ஒரு பயனும் இல்லை.


விளக்கவுரை:

துறவறத்தை மேற்கொண்டவனின் துறவற நிலை வானுயர்ந்த புகழினை தருவதாயினும், தன் நெஞ்சமே குற்றமென்று அறிகின்ற செயலை அவன் செய்வானாயின் அது அவனுக்கு பெரும் பழியை உண்டாக்குமென்றும், அவனுடைய துறவற நிலையினால் வரும் பயன் எதுவும் இல்லை என்பதும் ஆகும். இங்கே குற்றமுடைய செயல் என்று குறிப்பிடப்படுவது துறவற நெறிக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதைக் குறிக்கும்.



குறள் 273

வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று.

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.


சொல்லுரை:

வலிஇல் - மனத்தைத் தன்வழிப்படுத்தும் வலிமை இல்லாத

நிலைமையான் - நிலையை உடையவன்

வல்லுருவம் - வலிய தவவேடம் கொள்ளுதல்

பெற்றம் - பசு

புலியின்தோல் - புலியின் தோலை

போர்த்து - போர்த்திக்கொண்டு

மேய்ந் தற்று - பயிரை மேய்வது போன்றதாகும்.


பொருளுரை:

மனத்தைத் தன்வழிப்படுத்தும் வலிமை இல்லாத நிலையை உடையவன் வலிய தவவேடம் கொள்ளுதல் பசுவானது புலியின் தோலை போர்த்திக்கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.


விளக்கவுரை:

புலியின் தோலை போர்த்திக்கொண்டு பசு பயிரை மேயுமானால், காண்பவர்க்கு புலி பயிரை மேயாது என்ற எண்ணத்தையும், மற்றும் அதன் அருகே செல்வது தனக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற பயத்தையும் தோற்றுவிக்கும். மற்ற கால்நடைகளும் அதன் அருகில் செல்ல அஞ்சும். அதுபோல, துறவறத்தில் ஈடுபட்டோர் தகாத காரியங்களைச் செய்வது புலித்தோல் போர்த்திய பசுவின் கயமைச் செயலுக்கு ஒப்பாகும்.



குறள் 274

தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.


சொல்லுரை:

தவம் மறைந்து - தவ வேடத்தில் மறைந்து இருந்து

அல்லவை - தீமைகளைச்

செய்தல் - செய்வது

புதல் மறைந்து - புதரில் மறைந்து இருந்து

வேட்டுவன் - வேடன்

புள் - பறவைகளை

சிமிழ்த்து - வலையில் அகப்படுவித்தல்

அற்று - போன்றதாகும்.


பொருளுரை:

தவ வேடத்தில் மறைந்து இருந்து தீமைகளைச் செய்வது, புதரில் மறைந்து இருந்து வேடன் பறவைகளை வலையில் அகப்படுவித்தல் போன்றதாகும்.


விளக்கவுரை:

வேடன் பறவைகளைப் பிடிக்க வலையை விரித்து அதில் தானியங்களைத் தூவி விடுவான். பறவைகள் இரைதேடி வரும்பொழுது தானியங்களைக் கண்டு, அதை உண்ணும் ஆவலில் வலையில் சிக்கிக்கொள்ளும். தவநெறியில் வாழ்வில் தன்னை மறைத்து தீமைகளைச் செய்ய முற்படுவது வேட்டுவன் செயலுக்கு ஒப்பாகும்.



குறள் 275

பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்.

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.


சொல்லுரை:

பற்று - பற்றுகளை

அற்றேம் - விட்டுவிட்டோம்

என்பார் - என்பவரின்

படிற்று - பொய்யான

ஒழுக்கம் - ஒழுக்கமானது

எற்றுஎற்று - என்ன செய்தோம் என்ன செய்தோம்

என்று - என்று திரும்பத்திரும்ப நினைத்து வருந்துமளவிற்கு

ஏதம் - துன்பங்கள்

பலவும் - பலவற்றையும்

தரும் - கொடுக்கும்.


பொருளுரை:

பற்றுகளை விட்டுவிட்டோம் என்பவரின் பொய்யான ஒழுக்கமானது என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று திரும்பத்திரும்ப நினைத்து வருந்துமளவிற்கு துன்பங்கள் பலவற்றையும் கொடுக்கும்.


விளக்கவுரை:

பிறர் தம்மை மதிக்குமாறு பற்றுகள் அனைத்தையும் துறந்துவிட்டோம் என்று கூறுகின்றவரின் பொய்யான ஒழுக்கமானது தான் என்ன தவறு செய்தோம், என்ன தவறு செய்தோம் என்று எண்ணி எண்ணி நோகும் அளவிற்கு பலவகைத் துன்பங்களையும் கொடுக்கும். தீவினைப்பயனின் கடுமையை எடுத்துக்காட்ட “எற்றுஎற்று” என்றார்.



குறள் 276

நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.


சொல்லுரை:

நெஞ்சின் - நெஞ்சத்திலே

துறவார் - பற்றுகளைத் துறக்காது

துறந்தார்போல் - பற்றுகளைத் துறந்தவர்போல்

வஞ்சித்து - ஏமாற்றி

வாழ்வாரின் - வாழ்பவரைவிட

வன்கணார் - இரக்கம் அற்றவர்

இல் - யாரும் இல்லை


பொருளுரை:

நெஞ்சத்திலே பற்றுகளைத் துறக்காது, அவைகளைத் துறந்தவர்போல் ஏமாற்றி வாழ்பவரைவிட இரக்கம் அற்றவர் யாரும் இல்லை.


விளக்கவுரை:

தன்னுடைய நெஞ்சத்திலே பற்றுகளைத் துறவாமல் அவைகளைத் துறந்தவர்போல் காட்டிக்கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வாழ்பவர் கொடியவரிலும் கொடியவராவார். உலகப்பற்றுகள் பலவாயினும், துறவற நெறியை பின்பற்றுவதற்கு குறைந்த அளவு மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றை விட்டொழிக்கவேண்டும்.



குறள் 277

புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து.

புறங்குன்றி கண்டனையர் ஏனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.


சொல்லுரை:

புறம் - வெளியில்

குன்றி - குன்றிமணியை

கண்டு - காண்பது போன்று

அனையர் - செம்மை உடையவர்

ஏனும் - ஆயினும்

அகம் - நெஞ்சத்திலே

குன்றி - குன்றிமணியின்

மூக்கில் - மூக்குப் பகுதியைப்போல்

கரியார் - கறுத்திருப்பவரை

உடைத்து - இவ்வுலகம் கொண்டிருக்கிறது


பொருளுரை:

வெளியில் குன்றிமணியைக் காண்பது போன்று செம்மை உடையவர் ஆயினும், நெஞ்சத்திலே குன்றிமணியின் மூக்குப் பகுதியைப்போல் கறுத்திருப்பவரை இவ்வுலகம் கொண்டிருக்கிறது.


விளக்கவுரை:

குன்றிமணியானது செம்மையான வெளிப்புறத்தை உடையது. அதன் கருமையான நுனிப்பகுதி உள்நோக்கி இருக்கும். துறவற வேடம் கொண்டு, அந்நெறிக்குத் தகாத செயலில் ஈடுபடுவோர் குன்றிமணியின் செம்மை நிறம் போன்று செம்மை உடையவர் போன்று தோன்றினாலும், அதன் நுனிப்பகுதியின் கருமை நிறம் போன்று மனத்திலே தீய எண்ணங்களுடன் வாழும் நெறிகெட்டவரையும் இவ்வுலகம் கொண்டிருக்கிறது.



குறள் 278

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.


சொல்லுரை:

மனத்தது - மனத்தின்கண்

மாசாக - குற்றம் இருக்க

மாண்டார் - தவத்தில் சிறந்தவர்போல்

நீராடி - நீரில் மூழ்கி குளித்து

மறைந்தொழுகும் - தவவாழ்வில் மறைந்து வாழும்

மாந்தர் - மனிதர்கள்

பலர் - பலர் உண்டு


பொருளுரை:

மனத்தின்கண் குற்றம் இருக்க, தவத்தில் சிறந்தவர்போல் காட்டும்பொருட்டு நாள்தோரும் வைகறையில் நீராடல் போன்றவற்றினால் தவவாழ்வில் மறைந்து வாழும் மனிதர்கள் பலர் உண்டு.


விளக்கவுரை:

அகத்திலே மனமானது குற்றத்தினால் மாசுபட்டிருக்க, புறத்திலே உள்ள மாசு நீக்குதல் பொருட்டு வைகறைதோறும் நீராடி வெளித்தோற்றத்தில் மட்டும் துறவிகள் போல் பொய்வாழ்வு வாழ்பவர்கள் இவ்வுலகில் பலர் உண்டு.



குறள் 279

கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.


சொல்லுரை:

கணை - அம்பு

கொடிது - நேராக இருப்பினும் கொடியது

யாழ் - யாழ் என்னும் இசைக்கருவி

கோடு - வளைவானது ஆயினும்

செவ்விது - செம்மையான இசையைத் தரவல்லது

ஆங்கு அன்ன - அதுபோல

வினைபடு - அவரவர் செயலின்

பாலால் - தன்மையைக் கொண்டு

கொளல் - அவர்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்


பொருளுரை:

அம்பு நேராக இருப்பினும் கொடியது. யாழ் என்னும் இசைக்கருவி வளைவானது ஆயினும் செம்மையான இசையைத் தரவல்லது. அதுபோல அவரவர் செயலின் தன்மையைக் கொண்டு அவர்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.


விளக்கவுரை:

வில்லில் தொடுக்கப்படும் அம்பானது நேராகவும், கூர்மையாகவும், அழகாகவும் இருந்தாலும் அது ஒரு ஆன்மாவின் இன்னுயிரை நீக்கும் கொடிய கருவியாகும். யாழ் வளைவானதாகவும் பல கோணல்களுடன் மூலை முடுக்குகளை உடையதாயினும் அதை மீட்டினால் அழகிய இசையைத் தரும் கருவியாகும். அதுபோல, எல்லோரும் போற்றும் துறவற வேடத்தில் ஒருவர் இருப்பாராயினும் அவருடைய வேடத்தைக்கொண்டு மதிப்பிடலாகாது. அவர்கள் ஆற்றும் வினைச் செயல்களின் மூலமே அவர்களைப்பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.



குறள் 280

மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.


சொல்லுரை:

மழித்தலும் - தலைமுடியை மழித்துக்கொள்வதும்

நீட்டலும் - சடைமுடி மற்றும் தாடி வளர்த்துக்கொள்வதும்

வேண்டா - தேவையற்றவை ஆகும்

உலகம் - உலகத்தில் சான்றோரால்

பழித்தது - ஆகாதன என்று பழித்து ஒதுக்கியவற்றை

ஒழித்து விடின் - விட்டுவிட்டால்


பொருளுரை:

உலகத்தில் சான்றோரால் ஆகாதன என்று பழித்து ஒதுக்கியவற்றை விட்டுவிட்டால் தலைமுடியை மழித்துக்கொள்வதும், சடைமுடி மற்றும் தாடி வளர்த்துக்கொள்வதும் தேவையற்றவை ஆகும்


விளக்கவுரை:

உலகத்தில் சான்றோரால் ஒதுக்கப்பட்ட பழியை உண்டாக்கும் தீய செயல்களை அடியோடு விட்டுவிட்டால் அதுவே துறவறத்தின் அடிப்படை. துறவறத்தை புறத்தோற்றத்தால் காட்டும்பொருட்டு தலைமுடியை மழித்து மொட்டை அடித்துக்கொள்வதும், சடைமுடி மற்றும் தாடி வளர்த்துக்கொள்வதும் தேவையற்றவை ஆகும்.



uline