துறவறவியல்

29. கள்ளாமை

( களவு செய்யாமை )

281. எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
        கள்ளாமை காக்கதன் னெஞ்சு.

282. உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
        கள்ளத்தாற் கள்வே மெனல்.

283. களவினா லாகிய வாக்க மளவிறந்
        தாவது போலக் கெடும்.

284. களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
        வீயா விழுமந் தரும்.

285. அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
        பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

286. அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
        கன்றிய காத லவர்.

287. களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
        மாற்றல் புரிந்தார்க ணில்.

288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
        களவறிந்தார் நெஞ்சிற் கரவு.

289. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
        மற்றைய தேற்றா தவர்.

290. கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்வார்க்குத்
        தள்ளாது புத்தே ளுலகு.

குறள் 281:

எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு.

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.


சொல்லுரை:

எள்ளாமை - பிறரால் எள்ளி நகைக்கப்படாமல், இகழப்படாமல்

வேண்டுவான் - வாழ விரும்புகின்றவன்

என்பான் - எனப்படுபவன்

எனைத்தொன்றும் - எந்த ஒரு பொருளையும்

கள்ளாமை - களவு செய்து கொள்ளவேண்டும் என்று நினைக்காதபடி

காக்க - காக்கவேண்டும்

தன் நெஞ்சு - தன் நெஞ்சத்தை


பொருளுரை:

பிறரால் எள்ளி நகைக்கப்படாமல், இகழப்படாமல் வாழ விரும்பும் ஒருவன், பிறரின் எந்த ஒரு பொருளையும் களவு செய்து கொள்ளவேண்டும் என்று நினைக்காதபடி தன் நெஞ்சத்தைக் காக்கவேண்டும்.


விளக்கவுரை:

“எள்ளாமை வேண்டுவான்” எனப்படுவது, ஒருவன் தனக்கு இகழ்ச்சி வராமல் இருத்தலை வேண்டுகின்றவன். பிறரால் இகழப்படுதலைவிட மோசமான நிகழ்வு ஒருவனுடைய வாழ்வில் வேறொன்றும் இருக்க இயலாது. பிறரால் இகழப்படுதல் ஒருவனுடைய தன்மானத்தைத் தொட்டுவிடும். ஆதலால் பிறர் இகழ்வதிலிருந்து ஒருவன் தன்னை காக்கவேண்டும் என்பதாம். களவு செய்து வாழ்பவன் என்று இவ்வுலகம் ஒருவனை அறியுமானால், அவனை இவ்வுலகம் இகழ்ந்து பேசவே செய்யும். ஆதலால், ஒருவன் தன் வாழ்நாளின் எவ்வித நிலையிலும் பிறருடைய எந்தப் பொருளையும் களவு செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தன் நெஞ்சத்தில் வராதவாறு காக்கவேண்டும்.



குறள் 282:

உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.


சொல்லுரை:

உள்ளத்தால் - மனத்தால்

உள்ளலும் - நினைப்பதும்

தீதே - தீமையாகும்

பிறன்பொருளை - பிறர்க்கு உரிய பொருளை

கள்ளத்தால் - வஞ்சனையால்

கள்வேம் - களவாடுவோம்

எனல் - என்ற குற்ற எண்ணத்தை


பொருளுரை:

பிறர்க்கு உரிய பொருளை வஞ்சனையால் களவாடுவோம் என்ற குற்ற எண்ணத்தை மனத்தால் நினைப்பதும் தீமையாகும்.


விளக்கவுரை:

தூய அறநெறி வாழ்வு வாழ முற்பட்டோர், அது இல்லறமாயினும் அல்லது துறவறமாயினும், தன்னுடைய உள்ளத்தை தூய்மையுடையதாய் வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணங்களே செயல் வடிவம் கொள்வதால், களவு என்னும் இகழ்வு தரும் செயலை, எண்ணம் என்ற நிலையிலேயே அழித்தொழிக்க வேண்டும். அதனால்தான், “உள்ளத்தால் உள்ளலும் தீதே” என்றார். பிறர் பொருளைத் திருடுதல் மற்றும் குற்றமன்று. அதனை மனத்தினால் எண்ணுதலும் குற்றாமாகும்.



குறள் 283:

களவினா லாகிய வாக்க மளவிறந்
தாவது போலக் கெடும்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.


சொல்லுரை:

களவினால் - களவாடுவதால்

ஆகிய - உண்டான

ஆக்கம் - செல்வம்

அளவுஇறந்து - அளவினை மீறி

ஆவது - வளர்வது

போலக் - போலத் தோன்றி

கெடும் - அழியும்


பொருளுரை:

களவாடுவதால் உண்டான செல்வம் வளர்வது போலத் தோன்றிப் பின்னர் அளவினை மீறி அழியும்.


விளக்கவுரை:

களவாடுவதினால் ஒருவனுக்கு செல்வம் பெருகுவதுபோலத் தோன்றும். ஆனால், பொருளை இழந்தோரின் துன்பமான எண்ணங்கள் களவாடியவனைத் தாக்குவது உறுதி. பிறரின் எண்ணங்களின் தாக்கத்தினால், களவினால் வளர்ந்த செல்வமும், முன்னர் தன் உழைப்பில் சேர்த்த பொருளும் ஒருசேர அவனைவிட்டு நீங்கும் என்பதாம்.



குறள் 284:

களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.


சொல்லுரை:

களவின்கண் - களவாடுவதில்

கன்றிய - மிகுந்த

காதல் - ஆசையானது

விளைவின்கண் - பின்வளைவு உண்டாகும்பொழுது

வீயா - தொலையாத

விழுமம் - துன்பத்தை

தரும் - கொடுக்கும்


பொருளுரை:

களவாடுவதில் மிகுந்த ஆசையானது பின்வளைவு உண்டாகும்பொழுது தொலையாத துன்பத்தைக் கொடுக்கும்.


விளக்கவுரை:

ஒருவன் திருடுவதில் மிகுந்த நாட்டம் கொண்டு, அதையே பழகிவிட்டவன், அதனின்று மீண்டு வருதல் மிகவும் கடினம். ஒருமுறை திருடியவன், அதில் மீண்டும் மீண்டும் நாட்டம் கொண்டு திருடுவதில் ஈடுபடுவானேயன்றி அதிலிருந்து மீண்டு வர எண்ணமாட்டான். ஏனெனில், திருடுவது அவனுக்கு பழகிவிட்டதனாலும், திருட்டுவழி அவனுக்கு உடலுழைப்பின்றி பொருள் பெரும் வழியாக ஆகிவிட்டதாலும். அதனாலேயே, திருடப் பழகியதை “களவின் கண் கன்றிய காதல்” என்றார். களவினால் தன் பொருளைக் கொண்டுவிட்டான் என்று இவ்வுலகம் அறியும்பொழுது, அதனால் களவாடியவனுக்கு உண்டாகும் துன்பம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதனால் ‘வீயா விழுமம்” என்றார்.



குறள் 285:

அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.


சொல்லுரை:

அருள்கருதி - அருளின் உயர்வை அறிந்து

அன்புடையர் - அதன்மீது அன்புடையவராய்

ஆதல் - இருத்தல்

பொருள்கருதிப் - பிறருடைய பொருளை வஞ்சகமாக கவர எண்ணி

பொச்சாப்புப் - அவர் சோர்ந்திருக்கும் காலத்தை

பார்ப்பார்கண் - எதிர்பார்ப்பவர்களின் மனத்தில்

இல் - இல்லை


பொருளுரை:

அருளின் உயர்வை அறிந்து அதன்மீது அன்புடையவராய் இருத்தல் என்னும் நிலையானது, பிறருடைய பொருளை வஞ்சகமாக கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் காலத்தை எதிர்பார்ப்பவர்களின் மனத்தில் இல்லை.


விளக்கவுரை:

துறவியருக்கு அடிப்படைக்குணமாக இருக்கவேண்டியது அருள் நிறைந்த உள்ளம் உடையவராக இருப்பது. பிறர் பொருளை வஞ்சகமாக களவாடுவதில் எண்ணம் கொண்டு அவன் சோர்ந்திருக்கும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவனின் மனத்திற்கு, அவனுடைய எண்ணமெல்லாம் திருடுவதில் இருக்குமேயன்றி, பிறரிடம் அன்பு செய்து அருள் உள்ளத்தைப் பெருதல் என்பது இல்லை.



குறள் 286:

அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர்.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.


சொல்லுரை:

அளவின்கண் - அளவுடன் வாழ்தல் என்னும் ஒழுக்கநெறியில்

நின்றொழுகல் - நிலைபெற்று நடத்தலை

ஆற்றார் - செய்யார்

களவின்கண் - களவினில்

கன்றிய - மிகுந்த

காத லவர் - ஆசை கொண்டவர்


பொருளுரை:

களவினில் மிகுந்த ஆசை கொண்டவர், அளவுடன் வாழ்தல் என்னும் ஒழுக்கநெறியில் நிலைபெற்று நடத்தலைச் செய்யார்.


விளக்கவுரை:

திருடுவதில் ஈடுபட்டு வாழ்பவர்கள் வரம்புக்கு மீறி செலவு செய்து வாழ்பவர்களாகவே இருப்பர். தன்னுடைய திருட்டுத்தனத்தை மறைப்பதன்பொருட்டும், தான் பிறரால் பிடிபடாமல் இருப்பதன்பொருட்டும், உழைத்து சேர்த்த பொருளல்லாமல் அது திருடிய பொருளாதலால் அதனைக் கையாள்வதின் மதிப்பு தெரியாததாலும் திருடுபவன் மேலும் மேலும் ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து தன்னை காத்துக்கொள்ள முற்படுவானேயன்றி . ஒழுக்க நெறியில் நிலைபெற்று நடத்தலைச் செய்யமாட்டான்.



குறள் 287:

களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணில்.

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.


சொல்லுரை:

களவென்னும் - களவு என்று சொல்லப்படும்

காரறி வாண்மை - இருண்ட அறிவுடையவராய் இருக்கும் தன்மை

அளவென்னும் - ஒழுக்கத்தின் அளவில் நின்று வாழும்

ஆற்றல் - தன்மை

புரிந்தார்கண் - கொண்டவர்களிடம்

இல் - இல்லை


பொருளுரை:

களவு என்று சொல்லப்படும் இருண்ட அறிவுடையவராய் இருக்கும் தன்மை, ஒழுக்கத்தின் அளவில் நின்று வாழும் தன்மை கொண்டவர்களிடம் இல்லை.


விளக்கவுரை:

களவு செய்பவன் தனக்கு இருக்கும் அறிவினை பிறர் பொருளைத் திருடும் தீய செயலுக்கு பயன்படுத்துவதினால் அதனைக் காரறிவாண்மை என்றார். அவன் மெய்ப்பொருள் காண்பதற்கு தன்னுடைய அறிவினைப் பயன்படுத்தாது களவு என்னும் இருண்ட மயக்கத்தின்கண் ஆட்பட்டு உழலுவதால் காரறிவு ஆயிற்று. தனக்கு வகுக்கப்பட்ட ஒழுக்கத்தின் வரையறைகளை அறிந்து அதன் எல்லைக்குள் வாழும் திடம் கொண்டவர்களிடம் களவு என்னும் காரறிவு இருப்பதில்லை.



குறள் 288:

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு.

அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.


சொல்லுரை:

அளவறிந்தார் - ஒழுக்கத்தின் அளவை அறிந்தவர்களின்

நெஞ்சத்து - நெஞ்சத்தில்

அறம்போல - அறம் நிலைத்து நிற்பதுபோல

நிற்கும் - நிற்கும்

களவறிந்தார் - களவு செய்து பழகியவர்களின்

நெஞ்சில் - நெஞ்சத்தில்

கரவு - வஞ்சனை


பொருளுரை:

ஒழுக்கத்தின் அளவை அறிந்தவர்களின் நெஞ்சத்தில் அறம் நிலைத்து நிற்பதுபோல களவு செய்து பழகியவர்களின் நெஞ்சத்தில் வஞ்சனை எண்ணம் பெருகி நிற்கும்.


விளக்கவுரை:

தனக்கு வகுக்கப்பட்ட ஒழுக்கத்தின் அளவறிந்து, அந்த வரையறைக்குள் நடந்துகொள்பவர்களின் நெஞ்சத்தில் அறநெறி எண்ணங்களே நிலைத்து நிற்கும். களவு எண்ணத்திற்கு அங்கு இடமே இல்லை. ஆனால், களவு செய்து பழகியவர்களின் நெஞ்சத்தில் வஞ்சனை எண்ணம் மட்டுமே குடிகொண்டிருக்கும். ஒழுக்கநெறி எண்ணங்களுக்கு அங்கே இடமில்லை.



குறள் 289:

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.


சொல்லுரை:

அளவல்ல - ஒழுக்கமற்ற செயல்களை

செய்தாங்கே - செய்து அப்பொழுதே

வீவர் - கெடுவர்

களவல்ல - களவாடுவதைத் தவிர

மற்றைய - மற்ற நன்மைகளை

தேற்றா தவர் - அறியாதவர்


பொருளுரை:

களவாடுவதைத் தவிர மற்ற நன்மைகளை அறியாதவர், ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து அப்பொழுதே கெடுவர்.


விளக்கவுரை:

தான் மேற்கொண்ட அறத்தின் வரம்பைக் கடந்து, பொருளின்மீது கொண்ட பேராசையினால் களவாடுவதில் ஈடுபடுபவர்கள், தன்னுடைய நிலைமைக்குத் தகாத செயல்களை தொடர்ந்து செய்து கெட்டுப்போவார்கள். அவர்கள் களவாடுவதைத்தவிர இவ்வுலகில் உள்ள நன்மை பயக்கும் செயல்களை அறியாதவர்கள் ஆவர்.



குறள் 290:

கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.


சொல்லுரை:

கள்வார்க்குத் - களவு செய்வார்க்கு

தள்ளும் - தவறும்

உயிர்நிலை - உயிர் வாழ்வானது

கள்ளார்க்குத் - களவு செய்யாதவர்க்கு

தள்ளாது - தவறாது கிட்டும்

புத்தேள் உலகு - விண்ணுலகு


பொருளுரை:

களவு செய்வார்க்கு உயிர் வாழ்வானது தவறும். களவு செய்யாதவர்க்கு விண்ணுலகு தவறாது கிட்டும்.


விளக்கவுரை:

உயிர்நிலை என்பது உயிர் உடம்போடு இயைந்து இருக்கும் நிலை. களவுத்தொழிலை செய்து பழகியவர்க்கு முடிவில் உண்பதற்கு உணவுகூட இன்றித் திண்டாடுவர். ஆனால், எவ்வகை வாழ்வு நிலையிலும் களவு என்ற எண்ணத்தை வேரறுத்து, தனக்கு வகுக்கப்பட்ட ஒழுக்கநெறியில் வாழ்வோர்க்கு விண்ணுலக வாழ்வு தவறாது கிட்டும்.