துறவறவியல்

30. வாய்மை

( பொய் பேசாதிருத்தல் )

291. வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
        தீமை யிலாத சொலல்.

292. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
        நன்மை பயக்கு மெனின்.

293. தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
        தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

294. உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா
        ருள்ளத்து ளெல்லா முளன்.

295. மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு
        தானஞ்செய் வாரிற் றலை.

296. பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
        யெல்லா வறமுந் தரும்.

297. பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
        செய்யாமை செய்யாமை நன்று.

298. புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
        வாய்மையாற் காணப் படும்.

299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
        பொய்யா விளக்கே விளக்கு.

300. யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
        வாய்மையி னல்ல பிற.

குறள் 291:

வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.


சொல்லுரை:

வாய்மை - வாய்மை

எனப்படுவது - என்று சொல்லப்படுவது

யாதெனின் - எது என்றால்

யாதொன்றும் - மற்றவர்க்கு ஒரு சிறிதும்

தீமை - தீமை

இலாத - தராத

சொலல் - சொற்களைச் சொல்லுதல் ஆகும்.


பொருளுரை:

வாய்மை என்று சொல்லப்படுவது எது என்றால் மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை தராத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.


விளக்கவுரை:

வாய்மை என்று சொல்லப்படுவது ஒருவனின் வாயிலிருந்து பேசப்படும் சொற்களினால் உண்டாகும் வினைகளின் தன்மையை குறிப்பதாயிற்று. மற்றவர்க்கு சிறிதளவும் தீமை தராத சொற்களைப் பேசுவதே ஒருவனுடைய வாய்மைக்கு இலக்கணமாகக் கூறப்படுகிறது.



குறள் 292:

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.


சொல்லுரை:

பொய்மையும் - பொய்ச்சொற்கள் இழிந்ததாயினும்

வாய்மை - வாய்மையின்

இடத்த - இடத்தைப் பெறும்

புரைதீர்ந்த - குற்றம் நீங்கிய

நன்மை - நன்மையைத்

பயக்கும் - தரும்

எனின் - என்றால்


பொருளுரை:

பொய்ச்சொற்கள் இழிந்ததாயினும் குற்றம் நீங்கிய நன்மையைத் தரும் என்றால் அவை வாய்மையின் இடத்தைப் பெறும்.


விளக்கவுரை:

பொய்சொற்கள் உரைப்பது இழிவானது. அந்த பொய்ச்சொற்களும் குற்றமற்ற நன்மையைத் தருமானால் அது வாய்மை நிறைந்த சொற்களாகவே கொள்ளப்படும். குற்றமுடைய தீமையைத் தருமானால் அவை உண்மைச் சொற்களாயினும், சிறப்பு பொருந்திய வாய்மைச் சொற்களாகா.
உண்மைக்கும் வாய்மைக்கும் உள்ள வேறுபாடு யாதெனில், வாய்மைச்சொற்கள் எந்நிலையிலும் நன்மை பயக்கும் சொற்களாகவே இருக்கும். ஆனால், உண்மைச்சொற்கள் நன்மையும் பயக்கலாம், அல்லது தீமையும் பயக்கலாம்.



குறள் 293:

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.


சொல்லுரை:

தன்நெஞ்சு - தன் மனம்

அறிவது - அறிந்த ஒன்றினைப் பற்றி

பொய்யற்க - பொய் கூறுதல் கூடாது.

பொய்த்தபின் - பொய் கூறியபின்

தன்நெஞ்சே - தன் மனமே

தன்னை - தன்னை

சுடும் - வறுத்தும்


பொருளுரை:

தன் மனம் அறிந்த ஒன்றினைப் பற்றி பொய் கூறுதல் கூடாது. பொய் கூறியபின் தன் மனமே தன்னை வறுத்தும்.


விளக்கவுரை:

ஒருவன் தன் மனம் அறிந்த ஒன்றைப் பிறர் அறியவில்லை என்ற காரணத்தினால், பொய்யுரை சொல்லல் ஆகாது. அவ்வாறின்றி, மனம் அறிந்த ஒன்றில் பொய் சொல்வானேயானால் அவனுடைய மனமே அவனுடைய பொய்யுரை செயலுக்கு சாட்சியாக நின்று அவனை வறுத்தும் என்பதாம். ‘சுடும்’ என்பதினால் அவன் அழியும்வரை தீராத மனத்துன்பத்தையும் மற்ற துன்பத்தையும் தந்து அழிக்கும் என்பதாகும்.



குறள் 294:

உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா
ருள்ளத்து ளெல்லா முளன்.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.


சொல்லுரை:

உள்ளத்தால் - ஒருவன் தன் நெஞ்சார

பொய்யாது - பொய் சொல்லாது

ஒழுகின் - நடந்துகொள்வானாயின்

உலகத்தார் - உலகிலுள்ளோர்

உள்ளத்துள் - நெஞ்சங்களில்

எல்லாம் - எல்லாம்

உளன் - மதிக்கப்படுவான்


பொருளுரை:

ஒருவன் தன் நெஞ்சாரப் பொய் சொல்லாது நடந்துகொள்வானாயின் அவன் உலகிலுள்ளோர் தங்களின் நெஞ்சங்களில் வைத்துப் போற்றும் தன்மை கொண்டவனாவான்.


விளக்கவுரை:

ஒருவன் தன் நெஞ்சம் அறிந்து பொய் சொல்லாது நடந்து கொள்வானாயின் அவனை இந்த உலகிலுள்ளோர் எல்லோரும் போற்றுவர். ஒருகால், அவன் சொன்ன வார்த்தைகள் உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும், அவன் தன் உள்ளம் அறிந்து சொல்லவில்லை என்று எல்லோருக்கும் தெரியுமாதலால், அவனுடைய உள்ளத்தூய்மையை உலகத்தார் என்றென்றும் தங்களின் உள்ளத்தில் இருத்திப் போற்றுவர்.



குறள் 295:

மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ்செய் வாரிற் றலை.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.


சொல்லுரை:

மனத்தொடு - மனம் அறிந்து பொய் சொல்லாமல்

வாய்மை - பிறர்க்குத் தீங்கு இழைக்காத வாய்மைத் தன்மையோடு

மொழியின் - பேசுவானாயின்

தவத்தொடு - தவத்தையும்

தானம் - தானத்தையும் ஒருங்கே

செய்வாரின் - செய்வாரையும்விட

தலை - மிகவும் உயர்ந்தவனாவான்.


பொருளுரை:

ஒருவன் தன் மனம் அறிந்து பொய் சொல்லாமல், பிறர்க்குத் தீங்கு இழைக்காத வாய்மைத் தன்மையோடு பேசுவானாயின் அவன் தவத்தையும் தானத்தையும் ஒருங்கே செய்வாரையும்விட மிகவும் உயர்ந்தவனாவான்.


விளக்கவுரை:

மனம் அறிந்த உண்மையை பிறர்க்குத் தீங்கு நேராவண்ணம் எடுத்துரைக்கும் தன்மையை இக்குறள் விளக்குகிறது. மனமானது உண்மை அறிந்திருந்தாலும், பிறர்க்குத் தீங்கு ஏற்படுமாயின், வாய்மையின் இலக்கணம் காக்கும் பொருட்டு அங்கு “பொய்மையும் வாய்மையினிடத்த” என்றாகி, பொய்யுரைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். மாறாக, உள்ளத்திலுள்ள உண்மையை, அது தீமை தருவதாயினும் பேசிவிட்டால், வாய்மை காக்கப்படாமல் போய்விடும். ஆகையால், மனம், வாக்கு ஆகிய இரண்டிலும் பொய்யுரைக்காது வாழும் தன்மை உடையவர்கள் தவத்தையும் தானத்தையும் ஒருங்கே செய்யும் உயர்ந்த ஆற்றலுடையவர்களைவிட மிகச்சிறந்தவர்கள் ஆவர்.



குறள் 296:

பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமுந் தரும்.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.


சொல்லுரை:

பொய்யாமை - பொய் பேசாமைக்கு

அன்ன - ஒப்பான

புகழில்லை - புகழ் வேறில்லை

எய்யாமை - அறம் செய்ய முயலாமை ஆயினும்

எல்லா - எல்லாவகையான

அறமும் - அறச்செயல்களினால் வரும் நன்மையையும்

தரும் - கொடுக்கும்.


பொருளுரை:

ஒருவனுக்கு பொய் பேசாமையினால் உண்டாகும் புகழுக்கு ஒப்பான புகழ் வேறில்லை. அவன் மற்ற அறங்களைச் செய்ய முயலாதவன் ஆயினும், எல்லாவகையான அறச்செயல்களினால் வரும் நன்மையையும் கொடுக்கும்.


விளக்கவுரை:

பொய்யாமை என்று சொல்லப்படுவது மனத்தொடு வாய்மை மொழிதல். அது தவத்தொடு தானம் செய்வதைவிட உயர்வானதாகப் போற்றப்படுவதால் எல்லாவகையான அறச்செயல்களினால் உண்டாகும் நன்மைகள் யாவும் பொய்யாமையால் உண்டாகும் என்பதாம்.



குறள் 297:

பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.


சொல்லுரை:

பொய்யாமை - பொய் பேசாதிருத்தலை

பொய்யாமை - பொய்த்துப்போகாமல் (உண்மையாக )

ஆற்றின் - செய்வானாயின்

அறம்பிற - பிற அறங்களை

செய்யாமை செய்யாமை - செய்யாமல் இருந்தாலும்

நன்று - நன்மை உண்டாகும்.


பொருளுரை:

பொய் பேசாதிருத்தலை பொய்த்துப்போகாமல் ஒருவன் செய்வானாயின், அவன் பிற அறங்களைச் செய்யாமல் இருந்தாலும் நன்மை உண்டாகும்.


விளக்கவுரை:

எந்த நிலையிலும் பொய் பேசாது இருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறு பொய்யாமை என்ற அறத்தை ஆற்றும்பொழுது அவன் பிற அறங்களைச் செய்ய வேண்டுவதில்லை. பொய்யாமை என்னும் அறத்தினுள்ளேயே எல்லா அறங்களும் அடங்கிவிடுகின்றன. “செய்யாமை செய்யாமை” என்ற அடுக்கு, வலியுறுத்துவன்பொருட்டு சொல்லப்பட்டது.



குறள் 298:

புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்.

புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.


சொல்லுரை:

புறந்தூய்மை - ஒருவனின் புறத்தோற்ற உடம்பின் தூய்மையை

நீரால் - நீரினால்

அமையும் - செய்துகொள்ள முடியும்

அகந்தூய்மை - ஒருவனின் அக உடம்பாகிய உள்ளத்தின் தூய்மையை

வாய்மையால் - வாய்மை என்ற அறத்தைக் கடைபிடிப்பதினால்

காணப் படும் - காணப்படும்.


பொருளுரை:

ஒருவனின் புறத்தோற்ற உடம்பின் தூய்மையை நீரினால் செய்துகொள்ள முடியும். அவனது அக உடம்பாகிய உள்ளத்தின் தூய்மையை வாய்மை என்ற அறத்தைக் கடைபிடிப்பதினால் காணப்படும்.


விளக்கவுரை:

வெளிப்புற உடம்பின் அழுக்கை நீக்குவதற்கு தண்ணீர் போதும். புறந்தூய்மை காக்க நிறைய மெனக்கெடத் தேவையில்லை. ஆனால், அகமாகிய உள்ளத்தூய்மையை வாய்மை என்ற உயர்ந்த அறத்தைப் பின்பற்றுவதனால் மட்டுமே முடியும்.



குறள் 299:

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.


சொல்லுரை:

எல்லா விளக்கும் - புற இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம்

விளக்குஅல்ல - விளக்குகள் ஆகாது

சான்றோர்க்குப் - சான்றாண்மை ஒழுகுவோர்க்கு

பொய்யா விளக்கே - பொய்யாமை என்னும் அக இருள் போக்கும் விளக்கே

விளக்கு - விளக்கு ஆகும்.


பொருளுரை:

புற இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆகாது. சான்றாண்மை ஒழுகுவோர்க்கு பொய்யாமை என்னும் அக இருள் போக்கும் விளக்கே விளக்கு ஆகும்.


விளக்கவுரை:

உள்ளத்துள் தோன்றவேண்டிய அகஒளியானது பொய்யாமை என்னும் அறமாகிய விளக்கால் மட்டுமே தோன்றும். மற்ற அறங்கள் எல்லாம் அகஒளியைத் தராது. உள்ளோளி பெறுவதே ஆன்மாவின் வேட்கையாதலால் அது பொய்யாமை என்னும் அறமாகிய விளக்கைப் பெற்றிருப்பதால் மட்டுமே முடியும்.



குறள் 300:

யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.


சொல்லுரை:

யாமெய்யா - யாம் மெய்யாக

கண்டவற்றுள் - கண்ட அறங்களில் எல்லாம்

இல்லை - எதுவும் இல்லை

எனைத்துஒன்றும் - யாதொரு தன்மையாலும்

வாய்மையின் - வாய்மையைவிட

நல்ல பிற - தலைசிறந்தது என்று


பொருளுரை:

யாம் மெய்யாகக் கண்ட அறங்களில் எல்லாம் யாதொரு தன்மையாலும் வாய்மையைவிட தலைசிறந்தது என்று வேறு எதுவும் இல்லை.


விளக்கவுரை:

அறங்களில் எல்லாம் தலைசிறந்த நல்லறமாக விளங்குவது வாய்மையே ஆதும். இதனை வெறும் புகழ்ச்சியுரை என்று எண்ணிவிடக்கூடாது என்பதற்காக “யாமெய்யாக் கண்டவற்றுள்” என்றார். அதாவது, தான் கற்றும் கேட்டும் அறிந்தது மட்டுமின்றி அனுபவத்தின் மூலமும் கண்ட உண்மையிது என்பது வள்ளுவர் வாக்கு.



uline