301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
       
காக்கினென் காவாக்கா லென்.
302. செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
       
மில்லதனிற் றீய பிற.
303. மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
       
பிறத்த லதனான் வரும்
304. நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
       
பகையு முளவோ பிற.
305. தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்
       
றன்னையே கொல்லுஞ் சினம்.
306. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு
       
மேமப் புணையைச் சுடும்.
307. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
       
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
308. இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
       
புணரின் வெகுளாமை நன்று.
309. உள்ளிய தெல்லா முடனெய்து முள்ளத்தா
       
லுள்ளான் வெகுளி யெனின்.
310. இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
       
துறந்தார் துறந்தார் துணை.
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
சொல்லுரை:
செல்லிடத்துக் - சினம் செல்லுபடியாகின்ற இடத்தில்
காப்பான் - சினம் எழாமல் காப்பவனே
சினங்காப்பான் - சினத்தை அடக்கியவனாவன்
அல்லிடத்துக் - சினம் பலிக்காத இடத்தில்
காக்கின்என் - அதனைத் தடுத்தால் என்ன பயன்?
காவாக்கால் என் - தடுக்காவிட்டால்தான் என்ன பயன்?
பொருளுரை:
சினம் செல்லுபடியாகின்ற இடத்தில் அதை எழாமல் காப்பவனே சினத்தை அடக்கியவனாவன். சினம் பலிக்காத இடத்தில் அதனைத் தடுத்தால் என்ன பயன்? தடுக்காவிட்டால்தான் என்ன பயன்?
விளக்கவுரை:
சினம் தன்னைவிட மெலியோரிடத்துச் செலுத்தும்போது அதனால் மற்றவர்க்குத் தீங்கு ஏற்பட்டு, தனக்கும் பழி பாவத்தைச் சேர்க்கும். அதனால், சினம் செல்லுபடியாகின்ற இடத்தில் எழாமல் அடக்கிக் கொள்பவனே சினத்தைக் காக்கும் தன்மையுடையவனாவான். தன்னைவிட வலியோர்க்கு எதிராக சினம் தோன்றினாலும், மாற்றானின் வலிமை காரணமாக அச்சினத்தினால் ஒன்றும் பயனில்லை என்பதாலும், மற்றும் அச்சினம் தானே அடங்கிவிடும் என்பதாலும், அச்சினத்தை தடுத்தால்தான் என்ன? தடுக்காவிட்டால்தான் என்ன? என்றார்.
குறள் 302:
செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லதனிற் றீய பிற.
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
சொல்லுரை:
செல்லா - செலுத்த முடியாத
இடத்துச் - இடத்தில்
சினந்தீது - சினம் தீமையை உண்டாக்கும்
செல்லிடத்தும் - செலுத்த முடிகின்ற இடத்திலும்
இல் - இல்லை
அதனின் - அதனைவிட
தீய பிற - தீயவை வேறொன்றும்
பொருளுரை:
சினம் செலுத்த முடியாத இடத்தில் தீமையை உண்டாக்கும். அதைச் செலுத்த முடிகின்ற இடத்திலும் அதனைவிட தீயவை உண்டாக்குவன வேறொன்றும் இல்லை.
விளக்கவுரை:
ஒருவனது சினம் அது செல்லுபடியாகாத வலியோர்மேல் காட்டினால் அதனால் அவனுக்கே தீங்கு உண்டாகும். அது செல்லுபடியாகின்ற மெலியார்மேல் காட்டினாலும் அதனால் பிறருக்குத் துன்பமும், தனக்குப் பழியும் பாவமும் வந்து சேரும் என்பதாகும். அப்பழிபாவத்தினை அனுபவித்துக் கழிக்க மறுபிறவி எடுத்தாக வேண்டும் என்றும், மறுமைத் துன்பம் உண்டென்றும், பிறவியறுத்தல் என்பது இயலாததாகி பிறவித்துன்பம் நீட்டிக்கொண்டே செல்லும் என்பதாம்.
குறள் 303:
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும்
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
சொல்லுரை:
மறத்தல் - மறந்துவிடுதல் வேண்டும்
வெகுளியை - சினத்தை
யார்மாட்டும் - யாவரிடத்தும்
தீய - தீமைகள்
பிறத்தல் - தோன்றுதல்
அதனான் - அந்த சினத்தினால்
வரும் - வரும்
பொருளுரை:
சினத்தை யாவரிடத்தும் மறந்துவிடுதல் வேண்டும். ஒருவனுக்குத் தீமைகள் தோன்றுதல் அந்த சினத்தினால் வரும்.
விளக்கவுரை:
ஒருவன் சினம் கொள்ளுதலை யாவரிடத்தும் மறந்துவிடுதல் வேண்டும். ‘யாவரிடத்தும்’ என்றதனால் அது சினம் செல்லுபடியாகும் இடம் அல்லது செல்லுபடியாகாத இடம் என எவ்விடமாக இருந்தாலும் சினம் கொள்ளுதல் ஆகாது. சினம் கொள்ளுதலை ‘மறத்தல்’ என்பது சினத்தைத் தடுத்துக் காப்பதைவிட உயர்வானது. பெரும்பாலும், ஒருவனுக்குத் தீமைகள் உண்டாவது அவனுடைய சினத்தினாலேயே விளைகிறது. தீமைகள் நேராமல் இருக்கவேண்டுமெனின் சினம் கொள்ளாதிருத்தலே சிறந்த வழியாகும்.
குறள் 304:
நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
சொல்லுரை:
நகையும் - முகமலர்ச்சியையும்
உவகையும் - மனமகிழ்ச்சியையும்
கொல்லும் - அழித்துவிடுவதாகிய
சினத்தின் - சினத்தைவிட
பகையும் - பகைமையும்
உளவோ - உண்டோ
பிற - வேறு
பொருளுரை:
முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் அழித்துவிடுவதாகிய சினத்தைவிட ஒருவனுக்குப் பகைமை வேறு உண்டோ ?
விளக்கவுரை:
ஒருவன் சினம் கொள்ளும்பொழுது முகத்தில் மலரும் சிரிப்பும், மனத்தில் தோன்றும் மகிழ்வும் ஒருங்கே அழிகின்றன. மனிதனுக்கு மனநலமே சிறந்த நலமாகும். சினத்தினால் மனமகிழ்ச்சியை இழந்தபின் அவன் தன்னுடைய மனநலத்தையும் இழந்துவிடுகின்றான். மனத்தில் மகிழ்ச்சி இழந்தபின் முகத்தில் நகைச்சிரிப்பும் போய்விடுகிறது. ஒருவனுடைய மகிழ்வான வாழ்க்கையே அழிப்பதால், சினத்தைவிட பகைமையானது வேறு எதுவும் இல்லை என்றார்.
குறள் 305:
தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம்.
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
சொல்லுரை:
தன்னைத்தான் - ஒருவன் தன்னைத் தானே
காக்கின் - துன்பத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள விரும்புவானாயின்
சினங்காக்க - தனக்குச் சினம் உண்டாகாமல் காத்துக்கொள்ளவேண்டும்.
காவாக்கால் - அவ்வாறு சினம் எழாமல் காக்காவிட்டால்
தன்னையே - தன்னையே
கொல்லுஞ் - கொன்றுவிடும்
சினம் - அந்தச் சினம்
பொருளுரை:
ஒருவன் தன்னைத் தானே துன்பத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள விரும்புவானாயின் தனக்குச் சினம் உண்டாகாமல் காத்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு சினம் எழாமல் காக்காவிட்டால், அந்தச் சினமானது அவனையே கொன்றுவிடும்.
விளக்கவுரை:
ஒருவனை துன்பத்திலிருந்து காப்பது இரண்டு வகை. ஒன்று பிறரால் துன்பத்திலிருந்து காப்பாற்றப்படுவது. மற்றொன்று தன்னைத்தானே காத்துக்கொள்வது. சினம் கொண்டு ஆடுபவனை பிறரால் காப்பாற்றப்படுவது என்பது இயலாத காரியம். அவன் சினத்தை அடக்கி தன்னைத்தான் காத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு சினத்தை அடக்காமல் செயல்படுவானாயின் அதனால் அவனுக்கு அழிவே உண்டாகும்.
குறள் 306:
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு
மேமப் புணையைச் சுடும்.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
சொல்லுரை:
சினம்என்னும் - சினம் என்கின்ற
சேர்ந்தாரைக் - தன்னைச் சேர்ந்திருப்பவரை
கொல்லி - கொல்லும் நெருப்பு போல.
இனம் என்னும் - தன்னைச் சேர்ந்திருக்கும் உறவினர்களாகிய
ஏமப் - பாதுகாப்பாக இருக்கும்
புணையைச் - தெப்பத்தை, மரக்கலத்தை
சுடும். - அழித்துவிடும்.
பொருளுரை:
சினம் என்கின்ற தன்னைச் சேர்ந்திருப்பவரை கொல்லும் நெருப்பு போல. தன்னைச் சேர்ந்திருக்கும் உறவினர்களாகிய பாதுகாப்பாக இருக்கும் தெப்பத்தை, மரக்கலத்தை அழித்துவிடும்.
விளக்கவுரை:
கொல்லி வைத்தல் என்பது தீ மூட்டுவதைக் குறிப்பது. தீயானது தன்னைச் சேருபவரையும், அல்லது தான் யாரைச் சேருகிறோமோ அவர்களையும் அழிக்கும். அதுபோல, சினமும், எவனிடத்தில் தோன்றுகிறதோ அவனை அழிக்கும். அதுமட்டுமின்றி, நீரிலிருந்து காக்கக்கூடிய தெப்பம்போல, ஒருவனைத் துன்பத்திலிருந்து காக்கும் அவனைச் சுற்றியுள்ள சுற்றத்தாரையும், அச்சினம் அகற்றிவிடும். அதனால், ஒருவன் தன்னைக் காக்கும் துணையின்றி விரைவிலேயே கெட்டழிவான்.
குறள் 307:
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று.
சொல்லுரை:
சினத்தைப் - சினத்தை
பொருள்என்று - தனது வல்லமையைக் காட்டும் ஒரு பொருளாகக்
கொண்டவன் - கொண்டவன்
கேடு - அடையும் கேடானது
நிலத்துஅறைந்தான் - நிலத்தை தன் கையினால் அறைந்தவனின்
கைபிழையாது - கை துன்புறுவது தப்பாதது
அற்று. - போன்றது.
பொருளுரை:
சினத்தை தனது வல்லமையைக் காட்டும் ஒரு பொருளாகக் கொண்டவன் அடையும் கேடானது, நிலத்தை தன் கையினால் அறைந்தவனின் கை துன்புறுவது தப்பாதது போன்றது.
விளக்கவுரை:
சினத்தை ஒரு பொருட்டாகக் கொண்டு அதன்மூலம் தன்னுடைய வல்லமையைக் காட்ட முனைபவன் கெடுதி அடைவது உறுதி. அது எவ்வாறு எனில், நிலத்தை அறைகின்றவனுடய கையானது துன்புறுவதைப்போல. நிலத்தை ஓங்கி அறைவதினால் நிலத்திற்குத் துன்பமில்லை. துன்பம் கைக்குத்தான். அதுமட்டுமின்றி, எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக ஒருவன் நிலத்தை அறைகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய கைக்குத் தீங்குண்டு. அதுபோல், ஒருவன் சினம் அதிகமாக அதிகமாக அவன் அடையும் துன்பமும் அதிகமாவது உறுதி..
குறள் 308:
இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
சொல்லுரை:
இணர் - பல சுடர்களோடு
எரி - கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு
தோய்வுஅன்ன - தன்னைப் படிவதுபோல
இன்னா - துன்பத்தைக்
செயினும் - கொடுத்தாலும்
புணரின் - கூடுமானால்
வெகுளாமை - அவன்மீது சினம் கொள்ளாதிருப்பது
நன்று - நல்லது.
பொருளுரை:
பல சுடர்களோடு கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு தன்னைப் படிவதுபோல ஒருவன் தனக்குத் துன்பத்தைக் கொடுத்தாலும், கூடுமானால் அவன்மீது சினம் கொள்ளாதிருப்பது நல்லது.
விளக்கவுரை:
பல சுடர்களாக தீ நாக்குகளோடு கொழுந்துவிட்டு எரியும் தீயின் வெம்மைத்தன்மையானது மிகவும் உக்கிரமானது ஆகும். அவ்வகைத் தீ, ஒருவனைத் தீண்ட நேர்ந்தால் அவனடையும் துன்பம் மிகவும் கொடுமையானது. அவ்வகைப்பட்ட துன்பத்தை ஒருவன் செய்வானாகில், அவன்மீது சினம் கொள்ளாதிருத்தல் மிகவும் கடினமாயினும், அப்படிப்பட்ட நிலையிலும், கூடுமானால் சினம் கொள்ளாதிருத்தல் மிகவும் நன்று.
குறள் 309:
உள்ளிய தெல்லா முடனெய்து முள்ளத்தா
லுள்ளான் வெகுளி யெனின்.
உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
சொல்லுரை:
உள்ளியது - தான் மனத்தில் எண்ணியது
எல்லாம் - எல்லாம்
உடன்எய்தும் - உடனே பெறுவான்
உள்ளத்தால் - தன்னுடைய மனத்திலே
உள்ளான் - கொள்ளமாட்டான்
வெகுளி - சினத்தை
எனின் - என்றால்
பொருளுரை:
ஒருவன் தன்னுடைய மனத்திலே சினத்தை கொள்ளமாட்டான் என்றால், தான் மனத்தில் எண்ணியது எல்லாம் உடனே பெறுவான்
விளக்கவுரை:
சினம் மனத்தில் தோன்றுவதும், அவ்வாறு தோன்றிய சினத்தை அடக்குவதும் ஒரு வகை. ஆனால், தன்னுடைய உள்ளத்தினுள்ளும் சினத்தைக் கொள்ளாத ஒருவனுக்கு அதனை அடக்கவேண்டிய வேலையில்லை. சினம் கொள்ளுவதென்பது அறவே ஒழிக்கப்பட்டதாகிறது. அவ்வாறு உயர்ந்த உள்ளம் உடையவர், தான் எண்ணியது எல்லாம் எண்ணியவாறு ஒருசேரப் பெறுவர்.
குறள் 310:
இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
சொல்லுரை:
இறந்தார் - எல்லைமீறி சினம் கொள்பவர்
இறந்தார் - செத்தவருக்கு
அனையர் - ஒப்பாவர்
சினத்தைத் - சினத்தை
துறந்தார் - துறந்தவர்கள்
துறந்தார் - துறவிகளுக்கு
துணை - ஒப்பாவர்.
பொருளுரை:
எல்லைமீறி சினம் கொள்பவர் செத்தவருக்கு ஒப்பாவர் சினத்தை துறந்தவர்கள் துறவிகளுக்கு ஒப்பாவர்.
விளக்கவுரை:
இறந்தார் என்பதற்கு வகுக்கப்பட்ட அளவினை அல்லது எல்லையைக் கடந்தவர் என்பது பொருள். அளவுக்கு மீறி சினம் கொள்பவனுக்கு உயிரழிவு விரைவில் ஏற்படும் என்பதாலும், அவ்வகைப்பட்ட ஒருவனிடம் நற்பண்புகள் குடிகொண்டிருத்தல் கடினமாதலாலும், அவனை செத்தவனுக்கு ஒப்பாக கருதப்படுகிறது. உலகப்பற்றை துறப்பது மட்டுமல்லாது, சினத்தையும் துறந்தவனே துறவியாக முடியும். உலகியல்புகளில் இயைந்து வாழும் இல்லறத்தான்கூட, சினத்தை துறந்து வாழ்வானாகில் அவனின் உயர்வுத்தன்மை துறவிகளுக்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது.