துறவறவியல்

32. இன்னா செய்யாமை

( பிறர்க்குத் தீங்கு செய்யாமை )

311. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
        செய்யாமை மாசற்றார் கோள்.

312. கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
        செய்யாமை மாசற்றார் கோள்.

313. செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
        னுய்யா விழுமந் தரும்.

314. இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண
        நன்னயஞ் செய்து விடல்.

315. அறிவினா னாகுவ துண்டோ பிறிதின்நோய்
        தந்நோய்போற் போற்றாக் கடை.

316. இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை
        வேண்டும் பிறன்கட் செயல்.

317. எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானா
        மாணாசெய் யாமை தலை.

318. தன்னுயிர்க கின்னாமை தானறிவா னென்கொலோ
        மன்னுயிர்க் கின்னா செயல்.

319. பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
        பிற்பகற் றாமே வரும்.

320. நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
        நோயின்மை வேண்டு பவர்.

குறள் 311:

சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.


சொல்லுரை:

சிறப்புஈனும் - சிறப்பைத் தருகின்ற

செல்வம் - செல்வத்தைப்

பெறினும் - பெற்றாலும்

பிறர்க்குஇன்னா - மற்றவர்க்குத் துன்பத்தை

செய்யாமை - செய்யாமல் இருத்தலே

மாசுஅற்றார் - குற்றம் அற்றவர்

கோள் - கொள்கையாகும்

பொருளுரை:

சிறப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெற்றாலும் மற்றவர்க்குத் துன்பத்தை செய்யாமல் இருத்தலே குற்றம் அற்றவர் கொள்கையாகும்.


விளக்கவுரை:

‘சிறப்பீனும் செல்வம்’ என்று சொல்லப்படுவது துறவறத்தானுக்கு வீடுபேறும் இல்லறத்தானுக்கு பொருட்செல்வமும் ஆகும். அவ்வாறு சிறப்பைத்தருகின்ற செல்வத்தைப் பெற்றாலும், அதைப் பெரும் முயற்சி மேற்கொள்ளும் வழியில், பிறர்க்குத் துன்பத்தைத் தராமல் இருத்தலே குற்றமற்றவர் தமது கொள்கையாகக் கொள்வர். சிறப்பான ஒன்றைப் பெருவதாயினும் அதையும் குற்றமற்ற வழியிலே பெறப்படவேண்டும் என்பது கருப்பொருள்.



குறள் 312:

கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

கறுத்துஇன்னா செய்த அக்கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.


சொல்லுரை:

கறுத்து - ஒருவன் கடுஞ்சினம்கொண்டு

இன்னா - தனக்குத் துன்பத்தை

செய்த - செய்த

அக்கண்ணும் - அக்கணப் பொழுதிலும்

மறுத்து - மீண்டு

இன்னா - துன்பம்

செய்யாமை - செய்யாதிருத்தல்

மாசற்றார் - குற்றம் அற்றவர்

கோள் - கொள்கை ஆகும்

பொருளுரை:

ஒருவன் கடுஞ்சினம்கொண்டு தனக்குத் துன்பத்தை செய்த அக்கணப் பொழுதிலும், மீண்டு துன்பம் செய்யாதிருத்தல் குற்றம் அற்றவர் கொள்கை ஆகும்.


விளக்கவுரை:

கடுஞ்சினம் கொண்டு ஒருவன் செய்யும் தீங்கானது, அது மற்றவர்க்குப் பெரிய துன்பத்தையே தரும். அதற்கு எதிராக, தானும் மற்றவனை துன்புறுத்த முயல்வது மனிதனின் அடிப்படை இயல்பு. ஆனால், அவ்வாறு ஒருவன் தனக்கு துன்பம் தருவானாயினும், மற்றவனை துன்புறுத்த முனையாமல் பொறுமை காத்து இருப்பது குற்றமற்ற வழியினை மேற்கொள்வோர் பின்பற்றும் கொள்கையாகும். பழிக்குப் பழி என்ற தீய எண்ணத்தை ஒழித்தல் வேண்டும்.



குறள் 313:

செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்.

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.


சொல்லுரை:

செய்யாமல் - தான் பிறருக்குத் துன்பம் செய்யாதிருக்க

செற்றார்க்கும் - தனக்குத் துன்பம் செய்தவருக்குக்கும்

இன்னாத - துன்பங்களை

செய்தபின் - செய்துவிட்டோமானால்

உய்யா - தப்பிக்கமுடியாத

விழுமம் - துன்பத்தை

தரும் - கொடுக்கும்

பொருளுரை:

தான் பிறருக்குத் துன்பம் செய்யாதிருக்க, ஒருவன் தனக்குத் தீமை செய்வானாயின், அவ்வாறு தனக்குத் துன்பம் செய்தவருக்குக்கும், திருப்பி துன்பங்களைச் செய்துவிட்டோமானால், அது ஒருவனுக்கு தப்பமுடியாத தீமையையே கொடுக்கும்.


விளக்கவுரை:

தான் பிறருக்குத் துன்பம் எதுவும் செய்யாதபோது, புரிதல் இல்லாததன் பொருட்டோ அல்லது விதிப்பயன் பொருட்டோ மற்றொருவன் தன்மீது பகைமை கொண்டு துன்பம் தருவது இயற்கை. அவ்வாறு தனக்குத் துன்பம் செய்தவர்க்கும், தான் திருப்பி துன்பம் விளைவித்தல் ஆகாது. அவ்வாறு செய்தால் அது தனக்கு தீவினைப்பயனையே கொடுக்கும். துறவறத்தின் நோக்கமே ஏற்கனவே இருக்கும் தீவினைப்பயன்களை அனுபவித்து, மேலும் தீவினைகள் தன் கணக்கில் சேராமல் பார்த்துக்கொண்டு வீடுபேறு பெறுவதுதான்.



குறள் 314:

இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.


சொல்லுரை:

இன்னா - துன்பம்

செய்தாரை - செய்தவரை

ஒறுத்தல் - தண்டிப்பது என்பது

அவர் - அவர்

நாண - நாணும்படி

நன்னயம் - நல்+நயம் - நன்மைகளை

செய்து - செய்து

விடல் - தீமைகளை மறந்து விடுதல் வேண்டும்

பொருளுரை:

தனக்குத் துன்பம் செய்தவரை தண்டிப்பது என்பது, அவர் நாணும்படி அவருக்கே நன்மைகள் பல செய்து, அவர் தனக்குச் செய்த தீமைகளை மறந்து விடுதல் ஆகும்.


விளக்கவுரை:

தனக்குத் தீமை செய்தவருக்கு, திருப்பித் தீமை செய்யாமல் இருத்தல் உயர்ந்த பண்பு என்றாலுங்கூட, அதனினும் உயர்ந்தது, அவ்வாறு தனக்குத் தீமை செய்தவருக்கே நன்மைகள் பல செய்வதாகும். ஏனெனில், மற்றவர்க்குத் திருப்பி தீமை செய்யாமல் இருக்கும்போதுகூட தன்னுடைய மனத்தில் பிறர் செய்த தீங்கின் வடு இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கே, நன்மைகள் பல செய்யும்போது தன்னுடைய மனத்தில் இருக்கும் தீய எண்ணங்கள் ஒழிந்து மனம் தூய்மை அடைவதோடு, நன்மை செய்த நல்வினைப்பயனும் நமக்குக் கிட்டும்.



குறள் 315:

அறிவினா னாகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.


சொல்லுரை:

அறிவினான் - தான் பெற்றிருக்கின்ற அறிவினால்

ஆகுவது - ஆகும் பயன்

உண்டோ - உண்டோ

பிறிதின்நோய் - பிறிதோர் உயிருக்கு நேரும் துன்பத்தை

தந்நோய்போல் - தனக்கு நேர்ந்த துன்பம்போல் எண்ணி

போற்றாக் கடை - போக்க முயலாதவிடத்து

பொருளுரை:

பிறிதோர் உயிருக்கு நேரும் துன்பத்தைத் தனக்கு நேர்ந்த துன்பம்போல் எண்ணிப் போக்க முயலாதவிடத்து, தான் பெற்றிருக்கின்ற அறிவினால் ஆகும் பயன் உண்டோ? இல்லை.


விளக்கவுரை:

மனிதர்களை மட்டுமின்றி, உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதி, அவைகளுக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்கவேண்டும். தான் பிறருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பது நற்பண்பு ஆயினும், பிற உயிர்கள் துன்பப்படும்போது, அவ்வுயிர் படும் துன்பத்தை தனக்கு நேர்ந்த துன்பமாக எண்ணி, அதைப் போக்க முயல்வதே அறிவைப் பெற்றதன் பயன் ஆகும். எப்பொழுது ஒருவன் பிறருக்கு நேரும் துன்பத்தை தமக்கு நேர்ந்த துன்பம்போல் எண்ணுகிறானோ அந்நிலையில்தான் பிறருக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்கும் முழுமுயற்சி மனத்தில் உருவாகும்.



குறள் 316:

இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்.

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.


சொல்லுரை:

இன்னா - தீமை தருவன

எனத்தான் - என்று தான்

உணர்ந்தவை - உணர்ந்தவைகளை

துன்னாமை - நெருங்காதிருத்தல், நினையாதிருத்தல்

வேண்டும் - வேண்டும்

பிறன்கண் - பிறருக்கு

செயல் - செய்தலை

பொருளுரை:

தீமை தருவன என்று தான் உணர்ந்தவைகளை, பிறருக்குச் செய்ய நினையாதிருத்தல் வேண்டும்.


விளக்கவுரை:

தீங்கு தருவன என்று ஒருவன் உணர்ந்தபின் அதனை பிறருக்குச் செய்ய, எண்ணத்தால் நினைப்பதுகூட தீமையை உண்டாக்கவல்லது. ஆதலால் ஒருவன் மனம், சொல், செயல் ஆகிய மூன்றனாலும் பிறருக்குத் தீங்கு பயப்பனவற்றை செய்யாதிருக்கவேண்டும்.



குறள் 317:

எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானா
மாணாசெய் யாமை தலை.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.


சொல்லுரை:

எனைத்தானும் - எவ்வளவு சிறியதாயினும்

எஞ்ஞான்றும் - எக்காலத்தும்

யார்க்கும் - யாருக்கும்

மனத்தானாம் - மனத்தில் தோன்றுகின்ற

மாணா - துன்பம்

செய்யாமை - செய்யாதிருத்தல்

தலை - தலைசிறந்ததாகும்.

பொருளுரை:

எக்காலத்தும் யாருக்கும் மனத்தில் தோன்றுகின்ற துன்பம் எவ்வளவு சிறியதாயினும் அதையும் பிறருக்கு செய்யாதிருத்தல் தலைசிறந்ததாகும்.


விளக்கவுரை:

மனம் அறிந்த ஒன்றில் செய்யும் செயலானது அறிந்து செய்யும் செயலாகும். ஆதலால், எவ்வளவு சிறிய துன்பம் இழைத்தாலும் அதுவும் தீமை பயப்பனவே என்பதால் ‘எனைத்தானும்’ என்றும், எவ்வளவு கடுமையான காலமாயினும் அப்படிப்பட்ட காலத்தில் செய்யும் சிறிய துன்பமும் தீவினையே உண்டாக்கும் என்பதால் “ஏஞ்ஞான்றும்” என்றும், வலியோர், மெலியோர், நல்லவர், கெட்டவர், நண்பன், பகைவன் என்று எவர்க்கு தீங்கிழைத்தாலும் அது தீவினைப்பயனையே கொடுக்குமாதலால் “யார்க்கும்” என்றும் உரைக்கப்பட்டது.



குறள் 318:

தன்னுயிர்க கின்னாமை தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.

தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.


சொல்லுரை:

தன்னுயிர்க்கு - தன்னுடைய உயிருக்கு

இன்னாமை - துன்பம் தருவன இவை என்று

தான்அறிவான் - தான் அறிந்தவன்

என்கொலோ - என்ன காரணமோ

மன்னுயிர்க்கு - நிலைபெற்ற உயிர்களுக்கு

இன்னா - துன்பத்தைச்

செயல் - செய்தல்

பொருளுரை:

தன்னுடைய உயிருக்குத் துன்பம் தருவன இவை என்று தான் அறிந்தவன், நிலைபெற்ற உயிர்களுக்கு துன்பத்தைச் செய்தல் என்ன காரணமோ ?


விளக்கவுரை:

தனக்குத் துன்பம் தருவன எவை என்று தானே உணரத்தக்கவன் மனிதன். அவ்வாறு உணர்ந்து அறியும் திறம் படைத்த மனிதன் எதன்பொருட்டு மற்ற உயிர்களுக்குத் துன்பத்தைத் தருவது. அவ்வாறு செய்யும் துன்பம் தனக்கு தீவினைப்பயன்களையே அளிக்கும் என்று நன்கு அறிந்த பின்னரும்.



குறள் 319:

பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.


சொல்லுரை:

பிறர்க்குஇன்னா - பிறர்க்குத் துன்பங்களை

முற்பகல் - முற்பொழுதில்

செய்யின் - செய்தால்

தமக்குஇன்னா - தனக்குத் துன்பம்

பிற்பகல் - பிற்பொழுதில்

தாமே - தாமே

வரும் - வந்து சேரும்

பொருளுரை:

பிறர்க்குத் துன்பங்களை முற்பொழுதில் செய்தால், தனக்குத் துன்பம் பிற்பொழுதில் தாமே வந்து சேரும்.


விளக்கவுரை:

பிறருக்குத் துன்பம் செய்தவதினால் உண்டாகும் தீவினைப் பயனிலிருந்து ஒருவன் தப்ப இயலாது என்றும் அதனை அவன் அனுபவித்தே தீரவேண்டும் என்பதும் கருத்து. முற்பகல், பிற்பகல் என்று கூறப்பட்டது காலத்தைக் குறிப்பதன் பொருட்டாகும். அவை முற்பகல், பிற்பகல் முந்நாள், பின்னாள் முற்பிறப்பு, பிற்பிறப்பு என எவையாகவும் இருக்கலாம்.



குறள் 320:

நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.


சொல்லுரை:

நோயெல்லாம் - துன்பங்கள் எல்லாம்

நோய்செய்தார் - துன்பம் செய்தவரையே

மேலவாம் - அடைவன ஆகும்.

நோய்செய்யார் - பிற உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்யமாட்டார்

நோயின்மை - தனக்குத் துன்பம் இல்லாமையை

வேண்டுபவர் - விரும்புபவர்

பொருளுரை:

துன்பங்கள் எல்லாம் துன்பம் செய்தவரையே அடைவன ஆகும். தனக்குத் துன்பம் இல்லாமையை விரும்புபவர், பிற உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்யமாட்டார்.


விளக்கவுரை:

பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதவர் துன்பம் அடைவதில்லை. துன்பம் இழைப்பவர்க்கே துன்பங்கள் சென்றடையும். ஆதலால், தனக்குத் துன்பம் வேண்டாமென்று விரும்புபவர் பிற உயிர்களுக்குத் துன்பம் இழைக்கமாட்டார். தனக்குத் துன்பம் வேண்டாம் என்ற நிலைக்காவது பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் நலம்.



uline