321. அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
       
பிறவினை எல்லாந் தரும்.
322. பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
       
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.
323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
       
பின்சாரப் பொய்யாமை நன்று.
324. நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
       
கொல்லாமை சூழு நெறி.
325. நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாம் கொலைஅஞ்சிக்
       
கொல்லாமை சூழ்வான் றலை.
326. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேல்
       
செல்லா துயிருண்ணுங் கூற்று.
327. தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
       
தின்னுயிர் நீக்கும் வினை.
328. நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
       
கொன்றாகு மாக்கங் கடை.
329. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
       
புன்மை தெரிவா ரகத்து.
330. உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற்
       
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
குறள் 321:
அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
சொல்லுரை:
அறவினை - அறங்கள் எல்லாம் ஆகிய செய்கையானது
யாதெனின் - யாது என்று வினவினால்
கொல்லாமை - ஓர் உயிரையும் கொல்லாது இருத்தல் ஆகும்
கோறல் - கொல்லுதல்
பிறவினை - அறமல்லாத பிற பாவச்செயல்கள்
எல்லாம் - எல்லாவற்றையும்
தரும் - தரும்
பொருளுரை:
அறங்கள் எல்லாம் ஆகிய செய்கையானது யாது என்று வினவினால், ஓர் உயிரையும் கொல்லாது இருத்தல் ஆகும். அவ்வுயிர்களைக் கொல்லுதல் என்பது, அறமல்லாத பிற பாவச்செயல்கள் எல்லாவற்றையும் தரும்.
விளக்கவுரை:
அறம் போற்றுகின்ற செயல் என்பது பிற உயிர்களைக் கொல்லாது இருத்தல் ஆகும். மற்ற எல்லா அறநெறியையும்விட கொல்லாமையே தலையான அறநெறியாக போற்றப்படுகிறது. எல்லா உயிர்க்கும் இயற்கை மரணம் ஏற்படும்வரை வாழ உரிமையுண்டு. உணவுக்காகவோ அல்லது தன்னுடைய சுயநலத்திற்காகவோ மனிதன் பிற உயிரை நீக்கும்போது அவனுக்கு எல்லாவகையான தீவினைப்பயனும் உண்டாகிறது. இல்லறத்தான் தன்னை தற்காத்துக்கொள்ள பிற உயிர்களைக் கொள்வானாயினும், அவனுக்கு தீவினைப்பயன் கண்டிப்பாக வந்து சேரும். துறவறத்தானின் நோக்கமே வீடுபேறு என்பதால் எவ்வகைச் சூழலிலும் பிற உயிர்களைக் கொல்லுதல் செய்யக்கூடாது. இல்லையெனில், துறவறத்தின் நோக்கமே சிதைந்துவிடும்.
குறள் 322:
பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
சொல்லுரை:
பகுத்து - உண்ணும் உணவினைப் பிற உயிர்களுக்கும் பகுத்துக் கொடுத்து
உண்டு - உண்டு
பல்லுயிர் - பல்வேறு உயிர்களையும்
ஓம்புதல் - பேணிப் போற்றி வாழ்தல்
நூலோர் - அறநூல்களை இயற்றிய நூலோரால்
தொகுத்தவற்றுள் - தொகுத்துக் கூறப்பட்ட அறங்கள்
எல்லாம் - எல்லாவற்றினுள்ளும்
தலை - முதன்மையானது ஆகும்.
பொருளுரை:
உண்ணும் உணவினைப் பிற உயிர்களுக்கும் பகுத்துக் கொடுத்து உண்டு பல்வேறு உயிர்களையும் பேணிப் போற்றி வாழ்தல், அறநூல்களை இயற்றிய நூலோரால் தொகுத்துக் கூறப்பட்ட அறங்கள் எல்லாவற்றினுள்ளும் முதன்மையானது ஆகும்.
விளக்கவுரை:
பிற உயிர்களைக் கொல்லுதல் மட்டும் பாவம் என்பதல்ல, பிற உயிர்கள் வாழ்வதற்கு தன்னிடமுள்ளவற்றை பகிர்ந்தளித்து வாழாமையும் பாவமாகக் கருதப்படும். பிற உயிர்களையும் காக்கவேண்டும் என்ற எண்ணமே உயர்ந்த எண்ணமாகும். அறவழி வாழ்வது இவைதான் என்று சான்றோர்களால் தொகுத்துக்கூறப்பட்ட அறங்களில் எல்லாம் தலையாய அறமாக போற்றப்படுவது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறமாகும்.
குறள் 323:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
சொல்லுரை:
ஒன்றாக - தனக்கு இணையின்றி தானே தனிச்சிறப்பானதாக விளங்கி
நல்லது - நன்மை பயக்கும் அறமானது
கொல்லாமை - கொல்லாமை ஆகும்
மற்றுஅதன் - மற்றபடி, கொல்லாமைக்கு
பின்சாரப் - அடுத்து சிறந்ததாகிய
பொய்யாமை - பொய் சொல்லாதிருத்தல்
நன்று - நன்மை பயப்பதாகும்.
பொருளுரை:
தனக்கு இணையின்றி தானே தனிச்சிறப்பானதாக விளங்கி நன்மை பயக்கும் அறமானது கொல்லாமை ஆகும். மற்றபடி, கொல்லாமைக்கு அடுத்து சிறந்த அறமாகிய பொய் சொல்லாதிருத்தல் நன்மை பயப்பதாகும்.
விளக்கவுரை:
அறங்களுள் எல்லாம் தலையானதாகவும், தனிச்சிறப்பானதாகவும், ஈடுஇணையற்றதாகவும் கருதப்படுவது கொல்லாமை என்னும் அறமாகும். ஒருவன் கொல்லாமை அறத்தை எவ்வித சூழலிலும் கடைபிடிப்பானாயின், அதுவே அவனுக்கு மற்ற அறங்களையெல்லாம் பின்பற்றும் வழியினையும் காட்டும். அவன் சிந்தை எப்பொழுதும் கொல்லாமை அறத்திலிருந்து வழுவாமல் இருக்கவேண்டி மற்ற அறவழிகளையும் சிந்தித்துக்கொண்டே இருக்கும். அவ்வாறு சிறந்த அறமாகிய கொல்லாமைக்கு அடுத்ததாக சிறப்பானதாகப் போற்றப்படும் அறமானது வாய்மை என்பதாகும்.
வாய்மை என்பது தான் அறிந்த அறங்களில் எல்லாம் சிறந்த அறமாக “யாமெய்யாக் கண்டவற்றுள்” என்று முன்னர் கூறியிருப்பதால், கொல்லாமை அறமானது வாய்மை அறத்திற்கும் மேலான ஒன்று என்பதை உணர்த்தவே மீண்டும் இங்கு ஒப்புமையோடு கூறுகின்றார். அறங்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று சார்புடையன. ஒன்றைப் பின்பற்றாது விட்டுவிட்டு, மற்றொறு அறத்தைப் பின்பற்றுகிறேன் என்று கூறுவது பொருளற்றது ஆகும்.
குறள் 324:
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி.
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
சொல்லுரை:
நல்ஆறு - நன்மை பயக்கும் வழி, நல்ல நெறி
எனப்படுவது - என்று கூறப்படுவது
யாதெனின் - யாது என்று வினவினால்
யாதொன்றும் - எந்த ஓர் உயிரையும்
கொல்லாமை - கொல்லாது இருக்கும் அறத்தினை
சூழும் - காக்கும்
நெறி - நெறியாகும்
பொருளுரை:
நன்மை பயக்கும் வழி, நல்ல நெறி என்று கூறப்படுவது யாது என்று வினவினால், எந்த ஓர் உயிரையும் கொல்லாது இருக்கும் அறத்தினைப் போற்றிக் காக்கும் நெறியாகும்.
விளக்கவுரை:
பேறின்ப வீடுபேறு அடைவதற்கு பின்பற்றவேண்டிய நல்ல வழி எது என்று ஆராய்ந்து நோக்கினால் அது எந்த ஓர் உயிரையும் கொல்லாமை என்னும் உயர்ந்த அறநெறியே ஆகும். ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள எந்த உயிராயினும் அதற்குத் துன்பம் விளைவிக்காத உயர்ந்த நிலையே ஒருவனுக்கு வீடுபேற்றை அளிக்கும்.
குறள் 325:
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் றலை.
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
சொல்லுரை:
நிலைஅஞ்சி - பிறவி நிலைக்கு அஞ்சி
நீத்தாருள் - பற்றுகளைத் துறந்து, துறவறம் மேற்கொண்டாருள்
எல்லாம் - எல்லோரிலும்
கொலைஅஞ்சி - உயிர்க்கொலைக்கு அஞ்சி
கொல்லாமை - கொல்லாமை நெறியை
சூழ்வான் - மறவாது கடைப்பிடித்து வாழ்பவன்
தலை - தலைசிறந்தவன் ஆவான்.
பொருளுரை:
பிறவியினால் வரும் துன்ப நிலைக்கு அஞ்சி பற்றுகளைத் துறந்து, துறவறம் மேற்கொண்டாருள் எல்லோரிலும் உயிர்க்கொலைக்கு அஞ்சி கொல்லாமை நெறியை மறவாது கடைப்பிடித்து வாழ்பவனே தலைசிறந்தவன் ஆவான்.
விளக்கவுரை:
பிறவித்துன்பத்திற்கு காரணம் உலகிலுள்ள பொருட்களின்மேல் எற்படுகின்ற பற்று நிலை. பிறவித்துன்ப நிலைக்கு அஞ்சி, அத்துன்பநிலையிலிருந்து விடுபடுவதன் பொருட்டு உலகப்பற்றுக்களை துறந்து துறவறம் மேற்கொள்வர். அவ்வாறு, துறவறம் மேற்கொண்டோரும், சில சூழ்நிலைகளில், தன்னைக் காப்பதன் பொருட்டோ அல்லது யாகம் இயற்றுதல் முதலிய பிற காரணங்களின் பொருட்டோ உயிர்க்கொலை செய்வானாயின் பிறவித்துன்பம் விலகாது. உலப்பற்றுக்களை துறந்தவனாயினும் உயிர்க்கொலை செய்யாதிருப்பவனே துறந்தாருள் எல்லோரினும் தலைசிறந்தவனாகக் கருதப்படுவான்.
குறள் 326:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று.
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
சொல்லுரை:
கொல்லாமை - உயிர்க்கொலை செய்யாமை என்னும் நல்ல கொள்கையினை
மேற்கொண்டு - விரதமாக ஏற்று
ஒழுகுவான் - கடைப்பிடித்து வாழ்பவன்
வாழ்நாள்மேல் - அவனுடைய வாழ்நாளை குறைக்கும் விதமாக
செல்லாது - செல்லமாட்டான்
உயிருண்ணும் - உயிரை எடுக்கும்
கூற்று - கூற்றுவன்
பொருளுரை:
உயிர்க்கொலை செய்யாமை என்னும் நல்ல கொள்கையினை விரதமாக ஏற்று கடைப்பிடித்து வாழ்பவனிடம், அவனுடைய வாழ்நாளைக் குறைக்கும் விதமாக உயிரை எடுக்கும் கூற்றுவனாகிய யமன் செல்லமாட்டான்.
விளக்கவுரை:
எப்பொழுது ஒருவன் உயிர்க்கொலை செய்யாமை என்பதில் உறுதியாக இருக்கிறானோ அவனிடம் உயிரை உடலினின்று பிரித்தெடுக்கும் யமனாகிய கூற்றுவனும் உயிரைப் பிரித்தெடுக்க அவனுடைய வாழ்நாளில் செல்வதில்லை. இதன்மூலம் அவனுடைய வாழ்நாள் நீட்டித்து வாழ அவன் செய்யும் நல்வினையால் கிட்டுகிறது என்பது புலனாகிறது. இயற்கை விதிப்படி அவரவர் நல்வினை, தீவினைக்கேற்ப அவருடைய வாழ்நாளின் நீட்டிப்பும் குறைப்பும் அமைகிறது. உயிர் உடலிருந்து பிரிவது என்பது ஒரு துன்பந்தரும் நிகழ்வு. அத்தகைய பாவச்செயலாகிய உயிர்க்கொலையை ஒருவன் பிற உயிர்களுக்கு செய்யாதிருக்கும்பொழுது, துன்பந்தரும் செயலாகிய உயிரைப்பிரிக்கும் செயலை கூற்றுவனும் அவர்களுக்குச் செய்வதில்லை என்பது கருப்பொருள். கொல்லாமை என்னும் உயர்ந்த அறநெறியைப் பின்பற்றும் ஞானியர், தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையிலேயே இப்பூவுலக வாழ்க்கையைத் துறக்கின்றனர்.
குறள் 327:
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
சொல்லுரை:
தன்னுயிர் - ஒருவன் தன்னுடைய உயிர்
நீப்பினும் - உடலை விட்டு நீங்குவதாயினும்
செய்யற்க - செய்யாதிருக்க
தான்பிறிது - தான் பிறிதோர்
இன்னுயிர் - இனிய உயிரை
நீக்கும் - நீக்கும்
வினை - செயல்
பொருளுரை:
ஒருவன் தன்னுடைய உயிர் உடலை விட்டு நீங்குவதாயினும், தான் பிறிதோர் இனிய உயிரை அதனின் உடலை விட்டு நீக்கும் செயலை செய்யக்கூடாது.
விளக்கவுரை:
தன்னுடைய உயிர் போகுமாயினும், தன்னைக் கொல்ல வரும் மற்றொரு உயிரையோ அல்லது நோயிலிருந்து தன்னைக்காப்பதன் பொருட்டோ அல்லது உணவின்பொருட்டோ என எவ்வகையிலும் பிற உயிரைக் கொல்லும் தீவினைச்செயலை செய்யக்கூடாது. உனக்கு உன் வாழ்நாள் எவ்வளவு இனிமையுடையதோ, அதுபோல ஒவ்வொரு உயிர்க்கும் அதனுடைய வாழ்நாள் இனிமையானது, அதன் வாழ்நாளை முழுமையாக வாழும் உரிமையும் உண்டு. அதனால் இன்னுயிர் என்றார். துன்பத்திலும் கொடிய துன்பம் இறத்தல் துன்பம் ஆகும். அதனை உணர்ந்து கொல்லாமை அறநெறியை பின்பற்றவேண்டும் என்பதால் ‘தன்னுயிர் நீப்பினும்’ என்றார்.
குறள் 328:
நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகு மாக்கங் கடை.
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
சொல்லுரை:
நன்றாகும் - மனிதனுக்கு நன்மை உண்டாக்கும்
ஆக்கம் - செல்வம்
பெரிதெனினும் - கொலையால் மிகுதியாக வரும் எனினும்
சான்றோர்க்குக் - அறிவிற் சிறந்த சான்றோர்க்கு
கொன்றாகும் - பிற உயிரைக் கொல்வதினால் ஆகும்
ஆக்கம் - செல்வம்
கடை - இழிவானது ஆகும்.
பொருளுரை:
மனிதனுக்கு நன்மை உண்டாக்கும் செல்வம் கொலையால் மிகுதியாக வரும் எனினும், அறிவிற் சிறந்த சான்றோர்க்குப் பிற உயிரைக் கொல்வதினால் வரும் செல்வம் இழிவானது ஆகும்.
விளக்கவுரை:
யாகம் முதலியவற்றால் ஒருவன் தன்னுடைய ஆற்றலையோ அல்லது செல்வத்தையோ பெருக்கிக்கொள்ளமுடியும் ஆயினும், யாகத்தின்பொருட்டு நடத்தப்படும் உயிர்ப்பலியும் தீவினைப்பயனை விளைவிப்பதே. இறைவனோடு இணையும் பேரின்ப நிலையாகிய வீடுபேறு அடைய விரும்பும் சான்றோர்கள் உயிர்ப்பலி இடுவதை விரும்பமாட்டார்கள். உயிர்ப்பலி இட்டு வரும் ஆற்றலோ அல்லது செல்வமோ சான்றோர்க்கு இழிவானதே ஆகும்.
குறள் 329:
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.
சொல்லுரை:
கொலைவினையர் - கொலைத்தொழிலை செய்வோர்
ஆகிய மாக்கள் - மக்கள் ஆயினும் அவர்கள் மாக்களே
புலைவினையர் - இழிந்த தொழில் செய்வோர்
புன்மை - அதன் இழிந்த தன்மையை
தெரிவார் - நன்கு அறிந்த சான்றோர்கள்
அகத்து - உள்ளத்தில்
பொருளுரை:
கொலைத்தொழிலை செய்வோர் மக்கள் ஆயினும் அவர்கள் மாக்களே. கொலையின் இழிந்த தன்மையை நன்கு அறிந்த சான்றோர்கள் உள்ளத்தில் இழிந்த தொழில் செய்வோராகவே எண்ணப்படுவர்.
விளக்கவுரை:
பொருளீட்டுவதற்காகவோ, போரிலோ அல்லது மற்ற வழிகளிலோ கொலைத்தொழிலை செய்வோர் மற்றும் கொலைத்தொழிலுக்கு உடந்தையாக இருப்பவர், மக்களாக மதிக்கப்படவேண்டியவர் அல்ல. அவர்கள் விலங்கிற்குச் சமமானவர்களே. அவ்வாறு கொலைத்தொழில் புரிவோர் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றிருப்பாராயினும், கொலைத்தொழில் புரிவதால் உண்டாகும் இழிதன்மையை அறிந்த சான்றோர்கள் உள்ளத்தில் அவர்கள் இழிந்த தொழில் செய்பவராகவே கருதப்படுவர்.
குறள் 330:
உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
சொல்லுரை:
உயிர் - உயிரை
உடம்பின் - உடம்பிலிருந்து
நீக்கியார் - நீக்கிய பாவச்செயலை செய்தவர்
என்ப - என்பர்
செயிர்உடம்பின் - நோயுற்ற உடம்புடன்
செல்லா - செல்வமில்லாத, வறுமை நிறைந்த
தீ வாழ்க்கை - கொடுமையான வாழ்க்கையை
அவர் - வாழ்பவர்
பொருளுரை:
நோயுற்ற உடம்புடன் செல்வமில்லாத, வறுமை நிறைந்த, கொடுமையான வாழ்க்கையை வாழ்பவரை, முற்பிறவியில் உயிரை உடம்பிலிருந்து நீக்கும் கொலை பாவச்செயலை செய்தவர் என்பர்.
விளக்கவுரை:
எந்த வகையான மருந்துகளாலும் குணமடைய முடியாமல், எப்பொழுதும் நோயுற்ற உடம்புடனும், வாழ்க்கை நடத்துவதற்கு செல்வமின்றி வறுமை நிலையில் வாழும் கொடுமையான வாழ்க்கையை உடையவர், அவர்களின் இந்த இழிநிலை வாழ்க்கைகுக் காரணம் முற்பிறவியில் கொலைத்தொழில் புரிந்து வாழ்ந்ததே என்று சான்றோர் கூறுவர். கொலைத்தொழில் புரிவோரின் ஊழ்வினைத்தாக்கம் அவர்களின் வாழ்வில் மிகவும் கொடியதாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது.