துறவறவியல்

34. நிலையாமை

( நிலையற்ற உலக வாழ்வு )

331. நில்லாத வற்றை நிலையின வென்றுணரும்
        புல்லறி வாண்மை கடை.

332. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
        போக்கு மதுவிளிந் தற்று.

333. அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
        லற்குப வாங்கே செயல்.

334. நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
        வாள துணர்வார்ப் பெறின்.

335. நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
        மேற்சென்று செய்யப் படும்.

336. நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
        பெருமை யுடைத்திவ் வுலகு.

337. ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
        கோடியு மல்ல பல.

338. குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
        யுடம்பொ டுயிரிடை நட்பு.

339. உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
        விழிப்பது போலும் பிறப்பு.

340. புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்
        டுச்சி லிருந்த வுயிர்க்கு.

குறள் 331:

நில்லாத வற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறிவு ஆண்மை கடை.


சொல்லுரை:

நில்லாதவற்றை - நிலையில்லாத தன்மையுடைய பொருட்களை

நிலையின - நிலைத்து நிற்கும் பொருட்கள்

என்றுணரும் - என்று தானாக எண்ணிக்கொள்ளும்

புல்லறிவுஆண்மை - சிற்றறிவு உடைவராயிருத்தல்

கடை - இழிவானதாகும்.

பொருளுரை:

நிலையில்லாத தன்மையுடைய பொருட்களை நிலைத்து நிற்கும் பொருட்கள் என்று தானாக எண்ணிக்கொள்ளும் சிற்றறிவு உடைவராயிருத்தல் இழிவானதாகும்.


விளக்கவுரை:

இவ்வுலகில் நிலைபெற்ற தன்மையுடையன என்று எதுவும் இல்லை. எல்லா பொருட்களும் நிலையில்லாத தன்மையுடையனவையே. உயிரற்ற பொருட்களும் காலம் மாறமாற நிலைமாறும் தன்மையுடையன. இவ்வுலகில் தோன்றும் உயிர்களும் , காலத்தோடு வளர்ந்து பின்பு அழிவன. செல்வங்களும் ஒருவரிடமிருந்து வேறொருவரிடம் மாறும் தன்மையுடையன. இந்த நிலையாமைத் தத்துவத்தைப் புரிந்துகொள்வதே அறிவு. யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகிய நிலையாமைத் தத்துவங்களைப் புரிந்துகொள்ளாமல் அவைகளெல்லாம் நிலையானதாக எண்ணிக்கொள்ளும் சிற்றறிவு இழிவானதாகும்.



குறள் 332:

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று.

கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந்து அற்று.


சொல்லுரை:

கூத்தாட்டு - கூத்தாடும்

அவை - சபையில்

குழாத்து - மக்கள் குழுமுவது (கூடுவது)

அற்றே - போன்றது

பெருஞ்செல்வம் - பெரும் செல்வம் வந்து குவிவது

போக்கும் - அச்செல்வம் பிறிதோர் இடத்திற்கு போதலும்

அதுவிளிந்து - கூத்து முடிந்தவுடன் மக்கள் கலைந்து செல்வதை

அற்று - போன்றது

பொருளுரை:

ஒருவனிடம் பெரும் செல்வம் வந்து குவிவது, கூத்தாடும் சபையில் மக்கள் குழுமுவது (கூடுவது) போன்றது. அச்செல்வம் பிறிதோர் இடத்திற்குப் போதலும் கூத்து முடிந்தவுடன் மக்கள் கலைந்து செல்வதைப் போன்றது.


விளக்கவுரை:

இவ்வுலகத்தை ஒரு கூத்தாடும் அவையாகவும், அங்கு நடத்தப்படும் ஆட்டத்தைக் கண்டு களிக்கப்படும் இன்பம் ஒரு பொய் இன்பம் என்றும் , கூத்து முடிந்தவுடன் அந்த பொய் இன்பமும் போய்விடும் என்றும் கூறப்படுகிறது. அதுபோல செல்வமும் ஒருவனிடம் , கூத்தைக் களிக்க ஒவ்வொருவராக வருவதுபோல் வந்து சேருமென்றும், அந்த செல்வம் பொய்யான இன்பத்தையே தரவல்லது என்றும், கூத்து முடிந்தவுடன் அனைவரும் ஒருசேர பிரிந்து செல்வதுபோல் ஒருவனிடம் இருக்கும் செல்வமும் அழிவுக்காலத்தில் அவனை விட்டு நீங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. செல்வத்தால் கிடைக்கும் இன்பம் பொய் இன்பம் என்றும், செல்வம் நிலையற்ற பொருளல்ல என்றும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.



குறள் 333:

அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல்.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.


சொல்லுரை:

அற்கா - நிலையில்லாத

இயல்பிற்றுச் - தன்மையுடையது

செல்வம் - செல்வம்

அதுபெற்றால் - அச்செல்வத்தைப் பெற்றால்

அற்குப - நிலையான தன்மையுடைய அறங்களை

ஆங்கே - அப்பொழுதே

செயல் - செய்தல் வேண்டும்

பொருளுரை:

செல்வமானது. நிலையில்லாத தன்மையுடையது. அவ்வாறு நிலையற்ற தன்மையுடைய செல்வத்தைப் பெற்றால் நிலையான தன்மையுடைய அறங்களை அப்பொழுதே செய்தல் வேண்டும்.


விளக்கவுரை:

செல்வம் ஒருவரிடத்தில் நிலையாக இருப்பதில்லை. அது கைமாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது. நிலையற்ற தன்மையுடைய செல்வத்தைப் பெற்றால், இல்லறத்தான் விருந்தோம்பல், ஒப்புரவறிதல், ஈதல் போன்ற அறநெறிச் செயல்கள்மூலம் பிறருக்கு உதவிட வேண்டும். துறவறத்தான் பொருள் பெறுவது அரிது. விதிவயத்தால் பொருள் பெற்றாலும், அதை உடனே பொருள்வேண்டுவோருக்கு கொடுத்திடவேண்டும். நிலையற்ற தன்மையுடைய செல்வத்தைக்கொண்டு நிலையான தன்மையுடைய நல்வினைப் பயனளிக்கும் அறங்களைச் செய்வதே செல்வத்தைப் பெறுவதின் பயனாகும்.



குறள் 334:

நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்.


சொல்லுரை:

நாள்என - நாள் என்று சொல்லப்படுது

ஒன்றுபோல் - ஒரு கால அளவுகோலினைப்போல்

காட்டி - தன்னைக்காட்டி

உயிர்ஈரும் - உயிரை அறுக்கின்ற

வாள்அது - வாள் அது

உணர்வார்ப்பெறின் - உணர்ந்து கொள்வார் ஆயின்

பொருளுரை:

காலத்தின் தன்மையை உணரும் தன்மையைப் பெற்றவர், நாள் என்று சொல்லப்படுது ஒரு கால அளவுகோலினைப்போல் தன்னைக்காட்டி உயிரை அறுக்கின்ற வாள் அது என்பதை உணர்ந்தவர் ஆவர்.


விளக்கவுரை:

காலம் எல்லையற்ற தன்மையுடையது. ஆனால், சூரியன் நம் கண்ணுக்குத் தோன்றி மறைந்து, மீண்டும் நம் கண்ணுக்குப் புலப்படும் காலப்பொழுதை ‘நாள்’ என்று நாம் வரையறுத்துக்கொண்டோம். மனிதனின் உயிர் இவ்வுடலுடன் வாழும் காலத்தை இந்த நாளைக்கொண்டே வரையறுத்து வாழ்நாள் எனப்பட்டது. உயிர் அழியாத தன்மையுடையன. உடல் அழியும் தன்மையுடையன. உயிரே உடம்பிற்கு இயக்கம் தருவதால், உடம்பை உயிரென்று கூறினார். எல்லையற்று எப்பொழுதும் இருக்கும் காலம், தோன்றி மறையும் பொருளால் எல்லை வரையறுக்கப்படுவதால் “நாளென ஒன்றுபோல் காட்டி” என்றார். உடம்பொடு கூடிய வாழ்வு “நாள்” என்ற கால அளவால் ஒவ்வொரு நாளும் குறைக்கப்படுவதால், அவ்வாறு குறைக்கும் நாள் என்னும் கால அளவை ‘உயிர் ஈரும் வாள்’ என்றார். உடம்பு நிலையற்றது என்றும், அந்த உடம்பினால் பயனடைய விரும்புவோர் வாழ்நாளை வீண்நாளாக்காது, நிலையற்ற உடம்பினால் உண்டான வாழ்நாளை நிலையுடைய நல்வினை செய்வதன்பொருட்டு செலவிடவேண்டும் என்றும் கூறப்பட்டது. அதனை உணர்ந்தோர்க்கே நாள் என்பது உயிர் ஈரும் வாள் என்பதை அறிந்துகொள்ள முடியும். இதன்மூலம் யாக்கை நிலையாமை உணர்த்தப்பட்டது.



குறள் 335:

நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.


சொல்லுரை:

நாச்செற்று - பேச்சு எழாதபடி நாவானது அடங்கி

விக்குள்மேல் - விக்கல் எழும்பி

வாராமுன் - வருவதற்கு முன்

நல்வினை - நற்செயல்களை

மேற்சென்று - விரைவாக முந்திக்கொண்டு

செய்யப்படும் - செய்யவேண்டும்

பொருளுரை:

ஒருவன் தனக்கு பேச்சு எழாதபடி நாவானது அடங்கி, விக்கல் எழும்பி இறப்பு வருவதற்கு முன், நற்செயல்களை விரைவாக முந்திக்கொண்டு செய்யவேண்டும்.


விளக்கவுரை:

நா உள்ளிழுக்கப்படுவதும், விக்குள் மெலெழுந்து வருதலும் உடல் உயிரைவிட்டுப் பிரியும்போது நிகழ்வது. ஒருவன் தன் உடலைவிட்டு உயிர்பிரியும் முன்னே, விரைவாக நல்வினைப் பயக்கும் செயல்களைச் செய்யவேண்டும் என்பதாம். நம்மைப்போன்ற மாந்தர் நம் கண்முன்னே நா அடங்கி , விக்குள் மேலெழுந்து இறப்பதைக் காண்கிறபடியால், அவ்வாறு தனக்கும் ஏற்படும்முன்னே நல்வினைப்பயனளிக்கும் செயல்களை விரைவாக முந்திக்கொண்டு செய்யவேண்டும். இதன்மூலம் இறப்பின் தன்மையும் யாக்கை நிலையாமையும் உணர்த்தப்பட்டது.



குறள் 336:

நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.


சொல்லுரை:

நெருநல் - நேற்று

உளன்ஒருவன் - இருந்தான் ஒருவன்

இன்றில்லை - இன்று இல்லை

என்னும் - என்னும்

பெருமை - பெருமை

உடைத்து - உடையது

இவ்வுலகு - இந்த உலகம்

பொருளுரை:

நேற்று இருந்தான் ஒருவன், இன்று இல்லை என்னும் பெருமை உடையது இந்த உலகம்.


விளக்கவுரை:

நெருநல் என்பது நிகழும் இன்றைய நாளைக்கு முந்திய நாளைக் குறிப்பதாகும். நேற்று உயிருடன் இருந்த ஒருவன் இன்று இல்லை என்பதுபோல இன்று இருப்பவன் நாளையே இல்லாமலும் போகலாம் என்ற நிலையாமை உடையது இவ்வுலகம். பெருமை என்பது நிலையாமையைக் குறிக்கும் நகைப்பிற்குரிய சொல்லாகும். இது மனித வாழ்வின் காலச்சுருக்கத்தையும் காட்டுகிறது.



குறள் 337:

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.


சொல்லுரை:

ஒருபொழுதும் - ஒரு நாள் அளவுகூட

வாழ்வது - தாம் உயிர் வாழ்வதை

அறியார் - அறியாதவர்கள்

கருதுப - நினைப்பது

கோடியும் - கோடியளவு மட்டும்

அல்ல - அல்ல

பல - அதைவிட மிகவும் பலவாகும்

பொருளுரை:

ஒரு நாள் அளவுகூட தாம் உயிர் வாழ்வதை அறியாதவர்கள் நினைப்பது கோடியளவு மட்டும் அல்ல, அதைவிட மிகவும் பலவாகும்.


விளக்கவுரை:

ஒரு பொழுது என்பது பகல் பொழுதையும், இரவுப்பொழுதையும் குறிக்கும். மற்றும் ஒரு கணப்பொழுதையும் குறிக்கும். முன்னர் கூறிய குறளில், நேற்று, இன்று என்று ஒரு முழுநாள் காலத்தைக் கூறினார். இக்குறளில், அதனினும் குறைந்த கால அளவைக் கூறி, அந்தக் கால அளவுகூட நாம் வாழ்வோமா என்பதை உறுதியாக அறிந்துகொள்ள இயலாத நிலையிலிருக்கும் மனிதர்கள், இவ்வுலகில் வாழ எண்ணும் எண்ணங்கள் கோடி அளவைவிடவும் பலவாக உள்ளது. இது ஏனோ? யாக்கை நிலையாமையை மனிதன் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பது கருப்பொருள்.



குறள் 338:

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்பொ டுயிரிடை நட்பு.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந்து அற்றே
உடம்பொடு உயிர்இடை நட்பு.


சொல்லுரை:

குடம்பை - முட்டையானது

தனித்துஒழியப் - தனித்துக்கிடக்க

புள் - அதனுள் இருந்த பறவையானது

பறந்து - பறந்து சென்றதை

அற்றே - போன்றது

உடம்பொடு - உடம்புடன்

உயிர்இடை - உயிருக்கு இருக்கும்

நட்பு - தொடர்பு

பொருளுரை:

உடம்புக்கும் உடலுக்கும் இடையிலான தொடர்பு, முட்டையானது தனித்துக்கிடக்க அதனுள் இருந்த பறவையானது பறந்து சென்றதைப் போன்றது


விளக்கவுரை:

இருவேறு வகைப்பட்ட பொருட்களுக்கிடையில் உருவாகி அழியும் தொடர்பைக் குறிக்கிறது இக்குறள். அழியும் பொருளும் உருவமுடையதுமாகிய உடலுடன் , அழியாப்பொருளாகிய உருவமற்ற உயிர் குடிகொண்டிருக்கிறது. நிலையான உயிரானது தான் ஆற்ற விரும்பும் செயல்களை உடலின்மூலம் செய்யத்தொடங்குகிறது. தன்னுடைய காலம் வரும்பொழுது உயிரானது அவ்வுடலை இயக்கமற்று, உபயோகமற்று விட்டுவிட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறது. உயிர் உடம்பை ஓர் ஆதாரமாக பயன்படுத்திக்கொள்கிறதே ஒழிய மற்றபடி அவைகளுக்கிடையே உள்ள நட்பானது நிரந்தரமற்றது என்று உணர்த்துகிறது இக்குறள். இதற்கு உவமையாக, முட்டையினுள் கருக்கொண்டு அதனுள்ளே வளர்ந்த குஞ்சானது, வெளியேறும் காலம் வந்தபின் முட்டையோட்டை உடைத்துக்கொண்டு வெளியேறுவது கூறப்பட்டுள்ளது. இதில் பறவைக்குஞ்சு எவ்வித சேதமுமின்றி சென்றுவிடுகிறது. ஆனால் முட்டையோடு உடைக்கப்பட்டு தனித்து விடப்படுகிறது. அதுபோல, அழியாத உயிர் அதன்வழியில் சென்றுவிடுகிறது. ஆனால், உயிர்பிரியும் வலியை இவ்வுடம்பே ஏற்கிறது. உயிர்பிரிந்தவுடன் உடம்பும் தனித்து விடப்பட்டு அழிந்துபோகிறது. இதன்மூலம் யாக்கையின் அழிவுத்தன்மை கூறப்பட்டது.



குறள் 339:

உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.


சொல்லுரை:

உறங்குவது - உறங்குவதை

போலும் - போன்றது

சாக்காடு - சாவு, மரணம்

உறங்கி - உறங்கியபின்

விழிப்பது - விழித்துக்கொள்ளுதலை

போலும் - போன்றது

பிறப்பு - பிறவி

பொருளுரை:

உறங்குவதைப் போன்றது சாவு. உறங்கியபின் விழித்துக்கொள்ளுதலைப் போன்றது பிறப்பெடுத்தல்.


விளக்கவுரை:

உறங்குவதும் விழிப்பதும் நம் உடலுக்கு இயற்கையாக அமைந்த ஒன்று. அதுபோல இறத்தலும், மீண்டும் பிறத்தலும் உயிர்களுக்கு இயற்கையான ஒன்று. உறங்கும்போது நம் உடல் உறுப்புக்கள் ஒய்வு கொள்கின்றன. உறங்கி எழும்போது மீண்டும் உடல் உறுப்புக்கள் தத்தம் வேலைகளைச் செய்வதற்கு தயாராகின்றன. உறங்குவதால் உடலுக்கு எவ்வித கேடும் ஏற்படுவதில்லை. மாறாக, மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கான ஆற்றலையே பெறுகிறது. அதுபோல, இறப்பும் உயிருக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. மீண்டும் மற்றுமொரு புது உடலுள் குடிகொண்டு நல்வினைகளை ஆற்ற தயாராகின்றன. எனவே, பிறப்பு இறப்பிற்கு மனிதன் அஞ்சத்தேவையில்லை. ஆதலால், ஒவ்வொரு பிறவியிலும் தீவினை விடுத்து, நல்வினைகளை ஆற்றி பிறவா நிலையாகிய வீடுபேறு அடைய முயலவேண்டும்



குறள் 340:

புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்
டுச்சி லிருந்த வுயிர்க்கு.

புக்கில் அமைந்துஇன்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.


சொல்லுரை:

புக்கில் - நிலையான ஓர் இடம்

அமைந்துஇன்று - அமையவில்லை

கொல்லோ - போலும்

உடம்பினுள் - உடம்பின் உள்ளே

துச்சில் - ஒண்டி, ஒதுக்கமாக

இருந்த - இருந்த

உயிர்க்கு - உயிருக்கு

பொருளுரை:

உடம்பின் உள்ளே ஒண்டி ஒதுக்கமாக இருந்த உயிருக்கு, நிலையான ஓர் இடம் அமையவில்லை போலும்.


விளக்கவுரை:

உயிரானது ஒவ்வோர் உடம்பிலும் ஒண்டி இருந்துவிட்டு மற்றோர் உடம்பைத் தேடிச் செல்கிறது. இதன்மூலம் உயிர் நிலையாய் நிற்கக்கூடிய உடல் ஏதுமில்லை என்னும் நிலையாமை உணர்த்தப்பட்டது. உயிர் உடம்பினுள் புகுவது விரும்பி இல்லை, அது விதிவழி நடப்பது. உயிரானது உடம்பின் நிலையாமை உணர்ந்து, நிலையான வீடுபேறு அடையத் தேவையான தகுதியை தனது நல்வினைப் செயல்கள்மூலம் எப்பொழுது பெறுமோ அப்போது நிலையான வீடுபேறு என்னும் உறைவிடம் கிடைக்கும்.



uline