துறவறவியல்

35. துறவு

( உலகப்பற்றினைத் துறத்தல் )

341. யாதனின் யாதனி னீங்கியா னோத
        லதனி னதனி னிலன்.

342. வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபி
        னீண்டியற் பால பல.

343. அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்
        வேண்டிய வெல்லா மொருங்கு.

344. இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
        மயலாகு மற்றும் பெயர்த்து.

345. மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
        லுற்றார்க் குடம்பு மிகை.

346. யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
        குயர்ந்த வுலகம் புகும்.

347. பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
        பற்றி விடாஅ தவர்க்கு.

348. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
        வலைப்பட்டார் மற்றை யவர்.

349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
        நிலையாமை காணப் படும்.

350. பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
        பற்றுக பற்று விடற்கு.

குறள் 341:

யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.


சொல்லுரை:

யாதனின் யாதனின் - எந்த எந்தப் பொருளின்மீது இருக்கும்

நீங்கியான் - பற்றிலிருந்து விடுபட்டவன்

நோதல் - துன்புறுதல்

அதனின் அதனின் - அந்த அந்தப் பொருளினால்

இலன் - இல்லை


பொருளுரை:

எந்தெந்தப் பொருளின்மீது இருக்கும் பற்றிலிருந்து ஒருவன் விடுபடுகின்றானோ அவனுக்கு அந்தந்தப் பொருளினால் உண்டாகும் துன்பம் வருவது இல்லை.


விளக்கவுரை:

பற்றுகளைத் துறக்க விரும்புபவன் ஒரேயடியாக பொருட்களின்மீது இருக்கும் பற்றுகளைத் துறந்துவிடுவதே சாலச் சிறந்தது. அவ்வாறு துறக்க இயலாதவன் ஒவ்வொன்றாகவாவது துறப்பது நல்லது. இன்பம் நுகர்வதைக் கருதி பொருட்களின்மீது பற்று வைப்பதால், அது ஒருவனுக்கு நிலையான இன்பத்தைத் தருவதில்லை. மாறாக, துன்பத்தையே தருகிறது. துன்பத்திலிருந்து விடுபட வேண்டுமெனில் முதலில் பொருட்களின் மீதுள்ள பற்றிலிருந்து விடுபடவேண்டும். எந்தப் பொருளின்மீது ஒருவன் பற்றற்று இருக்கிறானோ, அவனுக்கு அந்தப் பொருளால் துன்பம் உண்டாவதில்லை. இது இயற்கையின் நியதியுங்கூட.



குறள் 342:

வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபி
னீண்டியற் பால பல.

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.


சொல்லுரை:

வேண்டின் - பேரின்பமாகிய வீடுபேற்றை ஒருவன் பெற விரும்பினால்

உண்டாக - அதனை பெறுவதற்குத் தேவையான காலம் உள்ளபோதே

துறக்க - துறக்கவேண்டும்.

துறந்தபின் - அவ்வாறு துறந்தபின் ஒருவனுக்கு

ஈண்டு - இப்பிறப்பில் செயலாற்றவேண்டிய

இயற்பால - இயல்பான தன்மையுடைய செயல்கள்

பல - பலவாகும்


பொருளுரை:

ஒருவன் பேரின்பமாகிய வீடுபேற்றைப் பெற விரும்பினால், அதனை பெறுவதற்குத் தேவையான காலம் உள்ளபோதே பற்றுகளைத் துறக்கவேண்டும். அவ்வாறு துறந்தபின் ஒருவனுக்கு இப்பிறப்பில் செயலாற்றவேண்டிய இயல்பான தன்மையுடைய செயல்கள் பலவாகும்.


விளக்கவுரை:

துறவு மேற்கொள்வோர் செய்யவேண்டியன என கூறப்பபடுவது யாதெனில், பொருட்களின் மீதுள்ள பற்றுக்களைத் துறத்தலும், மனம் மொழி மெய்களை ஒருமைப்படுத்துதலும், ஐம்புலன்களை அடக்குதலும், அருளுடைமை தவம் முதலிய ஒழுக்கத்தைக் கடைபிடித்தலும், நிலையாமை உணர்தலும், மெய்யுணர்தலும் ஆகிய செயற்கருஞ் செயல்கள். இச்செயல்களை செய்வதற்கான கால அளவு இருக்கும்படி வைத்து துறவு மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதால் ‘உண்டாகத் துறக்க’ என்றார். பிறவித்துன்பத்திற்கு அஞ்சி, பிறவாமை பெறவேண்டி துறவை நாடுவதால் “வேண்டின்” என்றார். “ஈண்டு இயற்பால பல” என்பது வீடுபேற்றை இப்பிறப்பிலேயே பெற வேண்டின், அதற்காக ஆற்றவேண்டிய செயல்கள் பல உள்ளன என்பதாம்.



குறள் 343:

அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.


சொல்லுரை:

அடல்வேண்டும் - அடு-அடல் – நசுக்குதல், பொசுக்குதல், அழித்தல் வேண்டும்

ஐந்தன் - ஐம்பொறிகளுக்கான

புலத்தை - புலன்களின் ஆசைகளை

விடல்வேண்டும் - விட்டுவிட வேண்டும்

வேண்டிய - அந்த ஐம்புல இன்பத்தைத் துய்ப்பதற்கு வேண்டிய

எல்லாம் - எல்லாவற்றையும்

ஒருங்கு - ஒருசேர


பொருளுரை:

ஐம்பொறிகளுக்கான புலன்களின் ஆசைகளை நசுக்குதல் வேண்டும். அந்த ஐம்புல இன்பத்தைத் துய்ப்பதற்கு வேண்டிய எல்லாவற்றையும் ஒருசேர விட்டுவிட வேண்டும்.


விளக்கவுரை:

வாய், கண், மெய், செவி, மூக்கு ஆகிய ஐம்பொறிகளின் மூலம் தோன்றுவது சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்கள் ஆகும். மனமானது ஐம்புல இன்பங்களை நுகர்ந்து, அவாவினை மேலும் மேலும் அதிகமாக்குதலால் அதுவே வீடுபேறு பெறுவதற்கான நெறிமுறைகளை பின்பற்றுவதற்குத் தடையாகின்றன. ஐம்புல இன்ப நுகர்வை அடக்கினால் ஒழிய துறவு நிலைபெறாது என்பதனால், ஐம்புல நுகர்வை ‘அடல் வேண்டும்’ என்றார். அனைத்துப் பொருட்களையும் வைத்துக்கொண்டு ஐம்புல இன்பங்களை மனம் கட்டுப்படுத்துதல் கடினமாதலால், எல்லா பொருட்களையும் ஒருங்கே விட்டுவிட வேண்டும் என்றார்.



குறள் 344:

இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து.

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.


சொல்லுரை:

இயல்பாகும் - இயற்கையாகும்

நோன்பிற்கு - தவத்திற்கு

ஒன்று - ஒரு பொருளின்மீதும்

இன்மை - பற்றின்மையே, ஆசையின்மையே

உடைமை - பற்றுடையவராய் இருத்தல்

மயலாகும் - மயக்கத்திற்கு இடம் ஆகும்

மற்றும் - மீண்டும்

பெயர்த்து - நிலைதடுமாறி


பொருளுரை:

ஒரு பொருளின்மீதும் பற்றின்மையே தவத்திற்கு இயற்கையாகும். அவ்வாறின்றி, ஏதாவது ஒரு பொருளின்மீதுகூட பற்றுடையவராய் இருத்தல், மீண்டும் நிலைதடுமாறி மயக்கத்திற்கு இடமாகும்.


விளக்கவுரை:

துறவு நிலையின் இயல்பானது முற்றும் துறத்தல் ஆகும். ஒரு பொருளின் பொருளின்மீதும் பற்று வைக்காது இருத்தல் வேண்டும். அதையே ‘ஒன்று இன்மை’ என்றார். எல்லாவற்றையும் துறந்துவிட்டு, ஏதாவது ஒரு பொருளின்மீது பற்று வைத்தால்கூட, அந்த ஒரு பொருளின்மீது கொண்ட பற்று, மற்றைய பொருட்களின்மீதும் மீண்டும் பற்று வருவதற்கு காரணமாகிவிடும் என்பதால், ஒரு பொருளின்மீதுகூட பற்று வைக்கக்கூடாது என்றார். மயல் என்பது மயக்க உணர்ச்சி. ஒரேயொரு பொருளிமீது பற்று வைத்தால்கூட அது மயக்கத்தைத் தந்து துறவு நிலைக்கு இழுக்கு ஏற்படுத்திவிடும் என்பதாம்.



குறள் 345:

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.


சொல்லுரை:

மற்றும் - அதற்குமேலும், மீண்டும்

தொடர்ப்பாடு - பற்றுகொள்ளுதல்

எவன்கொல் - எதன் பொருட்டோ

பிறப்புஅறுக்கல் - பிறப்புத்தன்மை நீக்க

உற்றார்க்கு - முயற்சி மேற்கொள்வோர்க்கு

உடம்பும் - அதற்குத் துணையான உடம்பும்

மிகை - தேவையற்ற சுமையாகும்.


பொருளுரை:

பிறப்புத்தன்மை நீக்கி பிறவா நிலையெய்த முயற்சி மேற்கொள்வோர்க்கு அதற்குத் துணையான உடம்பும் தேவையற்ற சுமையாகும். தாகும். அதற்குமேலும் பற்றுகொள்ளுதல் எதன் பொருட்டோ ?


விளக்கவுரை:

துறவு மேற்கொண்டோர்க்கு உடம்பானது உயிர் தங்கிருக்கும் இடமேயன்றி, ஐம்புல இன்பங்களை நுகர்வதற்கான பொருளல்ல. வீடுபேறு அடைய விரும்புவோர், இவ்வுடம்மை பூவுலகில் விட்டுவிட்டுத்தான் செல்கின்றனரே அன்றி, எடுத்துச்செல்வதில்லை. அவ்வுலகில் வாழும் வரைக்கும் உடல் உயிருக்கு ஆதாரம், அவ்வளவே. உடல் எப்பொழுதும் உயிரின் உடைமையாகாது. வீடுபேறு அடைய உயிர் உடலை விட்டுப் பிரிந்தே ஆகவேண்டும். ஆதலால், உடலும் உயிர்வாழும் வரை ஒரு சுமையாகக் கருதப்பட்டது. துறவறம் பூண்டார்க்கு உயிரைத் தாங்கும் உடலும் சுமையென்று ஆகியபின், மற்ற பொருட்களின்மீது பற்று வைத்தல் சுமையை மேலும் அதிகமாக்கும் என்பதாம்.



குறள் 346:

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்.

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.


சொல்லுரை:

யான் - இவ்வுடல் யான்

எனது - இப்பொருள் என்னுடையது

என்னும் - என்னும்

செருக்கு - ஆணவத்தை

அறுப்பான் - அழித்தொழிப்பவன்

வானோர்க்கு - தேவர்களுக்கும்

உயர்ந்த - உயர்வானதாகிய

உலகம் - வீட்டுலகம்

புகும் - செல்வான்


பொருளுரை:

இவ்வுடல் யான், இப்பொருள் என்னுடையது என்னும் ஆணவத்தை அழித்தொழிப்பவன் தேவர்களுக்கும் கிடைப்பதற்கரிய உயர்வானதாகிய வீட்டுலகம் செல்வான்.


விளக்கவுரை:

ஐம்புல இன்ப நுகர்ச்சிக்குக் காரணமாகிய உடம்பின்மீதான பற்றை அகப்பற்று என்றும், ஐம்புல நுகர்வுக்கு ஆதாரமான பொருட்களின்மீதான பற்றை புறப்பற்று எனவும் பற்றை இருவகையாகக் கொள்ளலாம். புறப்பற்றை ஒழித்தவனும், உடலின்மீதாகிய அகப்பற்றையும் ஒழித்தல் வேண்டும். உடம்பைத் தான் என்றும், பொருட்களைத் தனது என்றும் அறியாமையில் மூழ்கி, அதனையே அறிவு என்று மயங்கிக் கிடத்தல் செருக்கு எனப்பட்டது. இருவகைப் பற்றுகளையும் அறுத்தவனே வீடுபேறு அடைய முடியும் என்பது கருப்பொருள்.



குறள் 347:

பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.


சொல்லுரை:

பற்றி - பற்றிக்கொண்டு

விடாஅ - விடாமல் இருக்கும்

இடும்பைகள் - துன்பங்கள்

பற்றினைப் - யான் எனது என்னும் பற்றினை

பற்றி விடாஅத - பற்றிக்கொண்டு விடாமல்

அவர்க்கு - இருப்பவர்களுக்கு


பொருளுரை:

யான் எனது என்னும் பற்றினை பற்றிக்கொண்டு விடாமல் இருப்பவர்களுக்கு துன்பங்கள் பற்றிக்கொண்டு விடாமல் இருக்கும்.


விளக்கவுரை:

இருவகைப் பற்றினையும் விடாதவற்கு துன்பமும் பற்றிக்கொண்டு விடுவதில்லை. பற்றே துன்பத்திற்குக் காரணமாகின்றன. முற்றுந்துறந்தவன் பொருளற்றவனாய் இருந்தாலும், பொருட்களை நுகர்பவனாய் இல்லாதிருந்தாலும், பொருட்களின்மீது பற்று எண்ணம் கொண்டவனாய் இருந்தாலே அதுவே அவனுக்கு பிறவித்துன்பத்தைக் கொடுக்கவல்லது.



குறள் 348:

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.


சொல்லுரை:

தலைப்பட்டார் - முத்தியை அடைந்தவர், பேரின்பத்தை அடைந்தவர்

தீரத் - முற்றும்

துறந்தார் - துறந்தவர்

மயங்கி - அறியாமையால்

வலைப்பட்டார் - பிறவி வலையில் சிக்கித் தவிப்பவர்

மற்றையவர் - அவ்வாறு முற்றும் துறவாதவர்


பொருளுரை:

முற்றும் துறந்தவர் முத்தியை (பேரின்பத்தை) அடைந்தவர் ஆவர். அவ்வாறு முற்றும் துறவாதவர், அறியாமையால் பிறவி வலையில் சிக்கித் தவிப்பவர் ஆவர்.


விளக்கவுரை:

பிறவாமை நிலையை அடைய முனைவோர் பற்றினை முற்றும் துறந்தவராக இருத்தல் வேண்டும். பற்று என்ற ஒன்றைப்பற்றிய நினைவுகூட இல்லாது இருத்தலே தீரத் துறத்தலாகும். ஒரு சிறு துளிகூட பற்று இல்லாமல் இருத்தல் வேண்டும். சிறு அளவில் பற்று இருப்பதாயினும் அது பிறவி நிலைக்கு வித்திட்டுவிடும். தீரத் துறவாதவர்கள், உலக இன்பத்தில் ஆசை கொண்டு பிறவித்துன்பத்திற்கு ஆளாவார்கள்.



குறள் 349:

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும்.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.


சொல்லுரை:

பற்றுஅற்ற - பற்றுகளை முழுவதும் துறந்த

கண்ணே - பொழுதே

பிறப்புஅறுக்கும் - பிறப்பானது அழியும்

மற்று - பற்று அறாதபொழுது

நிலையாமை - பிறப்பு, இறப்பு என்னும் மாறி மாறி வரும் நிலையாமை

காணப்படும் - அறியப்படும்


பொருளுரை:

பற்றுகளை முழுவதும் துறந்த பொழுதே, பிறப்பானது அழியும். பற்று அறாதபொழுது பிறப்பு, இறப்பு என்னும் மாறி மாறி வரும் நிலையாமை அறியப்படும்.


விளக்கவுரை:

பற்றுகளை முழுவதும் அறுத்தெரிந்து, உயிரானது உடலிலிருந்து பிரியும்வரை, அந்த பற்றற்ற நிலையில் தொடர்வதே பிறவாமை நிலைக்கு எடுத்துச்செல்லும். எல்லாம் நம் எண்ணங்களின்படியே நடக்கிறது. பற்றுக்களை தீரத் துறந்து மெய்ப்பொருள் உணரும் தன்மையுள்ளவனுக்கு இவ்வுலகில் எப்பொருளின்மீதும் தொடர்பு இல்லையாதலால் அவன் பிறவா நிலையெய்த தகுதியானவனாகிறான். இவ்வுலக பொருட்களின்மீது பற்று கொண்டவன், அவன் எண்ணப்படியே, பொருட்களின் மீது கொண்ட பற்றுத் தொடர்பின் காரணமாக இவ்வுலகில் மீண்டும் பிறக்கும் நிலைக்கு ஆளாகிறான். பற்றற்ற நிலையே ஒருவனுக்கு உலகப் பொருட்களின்மீதுள்ள மயக்கத்திலிருந்து விலக்கி, மெய்யுணர்வு நிலையை கொடுக்கிறது. அந்த மெய்யுணர்வு நிலையே பிறவாமை நிலையின் தன்மையையும் உணர்த்துகிறது.



குறள் 350:

பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.


சொல்லுரை:

பற்றுக - பற்றிக்கொள்க

பற்றுஅற்றான் - எப்பொருளின்மீதும் பற்றே இல்லாத இறைவனின்

பற்றினை - தொடர்பினை

அப்பற்றைப் - அந்த தொடர்பினையும், பற்றையும்

பற்றுக - பற்றிக்கொள்க

பற்று - மற்ற பற்றுகளை முழுவதும்

விடற்கு - விடுவதன்பொருட்டு


பொருளுரை:

எப்பொருளின்மீதும் பற்றே இல்லாத இறைவனின் தொடர்பினை மட்டும் பற்றிக்கொள்க. இறைவன்மீது கொள்ளும் அந்தப் பற்றினையும், மற்றைய பிற பற்றுகளை விடுவதன்பொருட்டு பற்றிக்கொள்க.


விளக்கவுரை:

உயிர் தனக்கு ஆதாரமாக உடலைப் பற்றுக்கோடாகக் கொண்டுள்ளது. பிறவாமை நிலையெய்த முனையும் உயிர், உடலான பற்றுக்கோட்டை விட்டுச்செல்ல முனைகிறது. ஆனால், உயிர் பற்றுக்கோடின்றி இருக்க இயலாது. அதனால், பற்றற்ற நிலையெய்த நினைக்கும் உயிர், ஏற்கனவே பற்றின்றி எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் இருக்கும் இறைவனின் பற்றை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அந்தப் பற்றுகூட, மற்ற எல்லா பற்றுகளையும் விடுவதன்பொருட்டே இருத்தல் வேண்டும். மற்ற எதன்பொருட்டும் இருத்தல் ஆகாது.



uline