துறவறவியல்

36. மெய்யுணர்தல்

( உண்மைத்தன்மையை உணரும் நிலையடைதல் )

351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
        மருளானா மாணாப் பிறப்பு.

352. இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
        மாசறு காட்சி யவர்க்கு.

353. ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
        வான நணிய துடைத்து.

354. ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
        மெய்யுணர் வில்லா தவர்க்கு.

355. எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
        மெய்ப்பொருள் காண்ப தறிவு.

356. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
        மற்றீண்டு வாரா நெறி.

357. ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
        பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
        செம்பொருள் காண்ப தறிவு.

359. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
        சார்தரா சார்தரு நோய்.

360. காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற
        னாமங் கெடக்கெடு நோய்.

குறள் 351:

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானா மாணாப் பிறப்பு.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.


சொல்லுரை:

பொருள் - மெய்ப்பொருள்

அல்லவற்றைப் - அல்லாதவைகளை

பொருள்என்று - மெய்ப்பொருள் என்று

உணரும் - அறிகின்ற

மருளானாம் - மயக்கித்தினால் உண்டாகும்

மாணாப் - மாட்சிமையற்ற, சிறப்பில்லாத

பிறப்பு - பிறவி எடுக்கும் நிலை


பொருளுரை:

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று அறிகின்ற மயக்கித்தினால், சிறப்பில்லாத பிறவி எடுக்கும் நிலை உண்டாகும்.


விளக்கவுரை:

வீடுபேறு அடைய வழியாகக் கூறப்படுவது உலகப்பற்றுகளை முற்றுந் துறத்தலும், பற்றறற்ற இறைவனின் பற்றினைப் பற்றிக்கொள்ளலும் ஆகும். மெய்பொருள் காண்பது என்பதே இறைவனையும் இறைத்தன்மையையும் அதனை அடையும் சரியான வழியினையும் குறிப்பதாகும். அதற்கான வழிமுறைகளை அறிந்து உணர்ந்தவனே மெய்ப்பொருள் அறிய வல்லவன். அவ்வாறின்றி, எதிர்மறை எண்ணங்கொண்டு, வேறுபொருட்களை மெய்ப்பொருள் என்று மயங்கி இருந்தால், அதனால் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து, துன்பப்படும் நிலையே உருவாகும்.



குறள் 352:

இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.


சொல்லுரை:

இருள்நீங்கி - அறியாமை விலகி

இன்பம் - பேரின்பம், வீடுபேறு, முத்தி

பயக்கும் - நல்கும்

மருள்நீங்கி - மயக்கம் தெளிந்து

மாசறு - குற்றமில்லாத

காட்சி - மெய்யறிவு, மெய்ப்பொருள் காணும் திறன்

அவர்க்கு - உடையவர்க்கு


பொருளுரை:

மயக்கம் தெளிந்து குற்றமில்லாத மெய்ப்பொருள் காணும் திறன் உடையவர்க்கு, அறியாமை விலகி முத்தி நல்கும்.


விளக்கவுரை:

மாசறு காட்சி என்பது ஐயந்திரிபு இன்றி எதையும் உணரும், அறியும் தூய அறிவு அல்லது மெய்யறிவு ஆகும். ஐயம் என்பது சந்தேகத்தைக் குறிப்பது. மெய்ப்பொருளை இதுவா அல்லது அதுவா என்று தெளிவின்றி இருப்பது. திரிபு என்பது இதனை அது என்றும், அதனை இது என்றும் மாற்றிப் பொருள்கொள்வது. ஒளி உண்டாகும்போது இருள் தானாகவே மறைவதுபோல, ஒருவனுக்கு மயக்கங்கள் நீங்கி மெய்யறிவு தோன்றும்போது, அஞ்ஞானம் என்ற இருள் தானாவே அகலும். அதுவே அவனுக்கு வீடுபேற்றையும் அளிக்கும்.



குறள் 353:

ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.


சொல்லுரை:

ஐயத்தின் - ஐயங்களிலிருந்து

நீங்கித் - விலகி

தெளிந்தார்க்கு - மெய்ப்பொருள் எதுவென்று தெளிவுற்றோர்க்கு

வையத்தின் - இந்த நிலவுலகைவிட

வானம் - வானுலகமாகிய வீடுபேறு

நணியது - மிக அருகில்

உடைத்து - உள்ளதாகும்


பொருளுரை:

ஐயங்களிலிருந்து விலகி மெய்ப்பொருள் எதுவென்று தெளிவுற்றோர்க்கு இந்த நிலவுலகைவிட வானுலகமாகிய வீடுபேறு மிக அருகில் உள்ளதாகும்.


விளக்கவுரை:

ஐயம் நீங்குதல் என்பதாவது மெய்ப்பொருள் பற்றிய தெளிவான முடிவிற்கு வருதல். அந்தத் தெளிவு, இதுகாரும் தனக்கு முன்னோர்கள் எடுத்துச் சொல்லிவிட்டுச் சென்ற மெய்ப்பொருள் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து அறிந்து உணர்வதன் மூலமே கிட்டும். அவ்வாறு தெளிந்தோர்க்கு, இவ்வுலக இன்பமானது துன்பத்தையும் சேர்ந்து உடையது என்பது தெரிந்ததினாலும், அதுவே பிறவி நிலைக்கு வித்திடும் என்பதை அறிந்ததினாலும், பிறவாமை என்னும் நிலையே பேரின்ப நிலை என்பதில் தெளிவுடன் இருப்பதினாலும், மெய்ப்பொருள் தெளிந்தோர் இவ்வுலகப் பற்றை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டனர் என்பதுடன் வீடுபேறு அடைவதும் அவர்களுக்கு மிக அருகிலேயே உள்ளது என்றார்.



குறள் 354:

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.


சொல்லுரை:

ஐயுணர்வு - ஐம்பொறிகளால் உண்டாகும் புலனறிவு

எய்தியக்கண்ணும் - தன் வயமானபோதும்

பயமின்றே - பயனில்லை

மெய்யுணர்வு - மெய்ப்பொருள் காணும் உணர்வு

இல்லாதவர்க்கு - இல்லாதவர்க்கு


பொருளுரை:

மெய்ப்பொருள் காணும் உணர்வு இல்லாதவர்க்கு ஐம்பொறிகளால் உண்டாகும் புலனறிவு தன் வயமானபோதும் பயனில்லை.


விளக்கவுரை:

ஐயுணர்வு என்பது ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், காது, மூக்கு ஆகியவைகளின்மூலம் மனமானது ஓடிப் புலன்களைப் பற்றுதல் ஆகும். ஐம்புலன்களையும் அடக்கி மனம் ஒடுங்கி தன் வயப்பட்டதாயினும் அதனால் மட்டுமே ஒருவன் வீடுபேறு அடைந்துவிட முடியாது. மெய்ப்பொருள் எது என்பதை அறிந்து அதை அனுபவித்து உணரவேண்டும். மெய்யுணர்வு என்பது பக்தி, பூசை, யோகங்களின்மூலம் மெய்ப்பொருளாகிய இறைவனின் தன்மையை உணர்ந்து, எண்ணத்தால் உணர்வினால் அவனுடன் ஐக்கியமாதல். பற்றுகளைத் துறந்து புலன்களை அடக்கி புலன்இன்பங்களைத் துறந்து ஐயங்கள் நீங்கி, திரிபுகள் களைந்து, மெய்ப்பொருள் உணர்வு கொண்வதே வீடுபேறு அடைய வழி.



குறள் 355:

எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.


சொல்லுரை:

எப்பொருள் - எந்தப் பொருள்

எத்தன்மைத்து - எத்தகைய தன்மையுடையதாய்

ஆயினும் - இருந்தாலும்

அப்பொருள் - அந்தப் பொருளின்

மெய்ப்பொருள் - உண்மைத்தன்மையை

காண்பது - கண்டறிவதே

அறிவு - அறிவாகும்


பொருளுரை:

எந்தப் பொருள் எத்தகைய தன்மையுடையதாய் இருந்தாலும் அந்தப் பொருளின் உண்மைத்தன்மையை கண்டறிவதே அறிவாகும்.


விளக்கவுரை:

பொருள்களாகவும் அவற்றின் தன்மையாகவும் நாம் பார்ப்பது அதன் வெளித்தோற்றமும் அப்பொருள் காட்டும் வெளிப்புறத்தன்மையும் ஆகும். அது உயிருள்ள பொருளுக்கும் பொருந்தும். உயிரற்ற பொருளாகக் கருதப்படுவதற்கும் பொருந்தும். ஒரு உயிரின் வெளித்தோற்றமும் தன்மையும் அதனதன் வினைப்பயனால் அமைவன. அதுவே உண்மையான தோற்றமும் தன்மையும் ஆகாது. அப்பொருளின் உண்மைத்தன்மையையும், அதன் தோற்றத்திற்கான காரணத்தையும், அதனை தோற்றுவித்த ஆற்றலின் தன்மையையும் ஆராய்ந்து தெளியும் ஞானமே மெய்ப்பொருள் காணும் அறிவு ஆகும். அவ்வாறு ஒவ்வொரு பொருளின் உண்மைப்பொருளை ஆராய்ந்து மூலப்பொருளைக் காண செல்லுங்கால் அங்கு மூலமின்றி இருக்கும் மெய்ப்பொருளை உணரலாம்.



குறள் 356:

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி.


சொல்லுரை:

கற்றுஈண்டு - கற்கவேண்டியவைகளைக் கற்று

ஈண்டு - இங்கு, இப்பிறப்பிலேயே

மெய்ப்பொருள் - மெய்ப்பொருளை

கண்டார் - கண்டறிந்தவர்

தலைப்படுவர் - அடைவர்

மற்றுஈண்டு - மீண்டும் இவ்வுலகில்

வாரா - பிறவாத

நெறி - நிலையை


பொருளுரை:

கற்கவேண்டியவைகளைக் கற்று இப்பிறப்பிலேயே மெய்ப்பொருளை கண்டறிந்தவர், மீண்டும் இவ்வுலகில் பிறவாத நிலையை அடைவர்.


விளக்கவுரை:

மெய்ப்பொருள் பற்றிய கல்வியை பிறரிடத்து அறிந்தும், தானே பயின்றும், பயிற்சிகளின்மூலம் தானே உணர்ந்தும் கற்றல் வேண்டும். அதை இப்பிறப்பிலேயே தெளிவுறக் கற்று மெய்ப்பொருள் உணரும் தன்மை அடைந்தவர்களே மீண்டும் இவ்வுலகில் பிறவாத நிலையை அடைவர். கல்வியின் பயனே மெய்ப்பொருள் அறிவது என்பதை இது உணர்த்தும். இப்பிறப்பைக்கொண்டே பிறவா நிலையை எய்த முயலவேண்டும் என்பது கருத்து.



குறள் 357:

ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு.


சொல்லுரை:

ஓர்த்து - ஆராய்ந்து

உள்ளம் - ஒருவனின் உள்ளமானது

உள்ளது - உண்மையான பொருளை, மெய்ப்பொருளை

உணரின் - உணர்ந்து கொண்டால்

ஒருதலையாப் - ஒரு சார்பாக இல்லாமல், நிலையாக, நிச்சயமாக

பேர்த்து - மீண்டும்

உள்ள - நினைக்க

வேண்டா - வேண்டியதில்லை

பிறப்பு - பிறவி ஏற்படும்


பொருளுரை:

ஒருவனின் உள்ளமானது மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து கொண்டால், தனக்கு மீண்டும் பிறவி ஏற்படும் என்று நினைக்க வேண்டியதில்லை.


விளக்கவுரை:

‘ஓர்த்து’ எனப்படுவது யாதெனில், மெய்ப்பொருளை விளக்கும் நூல்களைக் கற்றுத் தெளிதலும், மெய்ப்பொருள் உணர்ந்தவர்கள் கூறும் மறைமொழிகளை கேட்டுத் தெளிதலும் ஆகும். கற்றலின் வழியும், கேட்டலின் வழியும் மெய்ப்பொருள் பற்றிய தெளிவு உண்டாதல். ‘உள்ளது’ என்பது வெளித்தோற்றமான மாயத்தோற்றம் விடுத்து உண்மையான மெய்ப்பொருளைக் குறிப்பது. ‘ஒருதலை’ என்பதாவது எந்தக் காரணத்தினாலும் நிலையான தன்மையுடைய உறுதிப்பொருளாகிய மெய்ப்பொருளை அடைவது என்ற முடிவான கருத்தை உணர்த்தும். உணர்வது என்பது மெய்ப்பொருளை அனுபவத்திற்கு உட்படுத்துதல். அவ்வாறு மெய்ப்பொருளை உணர்ந்து அனுபவிப்பவர்கள் பிறவி ஏற்படும் நிலையை எண்ண வேண்டியதில்லை. அது எவ்வாறு எனில், இனிப்பு உண்பவன் கசப்புச் சுவையை எண்ணாதது போல.



குறள் 358:

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.


சொல்லுரை:

பிறப்புஎன்னும் - பிறவி உண்டாவதற்குக் காரணமான

பேதைமை - அறியாமை

நீங்கச் - நீங்குவதற்கு

சிறப்புஎன்னும் - சிறந்தது என்று சொல்லப்படும்

செம்பொருள் - உறுதிப்பொருளை, உண்மைப்பொருளை

காண்பது - கண்டறிவதே

அறிவு - சிறந்த அறிவாகும்


பொருளுரை:

பிறவி உண்டாவதற்குக் காரணமான அறியாமை நீங்குவதற்கு சிறந்தது என்று சொல்லப்படும் உண்மைப்பொருளை கண்டறிவதே சிறந்த அறிவாகும்.


விளக்கவுரை:

பிறவி உண்டாவது மெய்ப்பொருள் பற்றிய அறியாமையின் காரணமாக ஆகும். அந்த அறியாமை அகலவேண்டும் என்றால் மெய்ப்பொருள் பற்றிய அறிவு பெறவேண்டும். பிறவாமை நிலை என்னும் வீடுபேறு எல்லா இன்பங்களையும்விட சிறந்த இன்பமாதலால் ‘சிறப்பு’ எனப்பட்டது. ‘செம்பொருள் காண்பது’ என்பது மெய்ப்பொருளாகிய இறைவனை எப்பொழுதும் சிந்தித்திருக்கும் நிலை. உள்ளத்தால் இறைவனை இரண்டறக் கலக்கும் நிலை. காண்பதென்பது அகக்கண்ணால் காண்பது. உயிர் உடலைவிட்டு நீங்கும் வேளையில் நாம் எதன்மீது எண்ணங்களைக் கொண்டுள்ளோமோ, அதுவாகவே நாம் மாறிவிடுவோம் என்பது சான்றோர்கள் கூற்று. அதற்கான பயிற்சியையும் பக்குவத்தையும் கொடுப்பதே துறவறத்தின் நிலை. செம்பொருளாகிய இறைவனின்மீது எண்ணத்தை உடையவர்க்கு வீடுபேறு பெறுவது திண்ணமாகும்.



குறள் 359:

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.


சொல்லுரை:

சார்பு - எல்லாவற்றிற்கும் சார்பான செம்பொருளை

உணர்ந்து - அறிந்து

சார்புகெட - எல்லாவகையான பற்றுகளும் நீங்கும்படி

ஒழுகின் - நடந்தால்

மற்றழித்துச் - பிறவிக்குக் காரணமானவைகளை அழித்து

சார்தரா - அவனை அடையாது

சார்தரு - பிறவியால் அடைகின்ற

நோய் - துன்பம்


பொருளுரை:

எல்லாவற்றிற்கும் சார்பான செம்பொருளை அறிந்து எல்லாவகையான பற்றுகளும் நீங்கும்படி ஒருவன் நடந்தால், பிறவிக்குக் காரணமானவைகளை அழித்து, பிறவி எடுப்பதினால் உண்டாகின்ற துன்பம் அவனை அடையாது.


விளக்கவுரை:

எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் செம்பொருளாகிய இறைவனை உணர்ந்து, உள்ளத்தால் இரண்டறக் கலந்து, இவ்வுலகப் பற்றுகள் யாவற்றையும் துறந்து வாழ்வானாகில் அவனுடைய பிறவிக்குக் காரணமாகும் வினைப்பயன்கள் அனைத்தும் அழிந்துவிடும். முற்பிறப்பில் செய்த வினைப்பயனால் இப்பிறப்பு தோன்றுகிறது. அந்த வினைப்பயனை இப்பிறப்பில் அனுபவிக்க வேண்டியதாகிறது. உலகப்பற்றின் காரணமாக இப்பிறப்பிலும் நல்வினை, தீவினைகளுக்கு ஆட்பட வேண்டியதாகிறது. இப்பிறவியின் முடிவிலும் வினைப்பயன் எஞ்சியிருப்பதால், மீண்டும் பிறவி எடுக்கும் நிலை உண்டாகிறது. இவ்வாறாக, பிறவி எடுத்தல் ஒரு தொடராக ஏற்படுகிறது. இப்பிறவியிலேயே, எல்லாவகைப் பற்றுகளையும் அறவே துறப்பதினால், இப்பிறப்பில் ஏற்படும் வினைப்பயன்கள் அறவே ஒழிகின்றன. மேலும், முற்பிறப்பின் வினைப்பயனால், தான் அனுபவிக்கவேண்டியவற்றை இப்பிறப்பிலேயே ஏற்று அதன் பற்றையும் முற்றும் அறுத்துவிடவேண்டும். அதுவே, பற்றுகளை அறுக்கும் வழி. நோய் என்று இங்கே சொல்லப்பட்டது யாதெனில், பிறவி உண்டாகக் காரணமாகிய நல்வினை, தீவினை ஆகிய வினைப்பயன்களை. இவை இரண்டுமே பிறவி என்னும் நோயினை கொடுக்குமாதலின் அவ்வாறு கூறினார். இதனையே ‘இருள்சேர் இருவினை’ என்றார். துன்பம் தரும் பிறவி நிலையை அறுத்து விடுபட வேண்டுமெனில், எல்லாவகைப் பற்றுகளையும் அறவே விட்டு, செம்பொருளாகிய இறைவனின் பற்றினைப் பெறவேண்டும் என்பதாம்.



குறள் 360:

காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.


சொல்லுரை:

காமம் - விருப்பு, ஆசை

வெகுளி - வெறுப்பு, சினம்

மயக்கம் - அறியாமை

இவைமூன்றன் - இந்த மூன்றினுடைய

நாமம் - பெயர்

கெடக்கெடும் - அழிய நீங்கும்

நோய் - துன்பம்


பொருளுரை:

காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றின் பெயரால் ஏற்படும் குற்றங்களை ஒருவன் அறவே ஒழிப்பானாகில், அவனிடம் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.


விளக்கவுரை:

ஒருவனுக்கு யான், எனது என்னும் பற்று அறியாமையின் காரணமாக உண்டாகிறது. அந்தப் பற்றினால் பொருட்களை அடையவேண்டும் என்ற விருப்பம் உண்டாகிறது. அவ்வாறு பொருட்களை அடையமுடியாதவிடத்து வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே அறிவைக் கெடுத்து அறியாமையில் தள்ளுகிறது. விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இம்மூன்றும் பிறப்புக்கும், பிறவி வினைக்கும் மற்றும் பிறவியில் உண்டாகும் துன்பத்திற்கும் காரணமாகிறது. ‘நாமம் கெட’ எனக்கூறியது முற்றிலும் அழிந்து ஒழியவேண்டும் என்பதனால். இங்கே நோய் என்று கூறியது பிறவியை. காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்கள் முற்றிலும் அழிந்தொழிய நடப்பவனுக்கே பிறவி எடுத்தல் என்னும் நோய் கெட்டொழியும்.



uline