துறவறவியல்

37. அவாவறுத்தல்

( ஆசையை அறவே நீக்குதல் )

361. அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
        தவாஅப் பிறப்பீனும் வித்து.

362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
        வேண்டாமை வேண்ட வரும்.

363. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
        யாண்டு மஃதொப்ப தில்.

364. தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
        வாஅய்மை வேண்ட வரும்.

365. அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா
        ரற்றாக வற்ற திலர்.

366. அஞ்சுவ தோரு மறனே யொருவனை
        வஞ்சிப்ப தோரும் மவா.

367. அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
        தான்வேண்டு மாற்றான் வரும்.

368. அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்
        றவாஅது மேன்மேல் வரும்.

369. இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்
        துன்பத்துட் டுன்பங் கெடின்.

370. ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
        பேரா வியற்கை தரும்.



குறள் 361:

அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.


சொல்லுரை:

அவாஎன்ப - ஆசையே காரணம் ஆகும்

எல்லா - அனைத்து

உயிர்க்கும் - உயிர்களுக்கும்

எஞ்ஞான்றும் - எக்காலத்தும்

தவா - தப்பாது வருகின்ற

அப்பிறப்புஈனும் - பிறவியை ஏற்படுத்துகின்ற

வித்து - விதை


பொருளுரை:

ஆசையே அனைத்து உயிர்களுக்கும், எக்காலத்தும் தப்பாது வருகின்ற பிறவியை ஏற்படுத்துகின்ற விதை ஆகும்.


விளக்கவுரை:

ஆசை என்ற விதையே பிறப்பு என்னும் முளைவிட்டு பிறவி நிலைக்குக் காரணமாகிறது. ஆசை உடையவனுக்கு பிறப்பு தப்பாது. ஆசையே பிறவித்துன்பங்களுக்குக் காரணமாகிறது. இங்கே ‘எல்லா உயிர்க்கும்’ என்று கூறியிருப்பது ஆராய்ந்து நோக்கத்தக்கது. ஆசை என்பது பிறவித்துன்பத்தை எல்லா உயிர்களுக்கும் தரும் என்றும், எவ்வகைப்பட்ட மனிதர்களுக்கும் தரும் என்றும் கொள்ளலாம். எஞ்ஞான்றும் என்று கூறியது, பல்லாயிரம் ஆண்டுகள் காலமாற்றம் உண்டாகியிருந்தாலும், பிறவித்துன்பத்திற்கு ஆசை என்ற ஒன்றே மூலகாரணமாக அமைகிறது. அதுவே பிறவாமை நிலைக்கு தடையாகவும் இருக்கிறது.



குறள் 362:

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.


சொல்லுரை:

வேண்டுங்கால் - ஒன்றை விரும்புவதானால்

வேண்டும் - விரும்பவேண்டுவது

பிறவாமை - பிறவாமையே

மற்றது - அந்தப் பிறவாமையானது

வேண்டாமை - ஆசையின்மையை

வேண்ட - விரும்புவதால்

வரும் - ஏற்படும்


பொருளுரை:

ஒருவன் ஏதாவது ஒன்றை விரும்புவதானால், அவன் மீண்டும் பிறவாத தன்மையே விரும்பவேண்டும். அந்தப் பிறவாமையானது ஆசையின்மையை விரும்புவதால் ஏற்படும்


விளக்கவுரை:

துறவியானவன் தான் விருப்பப்பட ஏதாவது ஒன்று உண்டானால் அது பிறவாமை நிலையாகும். பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவற்றால் துன்பப்படுவதால், அவைகளிலிருந்து விடுபட விழைவது இயல்பு. அவ்வாறு விழையும்போது பிறவாமை என்னும் துன்பம் இல்லாத நிலையையே விழையவேண்டும். பிறவாமை நிலையானது ஆசையின்மை என்பதனை விரும்புவதனாலே கிட்டும்.
ஆசையே பிறவித்துன்பதிற்குக் காரணமாகிறது. ஆசையின்மையே பிறவாமை நிலைக்கு வழிகோலுகிறது. ‘பிறவாமை வேண்டும்’ என்றுகூட ஒருவன் ஆசைப்படுதல் ஆகாது. ஆசையின்மையை ஒருவன் மேற்கொண்டாலே அவனுக்கு பிறவாமை அமையும் என்பதாகும். பிறவாமை என்னும் நிலையானது ஆசையின்மையை ஒருவன் மேற்கொள்ளுவதால் தானாக அமையும் நிலையாகும். அதைக்கூட ஆசைப்பட்டு பெறுவது முடியாது என்பது கருத்து. ‘ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்’ என்று திருமூலர் கூறுவதை நோக்குக.



குறள் 363:

வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்.


சொல்லுரை:

வேண்டாமை - எதன்மீதும் விருப்பம்கொள்ளாத தன்மை, ஆசையினமை

அன்ன - போன்ற

விழுச்செல்வம் - சிறந்த செல்வம்

ஈண்டில்லை - இவ்வுலகில் இல்லை

யாண்டும் - மேலுலகிலும்

அஃதொப்பது - அதற்கு ஈடான செல்வம்

இல் - இல்லை


பொருளுரை:

எதன்மீதும் விருப்பம்கொள்ளாத தன்மை அல்லது ஆசையினமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை. அதற்கு ஈடான செல்வம் மேலுலகிலும் இல்லை.


விளக்கவுரை:

செல்வம் என்பது உயிர்களுக்கு இன்பத்தைத் தரும் ஒரு பொருள். இவ்வுலகில் இன்பத்தைத் தரும் அனைத்துப் பொருட்களும் அதனுள் துன்பத்தையும் உள்ளடக்கியுள்ளது. ஆசையின்மை என்னும் ஒன்றே துன்பமில்லாத நிலையாகிய பிறவாமை நிலையைத் தரவல்லது. ஆதலால், ஆசையின்மையை ‘விழுச்செல்வம்’ என்றார். துன்பமற்ற நிலையை அது தருவதால், அதைவிட சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை. ஆசையின்மையின் சிறப்பு என்னவெனில், அதைப்போன்ற சிறந்த செல்வம் மேலுலகிலும் இல்லை என்பதாகும். இதன்மூலம், மேலுலகிலும் பின்பற்றப்பட வேண்டிய சிறந்த வழியானது ஆசையின்மை என்னும் பற்றறற்ற நிலையாகும்.
துன்பமற்ற நிலையென்பது இன்பம் நிறைந்த நிலை என்பதல்ல. எப்பொழுது துன்ப நிலை என்பது இல்லையாகிறதோ, அங்கு இன்பநிலை என்பதொன்றும் இல்லையாகிறது. பிறவாமை என்னும் நிலையாவது இன்பம், துன்பம் என்னும் எதுவுமற்ற நிலையாகும்.



குறள் 364:

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.


சொல்லுரை:

தூஉய்மை - தூயநிலை

என்பது - என்பது

அவாவின்மை - ஆசை அற்ற நிலையே ஆகும்

மற்றுஅது - அந்த ஆசையின்மை

வாஅய்மை - வாய்மையை

வேண்ட - விரும்புவதனால்

வரும் - உண்டாகும்


பொருளுரை:

தூயநிலை என்பது ஆசை அற்ற நிலையே ஆகும். அந்த ஆசையின்மையானது வாய்மையை விரும்புவதனால் உண்டாகும்.


விளக்கவுரை:

அவாவானது மாசு நிலையாகும். அவாவின்மையே மாசற்ற நிலையாகும். அதனால் அவாவின்மையை தூய்மை என்று கூறினார். பிறப்புடன் கூடிய உயிரின் தன்மையானது அவா என்னும் மாசு நிறைந்ததாகவே உள்ளது. அந்த அவா என்னும் மாசினை எவ்வாறு உயிரினின்று நீக்கி, அதனை தூய்மையானதாக மாற்றுவது என்பதை இக்குறளில் கூறுகிறார். மெய்ப்பொருளாகிய இறைவனை வாய்மை என்று கூறுகிறார். பரம்பொருளைப் பற்றுவதாலேயே அந்த தூய்மையான நிலையை அடையமுடியும் என்று கூறுகின்றார். எல்லாப் பற்றையும் அறுத்து, தவ ஞான ஒழுக்கங்களின்மூலம் துறவு நிலை மேற்கொண்டு இறைவனின் பற்று ஒன்றனையே விரும்பி, இறைவனுடன் இரண்டறக் கலத்தல் ஒன்றையே நோக்கமாகக் கொள்ளுதலே வாய்மை வேண்டுவதாகும். அதுவே பிறவா நிலையை அளிக்கும்.



குறள் 365:

அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா
ரற்றாக வற்ற திலர்.

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.


சொல்லுரை:

அற்றவர் - பற்றுகள் அற்றவர்

என்பார் - எனப்படுவோர்

அவாஅற்றார் - ஆசைகளை விட்டவர் ஆவார்.

மற்றையார் - அவ்வாறு ஆசைகளை முழுவதுமாக விடாதவர்

அற்றாக - அவர்போல

அற்றது - பற்றுஅற்றவர்

இலர் - இல்லை


பொருளுரை:

பற்றுகள் அற்றவர் எனப்படுவோர் ஆசைகளை விட்டவர் ஆவார். அவ்வாறு ஆசைகளை முழுவதுமாக விடாதவர் அவர்போல பற்றுஅற்றவர் இல்லை.


விளக்கவுரை:

பற்றற்றவர் என்று சொல்லப்படுவோர் அவாவினை முற்றும் அற்றவர் ஆவார். அவாவினை முற்றும் விட இயலாதார் பற்றற்றவர் என்று கூறலாகாது. பெரும்பாலான பற்றுக்களை விட்டுவிட்டாலும், ஓரிரு பொருட்களின்மீது பற்றுடைவர் ஆயினும் அவர்களை பற்றற்றவராக ஆகமுடியாது. துறவு வாழ்க்கை வாழினும் பற்றுக்களை முழுவதும் விடாதவர் துறவியாகார். அவர்கள் வீடுபேறு அடைதலும் முடியாது.



குறள் 366:

அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரும் மவா.

அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா.


சொல்லுரை:

அஞ்சுவது - ஆசைக்கு அஞ்சுவது

ஓரும் - சிறந்தது என்று உணரத்தக்க

அறனே - அறமாகும்

ஒருவனை - ஒருவனை

வஞ்சிப்பது - தீய வழியில் தள்ளிக் கெடுப்பது

ஓரும் - என்று உணரத்தக்கது

அவா - ஆசையாகும்.


பொருளுரை:

ஆசைக்கு அஞ்சுவது என்பதே சிறந்தது என்று உணரத்தக்க அறமாகும். ஒருவனை தீய வழியில் தள்ளிக் கெடுப்பது என்று உணரத்தக்கது எது எனில் ஆசையே யாகும்.


விளக்கவுரை:

வஞ்சிப்பது என்பது ஒருவனுக்கு, அவனை அறியாமல் கூடவேயிருந்து, அவன் சிறிது சோர்ந்திருக்கும் வேளையில் அவனைக் கெடுப்பது. அவா என்பது ஒருவன் அவாவின்மையை மேற்கொண்டு துறவறத்தில் வாழ்ந்தாலும், அவன் சற்று சோர்ந்திருக்கும் வேளையில் அவனுக்குள் அவாவினைத் தூண்டி பிறப்பின்கண் தள்ளிவிடும் தன்மையுடையது. துறவறம் மேற்கொண்டவன், இவ்வுயிர் இவ்வுடலில் இருக்கும் வரைக்கும் அவா தன்னை அண்டாதவாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும். உயிரானது இவ்வுடலில் இருக்கும்வரைக்கும் அவா தன்னை வஞ்சிக்கக் காத்திருக்கும். இதனாலேயே ‘பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை’ என்றார். ஆதலால் அவாவிற்கு அஞ்சி நடப்பதே துறவறம் ஆகும். இல்லையேல் அவா வஞ்சித்துவிடும்.



குறள் 367:

அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.


சொல்லுரை:

அவாவினை - ஆசையினை

ஆற்ற - முழுவதுமாக, அறவே

அறுப்பின் - விட்டொழிப்பான் ஆயின்

தவாவினை - உறுதி நிலை, பிறவாமை என்னும் நிலை

தான்வேண்டும் - தான் விரும்பும்

ஆற்றான் - வழியிலே

வரும் - உண்டாகும்


பொருளுரை:

ஒருவன் ஆசையினை அறவே விட்டொழிப்பானாயின் அவனுக்கு உறுதி நிலை என்ற பிறவாமை என்னும் நிலை, தான் விரும்பும் வழியிலே உண்டாகும்.


விளக்கவுரை:

துறவறம் மேற்கொண்டவன் ஆசையை அறவே விட்டொழிக்கவேண்டும். அது துறவறத்தின் கடமை ஆகும். அவ்வாறு தன் கடமையை துறவி சரிவரக் கடைபிடிப்பானாகில், உறுதி நிலையாகிய பிறவா நிலை துறவியைச் சென்றடையும் தன் கடமையைத் தவறாமல் தானே செய்யும். அதற்காக துறவி மெனக்கெட வேண்டியதில்லை.



குறள் 368:

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃதுண்டேற்
றவாஅது மேன்மேல் வரும்.

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.


சொல்லுரை:

அவாஇல்லார்க்கு - ஆசை இல்லாதவர்க்கு

இல்லாகும் - இல்லை என்ற நிலை உண்டாகும்

துன்பம் - துன்பம்

அஃதுண்டேல் - ஆசை இருக்குமானால்

தவாஅது - தவறாமல் துன்பம்

மேன்மேல் - மேலும் மேலும்

வரும் - வந்து சேரும்


பொருளுரை:

ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் இல்லை என்ற நிலை உண்டாகும். ஆசை இருக்குமானால் தவறாமல் துன்பம் மேலும் மேலும் வந்து சேரும்.


விளக்கவுரை:

அவா என்பது கண்ணால் காணப்படும் பொருள் அல்ல. அவா உண்டா இல்லையா என்பதை எதை வைத்துத் தெரிந்துகொள்வது? ஒருவனுக்கு ஏற்படும் துன்பமே, அவனுக்கு அவா உண்டா இல்லையா என்பதைக் காட்டும் அளவுகோலாகிறது. ஒருவனுக்குத் துன்பம் இல்லை என்றால் அவனுக்கு அவா இல்லை என்று உணரப்படும் ஆதலின், ‘அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்’ என்றார். ஆசை இருக்குமானால் துன்பம் வருவது தப்பாது. அதுமட்டுமின்றி, அவாவினால் துன்பங்கள் மேலும்மேலும் வந்து சேர்ந்துகொண்டே இருக்கும்.



குறள் 369:

இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின்.

இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.


சொல்லுரை:

இன்பம் - இன்பம்

இடையறாது - இடைவெளி இல்லாமல்

ஈண்டும் - தொடர்ந்து சேரும்

அவாவென்னும் - ஆசை என்னும்

துன்பத்துள் - துன்பத்திற்கெல்லாம்

துன்பம் - துன்பம்

கெடின் - அழிந்து போகுமாயின்


பொருளுரை:

ஆசை என்னும் துன்பத்திற்கெல்லாம் துன்பமானது அழிந்து போகுமாயின், இன்பம் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து சேரும்.


விளக்கவுரை:

ஆசையே துன்பங்கள் எல்லாவற்றிற்கும் மூலகாரணமாதலால், அதைத் துன்பத்துள் துன்பம் என்றார். அவா என்பது ஒருவனிடம் முற்றிலும் கெட்டழிந்து போகுமாயின் அதுவே ஒருவனின் துன்பமற்ற நிலைக்கு வழிவகுக்கும். துன்பமற்ற நிலையே இங்கு இன்பநிலை என்று கூறப்படுகிறது.
அவா உடையவனிடத்து எவ்வாறு துன்பநிலை மேலும்மேலும் வந்து சேர்கிறதோ, அதுபோன்று, அவா முற்றும் அற்றவனிடத்து துன்பமற்ற நிலையாகிய இன்பநிலை இடைவெளி இன்றி வந்து சேர்ந்துகொண்டே இருக்கும்.



குறள் 370:

ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும்.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.


சொல்லுரை:

ஆரா - ஒருபொழுதும் நிரம்பாத

இயற்கை - தன்மையுடைய

அவாநீப்பின் - ஆசையை நீக்கிவிட்டால்

அந்நிலையே - அந்த ஆசையற்ற உயர்ந்த நிலையே

பேரா - நிலையான, உறுதியான, பிறவாமை என்ற

இயற்கை - தன்மையை

தரும் - கொடுக்கும்


பொருளுரை:

ஒருபொழுதும் நிரம்பாத தன்மையுடைய ஆசையை நீக்கிவிட்டால், அந்த ஆசையற்ற உயர்ந்த நிலையே பிறவாமை என்னும் நிலையான, உறுதியான தன்மையைக் கொடுக்கும்.


விளக்கவுரை:

எவ்வளவு பெற்றாலும் நிறைவுத் தன்மை பெறாதது அவா ஆகும். அதனாலேயே அதனை ஆரா இயற்கை என்று குறிப்பிடுகின்றார். அத்தன்மையுடைய அவாவினை ஒருவன் அறவே நீக்கிவிட்டால், அந்த அவாவின்மை நிலையே ஒருவனுக்கு உறுதித்தன்மையாகிய பிறவாமை என்னும் நிலையை அளிக்கும். உறுதியற்ற தன்மையுடைய அவாவினை நீக்கினால்தான் உறுதியான தன்மையாகிய பிறவாமை நிலையை எய்தமுடியும் என்பது கருத்து.



uline