ஊழியல்

38. ஊழ்

( விதி )

371. ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
        போகூழாற் றோன்று மடி.

372. பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
        மாகலூ ழுற்றக் கடை.

373. நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
        ணுண்மை யறிவே மிகும்.

374. இருவே றுலகத் தியற்கை திருவேறு
        தெள்ளிய ராதலும் வேறு.

375. நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
        நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

376. பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
        சொரியினும் போகா தம.

377. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
        தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.

378. துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால
        வூட்டா கழியு மெனின்.

379. நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
        லல்லற் படுவ தெவன்.

380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
        சூழினுந் தான்முந் துறும்.



குறள் 371:

ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி.

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.


சொல்லுரை:

ஆகூழால் - ஆக்கத்திற்கு காரணமாகிய நல்ல ஊழ்வினையால்

தோன்றும் - உண்டாகும்

அசைவின்மை - ஊக்கம், முயற்சி

கைப்பொருள் - கையில் இருக்கும் பொருள்

போகூழால் - அழிவிற்கு காரணமாகிய தீய ஊழ்வினையால்

தோன்றும் - வந்தடையும்

மடி - சோம்பல், தளர்வு


பொருளுரை:

ஆக்கத்திற்கு காரணமாகிய நல்ல ஊழ்வினையால் ஊக்கம், முயற்சி உண்டாகும். அழிவிற்குக் காரணமாகிய தீய ஊழ்வினையால் கையில் இருக்கும் பொருள் அழியுமாறு சோம்பல் வந்தடையும்.


விளக்கவுரை:

ஊழ் என்பது முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளின் பயன். நல்வினை தீவினைகளின் எச்சங்கள் ஒரு பிறப்பில் இருந்தால் அதுவே மறுபிறவிக்குக் காரணமாகி அதன் பயனைத் தருகின்றன.
ஆக்கத்திற்குக் காரணமாகிய நல்ல ஊழ்வினை ஒருவனுக்கு இருக்குமானால் அவனுக்கு செல்வம் சேர்ப்பதற்கான ஊக்கமும் உற்சாகமும் தாமாவே அமையும். அதேபோன்று, அழிவிற்குக் காரணமாகிய தீய ஊழ்வினை இருக்குமானால், தன்னிடம் உள்ள செல்வம் எல்லாம் நீங்குவதற்கான சோம்பலும் தளர்ச்சியும் தாமாகவே வந்துவிடும். ஒருவனுடைய அறிவும் அறியாமையுமே பொருள் சேர்வதற்குக் காரணம் என்றாலும், அதுவும் ஊழ்வினைப் பயனால் அமைபவையே.



குறள் 372:

பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை.

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.


சொல்லுரை:

பேதைப் - அறிவின்மையை

படுக்கும் - உண்டாக்கும்

இழவூழ் - செல்வத்தை இழப்பதற்கான ஊழ்

அறிவுஅகற்றும் - அறிவை விரிவடையச்செய்யும்

ஆகல்ஊழ் - செல்வம் சேர்வதற்கான ஊழ்

உற்றக் - வந்த

கடை - பொழுது


பொருளுரை:

செல்வத்தை இழப்பதற்கான ஊழ் அறிவின்மையை உண்டாக்கும். செல்வம் சேர்வதற்கான ஊழ் வந்தபொழுது அறிவை விரிவடையச்செய்யும்.


விளக்கவுரை:

தன்னுடைய செல்வத்தை இழப்பதற்கான தீவினையால் வரும் ஊழ்வினைப் பயனானது, ஒருவன் எவ்வளவு அறிவிற் சிறந்தவனாக இருந்தாலும், அவனுடைய அறிவினை மழுங்கடிக்கச் செய்து அறிவற்றவனாக ஆக்கிவிடும். அதனால் அவன் தன்னிடமுள்ள செல்வங்களை இழப்பான். செல்வம் சேர்வதற்கான நல்வினையால் வரும் ஊழ்வினைப் பயன் இருக்குமானால், அதுவே அவனுடைய அறிவை அதிகப்படுத்தி செல்வம் சேர்வதற்கான வழியை உண்டாகும்.



குறள் 373:

நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
ணுண்மை யறிவே மிகும்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.


சொல்லுரை:

நுண்ணிய - மிகவும் நுட்பமான விளக்கமுடைய

நூல்பல - நூல்கள் பலவற்றை

கற்பினும் - கற்றாலும்

மற்றுந்தன் - அதன் பின்னும் தன்னுடைய ஊழினால் உண்டாகும்

உண்மை - இயற்கையாக உள்ள

அறிவே - அறிவே

மிகும் - மிகுந்து நிற்கும்


பொருளுரை:

ஒருவன் மிகவும் நுட்பமான விளக்கமுடைய நூல்கள் பலவற்றைக் கற்றாலும், அதன் பின்னும் தன்னுடைய ஊழினால் உண்டாகும் இயற்கையாக உள்ள அறிவே மிகுந்து நிற்கும்.


விளக்கவுரை:

ஒருவன் பொருள் சேர்ப்பதன் பொருட்டு, அதற்கான நுட்பமான விளக்கங்களைத் தரும் நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும், ஊழ்வினைப் பயனால் அவனுக்கு பொருள் சேர்க்கும் அமைவு இல்லையென்றால், கற்றறிந்த அறிவு சமயத்தில் உதவாமல் அவனுடைய ஊழ்வினையால் வரும் அறிவே மிகுந்து நிற்கும். ஆதலால், இப்பிறப்பில் கற்பதினால் வரும் அறிவை ஊழ்வினைப்பயனால் வரும் அறிவு வெல்லும் என்பது கருப்பொருள்.



குறள் 374:

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.


சொல்லுரை:

இருவேறு - இருவேறு வகைப்பட்ட தன்மையானது

உலகத்து - இவ்வுலகத்தின்

இயற்கை - இயற்கைத்தன்மை

திருவேறு - செல்வம் உடையவராயிருத்தல் வேறாகும்

தெள்ளியர் - தெளிந்த அறிவுடையாராய்

ஆதலும் - ஆதலும்

வேறு - வேறாகும்


பொருளுரை:

இருவேறு வகைப்பட்ட தன்மையானது இவ்வுலகத்தின் இயற்கைத்தன்மை. செல்வம் உடையவராயிருத்தல் வேறாகும். தெளிந்த அறிவுடையாராய் ஆதலும் வேறாகும்.


விளக்கவுரை:

உலகத்தில் காணப்படும் இயல்பானது இருவேறு வகையானது. அது யாதெனில், பொருட்செல்வமும், தெளிந்த அறிவுச்செல்வமும் ஆகும். மக்கட்பிறவி எடுத்தோர் பொருட்செல்வத்தையும், அறிவுச்செல்வத்தையும் நாடுகின்றனர். பொருட்செல்வத்தை நாடுவோர் அதனை ஈட்டுவதிலும், காப்பதிலும் முனைப்பாக இருப்பர். ஆதலால், அறிவு பெற்று பிறவிப்பயன் என்ன என்பதில் தெளிவுறுவதில்லை. அறிவு பெற்று அதில் தெளிந்த நிலை பெற விரும்புவோர், கற்றல், கேட்டல், அதனைப் பயிற்சி மூலம் உணர்தல் முதலியவைகளிலேயே பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடுவதால், பொருட்செல்வத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அதனால், பொருட்செல்வம் மிகக்குறைந்த அளவிலும் அல்லது இல்லாமலும் இருப்பர். அதனால், அறிவும் திருவும் ஒன்றுபட்டு இருப்பதில்லை என்பதை உணர்த்த ‘திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு’ என்றார். அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு மறுபிறவியின் ஊழ்வினைப்பயனும் அமையும்.



குறள் 375:

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.


சொல்லுரை:

நல்லவை - நல்லவைகள்

எல்லாஅம் - எல்லாம்

தீயவாம் - தீமையாக மாறும்

தீயவும் - தீமையும்

நல்லவாம் - நல்லவையாக ஆகும்

செல்வம் - செல்வம்

செயற்கு - உண்டாக்குவதற்கு


பொருளுரை:

ஒருவனின் ஊழ்வினையால் செல்வம் உண்டாக்குவதற்கு நல்லவைகள் எல்லாம் தீமையாக மாறும். தீமையும் நல்லவையாக ஆகும்.


விளக்கவுரை:

தீவினைப் பயனால் வரும் ஊழ்வினையானது, ஒருவன் செல்வம் சேர்க்க எவ்வளவு நல்ல வழிகளில் முயன்றாலும், ஊழ்வினைப்பயனால் அம்முயற்சியில் தோல்வியுற்று துன்பத்தையே அனுபவிக்க வேண்டிவரும். நல்வினைப் பயனால் வரும் ஊழ்வினையானது, ஒருவனுக்கு தீமை பயக்கும் தருணங்கள் அமைந்தாலும், எவ்வித சாதகமான சூழல் இல்லையாயினும், அவனுக்கு பொருட்செல்வம் வந்து சேரும். ‘ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்’ என்பது சிலப்பதிகார வரிகள். ஊழின் வலிமை இதன்மூலம் கூறப்பட்டது.



குறள் 376:

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.


சொல்லுரை:

பரியினும் - வருந்திக் காப்பாற்றினாலும்

ஆகாவாம் - தம்முடைய பொருள் ஆகாது

பாலல்ல - ஊழினால் தமக்கு உரிமை இல்லாதவைகளை

உய்த்துச் - புறத்தே கொண்டுபோய்

சொரியினும் - வேண்டாமெனக் கொட்டிவிட்டாலும்

போகா - போகாது

தம - ஊழினால் தமக்கு உரிமையான பொருட்கள்


பொருளுரை:

ஊழினால் தமக்கு உரிமை இல்லாதவைகளை வருந்திக் காப்பாற்றினாலும் தம்முடைய பொருள் ஆகாது. ஊழினால் தமக்கு உரிமையான பொருட்கள் புறத்தே கொண்டுபோய் வேண்டாமெனக் கொட்டிவிட்டாலும் நம்மை விட்டு அகலாது..


விளக்கவுரை:

ஊழின் வலிமை மற்ற எல்லாவற்றையும்விட மிகக் கடுமையானது. ஊழின் பயனால் ஒருவன் தன்னுடைய பொருளையெல்லாம் இழப்பானாயின், அவன் எவ்வளவு வருந்திக் காத்தாலும் பொருள் அவனிடத்தில் தங்காது. அதுபோலவே, ஊழின் பயனால் பொருள் வந்து சேருமாயின், தனக்கு வேண்டாமென கொண்டுபோய் வேறிடத்தில் தள்ளிவிட்டாலும் அப்பொருள் அவனைவிட்டு நீங்காது. ‘வருந்தி அழைத்தாலும் வாராத வாரா, பொருந்துவன போமின் என்றால் போகா’ என்ற ஒளவையின் வாக்கு நோக்கத்தக்கது. பால் என்பது ஒரு பக்கமாக இருப்பது. ஒரு செயலைச் செய்யத் தயங்குபவனை ‘பால்மாறுகிறான்’ என்று கூறுவர். இருக்கும் பக்கமே இருக்க விரும்பி செய்யவேண்டிய செயலை செய்யாதிருப்பவனைக் குறிக்கும். ஊழ்வினையும் செய்தவன் பக்கமே சென்று சேர்தலால், ஊழ், பால் என்ற பெயர் பெற்றது.



குறள் 377:

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.


சொல்லுரை:

வகுத்தான் - ஊழ்வினைப் பயன்படி வகுத்தளிக்கும் இறைவனால்

வகுத்த - இவ்வளவுதான் என்று ஏற்படுத்திய

வகையல்லால் - வகையைத் தவிர

கோடி - கோடிக்கணக்கில்

தொகுத்தார்க்கும் - பொருட்களை சேர்த்தவர்க்கும்

துய்த்தல் - அனுபவித்தல்

அரிது - கிடையாது


பொருளுரை:

ஊழ்வினைப் பயன்படி வகுத்தளிக்கும் இறைவனால் இவ்வளவுதான் என்று ஏற்படுத்திய வகையைத் தவிர கோடிக்கணக்கில் பொருட்களை சேர்த்தவர்க்கும் அதனை அனுபவித்தல் கிடையாது.


விளக்கவுரை:

பொருளைப் பெறுவது ஊழ்வினையால் நிகழ்வதுபோல, பெற்ற பொருளை துய்ப்பதற்கும் ஊழ்வினைப் பயன் இருக்கவேண்டும். பொருள் சேர்க்கமுடிந்த எல்லைவரையில் ஒருவனால் பொருள் சேர்க்கமுடிந்தாலும், ஊழ்வினைப் பயன் இல்லை என்றால், சேர்த்த பொருளை அவனால் அனுபவிக்க முடியாது. இதன்மூலம், ஒருவன் தனக்கென்று பொருளைச் சேர்த்துவைக்க வில்லை ஆயினும், ஊழ்வினைப் பயன் இருந்தால் செல்வத்தை அனுபவிக்கும் சூழ்நிலை உண்டாகும் என்பதும் கூறப்படுகிறது. வகுத்தான் என்பது ஊழ்வினைப் பயனை வகுத்தளிக்கும் இறைவனைக் குறித்தது.



குறள் 378:

துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால
வூட்டா கழியு மெனின்.

துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.


சொல்லுரை:

துறப்பார்மன் - துறவறத்தை மேற்கொள்ளுவர்

துப்புரவு - செல்வம்

இல்லார் - இல்லாதவர்

உறற்பால - ஊழ்வினையால் வந்தடையும் துன்பங்கள்

ஊட்டா - துன்புறுத்தாமல்

கழியும் - நீங்கும்

எனின் - என்றால்


பொருளுரை:

ஊழ்வினையால் வந்தடையும் துன்பங்கள் துன்புறுத்தாமல் நீங்கும் என்றால், செல்வம் இல்லாதவர் துறவறத்தை மேற்கொள்ளுவர்.


விளக்கவுரை:

செல்வம் இல்லாத வறியவர் துறவறம் மேற்கொள்ளாமல், இன்னும் வறுமை நிலையிலேயே உழன்றுகொண்டிருப்பதற்கான காரணம் என்னவென்று இக்குறளில் கூறப்படுகிறது. இந்த நிலைக்கு அவரவர் ஊழ்வினைப் பயனே காரணம் என்று காட்டப்படுகிறது. ஊழ்வினைப் பயனால் பொருள் நிறையப் பெற்று அதனை அனுபவித்துக் கொண்டிருப்பவன், துறவறத்தைப் பற்றி எண்ணுவது என்பது மிக அரிது. அப்படியொன்று நடந்தால், அது ஊழ்வினைப் பயனாலேயே நடக்கும். பொருளைப் பெற முடியாத ஒருவன், தன்னிடம் பொருளில்லாத நிலையிலும் துறவறம் மேற்கொள்ள முனையாததும் ஊழ்வினைப் பயனே. பல பிறவிகளில் பொருளின்பம் துய்க்கும் அவாவில் இருந்ததனால், பொருளைப் பெற முயன்று அதனைப் பெற முடியாதபோதும், அவன் துறவறத்தில் எண்ணத்தைச் செலுத்தாது, பற்றுள்ளத்தில் தள்ளிவது ஊழ் என, ஊழின் வலிமை கூறப்பட்டது. ஊழ்வினையாலேயே செல்வம் இல்லாதவர் துறவறம் மேற்கொள்ளவில்லை என்பதை எதிர்மறைப் பொருளாகக் கூறப்பட்டுள்ளது.



குறள் 379:

நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன்.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லல் படுவது எவன்.


சொல்லுரை:

நன்று ஆம் கால் - நல்வினை ஏற்படும்போது

நல்லவாக் - நல்லவைகளாக

காண்பவர் - கண்டு அனுபவித்து மகிழ்கின்றவர்

அன்று ஆம் கால் - தீவினை ஏற்படும்போது

அல்லல் - துன்பம்

படுவது - படுவது

எவன் - எதற்கோ?


பொருளுரை:

நல்வினை ஏற்படும்போது நல்லவைகளாக கண்டு அனுபவித்து மகிழ்கின்றவர், தீவினை வரும்பொழுது அதனால் உண்டாகும் துன்பத்தை அனுபவிக்க வருந்துவது எதற்கோ ?


விளக்கவுரை:

ஒருவனுக்கு நிகழும் இன்பதுன்பங்கள் அவன் முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகளால் அமைகின்றன. அதுவே, ஊழ்வினைப் பயனாக மாறி இப்பிறப்பில் வந்து அமைகிறது. இப்பிறப்பில் இன்பத்தை அனுபவிப்பவன், அந்த இன்பம் தானே தேடிக்கொண்டது என்று நினைக்கும்பொழுது, துன்பம் வரும்பொழுதும் அதுவும் தான் முற்பிறப்பில் செய்த தீவினைப் பயனால் வந்தது என்பதையும் உணரவேண்டும். இன்பம் தன் செயலால் வந்தது என்றும், துன்பம் பிறரால் தரப்பட்டது என்றும் நினைப்பது தவறு. ஒருவனுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் அவனால் ஏற்படுவதேயன்றி பிறரால் தரப்படுவதன்று. இதனையே ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோரன்ன’ என்று புறநானூற்றில் கூறியுள்ளார் கணியன் பூங்குன்றனார். இன்பமும் துன்பமும் தன்வினையால் வந்தவையே என்று உணர்ந்து, இன்பம் வருங்கால் மகிழ்ச்சியில் திளைத்தலையும், துன்பம் உண்டாகுங்கால் வருந்துதலும் விடுத்து, ஆக்கப்பணிகளில் தன்னைச் செலுத்துவதே அவைகளைக் கடந்து செல்லும் வழி என்று ஊழின் வலிமை வலியுறுத்தப்பட்டது.



குறள் 380:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந்து உறும்.


சொல்லுரை:

ஊழிற் - ஊழைவிட

பெருவலி - மிகுந்த வலிமையானது

யாவுள - எது உள்ளது

மற்றொன்று - அந்த ஊழை விலக்க மற்றொன்று

சூழினும் - மாற்ற நினைத்து முனைந்தாலும்

தான் - அந்த ஊழ்வினைப்பயனே அதன் வினைப்பயனை ஏற்படுத்த

முந்து - முந்தி

உறும் - நிற்கும்.


பொருளுரை:

ஊழைவிட மிகுந்த வலிமையானது எது உள்ளது ? எதுவும் இல்லை. அந்த ஊழை விலக்க மற்றொன்று மாற்ற நினைத்து முனைந்தாலும், அந்த ஊழ்வினைப்பயனே அதன் வினைப்பயனை ஏற்படுத்த முந்தி நிற்கும்.


விளக்கவுரை:

ஊழ்வினையால் தனக்கு நேரப்போவதை தடுக்க, வேறு வழிமுறைகளை ஒருவன் மேற்கொண்டாலும், ஊழ்வினையானது அந்த வழிமுறைகளையே தனக்குத் துணையாக்கிகொண்டு ஊழ்வினைப்பயனை ஊட்டவல்லது என்று கூறப்படுகிறது. ஊழ்வினைப் பயனை ஒருவன் அனுபவித்தே ஆகவேண்டும், அதிலிருந்து தப்ப இயலாது என்பது கருத்து. ‘ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்’ என்பது சிலப்பதிகார வரி.



uline