அரசியல்

39. இறைமாட்சி

( அரசனின் சிறப்பு )

381. படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
        முடையா னரசரு ளேறு.

382. அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கு
        மெஞ்சாமை வேந்தற் கியல்பு.

383. தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்று
        நீங்கா நிலனான் பவற்கு.

384. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
        மான முடைய தரசு.

385. இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
        வகுத்தலும் வல்ல தரசு.

386. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேன்
        மீக்கூறு மன்ன னிலம்.

387. இன்சொலா லீத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற்
        றான்கண் டனைத்திவ் வுலகு.

388. முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
        கிறையென்று வைக்கப் படும்.

389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
        கவிகைக்கீழ்த் தங்கு முலகு.

390. கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு
        முடையானாம் வேந்தர்க் கொளி.

குறள் 381:

படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு.

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.


சொல்லுரை:

படை - சேனைப்படையும்

குடி - நல்ல குடிமக்களும்

கூழ் - அவர்களுக்கான நிறைவான உணவுப்பொருளும்

அமைச்சு - நல்ல அமைச்சர்களும்

நட்பு - நட்பு பாராட்டும் தன்மையுள்ளவர்களும்

அரண் - நாட்டிற்கு நல்ல பாதுகாப்பு அமைப்புகளும்

ஆறும் - ஆகிய இவை ஆறனையும்

உடையான் - பெற்றவன்

அரசருள் - அரசர்களுள்

ஏறு - ஆண்சிங்கம் போன்றவன் ஆவான்.


பொருளுரை:

சேனைப்படையும், நல்ல குடிமக்களும், அவர்களுக்கான நிறைவான உணவுப்பொருளும், நல்ல அமைச்சர்களும், நட்பு பாராட்டும் தன்மையுள்ளவர்களும், நாட்டிற்கு நல்ல பாதுகாப்பு அமைப்புகளும் ஆகிய இவை ஆறனையும் பெற்றவன் அரசர்களுள் ஆண்சிங்கம் போன்றவன் ஆவான்.


விளக்கவுரை:

படை என்பது ஒரு நாட்டின் படைபலத்தைக் குறிக்கும். அக்காலத்தில் நால்வகைப்படைகள் இருந்ததாகக் கூறுவர். அவை தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்பதாகும். இப்பொழுது வான்படை, கப்பற்படை மற்றும் இராணுவப்படை ஆகிய மூன்றாகும். குடி என்பது அந்நாட்டில் வாழும் குடிமக்களைக் குறிக்கும். நல்ல குடிமக்கள் வாழும் நாடே சிறந்த நாடாக விளங்கமுடியும். கூழ் என்றது குடிமக்களுக்குத் தேவையான உணவுப்பொருளைக் குறித்தது. உணவுப்பற்றாக்குறை பலவகை உள்நாட்டுப் பிரச்சனைகளை உருவாக்கும். உணவுப்பொருளில் நிறைவான நாடே வளமான நாடாக விளங்கமுடியும். அறிவிற் சிறந்த அமைச்சர்கள் இருத்தல் வேண்டும். அப்பொழுதே சிறந்த அரசியல் நிர்வாகம் நடக்கும். ஒரு நாட்டிற்கு அண்டை நாடுகள் நட்பு நாடாக அமைதல் வேண்டும். இயற்கையாக அமைந்த காடு, மலை, கடல் போன்ற பாதுகாப்பும், செயற்கை முறையில் அமைக்கப்பட்ட கோட்டை, மதிற்சுவர் போன்றவைகளும் அரணாக அமைதல் நலம். மேற்கூறப்பட்ட ஆறு வகையான உறுப்புகளையும் சிறப்பாக அமைத்துகொண்ட அரசனே அரசர்களுள் சிறந்த அரசனாக விளங்கமுடியும்.



குறள் 382:

அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கு
மெஞ்சாமை வேந்தற் கியல்பு.

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு.


சொல்லுரை:

அஞ்சாமை - அஞ்சாத நெஞ்சுரம்

ஈகை - கொடை

அறிவு - அறிவுடைமை

ஊக்கம் - மன எழுச்சி

இந்நான்கும் - ஆகிய நான்கும்

எஞ்சாமை - குறையாமை

வேந்தர்க்கு - அரசனுக்கு

இயல்பு - சிறந்த தன்மையாகும்


பொருளுரை:

அஞ்சாத நெஞ்சுரம், கொடை, அறிவுடைமை மற்றும் மன எழுச்சி ஆகிய நான்கும் குறையாதிருத்தல் அரசனுக்கு சிறந்த தன்மையாகும்.


விளக்கவுரை:

அரசன், எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சுரம் கொண்டவனாக இருக்கவேண்டும். அப்பொழுதே தன் நாட்டை சிறப்பானதொரு நாடாக ஆட்சி செய்யமுடியும். எதிரிகளுக்கு அஞ்சி வாழும் அரசனால் சிறப்பான ஆட்சி செய்யமுடியாது. குடிமக்களின் நலனே முதன்மையானதாகக் கருதி நலிவுற்றோர்க்கு கொடுத்துதவும் அரசனே சிறந்தவனாவான். அரசன் சிறந்த அரசியல் அறிவு பெற்றிருத்தல் வேண்டும். சோம்பலின்றி பணியாற்றும் மன எழுச்சி உடையவனாக இருத்தல் வேண்டும். இந்த நான்கு குணங்களும் குறையாது இருத்தலே அரசனுக்கு சிறந்த இயல்பாகும்.



குறள் 383:

தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்று
நீங்கா நிலனான் பவற்கு.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு.


சொல்லுரை:

தூங்காமை - செயல்களைச் செய்வதில் காலம் தாழ்த்தாமை

கல்வி - நல்ல கல்வி அறிவு

துணிவுடைமை - எதனையும் எதிர்நோக்கும் துணிவு

இம்மூன்றும் - இந்த மூன்றும்

நீங்கா - நீங்காமல் இருக்கவேண்டிய குணங்கள்

நிலன் - நிலத்தை

ஆள்பவர்க்கு - ஆளும் அரசனுக்கு


பொருளுரை:

செயல்களைச் செய்வதில் காலம் தாழ்த்தாமை, நல்ல கல்வி அறிவு, எதனையும் எதிர்நோக்கும் துணிவு ஆகிய இந்த மூன்றும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்கவேண்டிய குணங்கள் ஆகும்.


விளக்கவுரை:

தூங்காமை என்பது செய்யவேண்டிய செயல்களை காலம் தாழ்த்தாமல் செய்தல் ஆகும். அவ்வாறு செய்யவேண்டிய செயல்களை செய்துமுடிப்பதற்கான சிறந்த கல்வி அறிவு இருத்தல் வேண்டும். அச்செயல்களை காலத்தோடு செய்து முடிப்பதற்கான துணிவு மனப்பான்மையும் வேண்டும். இந்த மூன்று குணங்களும் அரசன் அடையப்பெற்று, அவை என்றும் தன்னிடமிருந்து நீங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.



குறள் 384:

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.

அறனிழுக்காது அல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடையது அரசு.


சொல்லுரை:

அறன் - அறத்தில்

இழுக்காது - தவறாமல்

அல்லவை - தீயவைகளை

நீக்கி - ஒதுக்கி

மறன் - வீரத்தில்

இழுக்கா - வழுவாத

மானம் - மானத்தை

உடையது - உடையவனே

அரசு - அரசனாவான்


பொருளுரை:

அறத்தில் தவறாமல், தீயவைகளை ஒதுக்கி, வீரத்தில் வழுவாத மானத்தை உடையவனே அரசனாவான்.


விளக்கவுரை:

அரசன், தான் முதலில் அறம் தவறாமல் நடந்துகொள்ளவேண்டும். மக்களும் அறத்தில் வழுவாது வாழ வழிவகை செய்யவேண்டும். நாட்டில் அறம் அல்லாதவை நடக்கும்பொழுது அதற்கானவர்களை சரியான முறையில் தண்டித்து அறத்தை நிலைநாட்டவேண்டும். மறம் என்றது இங்கு வீரத்தைக் குறிப்பது. மானம் என்றது தன் நிலை குலையாது வாழும் வாழ்க்கை. அவைகளை சிறப்பாகக் கடைபிடித்து வாழ்பவனே அரசனாவான்.



குறள் 385:

இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.


சொல்லுரை:

இயற்றலும் - பொருள் வருவாய்க்கு வழிவகை செய்தலும்

ஈட்டலும் - அவ்வகையில் பொருள் சேகரித்து தொகுத்து வைத்தலும்

காத்தலும் - தொகுத்த பொருளை பாதுகாத்தலும்

காத்த - பாதுகாத்த பொருளை

வகுத்தலும் - அளவறிந்து செலவு செய்தலும்

வல்லது - செய்யவல்லவன்

அரசு - அரசனாவான்


பொருளுரை:

பொருள் வருவாய்க்கு வழிவகை செய்தலும், அவ்வகையில் பொருள் சேகரித்து தொகுத்து வைத்தலும், தொகுத்த பொருளை பாதுகாத்தலும், பாதுகாத்த பொருளை அளவறிந்து செலவு செய்தலும் ஆகியவைகளைச் செய்யவல்லவன் அரசனாவான்.


விளக்கவுரை:

இயற்றலாவது காலத்திற்கேற்ப தொழில்களைப் பெருக்கி பொருள் வரும் வழிகளை உருவாக்குவது. அவ்வாறு வழிவகை செய்தபின், அத்தொழில்களின்மூலம் பொருளைப் பெற்று அதை நிகழ்கால மற்றும் எதிர்காலத் தேவை பொருட்டு தக்க இடத்தில் சேர்த்து வைப்பது. பழங்காலத்தில் கோட்டைக்குள் மிகப்பெரிய கிடங்குகளை இதற்காக கட்டி வைத்திருப்பார்கள். அவ்வாறு ஈட்டிய பொருளை பாதுகாப்பதும் முக்கியமானது. நாட்டில் பஞ்சம் மற்றும் மழையில்லாத காலங்களில், பாதுகாத்த பொருளை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வேண்டிய அளவு பங்கிட்டு கொடுக்கவேண்டும். இவ்வாறாக, இயற்றல், ஈட்டல், காத்தல், காத்த வகுத்தல் ஆகியவைகளைச் செய்ய வல்லவனே அரசனாவான்.



குறள் 386:

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேன்
மீக்கூறு மன்ன னிலம்.

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.


சொல்லுரை:

காட்சிக்கு - பிறர் காண வரும் நிலைக்கு

எளியன் - எளிதில் அணுகும்படி இருப்பவனாக

கடுஞ்சொல்லன் - கடுமையான சொற்களை

அல்லனேல் - கூறாதவனாகவும் இருப்பானாகில்

மீக்கூறும் - உலகம் உயர்த்திப் பேசும்

மன்னன் - அரசன்

நிலம் - ஆளும் நாடு


பொருளுரை:

பிறர் காண வரும் நிலைக்கு எளிதில் அணுகும்படி இருப்பவனாகவும், கடுமையான சொற்களை கூறாதவனாகவும் இருப்பானாகில் அந்த அரசன் ஆளும் நாட்டை இந்த உலகம் உயர்த்திப் பேசும்.


விளக்கவுரை:

அரசன் எல்லோராலும் பார்க்கக்கூடிய நிலையில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் எளியவரும் தனக்குண்டான குறையை முறையிட்டு நீதி பெறமுடியும். அரசன் கடுஞ்சொல் கூறாதவனாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான், எல்லோராலும் எளிதில் அணுகும் வாய்ப்பு உண்டாகும். மக்களுக்கும் அரசனிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டாகும். அவ்வாறு நடந்துகொள்ளும் அரசனை மக்கள் உயர்த்திப் பேசுவர்.



குறள் 387:

இன்சொலா லீத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு.

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண்ட அனைத்துஇவ் வுலகு.


சொல்லுரை:

இன்சொலால் - இனிய சொல்லுடன்

ஈத்தளிக்க - பொருள் ஈதலைச் செய்து

வல்லார்க்கு - பாதுகாக்கவல்ல அரசனுக்கு

தன்சொலால் - தன் புகழைக் கூறுவதுடன்

தான்கண்ட - தான் நினைத்தபடி

அனைத்து - எல்லாம் நடக்கும்

இவ்வுலகு - இவ்வுலகம்


பொருளுரை:

இனிய சொல்லுடன் பொருள் ஈதலைச் செய்து பாதுகாக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகம் அந்த அரசனின் புகழைக் கூறுவதுடன், அரசன் நினைத்தபடி எல்லாம் நடக்கும்.


விளக்கவுரை:

அரசனிடத்தில் தன் குறைகளைக் கூறவும், முறைகளைக் கூறவும் மக்கள் வருவார்கள். குறை கூறுவதாவது மழையின்மை, உணவின்மை, வீடின்மை, பொருளின்மை முதலான குறைகளைச் சொல்லி அதிலிருந்து விடுபட விழைவது. முறை கூறுவதாவது தனக்கு பிறரால் இழைக்கப்பட்ட அநீதியை எடுத்துச்சொல்லி தனக்கு நீதி வழங்க வேண்டுவது. குறை கூறி வருவோர்க்கு, அவர்களுக்குத் தேவையான பொருளுதவி செய்து, வாழ்க்கைகக்கு நம்பிக்கையூட்டும் இனிய சொற்களைக் கூறி அனுப்பி வைக்கவேண்டும். முறைவேண்டி வருவோர்க்கு, அவர்களுக்கான நீதியை வழங்கி பாதுகாப்பான வாழ்விற்கும் வழிவகை செய்யவேண்டும். அவ்வாறு நடந்துகொள்ளும் அரசனை, அந்நாட்டு மக்கள் புகழ்ந்து போற்றுவர். அரசன் நினைத்தபடி எல்லாம் நாட்டு மக்களும் நடந்துகொள்ளுவர்.



குறள் 388:

முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.


சொல்லுரை:

முறைசெய்து - நீதி தவறாமல் ஆட்சி செய்து

காப்பாற்றும் - மக்களையும் நாட்டையும் காப்பாற்றும்

மன்னவன் - அரசனை

மக்கட்கு - அந்த நாட்டு மக்களுக்கு

இறையென்று - கடவுள் என்று

வைக்கப்படும் - சிறப்பாக வைக்கப்படுவான்


பொருளுரை:

நீதி தவறாமல் ஆட்சி செய்து, மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் அரசனை, அந்த நாட்டு மக்களுக்கு கடவுள் என்று சிறப்பாக வைக்கப்படுவான்.


விளக்கவுரை:

முறைசெய்தல் என்பது நடுவு நிலை தவறாமல் ஆட்சி செய்தல். மக்கள் முறையிடாத செயலிலும் மன்னன் நீதியை நிலைநாட்டவேண்டும். காப்பாற்றுவது என்பது குடிமக்களை பிறரிடமிருந்து துன்பம் நேராமல் பாதுகாப்பது. தன்னாலும், தன் சுற்றத்தாலும், கள்வராலும், பகைவர்களாலும் மற்றும் பிற வழிகளிலும் குடிமக்களுக்குத் துன்பம் நேர்ந்திடாமல் காப்பது. அரசனால் வழங்கப்படும் நீதியும், பாதுகாப்பும் தெய்வத்தால் வழங்கப்படுவதற்கு ஒப்ப இருக்குமிடத்து, அரசனை கடவுள் என்று போற்றுவர்.



குறள் 389:

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.


சொல்லுரை:

செவி - காதிற்கு

கைப்ப - கசப்பதுபோல் துன்பமாக இருந்தாலும்

சொற்பொறுக்கும் - அந்த சொற்களைப் பொறுத்துக் கேட்கும்

பண்புடை - குணமுள்ள

வேந்தன் - அரசனின்

கவிகைக்கீழ் - குடையின்கீழ்

தங்கும் - நிலைத்திருக்கும்

உலகு - இவ்வுலகம்


பொருளுரை:

பிறர் கூறும் சொற்கள் காதிற்கு கசப்பதுபோல் துன்பமாக இருந்தாலும், அந்த சொற்களைப் பொறுத்துக் கேட்கும் குணமுள்ள அரசனின் குடையின்கீழ் இவ்வுலகம் நிலைத்திருக்கும்.


விளக்கவுரை:

அரசன் நெறி தவறி நடக்கும் காலத்தில் அல்லது சோம்பி இருக்கும் காலத்தில், நல்ல அமைச்சர்கள் கடினமான மொழியிலும் அறிவுரை கூற நேரிடும். குடிமக்களில் துணிவுள்ளோரும் மன்னனின் செயலை தவறென்று முறையிடவும் நேரிடும். இவைகளைக் கேட்பதற்கு மன்னனுக்கு கசப்பாக இருந்தாலும், பிறர் இடித்துரைக்கும் சொற்களை பொறுத்துக்கொள்ளுதல் மன்னனின் சிறந்த பண்பாகும். அதிகாரம் மிக்க அரசன் அவைகளைக் கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நாட்டின் நலன் கருதியும், குடிமக்கள் நலன் கருதியும் பிறர் எடுத்துரைக்கும் கசப்பாகத் தோன்றும் சொற்களையும் பொறுமையாகக் கேட்டு ஆவண செய்யும் அரசன் பண்புடைய அரசனாவான். அப்படிப்பட்ட மன்னனின் ஆட்சியின்கீழ் வாழவே மக்கள் விரும்புவார்கள். நாவின் கசப்புச் சுவை செவியின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது.



குறள் 390:

கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு
முடையானாம் வேந்தர்க் கொளி.

கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி.


சொல்லுரை:

கொடை - பொருள் வேண்டுவோர்க்கு கொடுத்தலும்

அளி - முகமலர்ச்சியுடன் இனியன கூறலும்

செங்கோல் - நீதிநெறி தவறாது ஆட்சி செய்தலும்

குடிஓம்பல் - குடிமக்களைப் பாதுகாத்தலும்

நான்கும் - ஆகிய நான்கையும்

உடையானாம் - கொண்ட அரசன்

வேந்தர்க்கு - அரசர்களுக்கெல்லாம்

ஒளி - ஒளிதரும் விளக்கு போன்றவன்.


பொருளுரை:

பொருள் வேண்டுவோர்க்கு கொடுத்தலும், முகமலர்ச்சியுடன் இனியன கூறலும், நீதிநெறி தவறாது ஆட்சி செய்தலும், குடிமக்களைப் பாதுகாத்தலும் ஆகிய நான்கையும் கொண்ட அரசன் அரசர்களுக்கெல்லாம் ஒளிதரும் விளக்கு போன்றவன்.


விளக்கவுரை:

தகுதியானவர்க்கு வேண்டுவன கொடுத்தல் கொடை எனப்பட்டது. அரசன் குடிமக்களிடம் இனியன கூறி இரக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டும். செங்கோல் என்றது அரசன் நீதிநெறி தவறாது ஆட்சி செய்யும் முறை. குடி ஓம்பலாவது பஞ்சம், உணவுப்பற்றாக்குறை, களவு, கொள்ளை, கொள்ளைநோய் முதலியவற்றால் மக்கள் துன்புறும் காலத்தில், அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருள் அளித்தலும், பாதுகாப்பு வழங்கலும், வரி நீக்கலும் ஆகும். மேற்கூறிய பண்புகள் உடைய அரசன், , குடிமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று மற்றைய அரசர்களுக்கெல்லாம் கலங்கரை விளக்காகத் திகழ்வான்.



uline