அரசியல்

40. கல்வி

( கற்கத்தகுந்த நூல்களைக் கற்றல் )

391. கற்க கசடறக் கற்பவை கற்றபி
        னிற்க வதற்குத் தக.

392. எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்
        கண்ணென்ப வாழு முயிர்க்கு.

393. கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
        புண்ணுடையர் கல்லா தவர்.

394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரித
        லனைத்தே புலவர் தொழில்.

395. உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
        கடையரே கல்லா தவர்.

396. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
        கற்றனைத் தூறு மறிவு.

397. யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
        சாந்துணையுங் கல்லாத வாறு.

398. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்
        கெழுமையு மேமாப் புடைத்து.

399. தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
        காமுறுவர் கற்றறிந் தார்.

400. கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
        மாடல்ல மற்றை யவை.



குறள் 391:

கற்க கசடறக் கற்பவை கற்றபி
னிற்க வதற்குத் தக.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.


சொல்லுரை:

கற்க - கற்கவேண்டும்

கசடுஅற - ஐயம் நீங்கும்படி

கற்பவை - கற்கப்படவேண்டிய நூல்களை

கற்றபின் - அவ்வாறு கற்றபின்

நிற்க - நடந்துகொள்ளவேண்டும்

அதற்கு - அக்கல்விக்குத்

தக - தகுந்தபடி


பொருளுரை:

கற்கப்படவேண்டிய நூல்களை ஐயம் நீங்கும்படி கற்கவேண்டும். அவ்வாறு கற்றபின், கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ளவேண்டும்.


விளக்கவுரை:

கற்பவை எனக் குறிப்பிட்டது கற்கப்படவேண்டிய நூல்களை மட்டும் கற்பதாகும். ஒருவனால் உலகிலுள்ள எல்லா நூல்களையும் படிப்பது இயலாது என்பதால், நூல்களைத் தேர்ந்தெடுத்து படித்தல் அவசியம். கசடு அறக் கற்றல் என்பது, தான் கற்கும் நூல்களில் கூறப்பட்ட பொருள்களை ஐயந்திரிபு அறக் கற்பதும், தன் உள்ளத்தில் இருக்கும் குற்றங்கள் நீங்கும் அளவுக்குக் கற்பதும் ஆகும். அவ்வாறு கற்றபின், அந்நூல்கள் கூறும் அறநெறிப்படி நடக்கவேண்டும். கல்வி என்பது அறநெறி புகட்டும் அறநூல்கள் வாயிலாகவும், தொழில்முறை நூல்களாகவும், பொதுக்கல்வி நூல்களாகவும் இருக்கலாம். தான் கற்ற அறநெறி நூல்கள் கூறும் நெறிமுறையில் நடப்பதும், தொழில்முறை நூல்கள் கூறும் நுணுக்கத்தில் சிறந்து விளங்குவதும் கற்ற கல்வியின் பயனாக அமையும்.



குறள் 392:

எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.


சொல்லுரை:

எண்ணென்ப - எண்ணப்படும் எண்கள் என்ப

ஏனை - மற்றைய

எழுத்தென்ப - எழுதப்படும் எழுத்துக்கள் என்ப

இவ்விரண்டும் - ஆகிய இவ்விரண்டும்

கண்ணென்ப - இரண்டு கண்கள் எனக் கூறுவர்

வாழும் - வாழும் மக்களாகிய

உயிர்க்கு - உயிர்களுக்கு


பொருளுரை:

வாழும் மக்களாகிய உயிர்களுக்கு, எண்ணப்படும் எண்கள் என்பதுவும், மற்றும் எழுதப்படும் எழுத்துக்கள் என்பதுவும் ஆகிய இரண்டும், இரண்டு கண்கள் எனக் கூறுவர்.


விளக்கவுரை:

மனிதனுக்கு வரும் நூல்அறிவு, எண்களாலும் எழுத்துக்களாலும் உருவாக்கப்பட்ட நூல்களால் வருகின்றன. ஆகையால், நூல் அறிவு பெறவேண்டுமெனில் எண்கணித அறிவும், எழுத்து அறிவும் முக்கியமாகிறது. இவ்வுலகைக் காண, கண் எவ்வாறு முக்கியமான பொறியாகிறதோ, அதுபோல மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு, எண்கணித அறிவும், எழுத்தறிவும் முக்கியமாகிறது. அதனால் எண்ணும் எழுத்தும் இரு கண்களாகப் போற்றப்படுகிறது.



குறள் 393:

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.


சொல்லுரை:

கண்ணுடையர் - கண்களை உடையவர்கள்

என்பவர் - என்று உயர்வாகக் சொல்லப்படுவர்கள்

கற்றோர் - கல்வி கற்றவர்களே

முகத்திரண்டு - முகத்தில் இரண்டு

புண்ணுடையர் - புண்கள் உடையவர்கள் ஆவர்

கல்லாதவர் - கல்வி கற்காதவர்கள்


பொருளுரை:

கல்வி கற்றவர்களே கண்களை உடையவர்கள் என்று உயர்வாகக் சொல்லப்படுவர்கள். கல்வி கற்காதவர்கள் முகத்தில் இரண்டு புண்கள் உடையவர்கள் ஆவர்.


விளக்கவுரை:

ஒரு பொருளின் காட்சி கண்ணின் வழிதான் உணரப்படுகிறது. ஆனால், அந்தப் பொருளின் தன்மையை அறிய அறிவு அவசியம். அந்த அறிவு, கல்வியின் வழி பெறப்படுகிறது. அந்தக் கல்வி, எண்ணின் மூலமும் எழுத்தின்மூலமும் கற்பிக்கப்படுகிறது. அதனால், எண்ணும் எழுத்தும் ஒருவனுக்கு இரு கண்களாகப் போற்றப்படுகிறது. கல்லாதவனால் ஒரு பொருளைப் பார்க்க இயலுமேயன்றி அப்பொருளின் தன்மையை அறிய முடியாது. கண்ணிருந்தும் பயனில்லை. அதனால், கல்லாதவரின் கண்ணை புண் என்கிறார். கல்வியின் முக்கியத்துவம் இதனால் உணர்த்தப்படுகிறது.



குறள் 394:

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரித
லனைத்தே புலவர் தொழில்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.


சொல்லுரை:

உவப்ப - மகிழும்படி

தலைக்கூடி - சேர்ந்திருந்து

உள்ளப்பிரிதல் - இனி இவரை எப்பொழுது காண்போம் என்று உள்ளம் நெகிழும்படி

பிரிதல் - பிரிதவதாகிய

அனைத்தே - அவ்வளவே

புலவர் - புலவர்

தொழில் - செயலாகும்


பொருளுரை:

மகிழும்படி சேர்ந்திருந்து இனி இவரை எப்பொழுது காண்போம் என்று உள்ளம் நெகிழும்படி பிரிதவதாகிய அவ்வளவே புலவர் செயலாகும்.


விளக்கவுரை:

கல்வியிற் சிறந்தோர் கூடுமிடத்து அங்கே அறிவுக்குத் தீனி போடும் விவாதங்களும், காதிற்கு இனிமை தரும் இன்சொற்களும், ஆன்மாவிற்கு உரம் தரும் சொற்பொழிவுகளும் நடைபெறும். அதனால் எல்லோரும் இன்புற்றிருப்பர். கற்றோரும் மகிழ்ந்திருப்பர். அத்தகைய கற்றோரை எவரும் பிரிய விரும்பமாட்டார். அஃதின்றி பிரியுமிடத்து, இத்தகைய கற்றோரை எப்பொழுது காண நேரும் என்று உள்ளம் நெகிழும்படி ஆகும். புலவர்களின் பிரியும் செயலானது உள்ளம் நெகிழும் செயலாகும்.



குறள் 395:

உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.


சொல்லுரை:

உடையார்முன் - செல்வம் உடையார் முன்னே

இல்லார்போல் - செல்வம் அற்றவர் செல்வம் வேண்டி பணிந்து நிற்றல்போல

ஏக்கற்றும் - கல்வி கற்கும் ஏக்கத்தால் கற்றோர்முன் பணிந்து இருந்து

கற்றார் - கல்வி கற்றவரே சிறந்தவராவர்.

கடையரே - இழிந்தவரே

கல்லாதவர் - அவ்வாறு பணிந்து கல்வி பயிலாதவர்


பொருளுரை:

செல்வம் உடையார் முன்னே, செல்வம் அற்றவர் செல்வம் வேண்டி பணிந்து நிற்றல்போல, கல்வி கற்கும் ஏக்கத்தால் கற்றோர்முன் பணிந்து இருந்து கல்வி கற்றவரே சிறந்தவராவர். அவ்வாறு பணிந்து கல்வி பயிலாதவர் இழிந்தவரே.


விளக்கவுரை:

பொருட்செல்வம் நிலையற்றது. ஆனால், அந்த பொருட்செல்வம் இல்லற வாழ்விற்கு இன்றியமையாதது. ஆதலால், பொருட்செல்வம் இல்லாதவன், செல்வம் உடையவனிடம் பணிவுடன் நடப்பது உலக இயல்பு. நிலையற்ற பொருட்செல்வத்திற்கே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்றால், எழுபிறப்பும் தொடரும் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பது கருத்து. ஆதலால், கற்றார்முன் பணிந்து இருந்து கல்வியை கற்றே தீரவேண்டும் எனப்படுகிறது. “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்பதுபோல.



குறள் 396:

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறு மறிவு.

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.


சொல்லுரை:

தொட்டு அனைத்து - தொட்டு தோண்டுதல், தோண்டிய அளவிற்கு

ஊறும் - நீர் சுரக்கும்

மணற்கேணி - மணற்பாங்கான இடத்தில் தோண்டப்படும் சிறுகுளம்

மாந்தர்க்கு - மனிதர்களுக்கு

கற்று அனைத்து - கல்வி கற்கும் அளவிற்கு

ஊறும் - வளரும்

அறிவு - அறிவு


பொருளுரை:

மணற்பாங்கான இடத்தில் தோண்டப்படும் சிறிய அளவிலான குளத்திலே தோண்டிய அளவிற்கு நீர் சுரக்கும். அதுபோல, கல்வி கற்கும் அளவிற்கு ஏற்ப, மனிதர்களுக்கு அறிவு வளரும்.


விளக்கவுரை:

கேணி என்பது சிறிய அளவிலான குளம். மணற்பாங்கான இடமான ஆற்றிலோ அல்லது கடற்கரை ஓரமாகவோ தோண்டும்போது, தோண்டும் அளவிற்கு நீர் சுரக்கும். மணற்பாங்கான இடத்தில் தோண்டுவதும் எளிது. அதுபோலவே, மனிதர்களுக்கும் கல்வி கற்கும் அளவிற்கு அறிவு வளரும். விருப்பமுடன் பயின்றால், கல்வி கற்பதும் எளிது.



குறள் 397:

யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.


சொல்லுரை:

யாதானும் - எது ஒன்றாயினும்

நாடாமால் - தன் நாடாகும்

ஊராமால் - தன் ஊராகும்

என்னொருவன் - என்ன காரணத்தினால் ஒருவன்

சாந்துணையும் - இறக்கும் வரையிலும்

கல்லாத - கல்வி கற்காமல்

ஆறு - இருப்பது


பொருளுரை:

கற்றவனுக்கு எந்த நாடாயினும் அது தன் நாடாகும், எந்த ஊராயினும் அது தன் ஊராகும். அவ்வாறிருக்க, என்ன காரணத்தினால் ஒருவன் தான் இறக்கும் வரையிலும் கல்வி கற்காமல் இருப்பது ?


விளக்கவுரை:

கல்வி பயின்ற ஒருவனுக்கு எந்த நாட்டிலும், எந்த ஊரிலும் தன் கல்விப் புலமையினால் வாழமுடியும் என்பதாலும், எம்மக்களாயினும் ஒருவனின் கல்விப் புலமையை மெச்சுவர் என்பதால் வேற்று நாட்டு மக்களாலும் கற்றவர் போற்றப்படுவர் என்பதாலும், கற்றவர்க்கு எந்த நாடும், எந்த ஊரும் தன் சொந்த ஊரைப்போன்றே உணர்வு ஏற்படும். இங்கே கல்வி அறிவு என்று கூறப்பட்டது இலக்கிய அறிவு மட்டுமல்ல. அறிவியல், எண்கணிதம், வானவியல், சோதிடம் மற்றும் நுண்கலைகள் போன்ற பலவற்றைக் குறிக்கும். அவ்வாறு எந்நாட்டு மக்களாலும் போற்றப்படும் தன்மையுடைய கல்வியை, ஒருவன் சாகும்வரையிலும் கற்காமல் இருப்பது வியப்பான ஒன்று.



குறள் 398:

ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்
கெழுமையு மேமாப் புடைத்து.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.


சொல்லுரை:

ஒருமைக்கண் - ஒரு பிறப்பில்

தான்கற்ற - தான் கற்ற

கல்வி - கல்வியானது

ஒருவற்கு - ஒருவனுக்கு

எழுமையும் - ஏழு பிறப்புகளிலும்

ஏமாப்பு - பாதுகாவலை

உடைத்து - பெற்றதாகும்


பொருளுரை:

ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்கு, அவனைத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளிலும் பாதுகாவலை பெற்றதாகும்.


விளக்கவுரை:

ஒரு பிறவியில் பெற்ற பொருளானது அப்பிறவியில் மட்டுமே பயனளிக்கும் தன்மை உடையது. ஆனால் ஒரு பிறவியில் கற்ற கல்வியோ, ஒருவனுடைய ஏழு பிறவியிலும் அவனைத் தொடரும், அவனைப் பாதுகாக்கும். பொருட்செல்வமானது நிலையற்றது. ஆனால், கல்விச்செல்வமோ ஒரு பிறவியைக் கடந்து அடுத்த பிறவிக்கும் ஒருவனோடு பயணிக்கும் தன்மையுடையது. இப்பிறவியிலேயே நம்மைவிட்டு பிரிந்துவிடுகின்ற பொருட்செல்வத்தைவிட நம்மை அறியாமலேயே ஏழு பிறவியிலும் பின்தொடரும் கல்வி மேன்மையானது. நாம் பாதுகாக்கவேண்டிய பொருட்செல்வத்தைவிட நம்மைப் பாதுகாக்கும் கல்விச்செல்வம் உயர்வானது. எழுமையும் என்பது இனி எழும் பிறவியிலும் என்றும் பொருள் கொள்ளலாம்.



குறள் 399:

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.


சொல்லுரை:

தாம் - தாம்

இன்புறுவது - இன்புறுவதற்குக் காரணமாகிய கல்வியால்

உலகு - உலகமும்

இன்புறக்கண்டு - இன்பமடைவதைக் கண்டு

காமுறுவர் - மேலும் கற்க விரும்புவர்

கற்றறிந்தார் - கற்று அறிந்தவர்கள்


பொருளுரை:

கற்று அறிந்தவர்கள், தாம் இன்புறுவதற்குக் காரணமாகிய கல்வியால் உலகமும் இன்பமடைவதைக் கண்டு, மேலும் மேலும் கற்க விரும்புவர்.


விளக்கவுரை:

கற்றவர்கள் இன்புறுவது என்பது கல்வி நுணுக்கத்தைத் தாம் உணர்வதும், இலக்கிய சொற்சுவை பொருட்சுவையினால் உண்டாகும் உள்ளக்களிப்பும், தாம் பிறர்க்கு எடுத்துக் கூறும்பொழுது மற்றவர்கள் தம்மை புகழ்வதும், இம்மை மறுமைப் பயனை கல்வியின்மூலம் அறிவதும், கல்வியினால் தன் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்செல்வம் கிடைப்பதும் ஆகும். பிறர் இன்புறுவது என்பது கற்றறிந்தோர் சொற்பொழிவு மூலம் அறியாத பலவற்றை அறிவதும், தன் வாழ்விற்குத் தேவையான கருத்துக்களை கற்றோர்வழி தெரிந்துகொள்வதும் ஆகும். தம்மால் பிறர் பயனடைவதைக் கண்டு களிப்புற்று, கற்றோர் கல்வியை மேலும் மேலும் கற்க விரும்புவர்.



குறள் 400:

கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.


சொல்லுரை:

கேடில் - கேடு + இல், அழிவில்லாத

விழுச்செல்வம் - சிறந்த செல்வம்

கல்வி - கல்வியாகும்

ஒருவற்கு - ஒருவனுக்கு

மாடு அல்ல - செல்வம் அல்ல

மற்றையவை - மற்றைய செல்வங்கள் எல்லாம்


பொருளுரை:

ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்விச்செல்வமே ஆகும். மற்றைய செல்வங்கள் எல்லாம் செல்வங்கள் ஆகா.


விளக்கவுரை:

முற்காலத்தில் விவசாயமே முதன்மையான தொழிலாகவும், மேன்மையான தொழிலாகவும் கருதப்பட்டதால், வேளாண்மைத் தொழிலில் உழவிற்குத் தேவையான மாடுகளே செல்வமாகக் கருதப்பட்டன. அதனால் செல்வத்தைக் குறிப்பதற்கு மாடு என்றே கூறுகிறார் வள்ளுவர். பொருட்செல்வமானது அழியும் தன்மையுடையன. ஆனால் கல்விச்செல்வமானது அழியாத தன்மையுடையன. ஒருவனுக்கு எல்லாவகை சிறப்பையுந் தருவன. அதனால் கல்வியை “கேடில் விழுச்செல்வம்” என்றார்.

கல்வியின் அழியாத தன்மையை,

“வெள்ளத்தால் போகாது வெந்தழலால் வேகாது வேந்தராலும்
  கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறையொழியக் குறைபடாது
  கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது கல்வியெனும்
  உள்ளத்தே பொருளிருக்க வுலகெல்லாம் பொருள்தேடி யுழல்வதேனோ”

என்றான் ஒரு ஆசுகவி.



uline