401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
       
நூலின்றிக் கோட்டி கொளல்.
402. கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டு
       
மில்லாதாள் பெண்காமுற் றற்று.
403. கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற்
       
சொல்லா திருக்கப் பெறின்.
404. கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங்
       
கொள்ளா ரறிவுடை யார்.
405. கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
       
சொல்லாடச் சோர்வு படும்.
406. உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
       
களரனையர் கல்லா தவர்.
407. நுண்மா ணுழைபுல மில்லா னெழினல
       
மண்மாண் புனைபாவை யற்று.
408. நல்லார்கட் பட்ட வறுமையின் னின்னாதே
       
கல்லார்கட் பட்ட திரு.
409. மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துந்
       
கற்றா ரனைத்திலர் பாடு.
410. விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
       
கற்றாரோ டேனை யவர்.
குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
அரங்கின்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
சொல்லுரை:
அரங்கு இன்றி - சூதாடும் அரங்கம் இல்லாமல்
வட்டுஆடி - சூதாடும் கருவியாகிய உருட்டுக்காயை உருட்டுவது
அற்றே - போன்றது
நிரம்பிய - நிறைந்த
நூலின்றிக் - நூல் அறிவு இல்லாமல்
கோட்டி - அவையில்
கொளல். - தான் ஒன்றைக் கூறத் துணிதல்
பொருளுரை:
நிறைந்த நூல் அறிவு இல்லாமல் அவையில் தான் ஒன்றைக் கூறத் துணிதல், சூதாடும் அரங்கம் இல்லாமல் சூதாடும் கருவியாகிய உருட்டுக்காயை உருட்டுவதைப் போன்றது.
விளக்கவுரை:
அரங்கம் என்பது இங்கு கோடுகளால் வரையப்பட்ட சூதாடும் கட்டத்தைக் குறிப்பது. சூதாடும் கட்டமின்றி சொக்கட்டானை உருட்டினால் அது விளையாட்டாகாது. காயை நகர்த்தவும், முன்னேறிச் செல்லவும், வெற்றி தோல்வி நிர்ணயிக்கவும் கோடுகளால் வரையப்பட்ட அரங்கம் அவசியம். அரங்கமின்றி ஆடும் ஆட்டம் மகிழ்ச்சி அளிக்காது. அதுபோல, கற்றோர் அவையிலே பேசுவதற்கு நிரம்பிய நூல் அறிவு இருக்கவேண்டும். அரங்கம் நிரம்பிய நூல் அறிவிற்கும், காய் உருட்டுதல் பேசுவதற்கும் உவமையாகக் கூறப்பட்டது. ஆட்டத்தின் மகிழ்ச்சி அரங்கத்தில் காய் நகர்த்தப்படுவதற்கு ஏற்ப அமைவதுபோல, கற்றோர் அவையில் ஒருவன் பேசும் திறம், அவனுடைய நிரம்பிய நூல் அறிவினால் அமையும்.
குறள் 402:
கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டு
மில்லாதாள் பெண்காமுற் றற்று.
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற்று அற்று.
சொல்லுரை:
கல்லாதான் - கல்வி பயிலாத ஒருவன்
சொல் - கற்றார் அவையிலே ஒன்றைச் சொல்ல
காமுறுதல் - விரும்புதல்
முலையிரண்டும் - முலை இரண்டும்
இல்லாதாள் - இல்லாத ஒருத்தி
பெண்காமுற்று - பெண் தன்மையை விரும்பியது
அற்று - போன்றதாகும்.
பொருளுரை:
கல்வி பயிலாத ஒருவன், கற்றார் அவையிலே ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாத ஒருத்தி பெண் தன்மையை விரும்பியது போன்றதாகும்.
விளக்கவுரை:
முலைகள் இரண்டும் இல்லாத பெண்ணுருவில் இருக்கும் பேடி, உடல் வளர்ச்சி குன்றியவள் ஆகையால், காம நலம் துய்த்தல் இயலாதது. அதுபோல, கல்வி பயிலாதவன் அறிவு வளர்ச்சி பெறுவதில்லை. அவன், தன் பேச்சில் அறிவினால் உண்டாகும் இன்பத்தை அடைதல் என்பது இயலாதது.
குறள் 403:
கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற்
சொல்லா திருக்கப் பெறின்.
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.
சொல்லுரை:
கல்லாதவரும் - கல்வி பயிலாதவரும்
நனிநல்லர் - மிகவும் நல்லவர் ஆவர்
கற்றார்முன் - கற்றவர் கூடியிருக்கும் அவையில் அவர்கள் முன்னே
சொல்லாது - யாதொன்றும் சொல்லாமல்
இருக்கப் பெறின் - அமைதியாக இருப்பார்கள் ஆயின்.
பொருளுரை:
கற்றவர் கூடியிருக்கும் அவையில், அவர்கள் முன்னே யாதொன்றும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்கள் ஆயின் கல்வி பயிலாதவரும் மிகவும் நல்லவர் ஆவர்.
விளக்கவுரை:
கற்றவர் அவையிலே பேசும் ஆவலுடன் கல்வி பயிலாதவன் பேசினால், அவனுடைய அறியாமைதான் வெளிப்படும். அதைவிட, பேசாமல் அமைதி காத்து கற்றவர் பேசும் பேச்சுக்களை கேட்பானாகில் அது அவனுடைய அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும். அறிஞர்களின் உரைகேட்டு இன்புறுவதோடு அறிவு விருத்தியும் பெறுவதால் கல்லாதவரையும் ‘நனிநல்லர்’ என்றார்,
குறள் 404:
கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்.
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
சொல்லுரை:
கல்லாதான் - கல்வி பயிலாதவன்
ஒட்பம் - அறிவு
கழிய - மிகவும்
நன்றாயினும் - நன்றாக இருந்தாலும்
கொள்ளார் - ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
அறிவுடையார் - அறிவுடையவர்கள்
பொருளுரை:
கல்வி பயிலாதவன் அறிவு ஏதோ ஒருவேளை மிகவும் நன்றாக இருந்தாலும், அதனால் மட்டுமே கல்வி பயிலாதவனை கற்றவன் என்று ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் அறிவுடையவர்கள்.
விளக்கவுரை:
ஒட்பம் என்பது அறிவு ஒளியைக் குறிப்பது. கல்வி பயிலாதவர்கள் ஏதோ ஒருசமயம் ஏதாவது ஒரு பொருளைப்பற்றி மிகவும் நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள். அந்த ஒரு அறிவு நுட்பத்தை வைத்தே, கல்வி பயிலாதவனை கற்றவன் என்று அறிவுடையோர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நிரம்பிய நூல் அறிவு பெறவேண்டும் என்பது கருத்து.
குறள் 405:
கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
சொல்லுரை:
கல்லா - கல்வி பயிலாத
ஒருவன் - ஒருவனுடைய
தகைமை - மதிப்பானது
தலைப்பெய்து - கற்றவன் தலைப்பட்டு
சொல்லாட - வார்த்தையாடினால்
சோர்வு படும் - வீழ்ந்துவிடும்
பொருளுரை:
கல்வி பயிலாத ஒருவனுடைய மதிப்பானது, கற்றவன் தலைப்பட்டு வார்த்தையாடினால் வீழ்ந்துவிடும்.
விளக்கவுரை:
கல்வி பயிலாதவன் தன்னை அறிவுடையவன் என்று காட்டிக்கொள்ளும் மதிப்பும், அதை பொதுமக்கள் உண்மையென்று நம்பி அவனுக்கு அளிக்கும் மதிப்பும், கற்றவன் அவனிடம் பேசும்பொழுது, கல்லாதவனின் அறியாமை வெளிப்பட்டு அவனுடைய மதிப்பும் மரியாதையும் குறையும். ஒருவன் நுண்ணறிவும் தகுதியும் இயல்பாகவே பெற்றவனாயினும், அவற்றை மெருகேற்றவும், நிலைப்பெறவும், சரியான வழியில் பயன்படுத்தவும், பிறருக்கு பயன்படும் வகையில் நடந்துகொள்ளவும் கல்வி அறிவு இன்றியமையாதது.
குறள் 406:
உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.
சொல்லுரை:
உளர்என்னும் - ஏதோ இருக்கிறார் என்னும்
மாத்திரையர் - அளவினர்
அல்லால் - அல்லாமல்
பயவா - விளையாத
களரனையர் - களர் நிலைத்தைப் போன்றவர்
கல்லாதவர் - கல்வி பயிலாதவர்
பொருளுரை:
ஏதோ இருக்கிறார் என்னும் அளவினரே அன்றி, கல்வி பயிலாதவர் விளையாத களர் நிலைத்தைப் போன்றவரே ஆவர்.
விளக்கவுரை:
களர் நிலம் என்பது உயிர்ச்சத்துக்கள் அற்ற நிலமாகும். அந்த நிலத்தில் எவ்வகை தாவரமும் வளர்வதில்லை. விதைப்போட்டலும் முளைப்புத்தன்மை குறைந்து விதையை முளைவிக்காது. கல்லாதவர் மனித உருவில் தோன்றினாலும் மனிதனுக்குரிய தன்மைகளைப் பெற்றிருப்பதில்லை. கல்லாதவனால் அவனுக்கும் பயனில்லை, பிறருக்கும் பயனில்லை. அதனால், ஏதோ இருக்கிறார் என்ற அளவிலேதான் இருப்பர்.
குறள் 407:
நுண்மா ணுழைபுல மில்லா னெழினல
மண்மாண் புனைபாவை யற்று.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.
சொல்லுரை:
நுண்மாண் - நுட்பான அறிவு, சிறப்பான அறிவு
நுழைபுலம் - ஆராய்ந்து காணும் அறிவு
இல்லான் - இல்லாதவனுடைய
எழில்நலம் - எழுச்சியும் அழகும்
மண்மாண் - பச்சை மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்டு
புனைபாவை - அலங்கரிக்கப்பட்ட பதுமையை
அற்று - போன்றது.
பொருளுரை:
நுட்பமான அறிவு, சிறப்பான அறிவு மற்றும் ஆராய்ந்து காணும் அறிவு ஆகியவை இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும், சுதைச் சிற்பமாகிய பச்சை மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பதுமையைப் போன்றது.
விளக்கவுரை:
நுட்பமான அறிவு என்பது ஆழமான அறிவின் தன்மையைக் குறிப்பது. சிறப்பான அறிவு என்பது அறிவின் அகன்ற தன்மையைக் குறிப்பது. பல நூல்களை ஆராய்ந்து கற்று அதனைப் பிறருக்கும் பயன்படும் வகையில் எடுத்துரைக்கும் பண்பாளனாய் இருத்தலே அழகாகும். அவ்வாறின்றி கண்களால் காண்பதற்கு மட்டுமே அழகுடையவனாக இருத்தல், அலங்கரிக்கப்பட்ட பதுமைக்கு ஒப்பானது. பதுமைக்கு உயிரில்லையாதலால் அந்த அழகினால் பயனில்லை என்பதுபோல, கல்வி பயிலாதவன் அழகினாலும் பயனில்லை என்பதாம்.
குறள் 408:
நல்லார்கட் பட்ட வறுமையின் னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு.
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
சொல்லுரை:
நல்லார்கண் - கற்றுத் தெளிந்த நல்லவர்களிடம்
பட்ட - சேர்ந்த
வறுமையின் - வறுமையைவிட
இன்னாதே - கொடியது
கல்லார்கண் - கல்வி பயிலாதவரிடம்
பட்ட - சேர்ந்த
திரு - செல்வம்
பொருளுரை:
கல்வி பயிலாதவரிடம் சேர்ந்த செல்வமானது, கற்றுத் தெளிந்த நல்லவர்களிடம் சேர்ந்த வறுமையைவிடக் கொடியது.
விளக்கவுரை:
கற்றுத் தெளிந்து அறவழியில் வாழ்வோரை நல்லார் என்று குறிப்பிடுகின்றார். விதிவயத்தால் அத்தகைய நல்லோர் வறுமையில் வாடுவது துன்பமான நிகழ்வு. ஆனால், அதைவிட துன்பமானது கல்வி பயிலாதவரிடம் சேரும் செல்வமாகும். ஏனெனில், கல்லாதவனிடம் சேரும் செல்வத்தால் அவனுக்கும் கேடு, பிறருக்கும் கேடு என்பதனால். கல்லாதவன் பொருட்செல்வத்தின் தன்மையை உணர்ந்து அதை ஆளத் தெரியாத காரணத்தினால் உண்டாகும் விளைவு இது.
குறள் 409:
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துந்
கற்றா ரனைத்திலர் பாடு.
மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
சொல்லுரை:
மேற்பிறந்தார் - உயர்ந்த குடியில் பிறந்தவர்
ஆயினும் - ஆயினும்
கல்லாதார் - கல்வி பயிலாதவர்
கீழ்ப்பிறந்தும் - தாழ்ந்த குடியில் பிறந்தும்
கற்றார் - கல்வி பயின்றவர்
அனைத்திலர் - அளவுக்கு இல்லை
பாடு - பெருமை
பொருளுரை:
உயர்ந்த குடியில் பிறந்தவர் ஆயினும் கல்வி பயிலாதவராயின், தாழ்ந்த குடியில் பிறந்தும் கல்வி பயின்றவரின் அளவுக்கு இல்லை அவர்களுடைய பெருமை.
விளக்கவுரை:
மேற்பிறந்தார் என்று இங்கு குறிப்பது சாதியாலும் செல்வத்தாலும் ஒருவன் மேலான குடியில் பிறப்பதை. சாதியும் செல்வமும் மட்டுமே ஒருவனுக்கு பெருமையைத் தந்துவிடாது. அவன் கல்வி கற்றவனாக இருந்தால் மட்டுமே அவனுக்கு பெருமை சேரும். சாதியிலும் செல்வத்திலும் கீழான குடியில் பிறந்திருந்தாலும் அவன் கல்வி கற்றவனாக இருந்தானாகில் அவனுடைய பெருமை உயர்ந்து நிற்கும். “ எக்குடி பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்”
குறள் 410:
விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
சொல்லுரை:
விலங்கொடு - விலங்குகளோடு
மக்கள் - மக்களை ஒப்பிடும்போது தோன்றும் வேறுபாட்டினை
அனையர் - போன்றவர்
இலங்குநூல் - அறிவு விளங்குகின்ற நூல்களை
கற்றாரோடு - கற்றவர்களோடு
ஏனையவர் - கல்லாத மற்றவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு
பொருளுரை:
விலங்குகளோடு மக்களை ஒப்பிடும்போது தோன்றும் வேறுபாட்டினைப் போன்றது, அறிவு விளங்குகின்ற நூல்களைக் கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு
விளக்கவுரை:
மக்களுக்கு கல்வி அறிவின் மூலம் தன்னைப் பண்படுத்திக்கொள்ளும் சூழல் உள்ளது. இது மொழியின் மூலமும், மொழிவழி எண்ணின் மூலமும் எழுத்தின் மூலமும் மக்களுக்கு அமைந்துள்ளது. ஆனால், விலங்குகளுக்கு அத்தகைய சூழல் இல்லை. கல்வி பயிலாதவன் மனித உருவில் இருந்தாலும் விலங்குகளின் தன்மையிலேயே இருக்கிறான். அதனால் கற்றவனுக்கும் கல்லாதவனுக்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள வேறுபாட்டினை ஒத்து உள்ளது.