அரசியல்

42.கேள்வி

( கற்றவரிடம் கேட்டறிதல் )

411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
        செல்வத்து ளெல்லாந் தலை.

412. செவிக்குண வில்லாத போழ்து சிறிது
        வயிற்றுக்கு மீயப் படும்.

413. செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி
        னான்றாரோ டொப்பர் நிலத்து.

414. கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
        கொற்கத்தி னூற்றாந் துணை.

415. இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
        யொழுக்க முடையார்வாய்ச் சொல்.

416. எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு
        மான்ற பெருமை தரும்.

417. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
        தீண்டிய கேள்வி யவர்.

418. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற்
        றோட்கப் படாத செவி.

419. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
        வாயின ராத லரிது.

420. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க
        ளவியினும் வாழினு மென்.



குறள் 411:

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.


சொல்லுரை:

செல்வத்துள் - செல்வங்களுள்

செல்வம் - சிறந்த செல்வமாகக் கருதப்படுவது

செவிச்செல்வம் - காதால் கேட்கப்படும் கேள்விச் செல்வமாகும்

அச்செல்வம் - அச்செல்வமானது

செல்வத்துள் - செல்வங்களுள்

எல்லாம் - எல்லாம்

தலை - தலைசிறந்த செல்வமாகும்


பொருளுரை:

செல்வங்களுள் சிறந்த செல்வமாகக் கருதப்படுவது காதால் கேட்கப்படும் கேள்விச் செல்வமாகும். அச்செல்வமானது செல்வங்களுள் எல்லாம் தலைசிறந்த செல்வமாகும்.


விளக்கவுரை:

செவி வழியே கேட்டு ஒன்றனைப் பற்றி அறிந்துகொள்ளும் அறிவே கேள்வி அறிவு என்றும் கேள்வி ஞானம் என்றும் கூறப்படுகிறது. ஒருவனுக்கு கற்கும் வாய்ப்பில்லாமல் போனாலும் கேள்வி ஞானத்தால் தன் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். கற்றவருக்குக்கூட எல்லா நூல்களையும் கற்பது என்பது கடினம். ஆதலால், கற்றுத் தெளிந்து தேர்ச்சியுற்ற பிறர் எடுத்துக்கூறும்பொழுது அதைக் கேட்டு தன் அறிவை வளர்த்துக்கொள்வது சிறப்பு. கற்பது மட்டுமின்றி, தெளிந்த அறிவு பெற கேள்வி அறிவும் உதவும். இலக்கியம், ஆன்மீகம் முதலியவற்றை பிறர் எடுத்துக்கூற, அதைக் கேட்பது காதில் தேனூற்றியதுபோல பேரின்பம். அதனால், கேள்வி அறிவினால் வருவதாகிய செவிச்செல்வம் எல்லா செல்வங்களிலும் சிறந்த செல்வமாகக் கருதப்படுகிறது. அதுவே தலையாய செல்வமாகவும் விளங்குகிறது.



குறள் 412:

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும்.

செவிக்கு உணவில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.


சொல்லுரை:

செவிக்கு - செவிக்கு

உணவில்லாத - உணவாகிய கேள்வி அறிவு கிடைக்காத

போழ்து - சமயத்தில்

சிறிது - கொஞ்சம்

வயிற்றுக்கும் - வயிற்றுக்கும்

ஈயப்படும் - உணவு தரப்படும்


பொருளுரை:

செவிக்கு உணவாகிய கேள்வி அறிவு கிடைக்காத சமயத்தில் கொஞ்சம் வயிற்றுக்கும் உணவு தரப்படும்.


விளக்கவுரை:

கேள்வி அறிவு ஒருவனுடைய அறிவை வளர்க்கும் செயலை மட்டும் புரிவதில்லை. அவனுக்கு ஆன்ம இன்பத்தையும் தரவல்லது. இலக்கியச் செறிவு மிகுந்த சொற்பொழிவுகளையும் ஆன்மீக சொற்பொழிவுகளையும், ஒரு பொருளைப் பற்றிய நுட்பமான கருத்துக்களையும் ஈடுபாட்டுடன் கேட்போர் பசியையும் மறந்து போவர். உடல் வளர்ச்சி முக்கியமானது என்றாலும் அதைவிட முக்கியமானது உயிர் வளர்ச்சியாகிய அறிவு வளர்ச்சி ஆகும். உடல் வளர்ச்சிக்கு உணவு தேவையானதுபோல உயிர்வளர்ச்சிக்கு அறிவு தேவை. அது கேள்வி அறிவினால் வருதலால் செவிக்குணவு என்றார். அறிவு வளர்ச்சியின்றி உடல்வளர்ச்சி பொருந்தா வளர்ச்சி என்பதனால் ‘சிறிது வயிற்றிக்கும் ஈயப்படும்’ என்றார்.



குறள் 413:

செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி
னான்றாரோ டொப்பர் நிலத்து.

செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.


சொல்லுரை:

செவியுணவிற் - செவிக்கு உணவாகிய

கேள்வி - கேள்வியை

உடையார் - உடையவர்

அவியுணவின் - யாகத்தில் கொடுக்கப்படும் அவி உணவைப் பெறும்

ஆன்றாரோடு - தேவரோடு

ஒப்பர் - ஒப்பாவர்

நிலத்து - இந்தப் பூவுலகில்


பொருளுரை:

செவிக்கு உணவாகிய கேள்வியை உடையவர், இந்தப் பூவுலகில் வாழ்கின்றவர் ஆயினும், யாகத்தில் கொடுக்கப்படும் அவி உணவைப் பெறும் தேவரோடு ஒப்பாவர்.


விளக்கவுரை:

செவிக்கு உணவாகும் கேள்வி அறிவினை உடையவர் என்பது கேள்வி அறிவின்மூலம் தன்னுடைய ஞானத்தைப் பெருக்கிக்கொண்டவரைக் குறிப்பது. அவ்வாறானவர் அறிவிற் சிறந்த தேவர்களோடு ஒப்புமைப்படுத்தி போற்றாப்படுகின்றார். செவியுணவாகிய கேள்வி ஞானத்தில் சிறந்தோர் உயர்ந்தோராக போற்றப்படுதற்கு, யாகத்தில் கொடுக்கப்படும் உயர்ந்த உணவாகிய அவியுணவு பெறும் அறிவிற் சிறந்த தேவர்கள் ஒப்புமைப்படுத்தப்பட்டனர்.



குறள் 414:

கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
கொற்கத்தி னூற்றாந் துணை.

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.


சொல்லுரை:

கற்றிலன் - ஒருவன் கற்கவில்லை

ஆயினும் - ஆயினும்

கேட்க - கற்றோர் கூறும் சொற்களைக் கேட்கவேண்டும்

அஃது - அக்கேள்வி அறிவானது

ஒருவற்கு - ஒருவனுக்கு

ஒற்கத்தின் - சோர்வு உண்டாகும்போது

ஊற்றாம் - பற்றுக்கோடான

துணை - துணையாக அமையும்


பொருளுரை:

ஒருவன் அறநூல்களையும் பொருள்நூல்களையும் கற்கவில்லை என்றாலும், கற்றோர் கூறும் சொற்களைக் கேட்கவேண்டும். அக்கேள்வி அறிவானது ஒருவனுக்கு சோர்வு உண்டாகும்போது பற்றுக்கோடான துணையாக அமையும்


விளக்கவுரை:

ஒருவன் அறநூல்களையும், பொருள்நூல்களையும் கற்றுத் தெளியவில்லை என்றாலும், அவைகளை கற்றுத் தெளிந்தோர் எடுத்துக்கூறும் மேலான கருத்துக்களை கேட்கவேண்டும். கற்றிலன் என்று இங்கே குறிப்பிட்டது ஒருவன் கற்கும் திறன் இருந்தும் கற்கவேண்டிய நூல்களை சில காரணத்தால் கற்கமுடியாமல் போயிருந்தாலும் என்பதைக் குறிப்பது. அவ்வாறான நூல்களை கற்றுத் தெளிவது மிக சிறப்பு என்பது கருத்து. எதுவுமே தெரிந்துகொள்ளாமல் இருப்பதைவிட, கேள்வி அறிவின்மூலம் முடியும் அளவிற்கு அறிந்து வைத்திருப்பது ஒருவனுக்கு வாழ்வில் தளர்வு உண்டாகும் காலத்தில் துணையாக அமையும்.



குறள் 415:

இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
யொழுக்க முடையார்வாய்ச் சொல்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.


சொல்லுரை:

இழுக்கல் - வழுக்கும் தன்மை

உடைஉழி - உடைய சேற்று நிலத்தில்

ஊற்றுக்கோல் - உதவும் ஊன்றுகோல்

அற்றே - போன்றது

ஒழுக்கம் - நல்லொழுக்கம்

உடையார் - உடையவரின்

வாய்ச்சொல் - வாய்ச்சொற்கள்


பொருளுரை:

நல்லொழுக்கம் உடையவரின் வாய்ச்சொற்களை கேட்டு ஒருவன் நடந்துகொள்வானாகில், வழுக்கும் தன்மை உடைய சேற்று நிலத்தில் உதவும் ஊன்றுகோல் போல, அது உதவும்.


விளக்கவுரை:

ஒருவன் கற்பதோடு மட்டுமின்றி ஒழுக்கத்தைக் கடைபிடித்து வாழ்வதனால் வரும் அனுபவ அறிவு இன்றியமையாதது. அவ்வாறு வாழ்வோர் எடுத்துக் கூறும் அறிவுரைகள் அத்தனையும் பொன்மொழிகளாம். சொல்லியவண்ணமே நடக்கும் சிறப்பு அவர்களின் சொற்களுக்கு உண்டு. அத்தகையோரின் சொற்களே, ஒருவருக்கு தன் வாழ்வில் வழுக்கும் காலத்தில் ஊன்று கோலாக இருந்து காப்பாற்றும். ஆதலால், நல்லொழுக்கம் உடையோரின் வாய்ச் சொற்களை கேட்டு நடப்பது சிறப்பு.



குறள் 416:

எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு
மான்ற பெருமை தரும்.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.


சொல்லுரை:

எனைத்தானும் - எவ்வளவு சிறிது ஆயினும்

நல்லவை - நன்மை பயக்கும் சொற்களையே

கேட்க - கேட்கவேண்டும்

அனைத்தானும் - அந்த அளவிலும் அவ்வறிவு

ஆன்ற - நிறைந்த

பெருமை - பெருமையை

தரும் - தரும்


பொருளுரை:

எவ்வளவு சிறிது ஆயினும் நன்மை பயக்கும் சொற்களையே கேட்கவேண்டும். அந்த அளவிலும், அவ்வாறு பெறப்பட்ட கேள்வி அறிவானது நிறைந்த பெருமையைத் தரும்.


விளக்கவுரை:

கேட்பது சிறியனவாயினும் அது நல்லனவாய் இருக்குமானால் அவை பெரும்பயன் விளைவிக்கும் என்பதனால் அவைகளை சிறியவை என்று இகழ்ந்து ஒதுக்கலாகாது என்பது கருத்து. நல்லவை சிறிதளவு கேட்பினும், மழைத்துளிகள் போல சேர்ந்து பெரும்பயனை விளைவிக்கும் தன்மை உடையது.



குறள் 417:

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துஉணர்ந்து
ஈண்டிய கேள்வி அவர்.


சொல்லுரை:

பிழைத்துஉணர்ந்தும் - ஒன்றை தவறாக உணர்ந்துகொண்டாலும்

பேதைமை - அறிவற்ற மொழிகளை

சொல்லார் - பேசமாட்டார்கள்

இழைத்துஉணர்ந்து - ஆராய்ந்து அறிந்து

ஈண்டிய - மேலும் நிறைந்த

கேள்வி அவர் - கேள்விச்செல்வத்தை உடையவர்.


பொருளுரை:

ஆராய்ந்து அறிந்து மேன்மேலும் நிறைந்த கேள்விச்செல்வத்தை உடையவர்கள், ஒன்றைத் தவறாக உணர்ந்துகொண்டாலும் அறிவற்ற மொழிகளைப் பேசமாட்டார்கள்.


விளக்கவுரை:

கேள்வி அறிவுடையோர் பொருட்களை நுண்ணியதாக ஆராய்ந்து அறியும் தன்மையுடையோர் ஆவர். கேட்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் , அதனை மேலும் நுட்பமாக ஆராய்ந்து அறிவர். அத்தகைய கேள்வி அறிவுடையோர் ஒரு பொருளைப்பற்றி பிழையாக உணர்ந்தார் ஆயினும் , மயக்கத்தினால் அப்பொருளைப்பற்றி பேதைமையான சொற்களைக் கூறமாட்டார்கள். ஈண்டுதல் என்பது பலவழியாலும் வந்து நிறைதல் .



குறள் 418:

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற்
றோட்கப் படாத செவி.

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.


சொல்லுரை:

கேட்பினும் - கேட்கும் தன்மையைப் பெற்றிருந்தாலும்

கேளாத்தகையவே - கேளாத செவிட்டுக் காதுகளுக்கு ஒத்தவையே

கேள்வியால் - கேள்விச் செல்வத்தால்

தோட்கப்படாத - துளைக்கப்படாத

செவி - காதுகள்


பொருளுரை:

கேள்விச் செல்வத்தால் துளைக்கப்படாத காதுகள், கேட்கும் தன்மையைப் பெற்றிருந்தாலும் கேளாத செவிட்டுக் காதுகளுக்கு ஒத்தவையே.


விளக்கவுரை:

செவியானது தனது புலனறிவாகிய ஓசையைக் கேட்கும் தன்மையைப் பெற்றிருந்தாலும், ஓசையின் உண்மைப்பொருளை கேட்கும் தன்மையைப் பெறவில்லை என்றால் அதனால் பயனில்லை. செவிகள் மெய்ப்பொருள் அறியும் கேள்விச்செல்வத்தால் துளைக்கப்படவேண்டும்,. அதுவே செவிச்செல்வமாகும் .



குறள் 419:

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.


சொல்லுரை:

நுணங்கிய - நுட்பமான

கேள்வியர் - கேள்வி அறிவினை உடையவர்

அல்லார் - இல்லாதவர்

வணங்கிய - வணக்கத்துடன் கூடிய

வாயினர் - சொற்களை உடையவர்

ஆதல் - ஆதல்

அரிது - இயலாதது


பொருளுரை:

நுட்பமான கேள்வி அறிவினை உடையவர் இல்லையாயின், வணக்கத்துடன் கூடிய சொற்களை உடையவர் ஆதல் இயலாதது.


விளக்கவுரை:

கேள்வி நுட்பம் உடையவரே பணிவான சொற்களை பேசும் தன்மை பெறுவர். கேட்கப்படும் பொருளின் தன்மையை நுண்ணியதாய் ஆராய்ந்து அப்பொருளின் உண்மைத்தன்மையை அறியும் ஆற்றல் பெறும்போது இயற்கையாகவே அவர்களிடம் பணிவும் வந்து சேரும் . ஆதலால், அவர்கள் பேசும் சொற்களும் பண்புடையதாகவும் பணிவுடையதாகவும் இருக்கும்.



குறள் 420:

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க
ளவியினும் வாழினு மென்.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.


சொல்லுரை:

செவியிற் - செவியால் அறியப்படும்

சுவையுணரா - சுவையை உணர முடியாமல்

வாயுணர்வின் - வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையை மட்டும் உணரும்

மாக்கள் - மக்கள்

அவியினும் - இறந்தாலும்

வாழினும் - வாழ்ந்தாலும்

என் - என்ன ?


பொருளுரை:

செவியால் அறியப்படும் சுவையை உணர முடியாமல் வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையை மட்டும் உணரும் மக்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும், அவர்களால் உலகிற்கு எவ்விதப் பயனும் இல்லை.


விளக்கவுரை:

செவியால் நுகரப்படும் சுவைகள் யாதெனில், சொற்சுவையும் பொருட்சுவையும் ஆகும். சொற்சுவை குணம், அலங்காரம் என இரு வகைப்படும். பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என்று ஒன்பது வகைப்படும். வாயுணர்வு என்பது வாயால் நுகரப்படும் அறுசுவை உணர்வுகளைக் குறிக்கும். அவை உவர்ப்பு, துவர்ப்பு, இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு ஆகியனவாகும். இவ்வுலகில், கேள்வியறிவு பெறாமல், உணவு உண்டு உடலை மட்டும் வளர்க்கும் மானிடரால் அவர்களுக்கும் இவ்வுலகுக்கும் எப்பயனும் இல்லை என்பதாம். ஆதலால், இவ்வுலகில் அவர்கள் வாழ்வதும் சாவதும் ஒன்றுதான் எனக் கூறப்பட்டது.



uline