அரசியல்

43. அறிவுடைமை

( அறிவு உடையவர் ஆதல் )

421. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு
        முள்ளழிக்க லாகா வரண்.

422. சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
        நன்றின்பா லுய்ப்ப தறிவு.

423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
        மெய்ப்பொருள் காண்ப தறிவு.

424. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
        நுண்பொருள் காண்ப தறிவு.

425. உலகம் தழீஇய தொட்ப மலர்தலுங்
        கூம்பலு மில்ல தறிவு.

426. எவ்வ துறைவ துலக முலகத்தோ
        டவ்வ துறைவ தறிவு.

427. அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
        ரஃதறி கல்லா தவர்.

428. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
        தஞ்ச லறிவார் தொழில்.

429. எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
        யதிர வருவதோர் நோய்.

430. அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
        ரென்னுடைய ரேனு மிலர்.



குறள் 421:

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு
முள்ளழிக்க லாகா வரண்.

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண்.


சொல்லுரை:

அறிவு -அறிவு என்பது

அற்றம் -அழிவிலிருந்து

காக்கும் -காப்பாற்றும்

கருவி -ஆயுதம் ஆகும்

செறுவார்க்கும் -பகைவர்களாலும்

உள் - உள்ளிருந்து

அழிக்கல் -அழித்தல்

ஆகா -இயலாத

அரண் -பாதுகாக்கும் அரண் ஆகும்


பொருளுரை:

அறிவு என்பது அழிவிலிருந்து காப்பாற்றும் ஆயுதம் ஆகும். பகைவர்களாலும் அழித்தல் இயலாத உள்ளிருந்து பாதுகாக்கும் அரண் ஆகும்.


விளக்கவுரை:

அறிவு என்பது அழிக்கமுடியாத உள்அரண் எனப்பட்டது. அறிவு என்பது புறத்தே இருக்கும் பொருளல்ல . ஒருவனின் அகத்தே இருந்து, பகைவர்களால் அழிவு நேரிடும்போது, தக்க வழியினை மனதிலே தோற்றுவித்து, அழிவிலிருந்துக் காப்பாற்றுவதே அறிவு. புறத்தே இருக்கும் அரணைப் பகைவர் அழிக்க வாய்ப்புண்டு. ஆனால், அகத்தே இருந்து ஒருவனைக் காப்பாற்றும் அறிவினை எந்தப் பகைவரால் அழிக்கமுடியாது.



குறள் 422:

சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.


சொல்லுரை:

சென்ற -மனம் செல்லும்

இடத்தால் -இடத்திலெல்லாம்

செலவிடா -செல்லவிடாமல்

தீதுஒரீஇ -தீமையிலிருந்து நீக்கி

நன்றின்பால் -நல்லவையின் இடத்து

உய்ப்பது -செலுத்துவது

அறிவு -அறிவாகும்


பொருளுரை:

மனம்செல்லும் இடத்திலெல்லாம் செல்லவிடாமல், தீமையிலிருந்து நீக்கி, நல்லவையின் இடத்து செலுத்துவது அறிவாகும்.


விளக்கவுரை:

மனம் ஐம்புலங்களின் வழி செல்லுமிடமெல்லாம் செல்லாமல் சரியான புலன்வழி செல்லுமாறு பணிப்பது அறிவாகும். ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஓசை என்னும் ஐம்புலன்களும் கண்டவழி திரியாமல், செல்லவேண்டிய புலன்மட்டும் சரியானவழியில் செல்வது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன்போல, மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார் வள்ளுவர்.



குறள் 423:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.


சொல்லுரை:

எப்பொருள் -எந்தப் பொருளையும்

யார்யார்வாய்க் -யார்யார் சொல்ல

கேட்பினும் -கேட்டாலும்

அப்பொருள் - அந்தப் பொருளின்

மெய்ப்பொருள் -உண்மைத் தன்மையை

காண்பது -ஆராய்ந்து காண்பதே

அறிவு -அறிவாகும்


பொருளுரை:

எந்தப் பொருளையும் யார்யார் சொல்லக் கேட்டாலும், அந்தப் பொருளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து காண்பதே சிறந்த அறிவாகும்.


விளக்கவுரை:

மூவகைக் குணங்களும் ஒருவருக்கு மாறிமாறி வருதல் உண்மையாதலால், உயர்ந்த பொருள்இழிந்தார் வாயினும், இழிந்தபொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப் பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார் வாயினும் கேட்கப்பட நேர்வது இயல்பு. ஆதலால், 'யார்யார்வாய்க்கேட்பினும் ' என்றார் .எதனையும் ,யார்கூறினாலும் , எவரிடமிருந்து கேட்க நேர்ந்தாலும், கூறியவர் கூறக்கேட்டவர் யார் என்று எண்ணாமல் , கூறப்பட்ட பொருளின் உண்மையும் பயனும் கண்டு உணர்த்தவல்லதே அறிவு ஆகும்.



குறள் 424:

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

எண்பொருள் ஆகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.


சொல்லுரை:

எண்பொருள் -எளிதில் பொருள்

ஆக -விளங்கும்படி ஆக

செலச்சொல்லித் -பிறர்மனதில் பதியும்படி சொல்லி

தான்பிறர்வாய் -தான் பிறர்வாயிலிருந்து வரும்

நுண்பொருள் -நுட்பமான பொருளையும்

காண்பது -கண்டறிவதே

அறிவு -அறிவாகும்


பொருளுரை:

எளிதில் பொருள் விளங்கும்படி ஆக, பிறர்மனதில் பதியும்படி சொல்லி, தான் பிறர்வாயிலிருந்து வரும் நுட்பமான பொருளையும் கண்டறிவதே அறிவாகும்.


விளக்கவுரை:

ஒருவன்தான் சொல்ல முனைவது அரிய பொருளாயினும் ,கேட்போர்க்கு எளிமையாக புரியும் வகையில் சொல்லுதலும், பிறர்கூறும் சொற்கள் நுண்ணியதாய் பொருள்காண அரியதாக இருந்தாலும் அதனையும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வல்லமை உடையதுமே அறிவு ஆகும். எளிமையாகச் சொல்லுதலும் ,நுட்பமாகப் புரிந்து கொள்ளுதலும் அறிவு எனப்பட்டது .



குறள் 425:

உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.


சொல்லுரை:

உலகம் - உலகத்திலுள்ள உயர்ந்தோரை

தழீஇயது - உள்ளடக்கிக்கொள்வது, நட்பாக்கிக்கொள்வது

ஒட்பம் -அறிவுடைமை

மலர்தலும் -முகம் மலர்தலும்

கூம்பலும் -பின்னர்க் குவிதலும்

இல்லது -இல்லாமையே

அறிவு -அறிவுடைமை


பொருளுரை:

உலகத்திலுள்ள உயர்ந்தோரை நட்பாக்கிக்கொள்வது அறிவுடைமை ஆகும். முகம் மலர்தலும், பின்னர்க் குவிதலும்இல்லாமையே அறிவுடைமை ஆகும்.


விளக்கவுரை:

உலகத்தையே நட்பாக்கிக் கொள்ள வல்லது அறிவுடைமை ஆகும். நட்பு கொண்டோரிடத்தில், அவர்களின்முன் இருக்கும்போது மட்டும் முகம் மலர்ந்து, பின்னர் வேறுபட்டு இருப்பது என்று இல்லாமல். அனைத்துக் காலங்களிலும் ஒரே நிலையுடன் இருப்பதே அந்த நட்பினை நிலையாகத் தொடர்வதற்கு வலு சேர்க்கும். அதையே ‘மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு’ என்றார்.



குறள் 426:

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.


சொல்லுரை:

எவ்வது -எவ்விதத்தில்

உறைவது -நடக்கிறதோ

உலகம் -உலகம்

உலகத்தோடு -உலகத்தோடு

அவ்வது -அவ்விதத்திலேயே

உறைவது -தானும் நடப்பது

அறிவு -அறிவாகும்


பொருளுரை:

உலகம் எவ்விதத்தில் நடக்கின்றதோ, அவ்விதத்திலேயே தானும் நடந்துகொள்வதே அறிவாம்.


விளக்கவுரை:

உலகம் என்பது உலகத்திலுள்ள கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கங்களில் உயர்ந்தோரைக் குறிக்கும். இதையே ‘ உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு’ என்பர். ஆதலால் உலகத்திலுள்ள சான்றோர் எவ்விதத்தில் நடந்துகொள்கின்றனரோ, அவ்விததிலேயே தானும் நடந்துகொள்வதே சிறந்த அறிவு ஆகும்.



குறள் 427:

அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர்.

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.


சொல்லுரை:

அறிவுடையார் - அறிவுடையவர்

ஆவது -வரப்போவதை

அறிவார் - அறியும் தன்மை உடையவர்

அறிவிலார் -அறிவற்றவர்

அஃது -அதனை

அறிகல்லாதவர் -முன்கூட்டியே அறியும் தன்மை இல்லாதவர் ஆவர்


பொருளுரை:

அறிவுடையவர் வரப்போவதை அறியும் தன்மை உடையவர் ஆவர். அறிவற்றவர் அதனை முன்கூட்டியே அறியும் தன்மை இல்லாதவர் ஆவர்.


விளக்கவுரை:

இங்கு அறிவுடைமை என்பது பின்னர் வரக்கூடியதை முன்னமேயே அறிந்து காத்துக்கொள்ளும் தன்மையை குறிக்கிறது. அவ்வாறான தன்மையுடையோரே அறிவுடையார் என்று போற்றப்படுவர். அதனை அறியாத தன்மை உடையோர் அறிவிலார் எனப்படுவர்.



குறள் 428:

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.


சொல்லுரை:

அஞ்சுவது -அஞ்சப்படவேண்டிய தீமைக்கு

அஞ்சாமை -அஞ்சாது இருப்பது

பேதைமை -அறிவற்ற தன்மையாகும்

அஞ்சுவது -அஞ்சப்படவேண்டிய தீமைக்கு

அஞ்சல் -அஞ்சுதல்

அறிவார் -அறிவுள்ளவர்களின்

தொழில் -செயலாகும்


பொருளுரை:

அஞ்சப்படவேண்டிய தீமைக்கு அஞ்சாது இருப்பது அறிவற்ற தன்மையாகும். அஞ்சப்படவேண்டிய தீமைக்கு அஞ்சி நடத்தல் அறிவுள்ளவர்களின் செயலாகும்.


விளக்கவுரை:

ஒருவன் அஞ்சவேண்டியது பழி, பாவம் முதலியனவற்றை உண்டாக்கும் தீய செயல்களுக்கு ஆகும். அஞ்சாமை இறைமாட்சியாக சொல்லப்பட்டதனால், அஞ்சவேண்டியவை எவை என்று தெளிந்து அவற்றிற்கு மட்டும் அஞ்சுதல் வேண்டும் எனக் கூறப்பட்டது.



குறள் 429:

எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.


சொல்லுரை:

எதிரதாக் -எதிர்வரும் துன்பத்தை முன்பே அறிந்து

காக்கும் -காக்கவல்ல

அறிவினார்க்கு -அறிவுடையோர்க்கு

இல்லை -இல்லை

அதிர -அவர் நடுங்கும்படி

வருவதோர் -வரும் ஒரு

நோய் -துன்பம்


பொருளுரை:

எதிர்வரும் துன்பத்தை முன்பே அறிந்து அதனிடமிருந்து தன்னை காத்துக் கொள்ளக்கூடிய அறிவுடையோர்க்கு, அவர் நடுங்கும்படி வரும் துன்பம் ஒன்றும் இல்லை.


விளக்கவுரை:

அறிவுடையோர் எதிர்காலத்தில் வரும் துன்பத்தை முன்னமேயே அறியும் தன்மை பெற்றவர் ஆவர். அது கொடிய துன்பமாயினும், அத்துன்பத்தை முன்னரே தடுக்கமுடியாமல் போனாலும், அத்துன்பம் ஏற்படுத்தும் விளைவினை முன்னரே அறிந்தபடியினால், நடுங்க வரும் துன்பம் எதுவுமில்லை என்பதாம்.



குறள் 430:

அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடையர் ஏனும் இலர்.


சொல்லுரை:

அறிவுடையார் -அறிவு உடையவர்

எல்லாம் -எல்லாச் செல்வங்களையும்

உடையார் -உடையவர் ஆவர்

அறிவிலார் -அறிவு இல்லாதவர்

என்னுடையர் -எவ்வளவு செல்வங்களை உடையவராய்

ஏனும் -இருப்பினும்

இலர் -ஒன்றும் இல்லாதவரே ஆவர்


பொருளுரை:

அறிவுஉடையவர் கைப்பொருள் ஒன்று இல்லையாயினும் எல்லாச் செல்வங்களையும் உடையவர் ஆவர். அறிவு இல்லாதவர் எவ்வளவு செல்வங்களை உடையவராய் இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.


விளக்கவுரை:

செல்வங்கள் யாவும் அறிவினால் படைக்கவும், காக்கவும் படுதலால், அஃதுடையாரை ‘எல்லாம் உடையார்’ என்று கூறப்பட்டது. அவையெல்லாம் முன்னமேயே ஒருவனுக்கு வாய்த்திருப்பினும், அச்செல்வத்தை காத்துகொள்வதற்கு அறிவில்லாதவனால் முடியாது என்பதனால் ‘என்னுடையரேனும் இலர்’ என்று கூறப்பட்டது.



uline