அரசியல்

44. குற்றங்கடிதல்

( குற்றங்கள் வாராமல் காத்தல் )

431. செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
        பெருக்கம் பெருமித நீர்த்து.

432. இவறலு மாண்பிறந்த மானமு மாணா
        வுவகையு மேத மிறைக்கு.

433. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
        கொள்வர் பழிநாணு வார்.

434. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
        யற்றந் தரூஉம் பகை.

435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
        வைத்தூறு போலக் கெடும்.

436. தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி
        னென்குற்ற மாகு மிறைக்கு.

437. செயற்பால செய்யா திவறியான் செல்வ
        முயற்பால தன்றிக் கெடும்.

438. பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு
        மெண்ணப் படுவதொன் றன்று.

439. வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
        நன்றி பயவா வினை.

440. காதல காத லறியாமை யுய்க்கிற்பி
        னேதில வேதிலார் நூல்.



குறள் 431:

செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.


சொல்லுரை:

செருக்கும் - செல்வத்தினால் உண்டாகும் மதக்களிப்பும்

சினமும் - கோபமும்

சிறுமையும் - அளவுக்கு மீறிய காமம் முதலிய சிறுமைச் செயல்களும்

இல்லார் - இல்லாதவரின்

பெருக்கம் - செல்வப்பெருக்கானது

பெருமித - பெருமிதம் படத்தக்க

நீர்த்து - தன்மையுடையது ஆகும்


பொருளுரை:

செல்வத்தினால் உண்டாகும் மதக்களிப்பும் , கோபமும், அளவுக்கு மீறிய காமம் முதலிய சிறுமைச் செயல்களும் இல்லாதவரின் செல்வப்பெருக்கானது பெருமிதம் படத்தக்க தன்மையுடையது ஆகும்


விளக்கவுரை:

செருக்கு என்பது மிகுதியான செல்வத்தினால் ஓர் அரசனுக்கு உண்டாகும் மதம் அல்லது செல்வக்களிப்பு ஆகும். செல்வக்களிப்பும், கோபமும், அளவிறந்த காமமும் ஓர் அரசனுக்கு நீதியற்ற வழிமுறைகளையே காட்டுமாதலால், அவற்றைத் தவிர்த்து வாழும் அரசனுக்கு உண்டாகும் செல்வப்பெருக்கானது நல்வழிப்பாடும் நிலையான பேறும் தரும் தன்மையை உடையது ஆகும்.



குறள் 432:

இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு.

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.


சொல்லுரை:

இவறலும் - வேண்டுமிடத்து பொருள் கொடாமையும், கருமித்தனமும்

மாண்பு இறந்த - மாட்சிமை நீங்கிய, நன்மை நீங்கிய

மானமும் - மானமும்

மாணா - அளவு கடந்த

உவகையும் - மகிழ்ச்சிக்களிப்பும்

ஏதம் - குற்றமாகும்

இறைக்கு - அரசனுக்கு


பொருளுரை:

வேண்டுமிடத்துப் பொருள் கொடாமையும் அல்லது கருமித்தனமும், நன்மை நீங்கிய மானமும்,, அளவு கடந்த மகிழ்ச்சிக்களிப்பும் அரசனுக்கு குற்றம் தருவனவாகும்.


விளக்கவுரை:

பொருள் கொடுக்கவேண்டிய செயலுக்கு பொருள் கொடாது இருத்தல் ‘இவறல்’ எனப்பட்டது. மாண்பிறந்த மானம் என்பது மாண்பு அற்ற செயல்களையும் மானம் எனக் கருதுவது. மாண்பிறந்த செயல்களாக பரிமேலழகர் கூறுவது யாதெனில் “அந்தணர், சான்றோர், அருந்தவத்தோர், தம்முன்னோர், தந்தைதாய் என்றிவரை வணங்காமையும், முடிக்கப்படாத்தாயினும் கருதியது முடித்தே விடுதலும்’ ஆகும்.



குறள் 433:

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.


சொல்லுரை:

தினைத்துணையாம் - தினை அளவு ஆகிய

குற்றம் - குற்றம்

வரினும் - தம்மிடம் உண்டானாலும்

பனைத்துணையாக் - அவற்றைப் பனை அளவு பெரிய குற்றமாக

கொள்வர் - கொள்வர்

பழி - பழிக்கு

நாணுவார் - அஞ்சுபவர்


பொருளுரை:

தினை அளவு ஆகிய குற்றம் தம்மிடம் உண்டானாலும் , அவற்றைப் பனை அளவு பெரிய குற்றமாகக் கொள்வர் பழிக்கு அஞ்சுபவர்.


விளக்கவுரை:

பழிக்கு அஞ்சி வாழும் நாணுடைமை கொண்ட அரசன் அல்லது சான்றோர், தம்மிடம் உண்டான குற்றம் தம்மளவில் அது சிறியது என்றாலும், அக்குற்றத்தினைப் பனைமரத்தின் உயரத்தினைப் போன்று, பெரிய அளவில் குற்றம் ஏற்பட்டதாகவே எண்ணி அக்குற்றச் செயலுக்கு அஞ்சுவர். அரசனின் அளவில் சிறியதாக இருக்கும் குற்றம், மற்றவர்களின் அளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாயும் அமையலாம்.



குறள் 434:

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
யற்றந் தரூஉம் பகை.

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.


சொல்லுரை:

குற்றமே - குற்றம் தன்னிடம் இருந்து உண்டாகாமல் இருப்பதனையே

காக்க - காத்துக்கொள்ள வேண்டும்

பொருளாகக் - சிறந்த பயனாக

குற்றமே - அக்குற்றமே

அற்றம் - முடிவை

தரூஉம் - தரும்

பகை - பகையாகும்


பொருளுரை:

குற்றம் தன்னிடம் இருந்து உண்டாகாமல் இருப்பதனையே சிறந்த பயனாகக் காத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அக்குற்றமே ஒருவனுக்கு அழிவைத் தரும் பகையாக அமையும்.


விளக்கவுரை:

ஒருவனுக்கு வெளியில் இருந்து பகை வந்துதான் அழிக்கவேண்டும் என்பதில்லை. தன்னிடம் ஏற்படும் குற்றமே ஒருவனுக்கு அழிவைத்தரும் முதற்பகையாகும். தன்னிடம் குற்றம் ஏற்படாமல் காத்துக்கொள்ள முடியுமானால், மற்ற பகையெல்லாம் அவ்வளவு வலிமையான பகையல்ல என்பதாகும். ஒருவனிடம் ஏற்படும் குற்றங்களாகக் கருதப்படுவன காமம், வெகுளி, மயக்கம், கடும்பற்று, உவகை, செருக்கு முதலியன ஆகும்.



குறள் 435:

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.


சொல்லுரை:

வருமுன்னர் - குற்றம் நேரும் முன்பே

காவாதான் - அது நேர்ந்துவிடாமல் தடுக்காதவன்

வாழ்க்கை - வாழ்வானது

எரிமுன்னர் - நெருப்பின்முன்

வைத்தூறு - வைக்கோல்போர் ( வை – வைக்கோல், தூறு – குவியல்)

போல - எரிந்து அழிவதுபோல

கெடும். - அழிந்துவிடும்


பொருளுரை:

குற்றம் நேரும் முன்பே அது நேர்ந்துவிடாமல் தடுக்காதவனுடைய வாழ்வானது, சிறிய நெருப்பின்முன் குவிக்கப்பட்ட வைக்கோல்போர் எரிந்து அழிவதுபோல அழிந்துவிடும்.


விளக்கவுரை:

நெருப்பு அளவால் சிறியதாயினும், அதன்முன்னர் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பெரிய வைக்கோல்போரையும் குறைந்த நேரத்தில் எரித்து அழித்துவிடும். அதுபோல, ஒருவனிடம் நேரும் குற்றம் சிறியதாயினும், அது அவனுடைய வாழ்க்கையையே அழிக்கும் தன்மை உடையது. வைக்கோல் தீயினால் எளிதில் எரித்து அழிக்கப்படும் தன்மை உடையது போல, ஒருவனுடைய மிகுந்த செல்வமும், சிறிய குற்றத்தினால் எளிதில் அழிந்துவிடும் என்பதாம். ஆதாலல், ஒருவன் தன்னிடம் குற்றம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.



குறள் 436:

தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி
னென்குற்ற மாகு மிறைக்கு.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.


சொல்லுரை:

தன்குற்றம் - தன் குற்றத்தை

நீக்கிப் - முதலில் நீக்கி

பிறர்குற்றம் - மற்றவர்களுடைய குற்றத்தை

காண்கிற்பின் - பிறகு காணவல்லவனாயின்

என்குற்றம் - என்ன குற்றம்

ஆகும் - உண்டாகும்

இறைக்கு. - அந்த அரசனுக்கு


பொருளுரை:

தன் குற்றத்தை முதலில் நீக்கி, மற்றவர்களுடைய குற்றத்தைப் பிறகு காணவல்லவனாயின் அந்த அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும்? ஒன்றும் இல்லை.


விளக்கவுரை:

அரசன் முதலில் தன்னிடமுள்ள குற்றத்தை நீக்கவேண்டும். அதன்பின்னரே, பிறர் குற்றத்தைக் கண்டு, ஆய்ந்து வழக்குமுறை செய்யும் தகுதியுடையவன் ஆகிறான். தன் குற்றம் நீக்காது பிறர் குற்றத்திற்குத் தண்டிப்பது குற்றமாகும். அரசன் தம்மிடம் உள்ள குற்றத்தை முதலில் நீக்கி, பின்னர் குடிமக்களிடம் உள்ள குற்றங்களையும் ஆராய்ந்து நீக்கவேண்டும் என்பதாம். அதுவே, சரியான வழியில் முறைசெய்தல் ஆகும்.



குறள் 437:

செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்.

செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது இன்றிக் கெடும்.


சொல்லுரை:

செயற்பால - செய்யவேண்டியவைகளை

செய்யாது - செய்யாமல்

இவறியான் - கருமித்தனம் செய்பவனது

செல்வம் - செல்வமானது

உயற்பாலது - நிலைத்து நிற்றல்

இன்றி - இல்லாது

கெடும் - கெடும்


பொருளுரை:

செய்யவேண்டியவைகளை செய்யாமல் கருமித்தனம் செய்பவனது செல்வமானது நிலைத்து நிற்றல் இல்லாது கெடும்.


விளக்கவுரை:

ஒருவன் தன்னிடமுள்ள பொருளினால் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்களை அடையும் செயல்களைச் செய்யவேண்டும். அவ்வாறு செய்யாமல் இருப்பதும் குற்றமாகக் கருதப்படுகிறது. பொருளைக்கொண்டு அறச்செயல்களை ஆற்றுதலும், அப்பொருளை முதலீடாகக் கொண்டு மேலும் பொருளைப் பெருக்கும் தொழிலில் ஈடுபடுதலும், தன்னைச் சார்ந்தோர்க்கு இன்பமளிக்கும் செயலுக்காக அப்பொருளை செலவிடுதலும் செயற்பால செய்யும் செயல்களாகும். அவ்வாறு பொருட்பயன் அடையாமல், பொருளின்மீதான பற்றினால் அதனை செலவிடுதற்கு கருமித்தனம் காட்டுவானாகில், அவ்வகைப்பட்ட செல்வமானது, அவனிடம் நிலைத்து நிற்காமல் கெட்டழியும். அஃதாவது, கள்வராலும், பகைவராலும் கொள்ளப்படுதலும், இயற்கைச்சீற்ற அழிவுகளாலும், பொருள் தாமே கெடுவதாலும் அழிந்துபோகும் என்பதாகும்.



குறள் 438:

பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு
மெண்ணப் படுவதொன் றன்று.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதுஒன்று அன்று.


சொல்லுரை:

பற்றுள்ளம் - பொருளைச் செலவிடவேண்டியவிடத்து செலவிடாது பற்றுவைத்தல்

என்னும் - என்னும்

இவறன்மை - கருமித்தனமானது

எற்றுள்ளும் - எல்லாக் குற்றங்களையும்போல

எண்ணப்படுவது - எண்ணத்தகுந்த

ஒன்று - ஒன்று

அன்று - அல்ல


பொருளுரை:

பொருளைச் செலவிடவேண்டியவிடத்து செலவிடாது அதன்மீது உள்ளத்தால் இறுகப்பற்றுதல் என்னும் கருமித்தனமானது, எல்லாக் குற்றங்களையும்போல எண்ணத்தகுந்த ஒன்று அல்ல. பெருங்குற்றமாகும்.


விளக்கவுரை:

பொருளைச் செலவிடவேண்டியவற்றிற்குச் செலவிடாது, அப்பொருளை தன்னுடனேயே வைத்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணி, தனது உள்ளத்தில் அப்பொருளினைப் பற்றி நிற்கும் எண்ணமானது கருமித்தனமாகும். அத்தன்மை, சாதாரண குற்றமாகக் கருதாமல், மற்ற எல்லாக் குற்றங்களைப்போல நினைக்கத்தகுந்த ஒன்றாக இல்லாமல், பெருங்குற்றமாகக் கருதப்படும்.



குறள் 439:

வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றிபயவாவினை.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.


சொல்லுரை:

வியவற்க - உயர்வாக எண்ணிக்கொள்ளக் கூடாது

எஞ்ஞான்றும் - எக்காலத்திலும்

தன்னை - தன்னைத்தானே

நயவற்க - விரும்புதல் கூடாது

நன்றி - நன்மை

பயவா - தராத

வினை - செயல்களை


பொருளுரை:

ஒருவன் எக்காலத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிக்கொள்ளுதல் கூடாது. நன்மை தராத செயல்களை மனத்தாலும் விரும்புதல் கூடாது.


விளக்கவுரை:

ஒருவன் தன்னைத்தானே பெருமிதம் கொள்வது குற்றமாகக் கூறப்படுகிறது. அவ்வாறு கொள்வானாயின், அவனுக்குக் காலம், இடம், வலிமை முதலியவைபற்றித் தன்னைப் பகைவருடன் ஒப்புநோக்கி அறியும் எண்ணம் தோன்றாது. அறம், பொருள்களைப் போற்றும் தன்மையும் ஏற்படாது. வருமுன் காக்கும் தன்மையும், விழிப்பாய் இருக்கும் தன்மையும் இருக்காது. ஆதலால், தன்னைத்தானே செருக்கு கொள்வதை ‘எஞ்ஞான்றும் வியவற்க’ என்றார். தான் கருதியதை முடித்தே விடுவது என்று ஆணவத்தால் ஒருவன் செயல்படுவானாயின், அவன் அறம் பொருளின்பம் பயவா வினைகளை செய்யக்கூடும் என்பதால், நன்மை தராத செயல்களை ‘நயவற்க’ என்றார்.



குறள் 440:

காதல காதல றியாமை யுய்க்கிற்பி
னேதில வேதிலார் நூல்.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.


சொல்லுரை:

காதல - தன்னால் விரும்பப்பட்ட பொருள்களையும்

காதல் - தன் விருப்பத்தையும்

அறியாமை - பிறர் அறியாமல்

உய்க்கிற்பின் - அனுபவிக்க வல்லவனாயின்

ஏதில - பழுதாகும்

ஏதிலார் - பகைவர்களின்

நூல் - எண்ணம், சூழ்ச்சி


பொருளுரை:

தன்னால் விரும்பப்பட்ட பொருள்களையும் , தன் விருப்பத்தையும், பிறர் அறியாமல் அனுபவிக்க வல்லவனாயின், அவனை வெல்ல நினைக்கும் பகைவர்களின் எண்ணம் அல்லது சூழ்ச்சி பழுதாகும்.


விளக்கவுரை:

தான் விரும்புவனவற்றை பகைவன் அறிவானாயின், அதன் வாயிலாக தன்னை வஞ்சிக்கும் செயல் பகைவன் செய்யக்கூடுமாதலால், தான் விரும்பியவற்றை பிறர் அறியாமல் துய்க்கவேண்டும் என்றவாறு. அவ்வாறு செய்யவல்லவனை, பகைவர் சூழ்ச்சியால் வெல்லுதல் இயலாதது ஆகிவிடும்.



uline