441. அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
       
திறனறிந்து தேர்ந்து கொளல்.
442. உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
       
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
443. அரியவற்று ளெல்லாம் மரிதே பெரியாரைப்
       
பேணித் தமராக் கொளல்.
444. தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
       
வன்மையு ளெல்லாந் தலை.
445. சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன்
       
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
446. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
       
செற்றார் செயக்கிடந்த தில்.
447. இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
       
கெடுக்குந் தகைமை யவர்.
448. இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
       
கெடுப்பா ரிலானுங் கெடும்.
449. முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
       
சார்பிலார்க் கில்லை நிலை.
450. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
       
நல்லார் தொடர்கை விடல்.
குறள் 441:
அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
சொல்லுரை:
அறன்அறிந்து - அறத்தின் நுண்மை அறிந்து
மூத்த - சிறந்த
அறிவுடையார் - அறிவுடையவர்களின்
கேண்மை - நட்பை
திறன்அறிந்து - கொள்ளும் வகை அறிந்து
தேர்ந்து - ஆராய்ந்து
கொளல் - கொள்ளவேண்டும்
பொருளுரை:
அறத்தின் நுண்மை அறிந்த சிறந்த அறிவுடையவர்களின் நட்பை கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ளவேண்டும்.
விளக்கவுரை:
அறத்தின் நுண்மையை நூல்களைக் கற்பதன்மூலம் மட்டுமல்லாது, தன்னுடைய உய்த்துணர்வாலும் அறிய வேண்டுமாதலால் ‘அறனறிந்து’ என்றார். ‘மூத்தல்’ என்பது ஒருவன் அறிவாலும், ஒழுக்கத்தாலும், காலத்தாலும் முதிர்தல் ஆகும். ‘அறிவுடையார்’ என்பவர் நீதியையும், உலகியலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், மேம்படுத்துதல், அவர்வழி நிற்றல், அவர்களை ஈர்க்கும் திறம் அறிதல் ஆகும்.
குறள் 442:
உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
சொல்லுரை:
உற்றநோய் - தெய்வத்தாலும், மக்களாலும் நேரும் துன்பங்களை
நீக்கி - நீக்கும் வழியறிந்து நீக்கி
உறாஅமை - அத்தகைய துன்பங்கள் வாராவண்ணம்
முற்காக்கும் - முன்னறிந்து காக்கவல்ல
பெற்றியார்ப் - தன்மையினை உடையாரை
பேணிக் - அவர் மகிழ்வன செய்து
கொளல் - அவர் துணையைப் போற்றிக் கொள்ளல் வேண்டும்
பொருளுரை:
தெய்வத்தாலும், மக்களாலும் நேரும் துன்பங்களை நீக்கும் வழியறிந்து நீக்கி, அத்தகைய துன்பங்கள் வாராவண்ணம் முன்னறிந்து காக்கவல்ல தன்மையினை உடையாரை அவர் மகிழ்வன செய்து, அவர்துணையைப் போற்றிக் கொள்ளல் வேண்டும்.
விளக்கவுரை:
தெய்வத்தால் வரும் துன்பங்களாவன: மழையின்மை, மிகுமழை, புயல் காற்று அல்லது சூரைக்காற்று, தீ, நோய்கள் முதலியவற்றால் வரும் துன்பங்கள் ஆகும். அவை இறைவனுக்கு விழாக்கள் எடுத்தல், வேண்டுதல் செய்தல், நோன்பிருத்தல் முதலியவற்றால் நீக்கப்படும். மக்களால் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், சுற்றத்தார், வினைசெய்வார் என்று இவர்களால் வரும் துன்பங்கள் ஆகும். இவை சாம(இன்சொல்) பேத(பிரிவினை) தான(கொடை) தண்டம் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்ற ஒன்று அல்லது பலவகையால் நீக்கப்படும். முற்காத்தல் என்பது தெய்வத்தால் வரும் துன்பங்களை தீய குறிகள் மூலம் அறிந்து இறைவனை விழா நோன்பு முதலியவற்றால் சாந்திப்படுத்தி காத்தலும், மக்களால் வரும் துன்பங்களை அவர்களின் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றால் அறிந்து மேற்கூறப்பட்ட நால்வகை உபாயத்துள் ஒன்றினால் காத்தலும் ஆகும். ஆகாரம் என்பது குறிப்பின்றி நிகழும் வேறுபாடு.
குறள் 443:
அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
சொல்லுரை:
அரியவற்றுள் - பெறுதற்கு அரிய பேறுகளுள்
எல்லாம் - எல்லாவாற்றிலும்
அரிதே - அரியது ஆகும்
பெரியாரை - பேரறிவு கொண்ட சான்றோரை
பேணி - அவர் உவப்பன அறிந்து செய்து
தமரா - தம்முடையவராக, தனக்குத் துணையாக
கொளல். - கொள்ளுவது
பொருளுரை:
பேரறிவு கொண்ட சான்றோரை, அவர் உவப்பன அறிந்து செய்து, தம்முடையவராக,, தனக்குத் துணையாகக் கொள்ளுவது பெறுதற்கு அரிய பேறுகளுள் எல்லாவாற்றிலும் அரியது ஆகும்.
விளக்கவுரை:
பேரறிவு கொண்ட சான்றோரின் துணையானது, ஒருவருக்கு இவ்வுலகில் பிற பேறுகளையெல்லாம் பயப்பனவாதலின், அரியவற்றுள் எல்லாம் அரிதான பேறாக போற்றப்படுகிறது.
குறள் 444:
தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.
சொல்லுரை:
தம்மிற் - தம்மைவிட
பெரியார் - பேரறிவு கொண்ட பெரியோர்களை
தமரா - தமக்குத் துணையாகக் கொண்டு
ஒழுகுதல் - அவர்களின் வழிகாட்டுதலின்படி நடத்தல்
வன்மையுள் - வல்லமை
எல்லாம் - எல்லாவற்றிலும்
தலை - முதன்மையானது ஆகும்
பொருளுரை:
தம்மைவிட பேரறிவு கொண்ட பெரியோர்களைத் தமக்குத் துணையாகக் கொண்டு, அவர்களின் வழிகாட்டுதலின்படி நடத்தல், வலிமைகள் எல்லாவற்றிலும் முதன்மையானது ஆகும்
விளக்கவுரை:
அரசனுக்குப் பொருள், படை, அரண் முதலியவை வலிமைகளாக அமையும் என்றாலும், அறிவிற் சிறந்த பெரியோர்களின் துணையானது தெய்வத்தினால் உண்டாகும் துன்பங்களிலிருந்து, அவர்களின் பட்டறிவு மற்றும் நுண்ணறிவு மூலம் காக்கும் என்பதால் வலிமைகள் யாவற்றுள்ளும் முதன்மையான வலிமையாகப் போற்றப்படுகிறது.
குறள் 445:
சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
சொல்லுரை:
சூழ்வார் - தம்மைச் சூழும் அமைச்சர்களையும் ஆன்றோர்களையும்
கண்ணாக - கண்ணாகக் கொண்டு
ஒழுகலான் - நடத்தலால்
மன்னவன் - அரசன், ஆட்சி செய்பவன்
சூழ்வாரை - அத்தகைய அமைச்சர்களையும் ஆன்றோர்களையும்
சூழ்ந்து - ஆராய்ந்து
கொளல் - துணையாகக் கொள்ளவேண்டும்
பொருளுரை:
தம்மைச் சூழும் அமைச்சர்களையும் ஆன்றோர்களையும் கண்ணாகக் கொண்டு நடத்தலால், அரசன் அத்தகைய அமைச்சர்களையும் ஆன்றோர்களையும் ஆராய்ந்து துணையாகக் கொள்ளவேண்டும்
விளக்கவுரை:
அரசன் ஆட்சிப்பொறுப்பில் எல்லா செயல்களையும் தானே செய்ய இயலாது என்பதனால், அறிவிற் சிறந்தோரை அமைச்சர்களாகக் கொண்டு ஆட்சி நடத்துதல் வேண்டும். அமைச்சர்களின்றி, அரசன் ஒருவனே ஆட்சி நடத்துதல் கடினம் என்பதால், அமைச்சர்களை தம்முடைய கண்ணாகக் கொண்டு ஆட்சி செய்யவேண்டும் என்றார். அத்தகைய அமைச்சர்களை நன்கு ஆராய்ந்து அறிந்து துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.
குறள் 446:
தக்காரி னத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.
சொல்லுரை:
தக்கார் - தகுதி உடையோர்களின்
இனத்தனாய் - துணையை உடையவனாய்
தானொழுக - தானும் அறிவுள்ளவனாய் ஒழுக
வல்லானை - வல்லவனை
செற்றார் - பகைவர்
செயக்கிடந்தது - செய்யக்கிடந்த துன்பம்
இல் - எதுவுமில்லை
பொருளுரை:
தகுதி உடையோர்களின் துணையை உடையவனாய்த் தானும் அறிவுள்ளவனாய் ஒழுக வல்லவனை, பகைவர் செய்யக்கிடந்த துன்பம் எதுவுமில்லை.
விளக்கவுரை:
தக்கார் என்பது அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையவர் ஆவர். அறநெறி வழுவாமல் நடத்தல் ‘ஒழுகுதல்’ எனப்பட்டது. வஞ்சித்தல், நட்பு பிரித்தல், பகை பெருக்குதல், உட்பகை உண்டாக்கல், வலிமை காட்டுதல் முதலியவற்றால் துன்பம் விளைவிக்கும் பகைவர்களாயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கேட்டறிந்து ஒழுக வல்லானுக்கு தீங்கொன்றும் செய்ய முடியாது என்பதை ‘செற்றார் செயக்கிடந்ததில்’ என்றார்.
குறள் 447:
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை அவர்.
சொல்லுரை:
இடிக்கும் - தம் பிழை கண்டால் வன்மையாகக் கடிந்து கூறி
துணையாரை - திருத்துபவரைத் துணையாகக் கொண்டு
ஆள்வாரை - அரசாள்பவரை
யாரே - யார்
கெடுக்கும் - அழிக்கக்கூடிய
தகைமை - பெருமையுடைய
அவர் - பகைவர் அவர்
பொருளுரை:
தம் பிழை கண்டால் வன்மையாகக் கடிந்து கூறி திருத்துபவரைத் துணையாகக் கொண்டு அரசாள்பவரை அழிக்கக்கூடிய பெருமையுடைய பகைவர் யார்? எவருமில்லை.
விளக்கவுரை:
தக்கோர் துணையுடையானும், தானும் நெறியின்கண் நின்றொழுக வல்ல அரசனை வெல்லும் தகைமையுடையோர் எவருமில்லை. பிழை என்றது பாவச்செயல் செய்ய முனைவதும், நீதிநெறி வழுவுவதும். அரசன் அவ்வாறு செய்யுமிடத்து சிறிதும் தாமதியாமல் அரசனிடம் நெருங்கி வன்மையாகக் கடிந்து கூறும் துணிவுடையோரும், அரசன்மீது அன்புகொண்டோரும் துணையாக அமைதல் வேண்டும். அத்தகைய துணையுடைய அரசனை, எத்துணை சிறப்புடைய பகைவனாலும் வெல்வது இயலாது என்பதாம்.
குறள் 448:
இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
சொல்லுரை:
இடிப்பாரை - குற்றம் கண்டபோது கடிந்து அறிவுரை கூறுபவரை
இல்லாத - துணையாக இல்லாத
ஏமரா - பாதுகாப்பற்ற
மன்னன் - அரசன்
கெடுப்பார் - கெடுக்கும் பகைவர்கள்
இலானும் - இல்லையாயினும்
கெடும் - தானே கெட்டழிவான்
பொருளுரை:
குற்றம் கண்டபோது கடிந்து அறிவுரை கூறுபவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பற்ற அரசன், கெடுக்கும் பகைவர்கள் இல்லையாயினும் தானே கெட்டழிவான்.
விளக்கவுரை:
‘கெடுப்பார் இலானும்’ என்பதனால் கெடுப்பவர்கள் இருக்கின்றார்கள் என்று பொருள் புகட்டுகிறது. அத்தகையோர்களிடமிருந்து பாதுகாப்பு தருவது, தன்மீது கொண்ட பற்றினாலும் அன்பினாலும், தான் நெறிபிறழ்ந்து நடக்கும் காலத்திலும் இடித்துக்கூறி நெறிப்படுத்தும் அறிவிற்சிறந்த பெரியோர்களே ஆவர். அத்தகையோரின் துணை இல்லாதவர்கள், தனக்குக் கேடு விளைவிக்கும் பகைவர்கள் இல்லையாயினும், பாகன் இல்லாத யானைபோல நெறியில்லாத வழியில் சென்று தானே கெட்டழிவர்.
குறள் 449:
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை.
சொல்லுரை:
முதலிலார்க்கு - மூலதனம், முதலீடு, செய்யாத வணிகர்க்கு
ஊதியம் - ஆதாயம், இலாபம்
இல்லை - இல்லை
மதலையாம் - தாங்குகின்ற
சார்பிலார்க்கு - துணை இல்லாதவர்க்கு
இல்லை - இல்லை
நிலை - நிலையான வாழ்வு
பொருளுரை:
மூலதனம் செய்யாத வணிகர்க்கு இலாபம் இல்லை. அதுபோல, தாங்குகின்ற துணை இல்லாதவர்க்கு நிலையான வாழ்வு இல்லை.
விளக்கவுரை:
வணிகத்தில் இலாபம் அடைவதற்கு முதல் வைப்பது மிகமுக்கியம். அதுபோல, நிலையான வாழ்வு பெற, தக்க சமயத்தில் தனக்கு அறிவுரை கூறி தன்னைத் தாங்குவாரின் நல்லோர் துணை மிகவும் முக்கியமானது ஆகும்.
குறள் 450:
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
சொல்லுரை:
பல்லார் - பலரோடு
பகைகொளலின் - பகைகொள்வதைவிட
பத்தடுத்த - பத்து மடங்கு
தீமைத்தே - தீமை விளைவிப்பதே
நல்லார் - நற்குணங்களை உடைய பெரியோர்களின்
தொடர் - தொடர்பை, நட்பை
கைவிடல் - கைவிடுவது
பொருளுரை:
நற்குணங்களை உடைய பெரியோர்களின் நட்பைக் கைவிடுவது, ஒருவன் பலரோடு பகைகொள்வதைவிட பத்து மடங்கு தீமை விளைவிப்பது ஆகும்
விளக்கவுரை:
ஒருவன் பலரோடு பகை கொண்டுள்ளவன் ஆயினும், பகைவர்களைப் பிரித்தல், ஒருவரோடு ஒருவரை மோதவிடுதல், சிலரைத் தனக்கு நட்பாக்கல், சிலரை மோதி அழித்தல் முதலிய போர்த்தந்திரங்களால் அப்பகைவர்களை வெல்லவும் கூடும். ஆனால், நல்லோர் தொடர்பை கைவிடுவோர் ஒருவகையானும் தப்ப வழியில்லாததால் இது அதனினும் மிகவும் தீமை விளைவிப்பது என்பதாம். ‘தொடர்கை விடல்’ என்பது நாமாக நல்லோர்களின் தொடர்பை விட்டுவிடுவது அல்லது தம்மைவிட்டு அவர்கள் பிரிந்துசெல்லும்படி நாம் நடந்துகொள்வது ஆகிய இரண்டையும் குறிப்பது ஆகும்.