அரசியல்

46. சிற்றினஞ்சேராமை

( சிறுமை மனம் கொண்டவருடன் சேராதிருத்தல் )

451. சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
        சுற்றமாச் சூழ்ந்து விடும்.

452. நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
        கினத்தியல்ப தாகு மறிவு.

453. மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா
        மின்னா னெனப்படுஞ் சொல்.

454. மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
        கினத்துள தாகு மறிவு.

455. மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு
        மினந்தூய்மை தூவா வரும்.

456. மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்
        கில்லைநன் றாகா வினை.

457. மனநல மன்னுயிர்க் காக்க மினநல
        மெல்லாப் புகழுந் தரும்.

458. மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
        கினநல மேமாப் புடைத்து.

459. மனநலத்தி னாகு மறுமைமற் றஃது
        மினநலத்தி மேமாப் புடைத்து.

460. நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி
        னல்லற் படுப்பதூஉ மில்.



குறள் 451:

சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.


சொல்லுரை:

சிற்றினம் - சிறுமைச் செயல்களின் ஈடுபடும் இனத்தை

அஞ்சும் - சேர்ந்திட அஞ்சுவது

பெருமை - பெருமை மிகுந்த செயலாற்றும் பெரியோர்கள் இயல்பாகும்

சிறுமைதான் - சிறியோர்களின் இயல்பானது

சுற்றமா - அவர்களைத் தனது உறவாக

சூழ்ந்து - சேர்த்துக்கொண்டு

விடும் - விடும்


பொருளுரை:

சிறுமைச் செயல்களின் ஈடுபடும் இனத்தை சேர்ந்திட அஞ்சுவது பெருமை மிகுந்த செயலாற்றும் பெரியோர்கள் இயல்பாகும். சிறியோர்களின் இயல்பானது, அவர்களைத் தனது உறவாகச் சேர்த்துக்கொண்டுவிடும்.


விளக்கவுரை:

அறிவிற்சிறந்த பெரியோர், சிறியோர் சேர்க்கையால் தமக்கு அறிவு கெடுவதும் ஒழுக்கக்கேடும் உண்டாகும் என்பதாலும், அதனால் தமக்கு வருவது துன்பமே என்பதை உணர்ந்ததாலும், சிறியார் சேர்க்கைக்கு அஞ்சுவர். ஆனால், சிறுமைச் செயல்களில் நாட்டமுடையோர், இனம் இனத்தோடு சேரும் என்பதுபோல, சிற்றினத்தைத் தமது சுற்றமாகச் சேர்ந்துகொள்வர். இதனால், பெரியோர் சிற்றினத்தோடு எவ்வகை பயன்கருதியும் சேரமாட்டார் என்பது உறுதிபடக் கூறப்பட்டது.



குறள் 452:

நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு.

நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்துஇயல்புஅது ஆகும் அறிவு.


சொல்லுரை:

நிலத்து - நிலத்தின்

இயல்பால் - தன்மையால்

நீர்திரிந்து - நீரின் தன்மை மாறி

அற்றாகும் - அந்நிலத்தின் தன்மையைப் பெறும்

மாந்தர்க்கு - மனிதனுக்கு

இனத்து - தாம் சேர்ந்திருக்கும் இனத்தின்

இயல்பு - இயல்பு எதுவோ

அது - அதுவாகவே

ஆகும் - ஆகும்

அறிவு - தன்னுடைய அறிவும்


பொருளுரை:

நிலத்தின் தன்மையால் நீரின் தன்மை மாறி அந்நிலத்தின் தன்மையைப் பெறும். அதுபோல, மனிதனுக்கு தாம் சேர்ந்திருக்கும் இனத்தின்இயல்பு எதுவோ, அதுவாகவே ஆகும் தன்னுடைய அறிவும்.


விளக்கவுரை:

வானத்திலிருந்து பெய்யும் மழைக்கு மணம், நிறம், சுவை என்பது எதுவுமில்லை. மழை பெய்யும் நிலத்தின் தன்மைக்கேற்ப நீருக்கு மணம், சுவை, நிறம் முதலியன கூடுகிறது. அதுபோல, மாந்தர்கள் தான் சேரும் இனத்திற்கேற்ப அவர்களின் அறிவும் பண்பும் அமையும். பெரியோரைச் சேர்ந்து பழகுபவன், உயர்ந்த எண்ணங்களையும் பழக்கவழக்கங்களையும் அறிவையும் பெறுவான் என்றும், சிறியோரைச் சேர்ந்து பழகுபவன் கீழ்மைத்தரம் கொண்டவைகளையே பெறுவான் என்றும் கூறப்பட்டது.



குறள் 453:

மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா
மின்னா னெனப்படுஞ் சொல்.

மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல்.


சொல்லுரை:

மனத்தானாம் - மனத்தினால் அமையும்

மாந்தர்க்கு - மனிதர்களுக்கு

உணர்ச்சி - புலன் உணர்வு

இனத்தானாம் - இனத்தினால் அமையும்

இன்னான் - இவன் இத்தன்மையவன்

எனப்படும் - என்று கூறப்படும்

சொல். - வார்த்தையானது


பொருளுரை:

மனிதர்களுக்கு இயற்கையான புலன் உணர்வு மனத்தினால் அமையும். இவன் இத்தன்மையவன் என்று உலத்தவரால் கூறப்படும் வார்த்தையானது அவன் சேர்ந்திருக்கும் இனத்தினால் அமையும்.


விளக்கவுரை:

ஒருவனுக்கு இயற்கையான புலன் உணர்வு மனத்தின் வழியே உண்டாவதால் ‘’மனத்தானாம்’ என்றார். ஆனால், அவனுடைய பட்டறிவும், பொது அறிவும் அவன் சேர்ந்திருக்கும் இனத்திற்கு ஏற்பவே அமையும். பெரியோரோடு சேர்ந்திருப்பவன் நல்லவன் என்றும், சிறியோரோடு சேர்ந்திருப்பவன் தீயவன் என்றும் உலத்தோரால் கணிக்கப்படுவதற்கு அவன் சேர்ந்திருக்கும் இனமே காரணம்.



குறள் 454:

மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு.

மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு.


சொல்லுரை:

மனத்து - மனத்திலே

உளதுபோல - உள்ளதுபோல

காட்டி - தன்னைக்காட்டி

ஒருவற்கு - ஒருவனுக்கு

இனத்து - அவன் சேர்ந்திருக்கும் இனத்தின் தன்மையையே

உளதுஆகும் - கொண்டதாக இருக்கும்

அறிவு - அறிவு


பொருளுரை:

ஒருவனுடைய அறிவானது அவன் மனத்திலே இருந்து தோன்றியதுபோலவே காட்டி, அதனைப் பின்னோக்கி ஆராயும்போது, அது அவன் சேர்ந்திருக்கும் இனத்தின் தன்மையையே கொண்டதாக இருக்கும்.


விளக்கவுரை:

அறிவானது ஒருவன் சேர்ந்திருக்கும் இனத்தின் தன்மையைப் பொருத்தே அமையும். ஆனால், அது ஒருவனுடைய மனத்தில் இருந்து தோன்றுவதுபோலவே தன்னைக் காட்டிக்கொள்ளும். ஆனால், அறிவு மனத்தில் தோன்றும் ஒன்று அல்ல. அது எங்கிருந்து தோன்றியது என்று ஆராய்ந்து பார்த்தோமாகில், அது அவன் சேர்ந்து வாழும் இனத்தின் அறிவினாலேயே இவனுக்கும் அத்தகைய அறிவு உண்டாகியிருத்தலை நாம் காணமுடியும்.



குறள் 455:

மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு
மினந்தூய்மை தூவா வரும்.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.


சொல்லுரை:

மனந்தூய்மை - மனத்தை தூய்மையை எய்துவதும்

செய்வினை - செய்யும் செயலில்

தூய்மை - தூய்மையை எய்துவதும்

இரண்டும் - ஆகிய இரண்டும்

இனந்தூய்மை - சேர்ந்திருக்கும் இனத்தின் தூய்மைத் தன்மையை

தூவா - பற்றுக்கோடாக

வரும் - கொண்டு வரும்


பொருளுரை:

மனத்தை தூய்மையடைய எய்துவதும் செய்யும் செயலில் தூய்மையை எய்துவதும் ஆகிய இரண்டும் சேர்ந்திருக்கும் இனத்தின் தூய்மைத் தன்மையைப் பற்றுக்கோடாகக் கொண்டு வரும்.


விளக்கவுரை:

மனம் தூயனாதல் என்பது அறிவு புலப்படுமாறு அறியாமையிலிருந்து நீங்குதல். தீதென்று தோன்றுவதை தன்னிடமிருந்து விலக்கலும், நன்றென்று தோன்றுவதை செய்வதுமாகிய மனப்பான்மை. செய்வினை தூயனாதல் என்பது தனது சொல்லினாலும் செயலினாலும் நல்வினை செய்பவனாக இருத்தல். ஒருவன் சேர்ந்த இனம் தூயதாக இருந்தால், அதன்பொருட்டு அவனுடைய எண்ணங்களும் தூய்மையானதாய், பழக்கவழக்கங்களும் தூய்மையானதாய், அதன்வழி அவனுடைய சொல்லும் செயலும் தூய்மையானதாய் அமையும். இதன்மூலம், தூய்மையான சேர்க்கையே ஒருவனுக்கு தூய்மையான மனத்தையும், தூய்மையான செயலாற்றும் பண்பையும் அளிக்கும் என்பதாம்.



குறள் 456:

மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை.

மனந்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.


சொல்லுரை:

மனந்தூயார்க்கு - மனம் தூய்மை உடையோர்க்கு

எச்சம் - மக்கட்பேறு

நன்றாகும் - நன்றாக அமையும்

இனந்தூயார்க்கு - தாம் சேர்ந்திருக்கும் இனம் தூய்மை உடையோர்க்கு

இல்லை - இல்லை

நன்றாகா - நன்று ஆகாத

வினை - செயல்


பொருளுரை:

மனம் தூய்மை உடையோர்க்கு மக்கட்பேறு நன்றாக அமையும். தாம் சேர்ந்திருக்கும் இனம் தூய்மை உடையோர்க்கு நன்று ஆகாத செயல் இல்லை. அஃதாவது, தாம் செய்யும் வினை நன்றாகவே அமையும் என்பதாம்.


விளக்கவுரை:

மனத்தை தூய்மையாக வைத்துக்கொண்டு வாழ்பவர்களுக்கு அவர்களுடைய மக்கட்செல்வங்களும் நல்ல நிலையில் இருப்பர் என்பதும், பெற்றோரைப் போன்றே தாமும் நல்ல எண்ணங்களுடன் வாழ்வர் என்பதும் ஆகும். அதேபோன்று தாம் சேர்ந்திருக்கும் இனம் தூயதாக அமையுமாயின், அவன் செய்யும் வினைகளும் நல்லதாகவே இருக்கும். நல்ல மனிதர்களுடன் சேர்ந்திருக்கும்போதே நல்வினை ஆற்றுதலும் உண்டாகும்.



குறள் 457:

மனநல மன்னுயிர்க் காக்க மினநல
மெல்லாப் புகழுந் தரும்.

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.


சொல்லுரை:

மனநலம் - மனம் நன்றாக இருத்தல்

மன்னுயிர்க்கு - நிலைபெற்ற உயிர்களுக்கு

ஆக்கம் - ஒரு செல்வம் ஆகும்

இனநலம் - தாம் சேர்ந்திருக்கும் இனம் நல்லதாக இருத்தல்

எல்லாப் - எல்லா வகையான

புகழும் - புகழையும்

தரும். - கொடுக்கும்


பொருளுரை:

மனம் நன்றாக இருத்தல் நிலைபெற்ற உயிர்களுக்கு ஒரு செல்வம் ஆகும். தாம் சேர்ந்திருக்கும் இனம் நல்லதாக இருத்தல் எல்லா வகையான புகழையும் கொடுக்கும்.


விளக்கவுரை:

ஒருவனுக்கு மனம் நல்ல நிலையில் இருத்தல், அவனுக்கு உடல் நலத்தையும் அளிக்கும்; ஆன்ம பலத்தையும் கொடுக்கும். உயிர் நல்ல நிலையில் இருப்பதற்கு, மனத்தைத் தூய்மையானதாகவும் தெளிவுடனும் வைத்துக்கொள்ளுதல் வேண்டும் அவன் சேர்ந்திருக்கும் இனம் நல்லதாக இருக்குமாகில், அவனுடைய நல்ல செயல்கள்மூலம் எல்லா வகையான புகழும் வந்து சேரும்.



குறள் 458:

மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநல மேமாப் புடைத்து.

மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.


சொல்லுரை:

மனநலம் - மனத்தின் நலத்தை

நன்குடையர் - இயற்கையாகவே நன்றாக அமையப் பெற்றவர்

ஆயினும் - என்றாலும்

சான்றோர்க்கு - சான்றோர்க்கு

இனநலம் - தாம் சேர்ந்திருக்கும் இனத்தின் நலமே

ஏமாப்பு - அதற்கு அரணாக

உடைத்து - அமையும்


பொருளுரை:

மனத்தின் நலத்தை இயற்கையாகவே நன்றாக அமையப் பெற்றவர் என்றாலும், சான்றோர்க்கு தாம் சேர்ந்திருக்கும் இனத்தின் நலமே அதற்கு வலிமை சேர்க்கும்.


விளக்கவுரை:

சான்றோர்க்கு மனநலம் இயற்கையாகவே அமையப்பெறும். அது முன்வினைப் பயனாலும், தம் பெற்றோரிடமிருந்தும் பெறப்படும். அவ்வாறு அமையப்பெறும் மனநலமானது சான்றோர் சேர்ந்திருக்கும் நல்ல இனத்தினால் மேலும் வலுப்பெறும். ஒருவன் இயல்பாகவே நன்மை உடைய மனநலனைப் பெற்றிருந்தாலும், சேர்ந்திருக்கும் இனத்தால் அதில் மாறுபாடு ஏற்படும். நல்ல இனத்தைச் சேர்ந்திருக்கும்போது அது மேலும் வலிமை பெற்றுத் திகழும் என்பதாம்.



குறள் 459:

மனநலத்தி னாகு மறுமை மற்றஃது
மினநலத்தி மேமாப் புடைத்து.

மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து.


சொல்லுரை:

மனநலத்தின் - மனநலத்தினால்

ஆகும் - உண்டாகும்

மறுமை - மறு,மை இன்பம்

மற்று அஃதும் – அந்த இன்பமும்

இனநலத்தின் - இனத்தின் நன்மையால்

ஏமாப்பு - வலிமை

உடைத்து - உள்ளதாகும்


பொருளுரை:

மனநலத்தினால் மறுமை இன்பம் உண்டாகும். அந்த இன்பமும் இனத்தின் நன்மையால் வலிமை உள்ளதாகும்.


விளக்கவுரை:

ஒருவன் தன் மனத்தை நலமுடன், அப்பழுக்கற்று, தூய்மையானதாகக் கொண்டு வாழ்வனாகில் அவனுக்கு மறுபிறப்பு என்பது நல்ல முறையில் அமையும். அடுத்தப் பிறவியிலும் அவன் மனம் நன்னெறியில் நடக்கும் வழியைப் பெறும். ஒருக்கால், மனநலம் நன்றாக அமைந்தாலும், விதியின்வழி அவன் குணம் மாறுபாடு கொள்ளுமானால், அவன் சேர்ந்திருக்கும் நல்ல இனத்தின் பண்புகள் அவனை கெட்ட வழியில் செல்லவிடாமல், இயல்பாகவே அவனை நல்ல வழியில் நடக்கத் துணையாக அமையும். அதனால் அவன் மனம் கெடுதலும் தவிர்க்கப்படும். மறுமைப் பயன் நன்மையாக அமைவது உறுதிப்படுத்தப்படும். இதன்மூலம், இனநலம் மனநலத்தைக் காப்பதுடன் மறுமைப்பயனுக்கும் துணையாக அமைகிறது.



குறள் 460:

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்.

நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்.


சொல்லுரை:

நல்லினத்தின் - நல்ல சேர்க்கையைக் காட்டிலும்

ஊங்கும் - சிறந்த

துணையில்லை - துணை என்பது இல்லை

தீயினத்தின் - தீய சேர்க்கையைக் காட்டிலும்

அல்லல் - துன்பம்

படுப்பதூஉம் - விளைவிக்கும் பகை

இல் - இல்லை


பொருளுரை:

நல்ல சேர்க்கையைக் காட்டிலும் சிறந்த துணை என்பது இல்லை. தீய சேர்க்கையைக் காட்டிலும் துன்பம் விளைவிக்கும் பகை இல்லை.


விளக்கவுரை:

ஒருவனுக்கு மனத்தை நல்வழியில் செயலாற்றுவதற்குத் துணையாக அமைந்து இம்மை மறுமைப் பயன்களையும் பாதுகாப்பதால் நல்லினச் சேர்க்கையைவிடச் சிறந்த துணை எதுவுமில்லை என்றார். ஒருவனுடைய மனத்தை தீயவழியில் செலுத்தி, அவனுக்கு, எல்லாவகைத் துன்பங்களையும் உண்டாக்குவதால் தீய சேர்க்கையைவிடத் துன்பம் விளைவிக்கும் பகை வேறொன்றும் இல்லை என்றார். துன்பத்தை விளைவித்தலால் அது பகை எனப்பட்டது.



uline