அரசியல்

47. தெரிந்துசெயல்வகை

( செயல்களை ஆராய்ந்து செய்யும் முறை )

461. அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு
        மூதியமுஞ் சூழ்ந்து செயல்.

462. தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
        கரும்பொருள் யாதொன்று மில்.

463. ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
        யூக்கா ரறிவுடை யார்.

464. தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு
        மேதப்பா டஞ்சு பவர்.

465. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
        பாத்திப் படுப்பதோ ராறு.

466. செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
        செய்யாமை யானுங் கெடும்.

467. எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
        னெண்ணுவ மென்ப திழுக்கு.

468. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
        போற்றினும் பொத்துப் படும்.

469. நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
        பண்பறிந் தாற்றாக் கடை.

470. எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மோடு
        கொள்ளாத கொள்ளா துலகு.



குறள் 461:

அழிவதூ உமாவதூஉ மாகி வழிபயக்கு
மூதியமுஞ் சூழ்ந்து செயல்.

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.


சொல்லுரை:

அழிவதூஉம் - வினை மேற்கொள்ளும்பொழுது உண்டாகும் அழிவையும்(செலவையும்)

ஆவதூஉம் - அதன்பின் உண்டாகும் ஆக்கத்தையும்

ஆகி - ஆய்ந்து அறிந்து

வழிபயக்கும் - பிற்காலத்தும் தரும்

ஊதியமும் - இலாபத்தையும்

சூழ்ந்து - சீர்தூக்கி

செயல் - செய்யவேண்டும்


பொருளுரை:

வினை மேற்கொள்ளும்பொழுது உண்டாகும் அழிவையும், அதன்பின் உண்டாகும் ஆக்கத்தையும் ஆய்ந்து அறிந்து, பிற்காலத்தும் தரும் இலாபத்தையும் சீர்தூக்கிச் செய்ய வேண்டும்,


விளக்கவுரை:

வினை செய்ய முற்படுமுன் அதனைச் செய்வதினால் ஏற்படும் செலவினையும், அதன்பின் உண்டாகும் ஆக்கத்தினையும் ஆராயவேண்டும். செலவு குறைவாகவும், வரவு மிகுதியாகவும் இருக்குமாயின், மற்றும் அப்பயன்மிகுதி பிற்காலத்தில் கூடுமா என்பதையும் ஆராய்ந்து சீர்தூக்கி அச்செயலைச் செய்ய முற்படவேண்டும்.



குறள் 462:

தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.


சொல்லுரை:

தெரிந்த - தனக்கு நன்கு தெரிந்த

இனத்தொடு - சேர்க்கையோடு

தேர்ந்து - ஆராய்ந்து

எண்ணி - தானும் செய்யும் வினையைப்பற்றி நன்கு எண்ணிப்பார்த்து

செய்வார்க்கு - வினை செய்வார்க்கு

அரும்பொருள் - எய்தற்கரிய பொருள்

யாதொன்றும் - என்று எதுவும்

இல் - இல்லை


பொருளுரை:

தனக்கு நன்கு தெரிந்த சேர்க்கையோடு ஆராய்ந்து, தானும் செய்யும் வினையைப்பற்றி நன்கு எண்ணிப்பார்த்து வினை செய்வார்க்கு எய்தற்கரிய பொருள் என்று எதுவும் இல்லை.


விளக்கவுரை:

தெரிந்த இனம் என்பது செய்யும் வினைவகையை நன்கு செய்யும் திறம் அறிந்த, செய்யும் திறனுடைய இனம் என்றும் கொள்ளப்படும். தெரிந்த வல்லுநர்களுடன் ஆராய்ந்து தேர்வது மட்டுமின்றி தாமும் அதன் கூறுபாடுகளையும் வழிமுறையும் நன்கு எண்ணிப்பார்த்தபிறகே அச்செயலைச் செய்வதைப்பற்றி முடிவுக்கு வரவேண்டும். அவ்வாறு வினை ஆற்றுவார்க்கு பெறுதற்கரிய பொருள் என்று யாதொன்றும் இல்லை.



குறள் 463:

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
யூக்கா ரறிவுடை யார்.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.


சொல்லுரை:

ஆக்கம் - எதிர்காலத்தில் வரும் ஊதியத்தை

கருதி - எண்ணத்தில் கொண்டு

முதலிழக்கும் - கையிலிருக்கும் முதல் அத்தனையும் இழக்கும்

செய்வினை - வினை செய்தலை

ஊக்கார் - மேற்கொள்ளமாட்டார்

அறிவுடையார் - அறிவுடையோர்


பொருளுரை:

எதிர்காலத்தில் வரும் நிச்சயமற்ற ஊதியத்தை எண்ணத்தில் கொண்டு கையிலிருக்கும் முதல் அத்தனையும் இழக்கும் வினை செய்தலை அறிவுடையோர் மேற்கொள்ளமாட்டார்.


விளக்கவுரை:

ஊதியத்தை அல்லாது முதலையும் இழப்பது என்பது, தன்னுடைய வலிமை, தக்க காலம், இடம் முதலியவற்றை நன்கு அறியாது, பிறர் நாட்டைக் கைப்பற்றச் சென்று தன் நாட்டையும் இழத்தல் போன்றது. பெரும் பொருளீட்டக் கருதி கையிலுள்ள பொருளையும் இழத்தலும் ஆகும். இதன்மூலம் ஊதியம் கருதி வினை ஆற்றும்போது தன் கையுள்ள முதல் அனைத்தையும் இழக்கும் அளவிற்கு வினையாற்றல் கூடாது என்பது கூறப்பட்டது.



குறள் 464:

தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு
மேதப்பா டஞ்சு பவர்.

தெளிவுஇல் அதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.


சொல்லுரை:

தெளிவுஇல் - தெளிவில்லாத, ஆராய்ந்து தெளியப்படாத

அதனை - செயலை

தொடங்கார் - தொடங்கமாட்டார்

இளிவுஎன்னும் - இழிவு என்னும்

ஏதப்பாடு - குற்றம் உண்டாவதற்கு

அஞ்சுபவர் - அஞ்சுபவர்


பொருளுரை:

தமக்கு இழிவைத் தரும் குற்றம் உண்டாவதற்கு அஞ்சுபவர், தெளிவில்லாத, ஆராய்ந்து தெளியப்படாத செயலைச் செய்ய தொடங்கமாட்டார்.


விளக்கவுரை:

தனக்கும் மற்றும் தன்னைச்சேர்ந்தவர்க்கும் தெளிவில்லாத ஒன்றைச் செய்துமுடிக்க மேற்கொள்ளும் முயற்சியானது, ஒருவனுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய இழப்பு வினையாற்ற இயலாதவன் என்றும் அறிவிலன் என்றும் பல குற்றங்களை ஏற்படுத்திவிடும். அத்தகைய இழிவான குற்றங்கள் உண்டாவதற்கு அஞ்சும் நன்னெறியில் வாழுவோர் தனக்குத் தெளிவில்லாத காரியங்களில் இறங்கக்கூடாது என்பதாம்.



குறள் 465:

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.


சொல்லுரை:

வகையற - செயல் ஆற்றும் விதங்களை எல்லாம் முற்றும்

சூழாது - ஆராய்ந்து எண்ணாமல்

எழுதல் - செயலைச் செய்யத் தொடங்குதல்

பகைவரை - பகைவரை

பாத்தி - அவர் வளரும் நிலத்திலேயே

படுப்பதோர் - நிலைபெறச்செய்யும் ஒரு

ஆறு - வழியாகும்


பொருளுரை:

செயல் ஆற்றும் விதங்களை எல்லாம் முற்றும் ஆராய்ந்து எண்ணாமல் செயலைச் செய்யத் தொடங்குதல், , பகைவரை அவர் வளரும் நிலத்திலேயே நிலைபெறச்செய்யும் ஒரு வழியாக அமைந்துவிடும்.


விளக்கவுரை:

ஒருவன் தான் செயலாற்றத் துணியுங்காலத்து அச்செயலை செய்து முடிக்க எல்லா வகையான வழிமுறைகளையும் செயல்முறைகளையும் முற்றும் ஆராய்ந்து, அதன்பின்னே செயலைச் செய்யத்தொடங்க வேண்டும். இல்லையென்றால் அது தோல்வியையே தரும். அது எவ்வாறு எனில், அரசன் தன் வலிமை, காலம், இடம் முதலியவற்றை முற்றும் ஆராயாமல் பகைவர்மேல் படையெடுத்துச் செல்வது, அது பகைவரை பாதுகாப்பன நிலையிலிருந்து மேலும் வலிமையான நிலைக்கு மாற்றுவது போலாகும். பாத்தி படுத்துவது என்பது, நாற்றங்காலில் அடர்ந்து வளர்ந்து மேலும் வளர முடியாமல் இருக்கும் நாற்றைப் பிடுங்கி அதைப் பாத்தியிட்ட நிலத்தில் நட்டு மேலும் நன்கு வளரச்செய்வது போன்றதாகும்.



குறள் 466:

செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.


சொல்லுரை:

செய்தக்க - செய்யத்தகுந்த

அல்ல - அல்லாத செயல்களை

செயக்கெடும் - செய்தால் அவன் கெடுவான்

செய்தக்க - செய்யத்தகுந்த செயல்களை

செய்யாமை - செய்யாமல்

யானும் - போனாலும்

கெடும் - கெடுவான்


பொருளுரை:

ஒருவன் செய்யத் தகுந்தவைகள் அல்லாத செயல்களைச் செய்தால் கெடுவான். அதுமட்டுமின்றி, செய்யத்தகுந்த செயல்களை செய்யாமல் போனாலும் கெடுவான்.


விளக்கவுரை:

செய்யத்தக்க அல்லனவாக பரிமேலழகர் குறிப்பிடுவது பெரிய முயற்சி செய்யாதிருத்தல், பயன் தராத வினையை மேற்கொள்ளல், சிறுபயன் மட்டுமே அளிக்கும் வினைசெய்தல், அதுவும் தெளிவற்றதாக இருத்தல், மற்றும் முடிந்தபின் துயர் தருவனவாக இருத்தல் என்பவை. செய்யத்தகுந்தவை இவற்றிற்கு மறுதலைச் செயல்களாகும். அவைகளைச் செய்யாமையால் அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என்னும் இருவகையான பெருமையும் குறைந்து பகைவர்க்கு எளியனவாக அமைவதால் இரண்டுமே கேட்டிற்கு ஏதுவாயின. இதன்மூலம் செய்வன செய்து, ஒழிவன செய்யாதொழிக எனக் கூறப்பட்டது.



குறள் 467:

எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.


சொல்லுரை:

எண்ணித் - செயலை முடிக்கும் வழியை நன்கு ஆராய்ந்து

துணிக - திண்ணமான எண்ணத்துடன் செய்யத் தொடங்கவேண்டும்

கருமம் - செய்யத்தக்க காரியத்தை

துணிந்தபின் - செயலை செய்யத்தொடங்கியபின்

எண்ணுவம் - ஆராய்ந்து கொள்வோம்

என்பது - என்று நினைப்பது

இழுக்கு - குற்றமாகும்


பொருளுரை:

செய்யத்தக்க காரியத்தை முடிக்கும் வழியை நன்கு ஆராய்ந்து திண்ணமான எண்ணத்துடன் செய்யத் தொடங்கவேண்டும். அவ்வாறின்றி, செயலை செய்யத்தொடங்கியபின் ஆராய்ந்து கொள்வோம் என்று நினைப்பது குற்றமாகும்.


விளக்கவுரை:

துணிதல் என்பது தீர்மானித்துத் தொடங்குதல் ஆகும். ஒருவன் செய்யத்தக்க காரியத்தை செய்யத் தொடங்கும்போது அச்செயலை வெற்றியுடன் செய்து முடிக்கும் வழிகளை எல்லாம் நன்கு ஆராய்ந்தபின்னரே தொடங்குதல் வேண்டும். செய்யவேண்டிய செயலைப்பற்றி சிறிதுந் சிந்தியாமல், காரியத்தைச் செய்யுங்காலத்தில் அதைப்பற்றி எண்ணிக்கொள்ளலாம் என்று நினைத்து செயலைத் தொடங்குவது குற்றத்தையே உண்டாக்கும்.



குறள் 468:

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.


சொல்லுரை:

ஆற்றின் - ஒரு காரியத்தைச் செய்து முடிக்கும் வழியால்

வருந்தா - முயலாத

வருத்தம் - முயற்சி

பலர்நின்று - பலர் துணையாக நின்று

போற்றினும் - காப்பாற்றினாலும்

பொத்துப்படும் - பொத்தலாகிவிடும்


பொருளுரை:

ஒரு காரியத்தைச் செய்து முடிக்கும் வழியால் முயலாத முயற்சி, பலர் துணையாக நின்று காப்பாற்றினாலும் குறைபட்டே தீரும்.


விளக்கவுரை:

ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்கு உண்டான வழியினை, அக்காரியத்தினை ஆரம்பிக்கும் முன்பே வருந்தியாயினும் தேடி அறிந்துகொண்ட பின்னரே, அக்காரியத்தை ஆற்றுவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். இல்லையேல், காரியத்தை ஆற்றும்போது உண்டாகும் குறைபாட்டைப் பலர் நின்று குறைபாடு வராமல் காக்க முயன்றாலும் அக்காரியம் குறைபட்டே தீரும். இங்கே வருந்திச் செய்யும் முயற்சி வருத்தம் எனப்பட்டது. ‘பொத்துப்படும்’ என்பதற்கு ‘பொத்தல் உண்டாகும்’ என்பது பொருள். அதுவே இங்கு ‘குறை உண்டாகும்’ என்ற பொருளைத் தருகின்றது.



குறள் 469:

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

நன்றுஆற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.


சொல்லுரை:

நன்று - நன்மை

ஆற்றல்உள்ளும் - செய்வதிலும்

தவறுண்டு - குற்றம் உண்டாகும்

அவரவர் - அவரவர்களின்

பண்பறிந்து - பண்பினை ஆராய்ந்து அறிந்து

ஆற்றாக் - அதற்கேற்ப நன்மை செய்யாத

கடை - இடத்து


பொருளுரை:

அவரவர்களின் பண்பினை ஆராய்ந்து அறிந்து, அதற்கேற்ப நன்மை செய்யாதவிடத்து நன்மை செய்வதிலும் குற்றம் உண்டாகும்.


விளக்கவுரை:

ஒருவர் மற்றவர்க்கு நன்மையே செய்தாலும், அந்த செயலினால் ஏற்படும் இறுதி முடிவானது, அந்த நன்மை யாருக்குச் செய்யப்பட்டதோ அவர்களின் குணநலனைப் பொருத்தே அமையும். நல்ல குணநலன் இல்லாதவர்க்கு நன்மையைச் செய்வது, சில நேரத்தில், தீமை பயப்பதாகவும் அமையக்கூடும். ஆதலால், மற்றவர்க்கு நன்மை செய்ய முனையுங்காலத்து, தாம் செய்யும் நற்செயலால் மற்றவர்க்கும் அது நன்மை பயப்பனவாக அமையும்படி, மற்றவர்களின் குணமும் அதற்கேற்ப இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து அறிந்து செய்யவேண்டும்.



குறள் 470:

எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மோடு
கொள்ளாத கொள்ளா துலகு.

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.


சொல்லுரை:

எள்ளாத - உலகத்தார் இகழாத செயல்களை

எண்ணி - ஆராய்ந்து

செயல்வேண்டும் - செய்யவேண்டும்

தம்மோடு - தமது நிலைக்கு

கொள்ளாத - பொருந்தாத காரியத்தைச் செய்தால்

கொள்ளாது - ஏற்றுக்கொள்ளாது

உலகு - உலகம்


பொருளுரை:

உலகத்தார் இகழாத செயல்களை ஆராய்ந்து செய்யவேண்டும். தமது நிலைக்குப் பொருந்தாத காரியத்தைச் செய்தால் உலகம் ஏற்றுக்கொள்ளாது.


விளக்கவுரை:

ஒருவன் தன் நிலை என்னவோ அந்நிலைக்குத் தக்கவாறு, உலகம் இகழாத செயல்களை ஆராய்ந்து செய்திடல் வேண்டும். ஒருவன் செய்யும் காரியத்தில் குற்றமில்லை ஆயினும், அந்தக் காரியமானது தமது நிலைக்குத் தக்கது அல்லனவாயின், உலகத்தார் அவனை இகழ்ந்து பேசுவர். ஆதலால், தம் நிலைக்கேற்பவே செயலாற்ற வேண்டும்.



uline