அரசியல்

48. வலியறிதல்

( எல்லா வலிமைகளையும் ஆராய்ந்து செயல்படுதல் )

471. வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
        துணைவலியுந் தூக்கிச் செயல்.

472. ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
        செல்வார்க்குச் செல்லாத தில்.

473. உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
        யிடைக்கண் முரிந்தார் பலர்.

474. அமைந்தாங் கொழுகான் னளவறியான் தன்னை
        வியந்தான் விரைந்து கெடும்.

475. பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
        சால மிகுத்துப் பெயின்.

476. நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
        னுயிர்க்கிறுதி யாகி விடும்.

477. ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்
        போற்றி வழங்கு நெறி.

478. ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
        போகா றகலாக் கடை.

479. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல
        வில்லாகித் தோன்றாக் கெடும்.

480. உளவரை தூக்காத வொப்புர வாண்மை
        வளவரை வல்லைக் கெடும்.



குறள் 471:

வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.


சொல்லுரை:

வினைவலியும் - தான் செய்யக் கருதிய வினைக்கான வலிமையும்

தன்வலியும் - அதனை செய்து முடிக்க முனையும் தன்னுடைய வலிமையும்

மாற்றான் வலியும் - அதைத் தடுக்க வரும் எதிரியின் வலிமையும்

துணைவலியும் - தனக்கும் எதிரிக்கும் துணையாக வரக்கூடியவர்களின் வலிமையும்

தூக்கி - ஆகிய அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து

செயல் - அதில் தன்வலிமை மிக்கதாயின் அச்செயலைச் செய்க


பொருளுரை:

தான் செய்யக் கருதிய வினைக்கான வலிமையும், அதனை செய்து முடிக்க முனையும் தன்னுடைய வலிமையும், அதைத் தடுக்க வரும் எதிரியின் வலிமையும், தனக்கும் எதிரிக்கும் துணையாக வரக்கூடியவர்களின் வலிமையும் ஆகிய அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, அதில் தன்வலிமை மிக்கதாயின் அச்செயலைச் செய்க.


விளக்கவுரை:

வினைவலிமை, தன்வலிமை, மாற்றான் வலிமை, துணைவலிமை என்னும் நால்வகை வலிமையினுள் தன்வலி மிக்கு தோன்றுமாயின் வினைசெய்வதென்று தீர்மானிக்க வேண்டும். வினைவலி என்று கூறப்படுவது படையெடுத்துச் செல்லல், தாக்குதல், அரண் முற்றுதல், அரண் பற்றுதல் முதலியவை ஆகும்.



குறள் 472:

ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.

ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.


சொல்லுரை:

ஒல்வது - தம்மால் முடியுமான வினையையும்

அறிவது - அதற்கு அறிய வேண்டிய வலிமையையும்

அறிந்து - அறிந்து

அதன்கண் - எப்பொழுதும் மன மொழி மெய்களை அதன்கண்

தங்கி - வைத்து

செல்வார்க்கு - முயல்வார்க்கு

செல்லாதது - முடியாத காரியம் என்பது

இல் - இல்லை


பொருளுரை:

தம்மால் முடியுமான வினையையும், அதற்கு அறிய வேண்டிய வலிமையையும் அறிந்து, எப்பொழுதும் மன மொழி மெய்களை அதன்கண் வைத்து முயல்வார்க்கு முடியாத காரியம் என்பது இல்லை.


விளக்கவுரை:

தம்மால் எவ்வளவு வினையாற்ற முடியும் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும். தெளிவுற்றபின், தன்னுடைய எண்ணம், சொல், செயல் ஆகிய எல்லாவற்றையும் அவ்வினையின்மேல் வைத்துச் செயலாற்ற வேண்டும். அவ்வாறு வினை செய்வோர்க்கு, முடியாத காரியம் என்பது இல்லை என்பதாம்.



குறள் 473:

உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.


சொல்லுரை:

உடைத்தம் - தம்முடைய

வலியறியார் - வலிமையை அறியாதவர்

ஊக்கத்தின் - மன எழுச்சியினால்

ஊக்கி - ஒரு செயலிலே தள்ளப்பட்டு

இடைக்கண் - நடுவிலே, இடையிலே

முரிந்தார் - கெட்டுப்போனவர்கள்

பலர் - பலராவர்


பொருளுரை:

தம்முடைய வலிமையை அறியாதவர், மன எழுச்சியினால் ஒரு செயலிலே தள்ளப்பட்டுப் பின் நடுவிலே கெட்டுப்போனவர்கள் பலராவர்.


விளக்கவுரை:

தன்னுடைய வலிமையை முழுவதும் அறியாமல் ஆர்வத்தினால் ஒரு செயலிலே இறங்குதல் கூடாது. அவ்வாறு செய்தால், இடையிலேயே அவ்வினை தோல்வியுற்று முரிந்துவிடும் என்பதாம்.



குறள் 474:

அமைந்தாங் கொழுகா னளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.


சொல்லுரை:

அமைந்து - பொருந்தி

ஆங்கு - மற்றவரிடத்து

ஒழுகான் - நடவாதான்

அளவறியான் - தன்னுடைய வலிமையின் அளவு அறியாதான்

தன்னை - தன்னைத்தானே

வியந்தான் - பாராட்டிக் கொள்பவன்

விரைந்து - விரைவாக

கெடும் - கெடுவான்


பொருளுரை:

மற்றவரிடத்து பொருந்தி நடவாதவனும், தன்னுடைய வலிமையின் அளவு அறியாதவனும், , தன்னைத்தானே மெச்சிப் பாராட்டிக் கொள்பவனும் விரைவாகக் கெடுவான்.


விளக்கவுரை:

மற்றவர்களோடு இணங்கி நடவாமல் இருப்பதே மறைமுகமாக பகை உண்டாவதற்குக் காரணமாக அமைந்துவிடும். ஒருவன் தன்னுடைய வலிமையை நன்கு அறிந்தே பிறரிடம் நடந்துகொள்ளவேண்டும். தன்னுடைய வலிமையினை நன்கு அறியாமல், தன்னைத்தானே மிக வலிமையானவன் என்று மெச்சிக்கொள்வது விரைந்து கெடுவதற்கான வழியை உண்டாக்கிவிடும்.



குறள் 475:

பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.


சொல்லுரை:

பீலிபெய் - மயில் இறகை ஏற்றிய

சாகாடும் - வண்டியும், சகடமும்

அச்சிறும் - அச்சு முறியும்

அப்பண்டம் - அந்தப் பண்டம்

சால மிகுத்து - அளவுக்கு அதிகமாக

பெயின் - ஏற்றப்படுமாயின்


பொருளுரை:

மயில் இறகை ஏற்றிய வண்டி ஆயினும், அந்தப் பண்டம் அளவுக்கு அதிகமாக ஏற்றப்படுமாயின் அச்சு முறியும்.


விளக்கவுரை:

மயில்தோகை மெல்லியது என்று அதனை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும். அதுபோல, பகைவர்கள் எளியவர் என்று பலருடனும் பகை கொள்ளல் ஆகாது. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் தன்னை தோற்கடித்துவிடுவர்.



குறள் 476:

நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
னுயிர்க்கிறுதி யாகி விடும்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி ஆகி விடும்.


சொல்லுரை:

நுனிக்கொம்பர் - மரத்திலுள்ள உச்சிக்கொம்பின் நுனியிலே

ஏறினார் - ஏறி நிற்பவர்

அஃதுஇறந்து - அவ்வளவினைக் கடந்து

ஊக்கின் - மனவெழுச்சியினால் மேலும் ஏற முயல்வாராயின்

உயிர்க்கு - அவர் உயிருக்கு

இறுதி - இறுதியாய்

ஆகிவிடும் - முடியும்


பொருளுரை:

மரத்திலுள்ள உச்சிக்கொம்பின் நுனியிலே ஏறி நிற்பவர் அவ்வளவினைக் கடந்து மனவெழுச்சியினால் மேலும் ஏற முயல்வாராயின், அது அவருடைய உயிருக்கு இறுதியாய் முடியும்.


விளக்கவுரை:

பகைமேல் செல்பவன் தான் செல்லும் அளவு சென்றதோடு நில்லாமல், மன எழுச்சியின் காரணமாக மேலும் செல்ல முனைவானாயின், அவ்வாறான செயல் அவனின் உயிருக்கே இறுதி ஏற்படுத்திவிடும்.



குறள் 477:

ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

ஆற்றின் அளவுஅறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.


சொல்லுரை:

ஆற்றின் - பொருள் ஈயும் நெறிப்படி

அளவுஅறிந்து - தம்மிடம் இருக்கும் பொருளின் அளவு அறிந்து

ஈக - அதற்கேற்ப ஈகுக

அதுபொருள் - அங்ஙனம் ஈதல் பொருளை

போற்றி - பேணிக் பாதுகாத்து

வழங்கும் - பிறருக்கும் பொருளை ஈந்து

நெறி - வாழும் நெறியாகும்


பொருளுரை:

பொருள் ஈயும் நெறிப்படி, தம்மிடம் இருக்கும் பொருளின் அளவு அறிந்து அதற்கேற்ப ஈகுக. அங்ஙனம் ஈதல், பொருளைப் பேணிக் பாதுகாத்து பிறருக்கும் பொருளை ஈந்து வாழும் நெறியாகும்.


விளக்கவுரை:

ஒருவன் தன் வருவாய்க்கேற்ப செலவு செய்யவேண்டும் என்பது கருத்து. அரசனாயின், வருவாயை நான்கு கூறாக்கி, அவற்றில் இரண்டு கூற்றினை ஆட்சிச் செலவிற்கும், ஒரு கூறை எதிர்ப்பாராத செலவிற்கான வைப்பு ஆகவும், நான்காவது கூறை ஈதலுக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதாகும். பொருளை செலவு செய்யும் வகையறிந்து, அதிலிருந்து விலகாமல் செய்வதே பொருளைப் போற்றுதல் ஆகும். செலவு சுருக்கி வாழ்ந்தால் பொருள் ஒருபொழுதும் நீங்காது எனப்பட்டது.



குறள் 478:

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.

ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை
போகுஆறு அகலாக் கடை.


சொல்லுரை:

ஆகுஆறு - பொருள் வரும் வழியின், வருவாயின்

அளவுஇட்டிது - அளவு சிறிதாயிற்று

ஆயினும் - ஆயினும்

கேடில்லை - கெடுதல் இல்லை

போகுஆறு - செலவாகும் வழி

அகலா - பெரிதாகாமல்

கடை - இருக்குமிடத்து


பொருளுரை:

செலவாகும் வழி பெரிதாகாமல் இருக்குமிடத்து, பொருள் வரும் வழியின் அளவு சிறிதாயிற்று ஆயினும் கெடுதல் இல்லை.


விளக்கவுரை:

செலவு எப்பொழுதும் வரவைவிட அதிமாக இருக்கக்கூடாது. பொருள் வருவாயின் அளவு குறையுங்கால், அதற்கேற்ப செலவு செய்யும் அளவும் குறைக்கப்பட வேண்டும். ஒருவனுக்கு வரும் வருவாயின் அளவு குறைவதினால் கேடு உண்டாகிவிடாது. ஆனால், செலவிடும் அளவு வருவாயின் அளவைவிட மிகாமல் கட்டுக்குள் வைக்கவேண்டும்.



குறள் 479:

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல
வில்லாகித் தோன்றாக் கெடும்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.


சொல்லுரை:

அளவறிந்து - தனக்குள்ள பொருளின் அளவை அறிந்து

வாழாதான் - அதற்கேற்ப வாழாதவனின்

வாழ்க்கை - வாழ்க்கையானது

உளபோல - உள்ளதுபோல

இல்லாகி - பின்பு உண்மையில் இல்லாதாததாகி

தோன்றா - தோன்றி

கெடும் - கெட்டழியும்


பொருளுரை:

தனக்குள்ள பொருளின் அளவை அறிந்து அதற்கேற்ப வாழாதவனின் வாழ்க்கையானது உள்ளதுபோலத் தோன்றி பின்பு உண்மையில் இல்லாதாததாகி கெட்டழியும்.


விளக்கவுரை:

தனக்குள்ள பொருளின் அளவு அறிந்து வாழமாட்டாதவனின் வாழ்க்கையானது கெட்டழிந்து விடும் என்றார். அது எவ்வாறு எனில், முதலில் வாழ்க்கையானது நன்றாக இருப்பதுபோலத்தான் தோன்றும். ஆனால், அது ஒரு பொய்த்தோற்றமான வாழ்க்கையே. நாட்கள் செல்லச்செல்ல, பொருளின் அளவு குறையும்போது அவனுடைய வாழ்வின் வளமும் குறைந்துப் பின் இறுதியில் அழிந்துவிடும்.



குறள் 480:

உளவரை தூக்காத வொப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வளவரை வல்லைக் கெடும்.


சொல்லுரை:

உளவரை - தனக்குள்ள பொருளின் அளவை

தூக்காத - ஆராயாமல் செய்யப்படும்

ஒப்புரவாண்மை – உதவிச் செயல்களால்

வளவரை - பொருளின் அளவு

வல்லை - விரைந்து

கெடும் -. கெடும்


பொருளுரை:

தனக்குள்ள பொருளின் அளவை ஆராயாமல் செய்யப்படும் உதவிச் செயல்களால் பொருளின் அளவு விரைந்து கெடும்.


விளக்கவுரை:

தனக்குள்ள பொருளின் அளவினை ஆராயாமல் மேன்மேலும் உதவிசெய்தல் ஆகாது என்றார். அவ்வாறு செய்தால் பொருளின் அளவானது விரைந்து கெடும் என்றார். தனிப்பட்ட பெருஞ்செல்வந்தர் உதவி செய்வதாயினும், ஆட்சி செய்யும் அரசன் அரசுபொருளைக் கொண்டு உதவி செய்வதாயினும் அளவு அறிந்து செய்யவேண்டும் எனப்பட்டது. இவை பொருளைப் போற்றி வழங்கும் நெறியாகும்.



uline