481. பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
       
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
482. பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்
       
தீராமை யார்க்குங் கயிறு.
483. அருவினை யென்ப வுளவோ கருவியாற்
       
கால மறிந்து செயின்.
484. ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
       
கருதி யிடத்தாற் செயின்.
485. காலங் கருதி யிருப்பர் கலங்காது
       
ஞாலங் கருது பவர்.
486. ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்
       
தாக்கற்குப் பேருந் தகைத்து.
487. பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
       
துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.
488. செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை
       
காணிற் கிழக்காந் தலை.
489. எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
       
செய்தற் கரிய செயல்.
490. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
       
குத்தொக்க சீர்த்த விடத்து.
குறள் 481:
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
சொல்லுரை:
பகல்வெல்லும் - பகற்பொழுதில் வென்றுவிடும்
கூகையைக் - தன்னைவிட வலிமைமிக்க கோட்டானை
காக்கை - காக்கை
இகல்வெல்லும் - பகையை வெல்ல நினைக்கும்
வேந்தர்க்கு - அரசர்க்கு
வேண்டும் - உண்டாக வேண்டும்
பொழுது - அதற்கான காலம்
பொருளுரை:
தன்னைவிட வலிமைமிக்க கோட்டானை காக்கையானது பகற்பொழுதில் வென்றுவிடும். அதுபோல, பகையை வெல்ல நினைக்கும் அரசர்க்கு அதற்கான காலம் இன்றியமையாதது..
விளக்கவுரை:
தகுந்த காலம் இல்லாதபொழுது அரசனின் வலிமையால் பயனில்லை என்பதை விளக்கி நின்றது. வெம்மையுங் குளிரும் மிகாத காலநிலைப் பொழுதாகவும், தொற்று மற்றும் கொள்ளை நோய் பரவாத காலமாகவும், தண்ணீரும் உணவும் தாராளமாகக் கிடைக்கும் காலமாகவும் அமைந்து நால்வகைப் படையும் நலமாக பகைமேல் செல்ல ஏற்ற காலமாக அமைவது.
குறள் 482:
பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு.
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
சொல்லுரை:
பருவத்தோடு – காலத்தோடு
ஒட்ட - பொருந்துமாறு
ஒழுகல் - காரியத்தை செய்தல்
திருவினை - செல்வத்தை
தீராமை - நீங்காமல்
ஆர்க்கும் - கட்டும்
கயிறு - கயிறு
பொருளுரை:
காலத்தோடு பொருந்துமாறு காரியத்தை செய்தல் என்பதே ஒருவன், செல்வத்தைத் தன்னிடமிருந்து நீங்காமல் கட்டும் கயிறு ஆகும்.
விளக்கவுரை:
காலத்தோடு பொருந்துதல் என்பது காலம் தவறாமல் செய்தல் ஆகும். ‘தீராமை’ என்று கூறியதனால் பொருட்செல்வம் தீரும் தன்மையுடையது என்பதை உணர்த்திற்று. வினைகள் வெற்றியையே பெறுவதினால், செல்வம் ஒருபொழுதும் நீங்காது என்பது கருத்து.
குறள் 483:
அருவினை யென்ப வுளவோ கருவியாற்
கால மறிந்து செயின்.
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
சொல்லுரை:
அருவினை - செய்தற்கரிய வினை
என்ப - என்பது
உளவோ - உண்டோ
கருவியான் - செய்து முடிக்கத்தக்க கருவியால்
காலம் - செய்தற்கான காலம்
அறிந்து - அறிந்து
செயின் - செய்தால்
பொருளுரை:
செய்து முடிக்கத்தக்க கருவியால் செய்தற்கான காலம் அறிந்து செய்தால் செய்தற்கரிய வினை என்பது உண்டோ? இல்லை.
விளக்கவுரை:
கருவிகள் என்று கூறப்பட்டது மூவகை ஆற்றலும், நால்வகை உபாயங்களும் ஆகும். அவற்றோடு காலமும் வேண்டுமென்பதினால் ‘கருவியான்’ என்றார். இதனால் செய்யுங் காரியம் எளிதில் முடியும் என்பதாம்.
குறள் 484:
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி யிடத்தாற் செயின்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
சொல்லுரை:
ஞாலம் - உலகம் முழுவதையும்
கருதினும் - ஆள நினைத்தாலும்
கைகூடும் - அது கைவரப் பெறும்
காலம் - தக்க காலம்
கருதி - ஆராய்ந்து
இடத்தால் - செய்யத்தக்க இடத்தோடு
செயின் - பொருந்தி காரியத்தைச் செய்தால்
பொருளுரை:
தக்க காலத்தை ஆராய்ந்து காரியத்தை செய்யத்தக்க இடத்தோடு பொருந்திச் செய்தால், அரசன் இந்த உலகம் முழுவதையும் ஆள நினைத்தாலும் அது கைவரப் பெறும்.
விளக்கவுரை:
‘’ஞாலம் கருதினுங் கைகூடும்’ என்பது செய்து முடிப்பதற்கு அரிய காரியத்தையும் செய்து முடிக்கமுடியும் என்பதைக் குறித்தது. ‘இடத்தால்’ என்பது தக்க வாய்ப்பு ஏற்படும் இடத்தைக் குறித்தது.
குறள் 485:
காலங் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
சொல்லுரை:
காலம் - அதற்குரிய காலத்தை
கருதி - நினைத்து
இருப்பர் - காத்திருப்பர்
கலங்காது - தப்பாது
ஞாலம் - இந்த உலகம் முழுவதையும்
கருதுபவர் - தாம் கொள்ளக் கருதும் அரசர்
பொருளுரை:
இந்த உலகம் முழுவதையும் தப்பாது தாம் கொள்ளக் கருதும் அரசர், அதற்குரிய காலத்தை நினைத்துக் காத்திருப்பர்.
விளக்கவுரை:
‘ஞாலம் கருதுபவர்’ என்பது செய்வதற்கரிய காரியத்தைச் செய்ய முனைபவர் என்று பொருள்படும். தக்க காலம் வரும்போது ஒருவனின் வலிமையானது மேலும் மிகுதியாவதால் அக்காலத்திற்காகப் பதற்றமின்றிக் காத்திருப்பர் என்பதாம். இருத்தல் என்பது நட்பாக்கல், பகையாக்கல், மேற்செல்லல், இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அரசனின் அறுவகைக் குணங்களுள் ஒன்று.
குறள் 486:
ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
சொல்லுரை:
ஊக்கம் - மிக்க வலிமை
உடையான் - உடைய அரசன்
ஒடுக்கம் - தக்க காலத்திற்காக அடங்கியிருத்தல்
பொருதகர் - சண்டையிடும் ஆட்டுக்கடா
தாக்கற்குப் - பாய்ந்து தாக்கிட
பேருந் - பெயரும், பின்வாங்கி சென்றிடும்
தகைத்து - தன்மையைப் போன்றது
பொருளுரை:
மிக்க வலிமை உடைய அரசன் பகைமேற் செல்ல தக்க காலத்திற்காக அடங்கியிருத்தல், சண்டையிடும் ஆட்டுக்கடா தன் பகைக்கடா மீது பாய்ந்து தாக்கிட பின்வாங்கி சென்றிடும் தன்மையைப் போன்றது.
விளக்கவுரை:
‘ஒடுக்கம்’ சோம்பலால் உண்டானதில்லை என்பதனை உணர்த்த ‘ஊக்கமுடையான்’ என்றார். ஒடுக்கத்தின் தேவையும் சிறப்பும் ஆட்டுக்கடா பின்வாங்குதல் என்னும் உவமையால் உணர்த்தப்பட்டது.
குறள் 487:
பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
சொல்லுரை:
பொள்ளென - விரைவாக
ஆங்கே - அப்பொழுதே
புறம்வேரார் - புறத்திலே கோபத்தைக் காட்டமாட்டார்
காலம்பார்த்து – தாம் அவரை வெல்வதற்கேற்ற காலத்தை எதிர்பார்த்து
உள்வேர்ப்பர் - அக்காலம் வருமளவும் கோபத்தை உள்ளேயே கொண்டிருப்பர்
ஒள்ளியவர் - அறிவுள்ளவர்
பொருளுரை:
அறிவுள்ளவர் தன்னுடைய பகைவர் தீங்கு செய்த அப்பொழுதே விரைவாகக் கோபத்தை வெளியில் காட்டமாட்டார்; மாறாக, தாம் அவரை வெல்வதற்கேற்ற காலத்தை எதிர்பார்த்து, அக்காலம் வருமளவும் கோபத்தை உள்ளத்திலேயே கொண்டிருப்பர்.
விளக்கவுரை:
‘பொள்ளென’ என்பது விரைவுப் பொருளை உணர்த்த வந்த குறிப்பு மொழி. ‘வேர்த்தல்’ என்பது சினத்தால் மனம் புழுங்குதல். சினத்தை வெளிப்படையாகக் காட்டினால் பகைவர் தம்மை காத்துக்கொள்ளக்கூடும் என்பதாலும், உடனே துணைவலியோடு தாக்கக்கூடும் என்பதாலும் ‘புறம்வேரார்’ என்றார். சினத்தை அடியோடு அழித்தால் பகைவரை அடக்குதல் இயலாதது ஆகையால் ‘உள்வேர்ப்பர்’ என்றார்.
குறள் 488:
செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை
காணிற் கிழக்காந் தலை.
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
சொல்லுரை:
செறுநரை - பகைவரை
காணின் - கண்டால்
சுமக்க - தன் சினத்தை அடக்கி இருக்கவேண்டும்
இறுவரை - அவர் அழியும் காலம்
காணின் - தோன்றுமாயின்
கிழக்காம் - கீழே விழும்
தலை - தலை
பொருளுரை:
பகைவரைக் கண்டால் அவர் அழியும் காலம் வரும்வரை தன் சினத்தை அடக்கி பொறுத்து இருக்கவேண்டும். அவர் அழியும் காலம் தோன்றுமாயின் தலை கீழே விழும்.
விளக்கவுரை:
பகைவர் ஒழியும்வரை பகைமை வெளியில் தெரியுமாறு தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பொறுத்து இருக்கவேண்டும். பகைமை வெளியில் தெரிவது சினத்தாலும் தன் செய்கையாலும் ஆதலால் இவ்விரண்டையும் செய்யாமல் சுமந்து இருக்கவேண்டும் என்றார். பகைவரை அழித்தொழிக்கும் காலம் தொடங்கிவிட்டாலும் அதன் இறுதிக்காலம் வரை பொறுமையாக இருந்து, அழித்தொழிப்பதற்கான முழுக்காலமும் கனிந்தவுடன் பகைமேற் சென்றால் பகைவனை முற்றிலுமாக அழித்தொழிக்க முடியும்.
குறள் 489:
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்.
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.
சொல்லுரை:
எய்தற்கு - பெறுவதற்கு
அரியது - அரிதான காலம்
இயைந்தக்கால் - வந்து கூடிய காலத்து
அந்நிலையே - அந்த நிலையிலேயே, அப்பொழுதே
செய்தற்கு - செய்வதற்கு
அரிய - அரியதாய் இருக்கும்
செயல் - செயலை செய்து முடிக்கவேண்டும்
பொருளுரை:
பெறுவதற்கு அரிதான காலம் வந்து கூடிய காலத்து, அப்பொழுதே செய்வதற்கு அரியதாய் இருக்கும் செயலை செய்து முடிக்கவேண்டும்.
விளக்கவுரை:
தானாக அமைந்தாலொழிய மற்ற வகையால் பெறுவது இயலாதது ஆகையால் ‘எய்தற்கரியது’ என்றும், அது நேர்வது அரிதாகலின் ‘இயைந்தக்கால்’ என்றும், அது நீடித்து நில்லாத தன்மைத்து ஆதலின் ‘அந்நிலையே’ என்றும், அது நேராதவிடத்து செய்தற்கு இயலாமையின் ‘செய்தற் கரிய’ என்றும் கூறினார். இதனால், காலம் வாய்ந்தபோது விரைந்து செய்துமுடிக்கவேண்டும் என்று கூறப்பட்டது.
குறள் 490:
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
சொல்லுரை:
கொக்கொக்க – கொக்கைப்போல காத்திருக்கவேண்டும்
கூம்பும் - அடங்கியிருக்கும்
பருவத்து - காலத்து
மற்றுஅதன் - மற்றபடி அதனுடைய
குத்தொக்க - குத்தைபோல் இருக்கவேண்டும்,
சீர்த்த - பகையை வெல்ல சிறந்த காலம்
இடத்து - வருமிடத்து
பொருளுரை:
பகையை வெல்ல அடங்கியிருக்கும் காலத்து, கொக்கைப்போல காத்திருக்கவேண்டும். மற்றபடி, பகையை வெல்ல சிறந்த காலம் வருமிடத்து, அதனுடைய குத்தைபோல் தப்பாமல் செய்து முடிக்கவேண்டும்.
விளக்கவுரை:
தக்க காலத்தைக் கருதி கொக்கு தன் இரையான மீனிற்காக அசைவற்றுக் காத்திருப்பதைப்போல, பகைவரை அழிக்க முனைவோர் அதற்கான காலம் வரும்வரை பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். அதற்கான காலம் வந்தவிடத்து சிறிதும் தாமதியாமல் விரைந்து பகையை அழித்தொழிக்க வேண்டும்.