அரசியல்

50. இடனறிதல்

( வலிமையும் காலமும் அறிந்து பகைமேல் செல்பவன் பகை வெல்லுவதற்கான பாதுகாப்புமிக்க இடத்தையும் அறிந்து செல்லவேண்டும் என்பது இவ்வதிகாரத்தால் கூறப்பட்டது.அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.)

491. தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று
        மிடங்கண்ட பின்னல் லது.

492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா
        மாக்கம் பலவுந் தரும்.

493. ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து
        போற்றார்கட் போற்றிச் செயின்.

494. எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
        துன்னியார் துன்னிச் செயின்.

495. நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி
        னீங்கி னதனைப் பிற.

496. கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு
        நாவாயு மோடா நிலத்து.

497. அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை
        யெண்ணி யிடத்தாற் செயின்.

498. சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
        னூக்க மழிந்து விடும்.

499. சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த
        ருறைநிலத்தோ டொட்ட லரிது.

500. காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா
        வேலாண் முகத்த களிறு.



குறள் 491:

தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று
மிடங்கண்ட பின்னல் லது.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.


சொல்லுரை:

தொடங்கற்க - (தொடங்கு+அல்+க) தொடங்காதே

எவ்வினையும் - எந்த ஒரு வினையையும்

எள்ளற்க - இகழாதே

முற்றும் - பகைவரை முற்றுகை செய்வதற்கு தகுதியான

இடங்கண்டபின் - இடத்தினை கண்டெடுத்தபின்

அல்லது - அல்லாமல்


பொருளுரை:

பகைவரை முற்றுகை செய்வதற்குத் தகுதியான இடத்தினைக் கண்டெடுப்பதற்கு முன்னால், அவர்மாட்டு யாதொரு வினையும் தொடங்காதே. அதுமட்டுமல்லாமல், அவரைச் சிறியார் என்று இகழ்வதும் கூடாது.


விளக்கவுரை:

முற்றுதல் என்பது முற்றுகையிடுவது அல்லது வளைத்தல். அதற்குத் தகுந்த இடமென்பது பகைவனை முற்றுகையிட்டு அழிக்கத்தகுந்த இடத்தினை முதலில் தேர்வு செய்வது ஆகும். அவ்வாறு இடத்தினை தேர்வு செய்த பின்னரே, பகைவனுக்கு எதிரான தன்னுடைய வினைகளை ஆற்றத்தொடங்க வேண்டும். பகைவரைச் சிறியார் என்றோ, வெல்வது எளிது என்றோ இகழ்ச்சியாக இருந்துவிடவும் கூடாது.முற்றுதல் என்பது முற்றுகையிடுவது அல்லது வளைத்தல். அதற்குத் தகுந்த இடமென்பது பகைவனை முற்றுகையிட்டு அழிக்கத்தகுந்த இடத்தினை முதலில் தேர்வு செய்வது ஆகும். அவ்வாறு இடத்தினை தேர்வு செய்த பின்னரே, பகைவனுக்கு எதிரான தன்னுடைய வினைகளை ஆற்றத்தொடங்க வேண்டும். பகைவரைச் சிறியார் என்றோ, வெல்வது எளிது என்றோ இகழ்ச்சியாக இருந்துவிடவும் கூடாது.



குறள் 492:

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா
மாக்கம் பலவுந் தரும்.

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.


சொல்லுரை:

முரண்சேர்ந்த - மாறுபாட்ட பலவிதமான

மொய்ம்பினவர்க்கும் - வலிமைகளை உடையவர்க்கும்

அரண்சேர்ந்தாம் - தான் வினையாற்றப்போகும் இடம் பாதுகாப்பானது என்றால்

ஆக்கம் - செல்வம்

பலவுந் - பலவற்றையும்

தரும் - கொடுக்கும்


பொருளுரை:

மாறுபாட்ட பலவிதமான வலிமைகளை உடையவர்க்கும், தான் வினையாற்றப்போகும் இடம் பாதுகாப்பானது என்றால், அது செல்வம் பலவற்றையும் கொடுக்கும்.


விளக்கவுரை:

பகைமேற்செல்லும் அரசனாயினும், வினையாற்ற முனையும் தனிமனிதனாயினும், தான் வினையாற்றும் இடம் தனக்கு பாதுகாப்பு உடைய இடம் என்றால் அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும். பலவிதமான வலிமைகளை உடையவனாயினும், தான் வினையாற்றப்போகும் இடம் தனக்கு பாதுகாப்பானது என்பதே முக்கியமானதாகும். ஆக்கம் என்பது பகைவரால் தமக்கு நலிவில்லை என்பதைக் குறிக்கிறது. முரண் என்றால் மாறுபாடு, மொய்ம்பு என்றால் வலி.



குறள் 493:

ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின்.

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.


சொல்லுரை:

ஆற்றாரும் - வலிமை இல்லாதவரும்

ஆற்றி - வலிமை பெற்று

அடுப - வெற்றி பெறுவர்

இடனறிந்து - தக்க இடம் அறிந்து

போற்றார்கண் - பகைவர் இடத்து

போற்றி - தம்மைப் பாதுகாத்துக் கொண்டு

செயின் - தம் காரியத்தைச் செய்வாராயின்


பொருளுரை:

தக்க இடம் அறிந்து, பகைவர் இடத்துத் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு தம் காரியத்தை ஒருவர் செய்வாராயின், அவர் வலிமை இல்லாதராயினும் வேண்டிய வலிமை பெற்று காரியத்தில் வெற்றி பெருவர்.


விளக்கவுரை:

தக்க இடத்தை அறிந்து, தன்னை நிலை நிறுத்திக்கொண்டு, பகைவரிடத்தில் இருந்து தாம் பாதுகாப்பாக உள்ளோம் என்பதை உறுதி செய்த பிறகே தம்முடைய காரியத்தை ஒருவர் ஆற்றவேண்டும். அதுவே, ஒருவரின் வெற்றிக்கு வழியை அமைத்துத்தரும். தன்னுடைய படைவலிமை சிறியதாயினும், தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்து பகைவர்மீது போர்செய்யும் அரசனுக்கு, அது வெற்றியைத் தேடித்தரும் என்பதாகும். ஒருவனுடைய வலிமையைவிட தகுதியான இடமானது வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்பது இதனால் கூறப்பட்டது.



குறள் 494:

எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.


சொல்லுரை:

எண்ணியார் - அவரை வெல்ல நினைத்திருந்த பகைவர்

எண்ணம் - அந்த எண்ணத்தை

இழப்பர் - விட்டுவிடுவர்

இடனறிந்து - தகுந்த இடம் அறிந்து

துன்னியார் - சென்றவர்

துன்னி - அவ்விடத்தோடு பொருந்தியே நின்று

செயின் - செயற்பட்டால்


பொருளுரை:

தாம் வினையாற்றத் தகுந்த இடம் அறிந்து சென்றவர், அவ்விடத்தோடு பொருந்தியே நின்று செயற்பட்டால், அவரை வெல்ல நினைத்திருந்த பகைவர் அந்த எண்ணத்தை விட்டுவிடுவர்.


விளக்கவுரை:

பாதுகாப்பான இடமாகத் தேர்வு செய்து, அவ்விடத்திலிருந்து வினையாற்றலே ஒருவருக்கு வெற்றியைத் தரும் என்பதாகும் . வென்றுவிடுவோம் என்று நினைக்கும் பகைவனும்கூட அந்த எண்ணத்தை நழுவவிட்டுவிடுவர். பகைவனுக்குத் தோல்வியைத் தரும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று . தக்க இடமறிந்து செயலாற்றலின் சிறப்பு இது .



குறள் 495:

நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி
னீங்கி னதனைப் பிற.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.


சொல்லுரை:

நெடும்புனலுள் - ஆழமாகவும் அகன்றதாகவும் உள்ள நீர்நிலையில்

வெல்லும் - பிற உயிரினங்களை வென்றுவிடும்

முதலை - முதலை

அடும் - வெல்லும்

புனலின் - நீர்நிலையிலிருந்து

நீங்கின் - நீங்கித் தரைக்கு வருமானால்

அதனை - அம்முதலையை

பிற - பிற உயிரினங்கள்


பொருளுரை:

முதலை ஆழமாகவும் அகன்றதாகவும் உள்ள நீர்நிலையில் இருக்கும்போது பிற உயிரினங்களை வென்றுவிடும். ஆனால், நீர்நிலையிலிருந்து நீங்கித் தரைக்கு வருமானால், அம்முதலையை பிற உயிரினங்கள் வெல்லும்.


விளக்கவுரை:

நீரும் நிலமும் வெவ்வேறு தன்மை கொண்ட இடங்களாகும் . இடத்தின் தன்மைக்கேற்ப வலிமையும் மாறுபடும். நீரில் வாழும் முதலைக்கு நீரில் இருக்கும்வரை மற்ற உயிரினங்களை வெல்லும் பலம் அதிகமாக இருப்பதுபோல, தக்க இடமறிந்து பகைமேல் செல்பவர்க்கும் வெற்றி எளிதாகும் என்பதாகும். அவ்வாறின்றி, தக்க இடம் நோக்காமல் பகைமேல் சென்றால், நீரிலிருந்து நீங்கி நிலத்தில் வந்த முதலையை வலிமை குன்றிய நிலத்தில் வாழும் விலங்குகளும் வென்றுவிடுவதுபோல, வலிமை குன்றிய பகைவராலும் தாம் வெல்லப்படுவோம் என்பதாம்.



குறள் 496:

கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு
நாவாயு மோடா நிலத்து.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.


சொல்லுரை:

கடலோடா - கடலில் ஒடாது

கால்வல் - வலிமையான சக்கரக்கால்களையுடைய

நெடுந்தேர் - பெரிய தேரும்

கடலோடும் - கடலில் ஓடும்

நாவாயும் - கப்பலும்

ஓடா - ஓடாது

நிலத்து - நிலத்தில்


பொருளுரை:

வலிமையான சக்கரக்கால்களையுடைய பெரிய தேரும் கடலில் ஒடாது. கடலில் ஓடும் கப்பலும் நிலத்தில் ஓடாது.


விளக்கவுரை:

ஒவ்வொரு இடமும் நாடும் வெவ்வேறு தன்மை கொண்டவையாக இருக்கும் . மலையால் சூழப்பட்ட நாடும் உண்டு. காட்டால் சூழப்பட்ட நாடும் உண்டு. கடலால் சூழப்பட்ட நாடும் உண்டு. பாலைவனத்தால் சூழப்பட்ட நாடும் உண்டு. அதுபோல ஒவ்வொரு இடத்தின் தன்மையும் வெவ்வேறானதாக இருக்க வாய்ப்புண்டு. ஓரிடத்தில் வலிமை உடைய பொருளானது மற்றொரு இடத்தில் வலிமை அற்ற பொருளாக இருக்கும். ஆதலால் பகைமேல் செல்லுவோர், தான் மிகப்பெரும் வலிமை உடையவராயினும், இடத்தின் தன்மை அறிந்து செயலாற்ற வேண்டும். இதனையே நிலத்தின்மேல் செல்லும் வலிமையான தேரானது நீரில் செல்ல தகுதியற்றதாகவும், நீரில் செல்லும் வலிமையான கப்பல் நிலத்தில் செல்ல தகுதியற்றதாகவும் இருக்கும் உவமைமூலம் வள்ளுவர் விளக்குகிறார்.



குறள் 497:

அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை
யெண்ணி யிடத்தாற் செயின்.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.


சொல்லுரை:

அஞ்சாமை - அஞ்சாமை

அல்லால் - தவிர

துணைவேண்டா - வேறுதுணை வேண்டியதில்லை

எஞ்சாமை - குறைவின்றி

எண்ணி - ஆராய்ந்து

இடத்தால் - தக்க இடத்திலே

செயின் - காரியத்தைச் செய்தால்


பொருளுரை:

குறைவின்றி ஆராய்ந்து தக்க இடத்திலே காரியத்தைச் செய்தால், ஒருவருக்கு அஞ்சாமை தவிர வேறுதுணை வேண்டியதில்லை.


விளக்கவுரை:

அஞ்சாமையும் தக்க இடனறிந்து செயலாற்றலும் ஒருவனின் வெற்றிக்கு இன்றியமையாதன என்பது வலியுறுத்தப்பட்டது. தக்க இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது குறைவின்றி ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும் என்பதும் முக்கியமாகும் . தக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டபின் வெற்றிக்குத் தேவையானது அஞ்சாமை ஒன்று மட்டுமே ஆகும். மற்றவை எல்லாம் அவ்வளவு முக்கியமானது அல்ல . அஞ்சாமையின் முக்கியத்துவம் இக்குறளில் ஓங்கி ஒலிக்கிறது.அஞ்சாமையும் தக்க இடனறிந்து செயலாற்றலும் ஒருவனின் வெற்றிக்கு இன்றியமையாதன என்பது வலியுறுத்தப்பட்டது. தக்க இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது குறைவின்றி ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும் என்பதும் முக்கியமாகும் . தக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டபின் வெற்றிக்குத் தேவையானது அஞ்சாமை ஒன்று மட்டுமே ஆகும். மற்றவை எல்லாம் அவ்வளவு முக்கியமானது அல்ல . அஞ்சாமையின் முக்கியத்துவம் இக்குறளில் ஓங்கி ஒலிக்கிறது.



குறள் 498:

சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும்.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.


சொல்லுரை:

சிறுபடையான் - சிறிய படையை உடையவனும்

செல்லிடம் - தனக்குச் செல்வாக்குள்ள இடத்தில், செல்லுபடியாகும் இடம்

சேரின் - சேர்ந்திருந்து போர் புரிய முனைவானாயின்

உறுபடையான் - பெரிய படையை உடையவனின்

ஊக்கம் - பெருமை

அழிந்து - அழிந்து

விடும் - விடும்


பொருளுரை:

சிறிய படையை உடையவனும் தனக்குச் செல்வாக்குள்ள இடத்தில் சேர்ந்திருந்து போர் புரிய முனைவானாயின் பெரிய படையை உடையவனின் பெருமை அழிந்து விடும்.


விளக்கவுரை:

அரசனுக்குத் தன்னுடைய படை அளவில் சிறியதாக இருப்பது ஒரு பெரும் குறையல்ல. ஆனால் அப்படை எவ்விடத்திலிருந்து செயலாற்றுகிறது என்பதே இன்றியமையாதது. படை சிறியதாயினும் தனக்குச் சாதகமான இடத்திலிருந்து போர் செய்யுமாயின், அளவில் பெரிய படையை வைத்திருக்கும் எதிரியையும் தோற்கடிக்கும் . வெற்றி என்பது பெரும்பாலும் இடத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.



குறள் 499:

சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த
ருறைநிலத்தோ டொட்ட லரிது.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.


சொல்லுரை:

சிறைநலனும் - பாதுகாப்பான அரணும்

சீரும் - வலிமை மிகுந்த ஆற்றலும்

இலரெனினும் - இல்லாதவர் என்றாலும்

மாந்தர் - அந்த மனிதரை

உறைநிலத்தோடு - அவர் வாழும் இடத்தில் சென்று

ஒட்டல் - வெல்லுதல்

அரிது - அரிதாகும்.


பொருளுரை:

பாதுகாப்பான அரணும் வலிமை மிகுந்த ஆற்றலும் இல்லாதவர் என்றாலும், அந்த மனிதரை அவர் வாழும் இடத்தில் சென்று வெல்லுதல் அரிதாகும்.


விளக்கவுரை:

ஒருவன் வலிமை குன்றியவனாக இருக்கலாம் . தகுந்த பாதுகாப்பு அரண் இல்லாதவனாகவும் இருக்கலாம். ஆனால், பகைவர் இதனை தனக்குச் சாதகம் எனக்கருதி ஒருவன் இருக்கும் இடத்திற்கே சென்று அவனை வெல்வது எளிதன்று . ஏனெனில் , தன்னுடைய இடத்திலிருந்து பகைவரை எதிர்கொள்கிறோம் என்ற எண்ணமே ஒருவருக்குத் தகுந்த ஊக்கத்தை அளித்து பகைவரை அழிக்கும் திறனையும் கொடுக்கும்.



குறள் 500:

காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு.

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.


சொல்லுரை:

காலாழ் - கால்கள் ஆழுகின்ற, கால்கள் புதைகின்ற

களரில் - களர் நிலத்தில், சேற்று நிலத்தில்

நரியடும் - நரிகள் வென்றுவிடும்

கண்ணஞ்சா - பகைவர்க்கு அஞ்சாமல்

வேலாள் - வேலேந்திய ஆட்களை

முகத்த - தன் கோட்டில் கோத்துத் தூக்கிவரும்

களிறு - யானையை


பொருளுரை:

பகைவர்க்கு அஞ்சாமல் வேலேந்திய ஆட்களைத் தன் கோட்டில் கோத்துத் தூக்கிவரும் யானையே ஆயினும், அதன் கால்கள் புதைகின்ற சேற்று நிலத்தில் சிக்கிக்கொண்டால், சிறிய நரிகளும் அதனை வென்றுவிடும்.


விளக்கவுரை:

வலிமையுடைய படை ஆயினும் தகுந்த இடமறிந்து போர் புரியவில்லை என்றால் சிறிய படையாலும் தோற்கடிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்ற உண்மை எடுத்துரைக்கப்படுகிறது. சேற்று நிலத்தில் சிக்கிய வலிமையான யானையை சிறு நரிகள் வென்றுவிடும் என்ற உவமைமூலம் இது விளக்கப்பட்டது .



uline