அரசியல்

51. தெரிந்து தெளிதல்

( வினைக்குரியவனைத் தீர ஆராய்ந்து தெளிந்தபின்னரே வினையாற்றத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது இவ்வதிகாரத்தால் கூறப்பட்டது. வலி முதல் மூன்றால் ஆராய்வது மட்டுமின்றி, வினைக்குரியவனையும் ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்றவாறு. அதிகார முறைமையும் இதனால் விளங்கும். )

501. அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின்
        திறந்தெரிந்து தேறப் படும்.

502. குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியு
        நாணுடையான் கட்டே தெளிவு.

503. அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
        லின்மை யரிதே வெளிறு.

504. குணம்நாடிக் குற்றமு நாடி யவற்றுண்
        மிகைநாடி மிக்க கொளல்.

505. பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
        கருமமே கட்டளைக் கல்.

506. அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
        பற்றிலர் நாணார் பழி.

507. காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
        பேதைமை யெல்லாந் தரும்.

508. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
        தீரா விடும்பை தரும்.

509. தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபிற்
        தேறுக தேறும் பொருள்.

510. தேரான் றெளிவும் தெளிந்தான்க ணையுறவுந்
        தீரா விடும்பை தரும்.



குறள் 501:

அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.


சொல்லுரை:

அறம் - அறமும்

பொருள் - பொருளும்

இன்பம் - இன்பமும்

உயிரச்சம் - உயிர்க்கேட்டிற்கு அச்சப்படுதலும்

நான்கின் - ஆகிய நான்கின்

திறந்தெரிந்து - வகையாலும் ஆராய்ந்து

தேறப்படும் - அதன்பின்னரே ஒருவனைச் செயலாற்றுவதற்குத் தேர்வு செய்யவேண்டும்


பொருளுரை:

அறமும், பொருளும், இன்பமும், உயிர்க்கேட்டிற்கு அச்சப்படுதலும் ஆகிய நான்கின் வகையாலும் ஆராய்ந்து, அதன்பின்னரே ஒருவனைச் செயலாற்றுவதற்குத் தேர்வு செய்யவேண்டும்


விளக்கவுரை:

ஒருவனைச் செயலாற்றுவதற்குத் தேர்வு செய்யும்பொழுது, தேர்வு செய்யப்படுவோனின் அறம் பிழையாமை, தீய வழியில் பொருள் கொள்ளுதற்கு அஞ்சுதல், முறையற்ற வழியில் இன்பம் துய்க்க விழையாமை, உயிருக்கு உண்டாகும் கேட்டிற்கு அஞ்சி தவறு செய்யாமை ஆகிய தன்மைகளை ஆராய்ந்து தெளிந்தபின்னரே தேர்வு செய்யவேண்டும்.



குறள் 502:

குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு.

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.


சொல்லுரை:

குடிப்பிறந்து - நற்குடியில் பிறந்து

குற்றத்தின் - குற்றச் செயல்களிலிருந்து

நீங்கி - விலகி

வடுப் பரியும் - பழிக்கு அஞ்சும்

நாணுடையான் - நாணமுடையவன்

சுட்டே - இடத்தே

தெளிவு - தெளிந்து நம்பிக்கை வைக்கவேண்டும்


பொருளுரை:

நற்குடியில் பிறந்து, குற்றச் செயல்களிலிருந்து விலகி, பழிக்கு அஞ்சும் நாணமுடையவனிடம் மட்டுமே தெளிந்து நம்பிக்கை வைக்கவேண்டும்.


விளக்கவுரை:

ஒழுக்கத்தை உயிராகப் பேணும் நற்குடியில் பிறந்து, சான்றோர்களாலும் அறநூல்களாலும் குற்றச் செயல்களாகக் கூறப்பட்டவைகளிலிருந்து விலகி, தான் செயலாற்றும்பொழுது அது முறையற்றதானால் அதனால் தனக்குப் பழி நேர்ந்துவிடுமோ என்று அஞ்சும் நாணமுடையவனின் இடத்தே தெளிவுடன் நம்பிக்கை வைத்தல் வேண்டும்.



குறள் 503:

அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
லின்மை யரிதே வெளிறு.

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.


சொல்லுரை:

அரியகற்று - கற்றற்கு அரிய நூல்களைக் கற்று

ஆசற்றார் - குற்றம் அற்றவர்

கண்ணும் - இடத்தும்

தெரியுங்கால் - ஆராய்ந்து பார்க்குங்கால்

இன்மை - இல்லாது இருத்தல்

அரிதே - அரிதானது ஆகும்

வெளிறு - வெண்மை, அறியாமை

பொருளுரை:

கற்றற்கு அரிய நூல்களைக் கற்றுத்தேர்ந்து குற்றமின்றி வாழ்வோரிடத்தும் நுட்பமாக ஆராய்ந்து பார்க்குங்கால், அறியாமை சிறிதளவும் இல்லாது இருத்தல் அரிதானது ஆகும்.


விளக்கவுரை:

அரிய நூல்களை கற்றுத் தேர்ந்து ஒழுகுவோர், குற்றங்கள் நீங்கி ஒழுகுவதே இயல்பு. அத்தகையோரிடத்தும் மிகச் சிறிய அறியாமை இருப்பதும் உண்டு. வினையாற்றத் தேர்வு செய்யும்போது, இச்சிறு அறியாமையால் அவர்களை ஒதுக்கலாகாது. அவர்களின் உயர்ந்த குணங்களின் மாட்டு தெளிவு கொண்டு செயலில் ஈடுபடுத்த வேண்டும் என்பதாம்.அரிய நூல்களை கற்றுத் தேர்ந்து ஒழுகுவோர், குற்றங்கள் நீங்கி ஒழுகுவதே இயல்பு. அத்தகையோரிடத்தும் மிகச் சிறிய அறியாமை இருப்பதும் உண்டு. வினையாற்றத் தேர்வு செய்யும்போது, இச்சிறு அறியாமையால் அவர்களை ஒதுக்கலாகாது. அவர்களின் உயர்ந்த குணங்களின் மாட்டு தெளிவு கொண்டு செயலில் ஈடுபடுத்த வேண்டும் என்பதாம்.



குறள் 504:

குணம்நாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.


சொல்லுரை:

குணம்நாடி - ஒருவனின் குணங்களை ஆராய்ந்து

குற்றமும் நாடி - அவனுடைய குற்றங்களையும் ஆராய்ந்து

அவற்றுள் - அவைகளில்

மிகைநாடி - மிகுந்தது எது என்பதனை ஆராய்ந்து

மிக்க - மிகுந்தவை எவையோ அதன்மூலம்

கொளல் - தெரிந்து கொள்ளல் வேண்டும்


பொருளுரை:

ஒருவனின் குணங்களை ஆராய்ந்து, மற்றும் அவனுடைய குற்றங்களையும் ஆராய்ந்து, அவைகளில் மிகுந்தது எது என்பதனை ஆராய்ந்து, அதில் மிகுந்தவை எவையோ அதன்மூலமே ஒருவனைத் தெரிந்து கொள்ளல் வேண்டும்..ஒருவனின் குணங்களை ஆராய்ந்து, மற்றும் அவனுடைய குற்றங்களையும் ஆராய்ந்து, அவைகளில் மிகுந்தது எது என்பதனை ஆராய்ந்து, அதில் மிகுந்தவை எவையோ அதன்மூலமே ஒருவனைத் தெரிந்து கொள்ளல் வேண்டும்..


விளக்கவுரை:

மானிடர் இயல்பானது குணம் மற்றும் குற்றங்களை சேர்ந்தே பெற்றிருத்தலால், குணங்களையும் குற்றங்களையும் ஒருங்கே ஆராய்ந்து, அவற்றில் குணமே மிகுந்திருப்பின் அவனை வினைக்குரியவனாக்க வேண்டும் எனவும், குற்றம் மிகுந்திருப்பின் வினைக்குரியன் அல்லன் எனவும் தெளிதல் வேண்டும்.



குறள் 505:

பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.


சொல்லுரை:

பெருமைக்கும் - ஒருவன் அடையும் பெருமைக்கும்

ஏனைச் - மற்றைய

சிறுமைக்கும் - சிறுமை நிலைக்கும்

தத்தம் - அவரவர்

கருமமே - செயலாற்றும் வினைகளே

கட்டளைக்கல் - உரைகல்


பொருளுரை:

ஒருவன் அடையும் பெருமைக்கும் மற்றையச் சிறுமை நிலைக்கும் அவரவர் செயலாற்றும் வினைகளே உரைகல் ஆகும்.ஒருவன் அடையும் பெருமைக்கும் மற்றையச் சிறுமை நிலைக்கும் அவரவர் செயலாற்றும் வினைகளே உரைகல் ஆகும்.


விளக்கவுரை:

பொன்னின் தரம் அறிய உரைகல் பயன்படுவதுபோல, ஒருவனின் வினையாற்றும் திறத்தினாலேயே, பெருமை நிலை அடைவதும், சிறுமை நிலை அடைவதும் ஏற்படுவதால், அவனாற்றும் அவ்வினையே அவன் அடைந்திருக்கும் நிலை அறியும் உரைகல் ஆகும்.



குறள் 506:

அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.


சொல்லுரை:

அற்றாரை - சுற்றம் இல்லாதவரை

தேறுதல் - வினையாற்றுவதற்குக் தேர்ந்தெடுப்பதை

ஓம்புக - தவிர்த்தலைக் காக்கவேண்டும்

மற்றவர் - அவர்கள்

பற்றிலர் - உலகத்தாரோடு தொடர்பற்றவர் ஆதலின்

நாணார் - அஞ்சமாட்டார்கள்

பழி - பழிக்கு


பொருளுரை:

சுற்றம் இல்லாதவரை வினையாற்றுவதற்குக் தேர்ந்தெடுக்காது ஒழியவேண்டும். அவர்கள் உலகத்தாரோடு தொடர்பற்றவர் ஆதலின், பழிக்கு அஞ்சமாட்டார்கள்.


விளக்கவுரை:

உலகத்தவர் பழி தருவன என்று கூறியவற்றைச் செய்யாது ஒழிவதற்கும், புகழ் தருவன என்று கூறியவற்றைச் செய்வதற்கும் ஏதுவாகிய உலகநடையியல்பு சுற்றமில்லாதவற்கு இல்லையாதலால், அத்தகைய சுற்றமில்லாதவரை வினையாற்றத் தேர்ந்தெடுக்காது ஒழியவேண்டும்.



குறள் 507:

காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்.

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.


சொல்லுரை:

காதன்மை - அன்புடைமையையே

கந்தா - ஆதாரமாகக் கொண்டு

அறிவறியார்த் - அறியவேண்டியவற்றை அறியாதவர்களை

தேறுதல் - வினையாற்றத் தேர்ந்தெடுத்தல்

பேதைமை - அறியாமையால் வரும் தீமைகள்

எல்லாந் - எல்லாவற்றையும்

தரும் - கொடுக்கும்


பொருளுரை:

ஒருவர்மீது கொண்டுள்ள பேரன்பு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு, அவர் அறிய வேண்டியவற்றை அறியாதவராய் இருப்பினும், அவரை வினையாற்றத் தேர்ந்தெடுத்தல், அறியாமையால் வரும் தீமைகள் எல்லாவற்றையும் கொடுக்கும்.


விளக்கவுரை:

காதன்மை கந்தா என்பது ஒருவர்மீது ஒருவர் வைத்த காதலுடைமையே மூலமாக என்றவாறு. அறிவறியார் என்பவர் இவ்வுலகில் அறியவேண்டியவற்றை அறிந்து தேர்ச்சி பெறாதிருக்கும் அறிவிலார். அத்தகைய அறிவிலாரை, அன்பின் காரணமாக மட்டுமே வினையாற்றத் தேர்ந்தெடுத்தால் அறியாமையால் விளையுந் தீங்குகள் பலவற்றையும் உண்டாக்கும்.



குறள் 508:

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.


சொல்லுரை:

தேரான் - ஆராயாமல்

பிறனைத் - தனக்குத் தொடர்பு இல்லாத ஒருவனை

தெளிந்தான் - வினைக்குத் தேர்ந்தெடுத்தவனின்

வழிமுறை - அவன் குடி வந்தவர்க்கும்

தீரா - நீங்காத

இடும்பை - துன்பத்தை

தரும் - கொடுக்கும்


பொருளுரை:

ஒருவன் தனக்குத் தொடர்பு இல்லாத ஒருவனை ஆராயாமல் வினைக்குத் தேர்ந்தெடுத்தால், அது அவனுக்கு மட்டுமின்றி, அவன் குடி வந்தவர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.


விளக்கவுரை:

தனக்குத் தொடர்பு இல்லாத ஒருவனை வினையாற்றத் தேர்ந்தெடுக்கும்பொழுது எல்லாவகையிலும் தீர ஆராய்ந்து தெளிதல் மிகவும் இன்றியமையாதது. இல்லையென்றால், அது அவன் வழிவரும் குடி இனத்தையே அழிக்கும் நிலைக்கும் தள்ளப்படும்.



குறள் 509:

தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபிற்
தேறுக தேறும் பொருள்.

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.


சொல்லுரை:

தேறற்க - தெளியாது இருக்க

யாரையும் - எவரையும்

தேராது - ஆராயாது

தேர்ந்தபின் - ஆராய்ந்து தெளிந்தபின்

தேறுக - தெளிக

தேறும் - அவர் வல்லமைக்கு ஏற்றது என்று தெளிந்த

பொருள் - வினையை


பொருளுரை:

ஒருவரையும் ஆராயாமல் செயலாற்றத் தேர்ந்தெடுக்கக்கூடாது. ஒருவரை ஆராய்ந்து தேர்ந்தெடுத்தபின், எவ்வித ஐயமுமின்றி, அவர் வல்லமைக்கு ஏற்றது என்று தெளிந்த வினையை அவர்மாட்டு செய்தற்கு நம்பி விடவேண்டும்.


விளக்கவுரை:

ஆராயாமல் யாரையும் வினையாற்றத் தேர்வு செய்தல் கூடாது என்பதும், ஆராய்ந்து தேர்ந்தபின் வினையாற்ற விடுவதற்கு ஐயம் கொள்ளுதல் கூடாது என்பதும் இக்குறள் மூலம் வலியுறுத்தப்படுகிறது. ஒரு பொருளில் தேர்ந்தவரை, அதன்கண் வினையாற்ற விடல்வேண்டும் என்றும், மற்ற பொருள்களில் தேராதவரை அவ்வினைகளில் ஈடுபடுத்தல் ஆகாது என்பதும் வலியுறுத்தப்பட்டது.



குறள் 510:

தேரான் றெளிவும் தெளிந்தான்க ணையுறவுந்
தீரா விடும்பை தரும்.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.


சொல்லுரை:

தேரான் - ஆராயாமல்

தெளிவும் - ஒருவனை தேர்ந்தெடுத்தலும்

தெளிந்தான்கண் - ஆராய்ந்து தேர்ந்தபின்

ஐயுறவும் - ஐயம் கொள்ளுதலும்

தீரா - நீங்காத

இடும்பை - துன்பத்தை

தரும் - கொடுக்கும்


பொருளுரை:

ஒருவனை ஆராயாமல் வினையாற்றத் தேர்ந்தெடுத்தலும் ஆராய்ந்து தேர்ந்தபின் அவன்மீது ஐயம் கொள்ளுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்


விளக்கவுரை:

ஒருவனை ஆராயாமல் தேர்வு செய்வதாலும், தேர்வு செய்தபின் ஐயம் கொள்வதாலும் தீராத துன்பமே ஏற்படும் என்பது குறளின் முடிபு. தெளிந்தான் கண் ஐயம் கொள்ளுதலாவது, தெளிந்தவன்மாட்டு ஒரு தவறும் இல்லையாயினும் அவனை ஐயம் கொள்ளுதல். வினையாற்றுபவனுக்கு இது வினையாற்றலில் ஒருவித தொய்வினை உண்டாக்குவது மட்டுமின்றி அவன் பகைவரால் மறைமுகமாக கைகொள்ளப்படவும் இடமுள்ளது என்பதால், தீராத துன்பத்தைக் கொடுக்கும் என்றவாறு.



uline