திருக்குறள்



உலகில் என்று தோன்றியது இந்த செந்தமிழ் மொழி என்று கால வரையிட்டுக் கூறமுடியாத அளவிற்கு தொன்மை வாய்ந்ததாக விளங்கும் மொழியிது. அதனாலேயே கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மொழியாக சொல்லப்படுகிறது. தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த நூல்கள் பற்பல. அவற்றுள் திருக்குறளுக்கு ஒரு தனி இடம் உண்டு. தமிழ்த்தாய் கண்டெடுத்த தவப்புதல்வனாகிய தெய்வத்திரு வள்ளுவனார் இயற்றிய திருக்குறள் ஒரு உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாக விளங்குகிறது. இது ஒரு சிறந்த அற இலக்கியமாகும். இந்நூல் 1330 குறள் வெண்பாக்களால் 133 அதிகாரங்களின் கீழ் பத்து பத்தாக தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக வைத்து எண்ணப்படுகிறது. இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் அமையப்பெற்றுள்ளது.

திருக்குறள் மக்களுக்கு இன்றியமையாத உயரிய வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கிறது. பிறவிப் பயனை அடையும் வழிமுறையினை செவ்வனே செப்புகிறது. வேதத்தின் மறைப்பொருளை எளிமையாக விளக்குகிறது. அதனால் திருக்குறள் தமிழ் மறை என்று பெருமையாக போற்றப்படுகிறது. உலக மக்கள் அனைவருக்கும் ஏற்புடைய பொதுவான வாழ்வியல் முறைகளை எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் எடுத்துரைப்பதால் இந்நூல் “உலகப்பொதுமறை” என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்நூல் முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, திருவள்ளுவம் என்ற பெயர்களால் போற்றப்படுகிறது.

திருக்குறளுக்கு பலர் உரை எழுதியிருப்பினும் பரிமேலழகர் உரை சிறந்த உரையாகக் கருதப்படுகிறது. தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதியார், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் என பதின்மர் பழைய உரையாசியர்களாகக் கீழ்வரும் வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.

“தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிமே லழகர் பருதி – திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை கண்டார் இவர்”.

மேலும், தற்காலத்தில் மு.வ., திருக்குறள் முனுசாமி, சாமி சிதம்பரனார், பாவாணர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மற்றும் முந்நூறுக்கும் அதிகமானோர் உரை எழுதி உள்ளனர்.

மக்களின் வாழ்க்கை வளத்திற்கும் அறிவு வளத்திற்கும் ஆன்ம வளத்திற்கும் உரம் சேர்க்கும் நூலாகிய திருக்குறளை ஒவ்வொரு தமிழ் மாந்தரும் கற்றுத் தேர்ச்சி கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை. அதன்பொருட்டு எழுந்ததே இந்த வலைத்தொடர்பு தளத்தில் திருக்குறளுக்கு உரையினை வெளியிட வேண்டும் என்ற எண்ணம். திருக்குறளுக்கு உரையானது சொல்லுரை, பொருளுரை, விளக்கவுரை என்று படிப்படியாக திருக்குறள் வெண்பாவை புரிந்துகொள்ளும் பொருட்டு கொடுக்கப்பட்டுள்ளது. திருக்குறள் என்னும் அமிழ்தத்தைப் பருகி இன்புறுவோமாக.

அன்புடன்,
க. இராசா.