641. நாநல மென்னு நலனுடைமை யந்நலம்
       
யாநலத் துள்ளதூஉ மன்று.
642. ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்
       
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
643. கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
       
வேட்ப மொழிவதாஞ் சொல்.
644. திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்
       
பொருளு மதனினூஉங் கில்.
645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
       
வெல்லுஞ்சொ லின்மை யறிந்து.
646. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன்
       
மாட்சியின் மாசற்றார் கோள்.
647. சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை
       
யிகல்வெல்லல் யார்க்கு மரிது.
648. விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது
       
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
649. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
       
சிலசொல்ல றேற்றா தவர்.
650. இணருழ்த்து நாறா மலரனையர் கற்ற
       
துணர விரித்துரையா தார்.